1.வேற்றுமைத்தொகை
ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
(எ.கா) ஊட்டி சென்றான்
இத்தொடர் ஊட்டிக்குச் சென்றான் என விரிந்து நின்று பொருள் உணர்த்துகின்றது. இரு சொற்களுக்கும் இடையில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருளை உணர்த்துவதால் இது ‘வேற்றுமைத் தொகை’ எனப்படும்
வேற்றுமைத் தொகைத் தொடர் | உவம உருபு | வேற்றுமைத்தொகை |
---|---|---|
பால் அருந்தினான் | ஐ | இரண்டாம் வேற்றுமைத் தொகை |
தலை வணங்கினான் | ஆல் | மூன்றாம் வேற்றுமைத்தொகை |
பள்ளி சென்றான் | ‘கு‘ | நான்காம் வேற்றுமைத்தொகை |
ஊர் நீங்கினான் | இன் | ஐந்தாம் வேற்றுமைத்தொகை |
முருகன் நூல் | அது | ஆறாம் வேற்றுமைத் தொகை |
கடல்வாழ் உயிரிகள் | கண் | ஏழாம் வேற்றுமைத்தொகை |
முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகையும்‘ என்பர்.
2.வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் ‘வினைத்தொகை’ எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும். வினைப்பகுதியும் அடுத்த பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
(எகா) ஊறுகாய், விரிகடல்
இவற்றில் ஊறு, விரி என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே காய், கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்களாயின. மேலும், இவை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காப் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் எனத் தருகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
(எகா) சுடுசோறு, குடிநீர்
3.பண்புத் தொகை
பண்புப்பெயருக்கும் தழுவிநிற்கும் அது பெயர்ச் சொல்லுக்கும் இடையே ‘மை’ என்னும் பண்பு விகுதியும் ‘ஆகிய’, ‘ஆன’ என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
(எகா) செந்தாமரை – செம்மையான தாமரை
வட்டக்கல் – வட்டமான கல்
இன்சொல் – இனிமையான சொல்.
இத்தொடர்களில் செம்மை, வட்டம், இனிமை என்பன பண்புப் பெயர்கள் தாமரை, கல், சொல், என்பன பெயரைத் தழுவி நிற்கும் பெயர்ச்சொற்கள் இவ்விரண்டிற்கிடையில் ஆகிய, ஆன, என்னும் பண்புருபுகளும், மை என்னும் பண்பு விகுதியும் மறைந்து வந்துள்ளதால் இவை ‘பண்புத்தொகை’ ஆகும்.
4.இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்
(எ.கா) தமிழ்மொழி
இத்தொடர் தமிழாகிய மொழி என விரிகிறது. மொழி என்பது அனைத்து மொழிகளையும் சுட்டும் பெயராகவும், தமிழ் என்பது பல மொழிகளுள் ஒன்றாகிய தமிழைக் குறிப்பாகச் சுட்டுவதால் சிறப்புப் பெயராகும். இவ்விரு சொற்களுக்கும் இடையே ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளதால் இது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்.
(எ.கா) பனைமரம், புளிச்சைக்கீரை
5.உவமைத் தொகை
உவமைக்கும் உவமேயத்திற்கும் (பொருளுக்கும்) இடையில் போல, போன்ற, நிகர, அன்ன என்னும் உவம உருபுகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து உருவது உவமைத் தொகையாகும்.
(எ.கா) மலர்க்கரம்
மலர் போன்ற கரம் எனப் பொருள் தருகிறது.
மலர் -உவமை.
கரம் – உவமேயம் (பொருள்)
இடையில் ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இது உவமைத் தொகையாகும்.
6.உருவகம்
உவமையும் உவமிக்கப்படும் பொருளும் வேற்றுமை தோன்றாதபடி இரண்டுமே ஒன்றுதான் என்பன போல் வருவது உருவகம் எனப்படும். பொருள் முன்னாலும் உவமை பின்னாலும் வரும்.
எ.கா. கரமலர், கண்மீன், முகமதி, வாய்ப்பவளம், பல்முத்தம்
7.உம்மைத் தொகை
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது ‘உம்மைத் தொகை’ எனப்படும்.
(எ.கா) இரவு பகல், ஆடு மாடு, வெற்றிலை பாக்கு.
மேற்கண்ட தொடர்கள் இரவும் பகலும், ஆடும் மாடும், வெற்றிலையும் பாக்கும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருளை உணர்த்துவதால் இது ‘உம்மைத் தொகையாகும்.
