அயல்மொழிப் பெயர்ச் சொற்கள்

அயல்மொழிப் பெயர்ச் சொற்கள்
    ஆங்கிலத்தில் ஒரே எழுத்து பல்வேறு ஒலிப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதை ஆங்கிலம் கற்றோர் அறிவோம். எ.கா. ‘c’ எனும் எழுத்து ‘case’ எனும் சொல்லில் வல்லின ‘க’ ஒலிக்கும் ‘center’ எனும் சொல்லில் மெல்லின ‘ச’ ஒலிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த எழுத்தைப் பொறுத்து ஒலிப்பு மாறுகிறது. சில உயிரெழுத்துகள் ஒவ்வொன்றும் எட்டு அல்லது ஒன்பது வெவ்வேறு ஒலிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன! அதற்கென ஆங்கிலேயர்கள் பிற மொழி எழுத்துகளைக் ‘கடன்’ வாங்கவில்லை. சரியான பலுக்கலை விளக்குவதற்கு இலக்கண விதிகள் உள்ளன. (நிறைய விதி விலக்குகளும் உள்ளன! எ.கா. machine, machination என்பவற்றில் ‘ch’-இன் ஒலிப்பு மாறுதல்.) இவை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பண்புகள்.
               
பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தம் மொழி இலக்கணத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுவதும் பலுக்குவதும் அனைத்து மொழிகளிலும் வழக்கமானதொன்று. போதிய எழுத்துகள் இல்லாதது மட்டும் இதற்குக் காரணமன்று; ஒரு மொழியில் வழங்கும் ஒலியன்கள், பெயர்ச் சொற்கள் முதலியன வேறொரு மொழியில் இயல்பாக இல்லாதபோது அந்தச் சொற்களின் உரு, ஒலி ஆகியன மாறும். ஆங்கிலத்தில் இதைச் செய்கையில் நமக்கு வேடிக்கையாகத் தெரிவதில்லை; பழகிவிட்டோம்.
               
அயல்மொழிப் பெயர்ச் சொல்லை எழுதுவதற்கு ஆங்கிலத்தில் எழுத்து இல்லாததால் சொல்லை மாற்றி எழுதுவதற்குப் பின்வருவன எடுத்துக்காட்டுகள்:

1. ‘L’ எனும் ஆங்கில எழுத்து ல, ள, ழ ஆகிய தமிழ் எழுத்துகளைக் குறிப்பதற்கும்,

2.’t’ என்பது த ட ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
               
எ.கா. villupuram (வில்லுப்புரம்?, விளுப்புரம்?, விழுப்புரம்?), tamil (டமில், தமில், தமிள், …, தமிழ்?), tirupur (டிருப்புர், டிருப்பூர், …, திருப்புர், திருப்பூர்?).
               
எழுத்து இருந்தாலும் பேச்சு வழக்குக்கு ஏற்பப் பிற மொழிப் பெயர்ச் சொற்களை மாற்றிக்கொள்வதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

1.chepauk (சேப்பாக் = சேப்பாக்கம்),

2.chetput (ச்செட்புட் = சேத்துப்பட்டு),

3.tanjore (டேன்ஜோர் = தஞ்சாவூர்),

4.mulligawtawny (மல்லிகாட்டானி = மிளகுத் தண்ணீர்)
5.ஜப்பான் நாட்டை அந்நாட்டு மக்கள் நிப்போன் அல்லது நிஹோன் என்றுதான் அழைக்கின்றனர். இதற்கு வரலாற்றுக் காரணங்களும் மொழியியல் காரணங்களும் உள்ளன1,2 சப்பானியர்கள் இந்தியாவை இந்தோ என்கின்றனர். தெலுங்கர்கள் தமிழை அரவம் என்கின்றனர். இந்நிலையில் ஜப்பான் என்பதைத் தமிழில் சப்பான் எனவும் தெலுகு என்பதைத் தெலுங்கு என்றும் எழுதினால் என்ன கெட்டுவிடும்?!

அ. இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பண்புதான்.
 
ஆ. மொழிப் பற்றுக் குறித்து வாய் கிழியப் பேசும் சில தமிழர்களைவிட அமைதியாகச் செயல்பட்ட மலையாளிகள் மேலானவர்கள்: திருவனந்தபுரம் என்பதை ஆங்கிலத்தில் trivandrum (ட்ரிவேன்ட்ரமீ) என்று தவறாக எழுதிய மரபை மாற்றி thiruvananthapuram என்றும், கோழிக்கோடு என்பதை calicut எனத் தவறாக எழுதிவந்ததை kozhikode என்றும் ஓரளவு சரியான பலுக்கல் வரும் வகையில் திருத்திக்கொண்டனர்.

6.மழைநாடு என்பதன் கன்னட வடிவம் மளேநாடு. இது திரிந்து ஆங்கிலத்தில் malnad என்று எழுதப்பட்டுத் தமிழில் மல்நாடு எனப்படுகிறது! (கன்னடக்காரர்கள் இதை எப்படிச் சொல்கிறார்களோ தெரியவில்லை.)
 
