ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் இல்லறத்தின் வாயிலாக இணைப்பது அகத்திணை எனப்படும். நல்லொழுக்கங்களால் சிறந்த இவ்விருவரும் நன்மக்களைப் பெற்றும் மனையறம் காத்தும் உலக நலத்திற்கு உயர்த்துவதே அகத்திணை எனக் கொள்ளலாம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். கணவன் மனைவி என்போர் மக்களைப் பெற்று பேரின்பம் அடைபவரையே இறைவனின் பாதத்தை அடையமுடியும். அதுவே உலகியல் வாழ்வாகும். தொல்காப்பியர் முதற்கொண்டு பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் அன்பால் இணையப்பட்ட உறவையே சொல்லி செல்கின்றனர். இலக்கண நூலாசிரியர்கள் அகத்திணையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அவை,
1.முதற்பொருள்
2.உரிப்பொருள்
3.கருப்பொருள்
எனபனவாகும். பழங்காலத்தில் ஒரு மனிதனின் வாழ்வில் அன்றாடம் நடைபெறக்கூடிய அனைத்தையும் இம்மூன்றால் அடக்கிக் கொண்டார்கள். தொழில்கள், நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், மனிதனின் செயல்பாடுகள், பணிகள் என ஒவ்வொன்றும் இவற்றில் கொள்ளலாம்.
எந்தவிதமான அறிவியல் வளர்ச்சி அடைந்திடாத அன்றைய மனிதர்கள் தங்களில் வாழ்க்கை முறையினைச் சராசரி விகிதாரத்துடன் எவ்வாறு வகுத்துக்கொண்டார்கள் என்பது பெரும் வியப்புக்குரியதே! அந்தளவிற்கு மிகச்சரியான முறையில் அகத்திணையியலில் கொடுக்கப்பட்டுள்ளன.
1.முதற்பொருள்
முதற்பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1.நிலங்கள்
2.பொழுதுகள்
1.நிலங்கள்
தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பினை ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலங்களும் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன என்ற காரண விளக்கமும் சொல்லப்பட்டுள்ளன. நிலங்கள் ஐந்து வகைப்படும். அவை,
1.குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதிகளும்
2.முல்லை – காடும் காடு சார்ந்த பகுதிகளும்
3. மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதிகளும்
4.நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்
5.பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்
மேற்கண்ட படம், நிலங்கள் எவ்வாறு உருவாகியிருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. மலைப்பகுதிகளாக இருந்த நிலங்களை மனதன் கொஞ்சகொஞ்மாய் வெட்டி எடுத்து காடுகளாக மாற்றினான். காடுகளாக இருந்த பகுதிகளை வயல்வெளிகளாக மாற்றினான். வயல்களாக இருந்தவைகள் மழைநீரால் (கடலால் சூழப்பட்ட பகுதியையே முதன்மையாகச் சொல்லப்படுகின்றன) சூழப்பட்டு எங்கும் தண்ணீர் பகுதியானது. அதன்பிறகு வெப்பத்தின் காரணமாக தண்ணீரானது வற்றி வறண்ட பாலைவனமாக மாறுகிறது.
ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தங்களுடைய நிலங்களல் விளைந்த உணவு மற்றும் பொருட்களையே முதன்மையானதாகக் கொண்டு வாழ்ந்தனர். தங்கள் நிலத்தில் கிடைக்காத பொருளை பிற நிலங்களிலிருந்து பண்டமாற்று முறையில் பகிர்ந்து கொண்டார்கள்.
உதாரணமாக,
நெய்தல் நிலத்தில் விளைந்த உப்புக்கு நேர் மருதநில நெல் ஆகும்.
முல்லை நில பாலுக்கு குறிஞ்சி நில தேன் நேராகும்
இவ்வாறு பண்டமாற்று முறையினைப் பயன்படுத்தி அனைத்து வகையான மக்களும் எல்லாப்பொருட்களையும் வாங்கியும் விற்றும் ஒரு வணிகச் சந்தையே உருவாக்கி வந்துள்ளனர்.
