யாருமில்லாத சாலையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது அந்தக் கார். எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இரண்டு குட்டிக்கரணம் போட்டு தலைக்கீழாய் மல்லாந்து விழுந்தது. காருக்குள் இருந்த கணவனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் அவ்விடத்திலேயே உயிரை விட்டனர். லாரிக்காரன் பயம்கொண்டு வண்டியைத் திருப்பி எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென வேகமாக ஓட்டினான். அந்தப் பக்கமாய் அப்போது வேறொரு கார் வந்து கொண்டிருந்தது. விபத்து நடந்த காருக்குப் பக்கத்தில் போய் வந்து கொண்டிருந்த கார் நிறுத்தப்பட்டது. அமைதியான சூழ்நிலை. அழுகுரல் இல்லை. பேச்சுக்குரல் இல்லை. சாலையில் பிற போக்குவரத்தும் இல்லை. அப்போது விழுந்து கிடந்த காருக்குள் பின்சீட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய கணவனும் மனைவியும் அடிப்பட்ட காரில் இருந்து அந்த ஆண்குழந்தையைத் தூக்கிக் கொண்டனர். அந்தக் காரும் வேகமாய் வந்த திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
“என்னங்க… நமக்கு ரொம்ப வருசமா குழந்தை இல்ல. இந்தக் குழந்தைய நம்ம குழந்தையா நினைச்சி வளக்கலாங்க…” என்றாள் மனைவி.
”ஆமாம்! அந்தக் கார்ல வந்த கணவனும் மனைவியும் செத்துப்போயிட்டாங்க… சொந்தகாரங்க இருந்தாலும் இனிமேல் இவன் அநாதைதான். அவன நாம நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கிடலாம். அதுவும் ஆண் குழந்தை வேற” என்றான் கணவன். அதன்பிறகு அந்தக் கார் எந்தத் திசையில் சென்றது என்றே தெரியவில்லை.
கொஞ்ச நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியது. போலிஸ்சும் வந்தார்கள். ஆம்புலன்சும் வந்திருந்தது. பணியாட்கள் காருக்குள் மாட்டிக்கொண்டிருந்த ஒவ்வொருவராய் வெளியே எடுத்துக்கொண்டிருந்தனர். கணவனையும் மனைவியையும் வெளியே எடுத்தார்கள். மனைவி அமர்ந்திருந்த சீட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு குழந்தை மௌனாமாய்க் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருந்தது. பணியாள் ஒருவன் டக்கென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.
“சார் இந்தக் குழந்தை மட்டும் உயிரோட இருக்கு!“ என்று போலிஸிடம் சொன்னான் அவன்.
சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அந்தக்குழந்தையை நோட்டமிட்டனர். குழந்தை ஸ்டேஷனுக்குத் தூக்கி வரப்பட்டது. இறந்தவர்களை எரித்தனர். உறவுகள் ஒவ்வொருவராய் பிரிந்து போயினர். பெண் குழந்தை அல்லவா! யார் கொண்டு போய் வயிற்றில் நெருப்பை சுமப்பது? என்றுகூட நினைத்திருக்கலாம். கடைசியில் கான்ஸ்டபில் கைக்கு வந்தது அந்தக் குழந்தை. அவர் நேராகக் கிருஷ்த்துவ ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றார். அந்த ஆசிரமத்திலே குழந்தை தேவகி வளர்ந்தாள்! படித்தாள்! நல்லவையைக் கற்றுக் கொண்டாள்! இன்று பெரிய மனுசியாகவும் ஆகிவிட்டாள்.
தேவகி ரொம்பவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்தாள். சிறுவயது முதலே மனதில் பலவிதமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றும். அப்பொழுதெல்லாம் கத்துவாள். அழுவாள். ஃபாதர்தான் ஆறுதல் சொல்லுவார். தாயையும் தந்தையையும் பறிக்கொடுத்தவள். அந்தவொரு பாதிப்புதான் குழந்தையாக இருந்தாலும் அவளுடைய மனதை ஆட்டுவிக்கிறது என்று எண்ணினார். ஒவ்வொரு நாளும் அதுவே ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து இன்று பிரச்சனையாக வந்து நிற்கிறது.
