விறன்மிண்ட நாயனார்‌ புராணம்

விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார்‌

        விறன்மிண்ட நாயனார்‌ சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில்‌ பிறந்தவர்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அளவற்ற பக்தியும்‌ அன்பும்‌ கொண்டிருந்தார்‌. சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவப்‌பணிகள்‌ செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாக்‌ கருதினார்‌.

         ஒருமுறை விறன்மிண்ட நாயனார்‌ திருவாரூரில்‌ வீற்றிருக்கும்‌ தியாகராஜப்‌ பெருமானை வணங்க அங்கு வந்தார்‌. விறன்மிண்ட நாயனார்‌ வந்த அச்சமயத்தில்‌, சைவசமயக்‌ குரவர்களில்‌ ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும்‌ திருவாரூர்‌ ஆலயத்திற்கு வந்திருந்தார்‌. சுந்தரர்  ஆலயத்தில்‌ அமர்ந்திருந்த பல சிவனடியார்களைக்‌ கண்டும்‌ அவர்களை வணங்காமல்‌ ஒதுங்கி வந்தார்‌.

       அடியார்களை மதியாது ஆலயத்தினுள்‌ சென்ற சுந்தரரைக்‌ கண்ட விறன்மிண்ட நாயனாருக்கு, ‘சுந்தர மூர்த்தி நாயனார்‌ சிவனோடு நட்புறவு கொண்டவராக இருக்கலாம்‌. இருப்பினும்‌ இப்படி சிவனடியார்களை மதிக்காமல்‌ செல்வது நல்லதில்லையே’ என்று எண்ணி மனம்‌ வருந்தினார்‌.

       சுந்தர மூர்த்தி நாயனாரின்‌ மேலும்‌ அவருக்கு வடக்கு வாசலில்‌ திருக்காட்சி அளித்த தியாகேசப்‌ பெருமானின்‌ மீதும்‌ கோபம்‌ கொண்டு, “திருத்தொண்டர்களுக்கு வன்றொண்டனும்‌ புறம்பு; அவனை ஆண்ட சிவனும்‌ புறம்பு” என்றார்‌.

     இனி திருவாரூக்குத்‌ தான்‌வருவதில்லை என்று சபதம்‌ செய்தார்‌. அதோடு மட்டுமின்றி திருவாரூருக்குச்‌ சென்றுவரும்‌ சிவனடியார்களின்‌ கால்களையும்‌ வெட்டுவேன்‌ என்று கூறி, ஆண்டிப்பந்தல்‌ என்ற ஊரில்‌ தங்கியிருந்தார்‌.

     சிவனடியார்கள்‌ மீது விறன்மிண்ட நாயனார்‌ கொண்ட பக்தியை உலகுக்குத்‌ தெரிவிக்க விருப்பம்‌ கொண்டார் சிவபிரான்‌. சிவனடியார்‌ உருவம்‌ தாங்கி ஆண்டிப்பந்தல்‌ வந்தார்‌. விறன்மிண்ட நாயனாரைச்‌ சந்தித்தார்‌. தான்‌ திருவாரூரிலிந்து வருவதாகக்‌ கூறினார்‌.

       அதைக்கேட்டு கோபம்‌ கொண்ட விறன்மிண்ட நாயனார்‌, அச்சிவனடியாரின்‌ கால்களை வெட்டுவது என்று வாளை ஓங்கிக்‌ கொண்டு ஒடினார்‌. சிவனடியாரும்‌ அவரைக்கண்டு பயந்ததுபோல்‌ ஓடிக்‌ கொண்டேயிருந்தார்‌. விறன்மிண்ட நாயனாரும்‌ அச்சிவனடியாரைத்‌ துரத்தி துரத்தி அவரையறியாமல்‌ திருவாரூருக்கே வந்துவிட்டார்‌.

      உடனே அந்தச்‌ சிவனடியார்‌, விறன்மிண்ட நாயனாரை நோக்கி, “திருவாரூர்‌ மண்ணை மிதிக்க மாட்டேன்‌ என்று சபதம்‌ செய்தாயே; இப்போது திருவாரூருக்கு வந்து விட்டாயே!” என்று கேலியாகப்‌ பேசினார்‌. இதனால்‌ கோபமடைந்த விறன்மிண்ட நாயனார்‌, தன்‌ கைகளிலிருந்த அந்த வாளால்‌ தன்‌ கால்களையே வெட்டிக்‌ கொண்டார்‌. உடனே சிவனடியார்‌ உருவிலிருந்த சிவபெருமான்‌, நாயனாரைத்‌ தடுத்தாட்கொண்டார்‌.

        விறன்மிண்ட நாயனார்‌ சிவனடியார்‌ மீது கொண்ட அன்பை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும்‌, திருத்‌தொண்டத்‌ தொகையைப்‌ பாடினார்‌. அதைக்‌ கேட்ட விறன்மிண்ட நாயனார்‌ பெருமகிழ்ச்சி அடைந்தார்‌. சுந்தரருடன்‌ நட்பு கொண்டார்‌. இவ்வாறு வாழ்ந்த விறன்மிண்ட நாயனார்‌, இறுதியில்‌ சிவஜோதியில்‌ கலந்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here