2.பொழுதுகள்
பொழுதுகளை இரண்டாகப் பிரித்துள்ளார்கள். அவை,
1.பெரும் பொழுதுகள் (ஆண்டை ஆறாகப் பிரித்துக் கொள்வது)
2.சிறுபொழுதுகள் (ஒரு நாளினை ஆறாகப் பிரித்துக் கொள்வது)
1.பெரும் பொழுதுகள்
வ.எண் | பெரும் பொழுதுகள் | மாதங்கள் |
---|---|---|
1 | இளவேனிற் காலம் ( வெயிற்காலம்) | சித்திரை, வைகாசி |
2 | முதுவேனிற் காலம் (வெயில் தணியும் காலம்) | ஆனி, ஆடி |
3 | கார்காலம் (மழைக்காலம்) | ஆவணி, புரட்டாசி |
4 | குளிர்காலம் | ஐப்பசி, கார்த்திகை |
5 | முன்பனிக்காலம் | மார்கழி, தை |
6 | பின்பனிக்காலம் | மாசி, பங்குனி |
2.சிறுபொழுதுகள்
சிறுபொழுதுகள் என்பது ஒருநாளினை ஆறாகப் பிரித்துக் கொள்வது ஆகும்.
வ.எண் | சிறுபொழுதுகள் | நேரங்கள் |
---|---|---|
1 | காலை | 6 Am முதல் 10 AM வரை |
2 | நண்பகல் | 10 Am முதல் 2 PM வரை |
3 | எற்பாடு (சூரியன் மறையும் நேரம்) | 2 PM முதல் 6 PM வரை |
4 | மாலை | 6 PM முதல் 10 PM வரை |
5 | யாமம் (நடு இரவு) | 10 PM முதல் 2 AM வரை |
6 | வைகறை (விடியற்காலை) | 2 AM முதல் 6 AM வரை |
நிலமும் பொழுதுகளும்
வ.எண் | அன்பின் ஐந்திணை | நிலங்கள் | பெரும் பொழுதுகள் | சிறுபொழுதுகள் |
---|---|---|---|---|
1 | குறிஞ்சி | மலை சார்ந்த பகுதிகள் | குளிர்காலம் | யாமம் (நடு இரவு) |
2 | முல்லை | காடு சார்ந்த பகுதிகள் | கார்காலம் | மாலை |
3 | மருதம் | வயல் சார்ந்த பகுதிகள் | 6 பெரும் பொழுதுகளும் | வைகறை |
4 | நெய்தல் | கடல் சார்ந்த பகுதிகள் | 6 பெரும் பொழுதுகளும் | எற்பாடு |
5 | பாலை | மணல் சார்ந்த பகுதிகள் | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் |
📜 குறிஞ்சி நிலம் மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் எப்பொழுதும் குளிர் அதிகமாகக் காணப்படும். தலைனும் தலைவியும் ஒன்றாகும் நேரம் யாமப்பொழுது.
📜 முல்லை நிலத்தில் மரம், செடிக்கொடிகள் எனக் காடுகள் சூழ்ந்து இருப்பதால் மழை பிற இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பொழியும். தலைவனுடைய பிரிவு மாலை நேரத்தில் தலைவியை வருத்தமடையச் செய்யும்.
📜 மருதநிலத்தில் ஆறு பெரும்பொழுதுகளிலும் வேலைகள் தொடர்ந்து நடக்கும். வைகறை நேரத்தில் உழவர்கள் ஏர் பூட்டி வயலுக்குச் செல்வார்கள்.
📜 நெய்தல் நிலத்திலும் ஆறு பெரும்பொழுதுகளிலும் வேலைகள் தொடர்ந்து நடக்கும். மாலை மயங்கும் நேரத்தில் கடலுக்குள் செல்லும் மீனவர்களை நினைத்து (ஒன்று ஆகிவிடக்கூடாது என்று) அவர்களின் குடும்பத்தார்கள் விளக்கொளி ஏற்றி மௌனம் காத்துத் தவம் இருப்பர்.
📜 பாலை நிலத்தில் வெயில் அதிகம் இருப்பதால் எங்கும் வறட்சி மிகுந்து காணப்படும். அதனால் நண்பகல் எனும் வெயில் பகுதியைச் சொல்லப்படுகிறது.
குறிப்புகள்
📜 மேற்கண்ட ஒவ்வொரு வகைப்பாடும் இலக்கண நூலாசிரியர்களின் வகுத்தல்படி பெரும்பாண்மையைக் குறித்து நிற்கும்.
📜 ஒரு நிலத்தில் சொல்லப்பட்டது வேறு நிலங்களிலும் நடக்கும். ஆனால் அது சிறுபாண்மையாகவே இருக்கக்கூடும்.