இரவு நேரங்களில் கெட்ட கெட்ட கனவுகள் வேறு தூங்க விடாமல் தேவகியைத் துரத்தும். ஆண் நண்பர்களுடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் தோன்றும். அதுவும் அதுவரை பார்க்காத முகங்களும் அவர்கள் பேசிய உணர்ச்சி மிகு வார்த்தைகள்கூட காலையில் எழுந்தவுடன் தெவகிக்கு நன்றாக நினைவிருக்கும். ஏதோ தான்தான் அந்த நபரிடம் சென்று பேசிவிட்டு வந்திருப்பதை போல் உணர்வாள். எத்தனையோ முறை யோசித்து யோசித்துப் பார்ப்பாள். இந்த முகங்கள் எல்லாம் உண்மையாகவே இருக்கின்றனவா? எதற்காக எனக்கு இவ்வாறு தோன்றுகிறது? அவர்கள் பேசும் வார்த்தைகள் கூட உண்மையாலும் என்னிடமே பேசுவது போல்லல்வா உள்ளது. யார் இவர்கள்? என்னிடம் என்ன சொல்ல வருகிறார்கள்? பல நேரங்களில் குழம்பிப்போய் அப்படியே தூங்கியும் விடுவாள்.
தனக்குள்ள ஏற்பட்ட பிரச்சனையை ஃபாதரிடம் சென்று சொல்லலாம் என்று நினைத்திருந்தாள் தேவகி. அவளுடைய அப்பா, அம்மா, கடவுள் எல்லாமே ஃபாதர்தான். ஒருவேளை தனக்கு பைத்தியம் என்று மருத்துவமனையில் சேர்த்து விட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நிர்மூலமாகி விடுமே என்று பயந்தாள். அதனால் இந்த விஷியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள். இப்பொழுதெல்லாம் முடிந்தவரை இரவு நேரங்களில் கத்தாமல் தனக்குள்ளாகவே ஏற்படும் அந்த மிருகத்தை அடக்கி ஆள பழகிக்கொண்டாள்.
ஆனாலும் வயதுக்கு வந்த பிறகு இன்னும் சில உணர்ச்சிகளும் எண்ணங்களும் தேவகிக்கு ஏற்பட்டன. அறையில் தனியாக இருக்கும்போது விளையாட்டாக ஒருசில நேரங்களில் கண்ணாடியைப் பார்த்து ஆணைப் போல நெஞ்சை நிமிர்த்தி நடக்கவும் பேசவும் செய்வாள். பின்பு வாய்விட்டு சிரிப்பாள். ஏன் நாம் இவ்வாறு செய்கிறோம் என்று தன்னைத்தானே நொந்தும் கொள்வாள்? இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று மனதால் எண்ணினாள்.
கொஞ்ச நாளாகவே தன்னுடைய அறைத்தோழிகளுடன்கூட தொட்டுப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள் தேவகி. ஒரே அறையில் இருக்கும்பொழுது சக தோழி துணி மாற்றும்போதும் கண்களை இறுக மூடிக்கொள்வாள்.இப்பொழுதெல்லாம் தேவகிக்குப் பெண்கள் மேலும் அதித ஈர்ப்பு ஏற்படுவதை உணர முடிந்தது. பெண்களின் ஆடை விலகும்போது தன்னையும் அறியாமலும் தான் பெண்தான் என்று உணராமலும் கண்கள் அலைமோதியது. பல நேரங்களில் தான் ஒருவேளை ஆணாக இருப்போமோ என்ற பயமும் கூட அவளுக்கு இருந்தது. தன்னுடைய மனம் சக தோழிகளுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மிகவும் பயந்தாள். இதனால் அவளை அவளே தனிமைப்படுத்திக் கொண்டாள்.
படித்த படிப்பிற்கு ஒரு நல்ல வேலையும் தேவகிக்குக் கிடைத்து விட்டது. தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அப்படியே எடுத்து வந்து ஃபாதரிடம் கொடுத்தாள்.
“இது நீ செய்த வேலைக்கான ஊதியம். இந்தப் பணத்த நீ உன் விருப்பம் போல் செலவு செய்” என்றார் ஃபாதர்
“இவ்வளவு பணத்த வச்சி நான் என்ன பன்றது. இந்த ஆசிரமத்துல என்னைப் போல அநாதை குழந்தைகளுக்கு உதவியா நினைச்சி வச்சிக்கோங்க ஃபாதர்” என்றாள் தேவகி.