8.எண்ணும்மை
‘உம்’ என்னும் இடைச்சொல் வெளிப்பட்டே வருமானால் அது ‘எண்ணும்மை’ என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) இரவும் பகலும், ஆணும் பெண்ணும், நீயும் நானும், காயும் கனியும்
9.அன்மொழித்தொகை
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி (மறைந்து) நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
(எகா) பொற்றொடி வந்தாள் (தொடி என்றால் வளையல் ஆகும்)
இத்தொடரில் முதலில் உள்ள ‘பொற்றொடி’ என்னும் சொல் ‘பொன்னால் ஆன வளையல் என்னும்’ பொருளைத் தரும். இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்சு தொகையாகும். இத்தொடர் ‘வந்தாள்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னால் ஆன வளையலை அணிந்த பெண் வந்தாள் எனப்பொருள் தருகிறது. அணிந்த பெண் என்பது தொடரில் இல்லாத மொழியாகும். வேற்றுமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கி நிற்பதால் இத்தொடர் ‘வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
10.குற்றியலுகரம்
குற்றியலுகரம் – குறுமை + இயல்+உகரம். குறைந்த அளவு ஒலிக்கின்ற ‘உ’ என்னும் எழுத்து. இது அரை மாத்திரை அளவு ஒலிக்கும். வல்லின மெய்களுள் ஏதேனும் ஒன்றன்மேல் சேர்ந்து வரும் உகரம் (கு, சு, டு, து, பு, று) சொல்லின் இறுதியில் வரும்பொழுது, தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவினதாக ஒலிக்கும். இதுவே குற்றியலுகரமாகும். ஆயின், இவ்வாறு ஒலிக்கும்பொழுது இரண்டு எழுத்துக்களாலான சொல்லாக இருப்பின் முதல் எழுத்து நெடிலாக இருத்தல் வேண்டும். உ என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும் பொழுது உதடுகள் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்றது.
குறிப்பு : இரண்டே எழுத்தாலான சொல்லில் இறுதி எழுத்து வல்லின மெய்யுடன் சேர்ந்த உகரமாக இருந்தாலும் முதல் எழுத்து குறிலாக இருந்தால் குற்றியலுகரம் ஆகாது.
எ-டு : பசு என்பதன் இறுதி உகரம் குற்றியலுகரம் அன்று.
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கூறுவர். அவையாவன.
வ.எண் | குற்றியலுகர வகைகள் | எடுத்துக்காட்டுகள் |
1 | நெடில் தொடர்க்குற்றியலுகரம் | பாகு, காசு. தோடு. காது. சோறு |
2 | ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் | எஃது |
3 | உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் | அழகு, முரசு, முரடு, எருது, மரபு, பயறு |
4 | வன்றொடர்க் குற்றியலுகரம் | பாக்கு, தச்சு, தட்டு. பத்து, உப்பு, புற்று |
5 | மென்றொடர்க் குற்றியலுகரம் | பாங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, கன்று |
6 | இடைத்தொடர்க் குற்றியலுகரம் | மூழ்கு, செய்து, சால்பு |
11.குற்றியலிகரம்
குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம். குறைந்த ஒலியை உடைய ‘இ’ என்னும் எழுத்து இது அரை மாத்திரை அளவு ஒலிக்கும். “இ“ என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும் பொழுது முழுமையாக ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்றது. பட்டு +யாது: பட்டியாது. ‘டி’ என்னும் எழுத்தில் உள்ள இகர ஒலி (ட் + இ) முழுமையாக ஒலிக்கவில்லை. அரை மாத்திரை அளவே ஒலிக்கின்றது. ஆதலின் ‘பட்டியாது’ என்பதில் உள்ள இகரம் குற்றியலிகரமாகும்.
இலக்கணம் : ஒரு குற்றியலுகரச் சொல்லின் முன், யா என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் வந்து சேரும்பொழுது அக்குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாக மாறும். இதுவே குற்றியலிகரம் எனப்படும். இதற்குக் கால அளவு அரை மாத்திரை ஆகும். மேலும் ‘மியா என்னும் அசைச்சொல் வருமொழியாக வந்தால் அதில் உள்ள இகரமும் (ம் + இ =மி) ஒலி குறைந்து, குற்றியலிகரம் ஆகும்.
