அழகான ராட்சசி|கவிதை|முனைவர் த.மகேஸ்வரி

அழகான ராட்சசி - முனைவர் த. மகேஸ்வரி

🧚‍♀️அப்பா


உன் ஆசை மகள்


எழுதுகிறேன்..!


🧚‍♀️ வர்ணனையில் கூட


உனக்குப் பிடிக்காத


வார்த்தைகளைக் கூற மாட்டேன்..!


🧚‍♀️ என்னை தேவதை என்று


மற்றவர் கூறும்போது


மார்தட்டி கூறுவாய்!


அவள் தேவதை இல்லை


என் செல்ல ராட்சசியென்று,


அர்த்தம் புரியவில்லை அன்று..!


🧚‍♀️ புராண இதிகாச கதைகள் கூறும்


பாட்டியிடம் இருந்து விடுவித்து


ஆறு வயதிலேயே


அண்ணாவின் ஆரிய மாயைக்கு


அர்த்தம் சொன்னவர் தாங்கள்..!


🧚‍♀️பட்டுப் பாவாடை அணியவிடாமல்


கால் சட்டையும் பனியனும்


அழகு என்பாய்..!


🧚‍♀️ வாடா போடா என்று


உரையாடும் உன்னிடம்


ஆண்மகன் இல்லை என்ற


ஆதங்கத்தை


ஒருபோதும் கண்டதில்லை..!


🧚‍♀️ அப்பா உன்


மூச்சுக் காற்றுக்கு


முகவரி தொலைந்ததால்


உன்னால் அடைக்கப்பட்ட


நாக்குகள் எல்லாம்


விலங்குடைத்து வீறுகொண்டன..!


🧚‍♀️ பெண்மை இடுகாட்டிற்குச் செல்வது


பெரும் குற்றமென கங்கணம் கட்டும்


சமூகத்தின் மத்தியில்


நான் ஆண்மகனின்


அடையாளத்தை தேடினேன்..!


🧚‍♀️ நீ இல்லை என்று


நிலைகுலைந்து நிற்கும் என்னிடம்


எங்கிருந்து வந்தது


அந்த ஆண்மை!


முந்திக்கொண்ட தீக்கிரையாக்க


அந்த ஒரு நொடி


நான் ராட்சசியானேன்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் த. மகேஸ்வரி

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,

பெரம்பலூர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here