“அது தப்புமா! நாங்க ஒரு குழந்தைய வளர்த்துப் படிக்க வச்சி ஆளாக்கி விடுறோம். அவ்வளவுதான் எங்க வேலை. அவன் வேலைக்குப் போயி சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி குடும்பத்துக்குப் போவ ஏதோ இந்த ஆசிரமத்துக்குக் கொடுத்தா போதும். அவனால முடிஞ்சது. அதுவும் கட்டாயம் இல்ல. இங்க வளர்ர குழந்தைங்க நல்ல நிலைமையில இருந்தா அதுபோதும்” என்றார் ஃபாதர்.
“எனகென்ன கல்யாணமா ஆயிடுச்சி! அதுவெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப இந்தப் பணத்த வச்சிக்கொங்க. முதன்முதலா என்னை வளர்த்த ஆசிரமத்துக்கு நான் செய்யுற உதவி. வேண்டாம் சொல்லி என்னை பிரிச்சிராதீங்க ஃபாதர்” என்றாள் தேவகி. வேறுவழியில்லாமல் பணத்தை வாங்கிக் கொண்டார் ஃபாதர். தேவகிக்கும் ரொம்ப சந்தோசம்தான்.
ஃபாதரைப் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவள் ஒருகனம் திகைத்துப் போய் நின்று விட்டாள். தன்னுடைய அறைத்தோழி ஒருத்தி அரை நிர்வானத்தில் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தியும் அந்தப் பெண்ணை ரசிக்காமல் தேவகிக்கு இருக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மனமும் கண்களும் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கத் தூண்டியது. இதற்குமேல் இங்கே இருந்தால் ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடும் என்று நினைத்து அறையை விட்டு வெளியேறுகிறாள் தேவகி.
மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி அழுத கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள் தேவகி. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரானது மழைத்துளிகளில் கலந்து வெறுமையாய் காரணமின்றி வழிந்தோடியது. அம்மாவின் தேவை இப்போதுதான் தேவகிக்கு புரிந்தது. இதுவரை இப்படியொரு நினைப்பே இல்லாமல் இருந்தவளுக்கு அம்மா இருந்தால் கட்டிப்பிடித்து அழுவலாம் என்றிருந்தது.
அடுத்தநாள் காலையில் ஒரு சைக்காஸிஸ்ட் பெண் டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தாள் தேவகி. டாக்டரிடம் எதையும் மறைக்காமல் முழுமையாக நடந்த அனைத்தையும் சொன்னாள்.
டாக்டர் சிரித்துக்கொண்டே, “நீ ஆணாக இருக்க விரும்புகிறாயா? அல்லது பெண்ணாக இருக்க விரும்புகிறாயா?” என்றார்.
பட்டென்று ”நான் பெண்ணாக இருக்கவே விரும்புகிறேன். இன்னமும் என்னை பெண்ணென்றே உணர்கிறேன். பெண்ணாகவே வாழவும் ஆசைப்படுகிறேன்” என்றாள் தேவகி.
டாக்டர் மீண்டும் சிரிக்கின்றார். தேவகியை நன்கு பரிசோதித்து விட்டு ”நீ முழுமையான பெண்தான். ஆனால் உன்னுடைய மனசில் ஏன் அவ்வாறு தோன்றுகிறது என்று மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை நீ திருநம்பியாகக் கூட இருக்கலாம்” என்றார்.
“நிச்சயமாக இல்லை டாக்டர். நான் திருநம்பியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் என்னில் நான் முழுமையான பெண்மையை உணர்கிறேன். அதுமட்டும் இல்லாமல் அவ்வவ்போதுதான் ஆண்தன்மை என்னிடம் வெளிப்பட்டு நிற்கிறது” என்கிறாள் தேவகி.
கிட்டத்தட்ட மூன்று மணித்துளிகளுக்கும் மேலாகத் தேவகிக்குப் பரிசோதனை நடைபெற்றது. தேவகியின் ஜீன்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சில ஜீன்கள் தனித்து இருப்பதையும் கண்டறிகிறார் டாக்டர். தனித்து விடப்பட்ட ஜீன்களை வெளியேற்றினால்தான் அவளின் முழுமையான பெண்மையைக் கொண்டு வரமுடியும் என்கிறார்.