     இந்தியில் f என்பதற்கு ஓர் எழுத்து உள்ளது. எனவே, february (பிப்ரவரி) என்பதை அவர்கள் ஆங்கிலப் பலுக்கலுடன் பெருமளவு பொருந்துமாறு பெப்ருரி என்றே எழுதலாம். ஆனால் பர்வரி என்று எழுதுகின்றனர். அதுபோலவே, காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) என்ற பொருள்படும் insurance எனும் ஆங்கிலச் சொல்லையும் சரியான பலுக்கல் வருமாறு இந்தி எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். அல்லது, அதற்கு இணையான இந்திச் சொல்லைப் பயன்படுத்தலாம்; அப்படிச் செய்யாதபோது இன்ஷியோரேன்சு என்று எழுதுகின்றனர். இது அவர்களுடைய இலக்கண மரபின்பாற்பட்டதாக இருக்கலாம். ஒவ்வொரு மொழியிலும் அயல்மொழிச் சொற்களை எழுதுவதற்கு அம்மொழியின் இலக்கணத்துக்கு ஏற்பச் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதைப் பார்த்து நகைப்பது அறியாமை.
               
birendranath datta gupta என்ற வங்காளிப் பெயரை பீரேந்த்ரநாத் தத்தா குப்தா என்பதற்கு மாறாக வீரேந்திரநாத தத்தா குப்தா என்று தமிழர் பலுக்குவதைக் கேட்டு (ஆரோவில்-புகழ்) அரவிந்தர் விழுந்து விழுந்து சிரித்ததாக பாரதியார் குறிப்பிடுகிறார் (அதற்கு பாரதியார் என்ன எதிர்வினையாற்றினார் என்பது தெரியவில்லை)3 மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பிய கதைதான்! வங்க மொழியில் ‘வ’ ஓசை இல்லை; மெல்லின ‘ப-வாக மாறுகிறது. எ.கா. ரவீந்த்ரநாத் என்பது ரபீந்த்ரநாத் என்றும் வீர் என்பது பீர் என்றும் மாறுகிறது. இந்தியில் வீரேந்திரநாத் என்பதை வங்காளத்தில் பீரேந்திரநாத் என்றும், அர்விந் எனும் இந்திப் பெயரை வங்க மொழி வழக்குக்கு ஏற்ப அரோபிந்தோ aurobindo என்றும் மாற்றி வைத்திருப்பதைப் பார்த்து இந்திக்காரர் சிரிக்கமாட்டாரோ?’

  இந்நூலில் உள்ள அயல்மொழிப் பெயர்ச் சொற்களில் வரும் மெல்லின ஒலிகளுக்குத் தமிழ் வல்லின எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளேன். ‘க’ என்பதை ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் உள்ள k, g ஆகிய ஒலிகளுக்கும், ‘ச’-வை ch, s, sh, j ஆகிய ஒலிகளுக்கும், ‘ட’ என்பதை t, d ஆகிய ஒலிகளுக்கும், ‘த’ என்பதை th, dh ஆகியவற்றுக்கும், ‘ப’-வை p, b, f ஆகியவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளேன். எ.கா. ‘கார்ல் மார்க்ச்” (பல தமிழ் நூல்களில் ‘காரல் மார்க்ஸ்’!).
               
பின்வருவம் வேடிக்கையான நுணுக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நாம் மேற்படித் “தனித்தமிழ்” எழுத்து முறையையும் ஏற்றுக் கொண்டால் என்ன? ஏற்காமல் இருப்பது தான் முரணானது!

1.ஆங்கிலத்தில் சில எழுத்துகள் ஒலிக்கப்படாமல் இருத்தல். (எ.கா. island என்பதில் இரண்டாவது எழுத்து; madam என்பதில் நடு எழுத்து; பலர் இந்த ஆங்கிலச் சொல்லைத் தவறாக மேடம் என்றே பலுக்குகின்றனர்!)

2.corps போன்ற ப்ரென்ச் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துகையில் அவற்றின் பலுக்கல் எழுத்து வடிவத்தில் இருந்தும் corpse எனும் ஆங்கிலச் சொல்லின் பலுக்கலில் இருந்தும் வேறுபடுதல் (குழப்பத்தைச் சற்று அதிகரிக்கும் வகையில் இந்தச் சொல் ஒருமை பன்மை இரண்டுக்கும் corps என்கிற இதே வடிவில் பயன்படுத்தப்படுகிறது; ஆனால், பலுக்கல் வேறுபடும்!)