எடுத்துக்காட்டு
வீடு + யாது? – வீடியாது
எஃகு +யாது? – எஃகியாது?
உலகு +யாது ? – உலகியாது?
பட்டு + யாது? – பட்டியாது?
பந்து + யாது? – பந்தியாது?
சால்பு + யாது? – சால்பியாது?
கேள் + மியா? – கேண்மியா
12.தொழிற்பெயர்
ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும்.
காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுதும் விளையாட்டு
என்கிற இத்தொடர்களில் உள்ள படிப்பு, விளையாட்டு தொழில்களைக் குறிக்கும் சொற்கள்.
எ.டு. பொறுத்தல் தலை
பொறுத்தல் என்பதில் ‘பொறு’ என்பது முதலிலும் ‘தல்’ என்பது இறுதியிலும் அமைந்துள்ளன. முதலில் உள்ளதை முதனிலை அல்லது பகுதி என்றும் இறுதியில் உள்ளதை இறுதிநிலை அல்லது விகுதி என்றும் கூறலாம். பொறுத்தல் என்பது ‘தல்’ என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயராகும். தொழிற்பெயர் விகுதிகள் பலவாகும். தொழிற்பெயர் விகுதிகளும் எடுத்துக்காட்டுகளும் கீழே தரப்பெற்றுள்ளன.
வ.எண் | விகுதி | எடுத்துக்காட்டு |
1 | தல் | நடத்தல் |
2 | அல் | பாடல் |
3 | அம் | ஆட்டம் |
4 | ஐ | கொலை |
5 | கை | தொழுகை |
6 | வை | பார்வை |
7 | பு | நடப்பு |
8 | வு | வரவு |
9 | தி | மறதி |
10 | சி | வளர்ச்சி |
11 | வி | உதவி |
12 | உள் | கடவுள் |
13 | காடு | சாக்காடு |
14 | பாடு | கோட்பாடு |
15 | அரவு | தோற்றரவு |
16 | ஆனை | வாரானை |
17 | மை | கொல்லாமை |
18 | து | பாய்ந்து |
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
சூடு போட்டார்
‘கெடுவான் கேடு நினைப்பான்’
இவற்றுள் சூடு, கேடு என்பன சுடுதல், கெடுதல் என்னும் தொழில்களை உணர்த்துகின்றன. சுடுதல், கெடுதல் என்னும் தொழிற்பெயர்களின் விகுதிகளை நீக்கினால் முறையே சுடு, கெடு என ஆகும். சுடு,கெடு என்பனவற்றின் முதல் எழுத்தான சு, கெ என்னும் குறில்கள் நெடிலாக மாறி சூடு,கேடு என ஆகும். இவ்வாறு தொழிற்பெயரின் விகுதியின்றி, பகுதியில் உள்ள குறில், நெடிலாகி வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும். (சில தொழிற்பெயர்களின் முதனிலை மட்டும் திரியும்).
சுடுதல் – தொழிற்பெயர், சூடு – முதனிலை திரிந்த தொழிற்பெயர்
தொழிற்பெயரின் விகுதி கெட்டு, பகுதி திரிந்து வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
எடு. பட்ட பாடு (படுதல் – படு – பாடு)
பெற்ற பேறு (பெறுதல் – பெறு – பேறு)
13.வினையாலணையும் பெயர்
குமரன் படித்தான். படித்தவன் தேர்ச்சி பெற்றான். இவற்றுள் குமரன் என்பது பெயர்ச்சொல்; படித்தான் என்பது வினைச்சொல். படித்தவன் என்பது சொல்லா? வினைச்சொல்லா? படித்தவன் என்பது எழுவாயாக இருப்பதால் பெயர்ச்சொல்லின் தன்மையும் பெற்றுள்ளது. படித்தல் என்னும் தொழிலையும் இறந்த காலத்தையும் காட்டுவதால் வினைச்சொல்லின் தன்மையும் பெற்றுள்ளது. எனவே ‘படித்தவன்’ என்னும் சொல், வினையின் தன்மையும் பெயரின் தன்மையும் அமைந்த சொல் ஆகும். இவ்வாறு வருவதே வினையால் அணையும் பெயர் என்று குறிப்பிடப்படும்.
இலக்கணம் : ஒரு வினைமுற்று, பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது. தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.