டாக்டர் சொன்னது போல தன்னால் அப்படியொரு சிகிச்சையை செய்துகொள்ள முடியுமா? அதற்கு ஆகின்ற செலவினை எவ்வாறு சமாளிப்பது? ஃபாதரிடம் இதுபற்றி சொல்லலாமா? தேவகி மனக்குழப்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறாள். தனக்கு முன்னால் வந்த பேருந்தில் ஏறி ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கும் சீட்டில் உட்காருகிறாள். கொஞ்சதூர பயணம். இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்துக் கொள்கிறார்கள். தேவகிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
அடிக்கடி நினைவில் வந்த முகம். இந்தப் பெண்ணிடம் நிறைய பேசியதாகவும் பழகியதாகவும் தோன்றுகின்றது. இது எப்படி சாத்தியம்? ஓட்டுநர் போட்ட பிரேக்கில் இரண்டு தோள்களும் உரசிக்கொண்டன. ஏதோ பலநாள் பழகிய மாதிரி உணர்வு தேவகிக்கு. மீண்டும் தானாக உரசுகின்ற மாதிரி வேண்டுமென்றே அப்பெண்ணின் உடலைத் தொடுகிறாள். சத்தியமாக இந்த பெண்ணோடு நான் உறவாடியிருக்கிறேன். தேவகியின் மூளையின் வேகம் படுவேகமாய் சுற்றியது. “என்னங்க… நீங்க யாரு? என்ன இதுக்கு முன்னால எங்கையாவது பாத்திருக்கீங்களா?” என்றாள் தேவகி.
“எதுக்கு கேட்குறீங்க… நான் உங்கள இப்பதான் முதல்முறையா பாக்குறன்” என்றாள் அப்பெண்.
”நல்லா யோசனை பண்ணி பாருங்க. உங்களுக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு” என்றாள் தேவகி.
உதட்டை சுழித்தவாறு ஜன்னல் பக்கமாய் திரும்பிக்கொண்டாள் அப்பெண்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ… ஒரு தாய் எப்படி குழந்தைய பாத்துப்பாங்களோ அதுபோல உன்னை கடைசிவரை பாத்துப்பேன். ஐ லவ் மை சுதா…” என்றாள் தேவகி.
ஜன்னல் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண், தேவகி சொன்னதைக் கேட்டு பதறித்தான் போனாள். ”என்னுடைய கணவன் என்னிடம் முதன்முதலாகக் காதலைச் சொன்னதை அப்படியே பெயரோடு சேர்த்துச் சொல்கிறாயே.. நீங்கள் யார்? என்றாள் சுதா.
“நான் சொன்னது சரியா? அப்படியானால் உன்னுடைய கணவனை நான் பார்க்க வேண்டும்” என்கிறாள் தேவகி.
இருவரும் வீட்டை நோக்கி பயணிக்கிறார்கள். அங்கு மதுராவை பார்க்கிறாள். தன்னுடைய உடன்பிறந்த அண்ணன்தான் மதுரா என்று எண்ணுகிறாள். நாம் இருவரும் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புகள். அதனால்தான் நீ செய்கின்ற பார்க்கின்ற பழகுகின்ற அத்தனை நபரையும் நானும் பார்த்தேன் என்கிறாள் தேவகி. தேவகி எவ்வாறு கஷ்டப்பட்டாலோ அதே போல மதுராவும் தன்னுள் பெண்மையை அவ்வவ்போது உணர்ந்துதான் இருந்தான்.
ஓடிச்சென்று அண்ணன் மதுராவை கட்டிக்கொண்டாள். தனக்கொரு சொந்தம் கிடைத்து விட்டதை எண்ணி தேம்பி தேம்பி அழுதாள். சுதா இருவரையும் பார்த்து மகிழ்ச்சிப் பொங்கினாள். அண்ணனைப் பார்த்த பிறகு தனக்கு இனி எந்தவொரு சிகிச்சையும் தேவையில்லை. என்னுடைய உடன்பிறந்தவனின் ஜீனை என்னுலிருந்து எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துக்கொண்டாள் தேவகி.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
முதன்மை ஆசிரியர்
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்