      தமிழ் மொழியில் இல்லாத (‘வடமொழி’ ஒலிகளுக்கான கிரந்த) எழுத்துகளைக் ‘கடன்’ வாங்கிப் பயன்படுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது. எந்தவொரு மொழியிலும் அனைத்து ஒலிகளுக்கும் தனித்தனி எழுத்து வடிவம் இருக்கமுடியாது, அப்படி எதிர்பார்ப்பதும் தேவையற்றது என்பதைச் சிந்தித்துணர்ந்தால் இதன் அடிப்படை புரியும். நம் மொழியில் எந்தக் குறையும் இல்லை; குறை வேறு தளங்களில் தான் உள்ளது! ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளைப் பயன்படுத்தி இன்றைய உலக மொழியாக இருப்பது இதற்கு மிகச் சிறந்த சான்று.
               
        jean dreze என்பவர் மாந்தநேயமிக்க ப்ரென்ச்-இந்தியப் பொருளியலாளர். அவருடைய பெயரை ழான் டராஸ்(z) என்பது போலப் பலுக்கவேண்டும். ஆனால், அது ப்ரென்ச் மொழிப் பெயர் என்பது தெரியாதவர்கள் ஜீன் ட்ரீஸ்(z) என்றுதானே படிப்பர்? (சரியான பலுக்கலைத் தெரிந்தவர்கள் இப்படிப் பலுக்கக்கூடாது.) ஆனால் அதை ஆங்கிலத்தில் ழா daraz என்று (பலுக்குவதைப் போலவே) எழுதவேண்டும் என ஆங்கிலேயர்களோ ப்ரெஞ்சுக்காரர்களோ நினைப்பதில்லை. தன்மானங் குறைந்த நாம் முதன்மையானவற்றில் கவனஞ் செலுத்தாமல் நம் மொழியைக் குறை கூறிக்கொண்டும் “சீர்திருத்திக்”கொண்டும் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறோம்.
   ஒரு மொழியில் மற்ற மொழிச் சொற்கள் யாவும் ஒலி பிசகாமல் ஒலிக்கப்படுவதும் இல்லை. david என்ற பெயரை ஆங்கிலேயர் ‘டேவிட்’ என்று ஒலிக்கிறார். பிரெஞ்சுக்காரர் ‘தவித்’ என்றழைக்கிறார். தமிழர் ‘தாவீது’ என்கிறார். jesus christ என்ற பெயரை ஆங்கிலேயர் ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறார். பிரெஞ்சுக்காரர் ‘ழெசுய் க்ரீஸ்த்’ என்கிறார். தமிழர் ‘ஏசு கிறித்து’ என்கிறார். ஒரே வகையாக ஒலிக்கப்படுவது எங்கே?
               
        அதுபோலவே, கிருச்ணன் என்பது ஓர் இந்துக் கடவுளின் வடமொழிப் பெயர் என்பதை அறிந்தவர் அதைக் கிருஷ்ணன் என்று பலுக்கட்டும்! பிறர் தவறாகப் பலுக்கட்டும். தமிழர் வடமொழிப் பெயர் வைப்பதற்குச் சரியானதொரு தண்டனை இது” (இதைக் கிருட்டிணன் என்று தமிழில் எழுதுவது மரபு. அதை ஆங்கிலத்தில் kiruttinan என்று மொழிபெயர்ப்பது வேடிக்கையானது!)  (மேலும், கிருஷ்ணன் என்பது இந்தி அல்லது வடமொழியில் க்ருஷ்ண் என்றுதான் இருக்கும்.) மற்றுமொரு எடுத்துக்காட்டு: இந்தியில் ஹரிஷ்ச்சந்தர் என்பது தமிழில் அரிச்சந்திரன் (அல்லது, “படித்தவர்கள்” என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால் ஹரிச்சந்திரன்) என்றும் தெலுங்கில் ஹரிஷ்ச்சந்துருடு என்றும் மாறுகின்றன. தேவையில்லாமல் வடமொழிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்தித் தவறாகப் பலுக்கும் நாம் அவர்களுடைய பகடிக்கு ஆளாகிறோம்! அடிப்படையில் இது தான் இங்கு சிக்கல்!
               
       இது குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு 2011-இல் வெளியான ஒரு சிறு கையேடு பயன்படும்4. அது தேவைப்படுவோர் இந்நூலாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.
               
      இணையத்தில் தகவல் தேடுவதற்கு ஏதுவாக அயல்மொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவத்தைத் தந்துள்ளேன்.

1 . https://en.wikipedia.org/wiki/Names of Japan

2.”Nippon or Nihon? No  consensus on Japanese pronunciation of Japan”, Japan Today, 2014 feb 16, https://www.japantoday.com/category/arts-culture/view/nippon-or-nihon-no-consensus-on-japanese-pronunciation-of-japan

3.திருமுருகன், “மொழிப் புலங்கள்”, 1999, பக்கங்கள் 22-48.

4.”ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்”, தி. ராமகிருச்ணன், தொகுப்பாசிரியர், தாளாண்மை உழவர் இயக்கம், 2011.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here