எடுத்துக்காட்டு
அகழ்வாரைத் தாங்கும் நிலம் (அகழ்வாரை வினையாலணையும் பெயர்)
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (இகழ்வார் வினையாலணையும் பெயர்)
வ.எண் | தொழிற்பெயர் | வினையாலணையும் பெயர் |
1 | நடித்தல் | நடித்தவன் |
2 | எழுதுதல் | எழுதினவன் |
3 | உண்டல் | உண்டவன் |
4 | படித்தல் | படித்தவன் |
5 | நோன்பு | நோற்பார் |
6 | சேர்தல் | சேர்ந்தார் |
7 | வாழ்தல் | வாழ்வார் |
தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
வ.எண் | தொழிற்பெயர் | வினையாலணையும் பெயர் |
1 | தொழிலை மட்டும் உணர்த்தும் | தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும் |
2 | படர்க்கை இடத்தில் மட்டும் வரும் | மூன்று இடங்களிலும் வரும் |
3 | பெரும்பாலும் காலம் காட்டாது பொறுத்தல் | காலம் காட்டும் பொறுத்தார் |
14.ஆகுபெயர் (பார்க்க)
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் சிரித்தது, கிரிக்கெட்டில் இந்தியா வென்றது
15. வினைமுற்று
ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து, முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். அது திணை, பால், எண், இடம் காட்டும்; காலம் காட்டும்; பயனிலையாக வரும்; வேற்றுமை உருபை ஏற்காது.
எ.டு. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்”
பொறுத்தாரைப் பொன்போல் வைப்பர்”
இத்தொடர்களில் வந்துள்ள ‘ஏறுமின்’, ‘வைப்பர்’ ஆகியவை வினைமுற்றுகள்.
வினைமுற்று வகைகள்
1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று
3.உடன்பாடு வினைமுற்று
4.எதிர்மறை வினைமுற்று
5.ஏவல் வினைமுற்று
6.வியங்கோள் வினைமுற்று
1.தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
எ.டு. மங்கை, கூடத்தில் அரிசிமாக்கோலம் அமைத்தனள்.
மங்கை, இல்லத்தில் யாழ் எடுத்துத் தமிழிசை பாடினாள்.
2.குறிப்பு வினைமுற்று
செய்பவனையும் திணை பால்களையும் வெளிப்படையாகக் காட்டிக் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று, இவ்வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று பொருள், இடம் முதலான அடிப்படையில் தோன்றும்.
எ.டு. பொன்னினன், புறத்தினன், ஆதிரையான் செங்கண்ணன், கரியன். இன்சொல்லன்.
3.உடன்பாடு வினைமுற்றுகள் மற்றும் 4.எதிமறை வினைமுற்றுகள்
செயல் நிகழ்வைக் குறிக்கும் வினைமுற்று உடன்பாட்டு வினைமுற்று எனப்படும்.
செயல் நிகழாமையைக் குறிக்கும் வினைமுற்று எதிர்மறை வினைமுற்று எனப்படும்.
எ.டு. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார் நாணாள் பவர்.
பெருங்குணத்தார்ச் சேர்மின்
பிறர் பொருள் விரும்பான்
துறப்பார்,சேர்மின் – உடன்பாடு.
துறவார். விரும்பான் – எதிர்மறை
4. ஏவல் வினைமுற்று
முன்னிலை இடத்தில் கட்டளைப் பொருளில் எதிர்காலம் காட்டி வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். இது ஒருமை, பன்மை உணர்த்தும்.
எ.டு. வாராய, பாரீர்
குறிப்பு: ஏவல் ஒருமை வினைமுற்றுகள் இ, ஐ, ஆய் என்னும் விகுதிகளைப் பெறும். ஏவல் பன்மை வினைமுற்றுகள் இர், ஈர்,மின்,உம் என்னும் விகுதிகளைப் பெறும்.
எ.டு. வருதி, செல்வாய் – ஏவல் ஒருமை
வருவீர், வம்மின், வாரும் – ஏவல் பன்மை
5.வியங்கோள் வினைமுற்று
வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் முதலிய பொருள்களில் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும். இது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாக வரும். க, ய, ர் என்னும் விகுதிகளைப் பெறும்.
எடு. திருவளர் மூதூர் வாழ்க
வாழிய சூசை
வாழியர்
தீமை ஒழிக
மருந்து உண்க
நான் வாழ்க,
நீ வாழ்க
அவர் வாழ்க.
ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகள்
வ.எண் | ஏவல் வினைமுற்று | வியங்கோள் வினைமுற்று |
1 | கட்டளைப் பொருளில் வரும் | வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் பொருள்களில் வரும். |
2 | முன்னிலை இடத்தில் மட்டும் வரும் | மூன்று இடங்களிலும் வரும் |
3 | ஒருமை, பன்மை உண்டு | ஒருமை, பன்மை என்னும் பகுப்பு இல்லை |
16. ஒருபொருட் பன்மொழி
ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருட்சிறப்பைத் தருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
எ.டு. உயர்ந்தோங்கு மலை
உயர்ந்து, ஓங்கு என்னும் இரு சொற்களும் ஏறக்குறயை ஒரே பொருளைத் தந்து, ‘மிக உயர்ந்த மலை’ என்னும் பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
எ.கா மீமிசை ஞாயிறு
17.இரட்டைக்கிளவி
ஒரு சொல்லை பிரித்தால் பொருள் தராமல் இருப்பது இரட்டைக்கிளவி ஆகும்.
எ.கா சலசல, படபட, சரசர, கரகர, பளபள, என்பன
18.அடுக்குத்தொடர்
ஒரு சொல், விரைவு, வெகுளி, தெளிவு, அச்சம், உவகை முதலியன காரணமாக, இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும். இதனைப் பிரித்தாலும் பொருள் தரும்.
எ.டு. பாம்பு பாம்பு, தீ தீ, வெற்றி வெற்றி
அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் வேறுபாடுகள்
வ.எண் | இரட்டைக்கிளவி | அடுக்குத்தொடர் |
1 | இரண்டு முறை மட்டுமே வரும் | இரண்டு, மூன்று, நான்கு முறைகளும் அடுக்கி வரலாம் |
2 | பிரித்தால் பொருள் தராது | பிரித்தால் பொருள் தரும் |
3 | இரண்டும் சேர்த்து வந்து ஒரே பொருள் தரும் எ.கா பாம்பு சரசர என ஊர்ந்தது | அடுக்கி வருவதற்கு ஏற்ப, விரைவு, அச்சம், தெளிவு, உவகை என முதலிய பொருள்களைத் தரும் எ.கா புலவர் மன்னனை ‘வாழ்க வாழ்க‘ என வாழ்த்தினர் |
19.இயல்பு புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது நிலைமொழியிலோ வருமொழியிலோ எந்த மாற்றமும் இல்லாமல் சேர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
எ.டு. வாழை + மரம் = வாழைமரம்.
20.விகாரப்புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது இடையே எழுத்தோ, சாரியையோ தோன்றல், எழுத்துத் திரிதல், எழுத்துக் கெடுதல் என்பவற்றுள் ஒன்றே.. பலவோ விகாரங்களைப் பெற்றுப் புணர்தல் விகாரப் புணர்ச்சி ஆகும்
(அ) தோன்றல் : நிலைமொழிக்கும் வருமொழிக்கும் நடுவில், எழுத்து தோன்றுவது.
எ.கா. வாழை + பழம் = வாழைப்பழம், பூ + கொடி = பூங்கொடி
(ஆ) திரிதல் : நிலைமொழி, வருமொழிகளில் உள்ள எழுத்து, மாறி வருவது.
எ.கா. மண் + குடம் = மட்குடம், பல் + பொடி = பற்பொடி
(இ) கெடுதல் : நிலைமொழி, வருமொழிகளில் உள்ள எழுத்து, கெட்டுச் சேர்வது.
எ.டு. மரம் + வேர் = மரவேர்.
21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இறுதி எழுத்துக் கெட்டு எதிர்மறைப் பொருளை உணர்த்தி நிற்கும்.
எ.கா. பறவாப் பறவை, ஓடாக் குதிரை, காணாக் கண், செல்லாக் குதிரை
22. உரிச்சொல் தொடர்
இசை, குறிப்பு, பண்பு ஆகியவை நிலைக்களனாக ஒருசொல் ஓரியல்பு உணர்த்தவும் பலவியல்பு உணர்த்தவும் சால, உறு, தவ, நனி, கூர், கழி, உரு, ஏ, மழ, குழ, கதழ், தட, கய, நளி, மாதர், கலி, வியன், நாம, பே, வய, துய, வை, எறுழ், கடி போன்றன வருமாயின் அவை உரிச்சொல் எனப்படும்.
எ.கா. மாநகர், நனிஉண்டான், சாலசிறந்தது