வ.எண் | நிலங்கள் | உரிப்பொருள் |
---|---|---|
1 | குறிஞ்சி | புணர்தலும் புணர்தல் நிமித்தமும் |
2 | முல்லை | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
3 | மருதம் | ஊடலும் ஊடல் நிமித்தமும் |
4 | நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
5 | பாலை | பிரிதலும் பிரிதல் நிமித்தமும் |
6 | கைக்கிளை | ஒருதலைக்காமம் |
7 | பெருந்திணை | பொருந்தாக் காமம் |
2.உரிப்பொருள்
தலைவனும் தலைவியம் இன்பமுற்று வாழும் அன்பின் ஐந்திணையும் கைக்கிளை மற்றும் பெருந்திணைக்கும் உரிப்பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.
குறிஞ்சி :ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் களவு, கற்பு உறவில் கூடுதல்.
முல்லை : பொருள் தேடச்சென்ற தலைவனை நினைத்துத் தலைவி காத்திருக்கிறாள். தலைவியை நினைத்துத் தலைவன் காத்திருக்கிறான்.
மருதம் : பரத்தையற் பிரிவால் தலைவி தலைவனுடன் ஊடி நிற்கின்றாள். ஊடலைத் தவிர்க்க உறவினர்கள் வருதல் மீண்டும் இன்பமாகும்.
நெய்தல் : கடலுக்குச் சென்றிருக்கும் தலைவனோ, தகப்பனோ, சகோதரனோ உயிருடன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று பெண்கள் இரங்கியிறுத்தல்.
பாலை : பொருள் தேட சென்றிருக்கும் தலைவன் வெயிலின் கொடுமையால் துன்பப்படுதல். தலைவியையும் பிள்ளைகளையும் விட்டு பிரிந்து தனிமை துயரம் அடைதல்.
3.கருப்பொருள்
இலக்கண ஆசிரியர்கள் மக்கள் நலமுடன் வாழும் பகுதிகளாக ஐந்து நிலங்களைக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு நிலத்திலும் அதனுடைய அடிப்படை தன்மைக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிர்களும் நிலத்திற்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருப்பொருட்களை 13 வகைகளாப் பிரித்துக் கொள்ளலாம்.
கருப்பொருட்கள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | குறவன், குறித்தி, வெற்பன் | ஆயர், ஆய்ச்சியர், இடையர்கள் | உழவர், உழத்தி, ஊரன், மகிழன் | பரதர், பரத்தியர், சேர்ப்பன் | எயினர், எயிற்றியர் |
உணவு | மூங்கிலரிசி, தினை, மலைநெல் | வரகு, சாமை, முதிரை | செந்நெல், | மீன், உப்பு | வழிப்பறி பொருட்கள் |
விலங்கு | புலி, யானை, கரடி, சிங்கம் | முயல், மான் | எருமை, நீர்நாய், | சுறா, முதலை | வலிமை இழந்த யானை, புலி, செந்நாய் |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை, குவளை | நெய்தல், தாழை, முண்டகப் பூ | குறவம், பாதிரி |
மரம் | அகில், வேங்கை, தேக்கு, சந்தனம் | கொன்றை, காயா | காஞ்சி, மருதம், வஞ்சி | புன்னை, ஞாழல் | பாலை, இருப்பை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, சேவல் | நாரை, நீர்க்கோழி, குருகு | கடற்காகம், அன்னம் | புறா, பருந்த |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவி, சுனைநீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை, ஆறு | மணற்கிணறு, உவர்க்குழி | வற்றிய சுனை, கிணறு |
பறை | தொண்டப் பறை | ஏறுகோட்பறை | மணமுழா, நெல்லறி கிணை | மீன்கோட் பறை | துடி |
பண் | குறிஞ்சிப் பண் | சாதாரிப்பண் | மருதப்பண் | செவ்வழிப் பண் | பஞ்சுரம் |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
தொழில் | தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல், | நெல்லரிதல், களை பறித்தல், புது நீராடல் | மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் | வழிப்பறி செய்தல், கொள்ளை, நிரை கவர்தல் |
அகத்திணைகளைப் பொறுத்தவரையில் திணை அடிப்படையில் மட்டுமின்றி களவு, கற்பு அடிப்படையிலும் பாகுபடுத்தப்படும்.
களவு : திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை முறையினைப் பற்றிக் கூறுவது
கற்பு : திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை முறையினைப் பற்றிக் கூறுவது.