புதுக்குறள்:ஆசிரியர் மாட்சி|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

ஆசிரியர் மாட்சி - புதுக்குறள் - முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
1.கற்பித்த பொழுதிற் பெரிதுவக்கும் தன்மாணாக்கனைச்   
சிறந்தோன் எனக்கேட்ட ஆசான்.         
       ஒரு ஆசிரியர் தனது மாணவன் தான் கற்றுக்கொடுத்த கல்வியில் சிறந்து விளங்கி, பலராலும் பாராட்டப்படுவதைக் கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார். இது ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மனநிறைவு.

2.ஆசான் மாணாக்கனுக்கு ஆற்றும்உதவி கல்வியில்    
முந்தி யிருப்பச் செயல்
         
        ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செய்யக்கூடிய மிக உயர்ந்த உதவி, அவர்களைக் கல்வியில் சிறந்து விளங்கச் செய்வதுதான். இதுவே ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செய்யும் உண்மையான உதவி.

3. மாணாக்கன் ஆசானுக்கு ஆற்றும்நன்றி இவன்ஆசான்   
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.
         
          ஒரு மாணவன் தன் ஆசிரியர் மீது மக்கள் பெருமை கொள்ளும்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அந்த மாணவனின் திறமையைக் கண்டவர்கள், “இவனைப் போன்ற ஒரு மாணவனை உருவாக்க அந்த ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ?” என்று கேட்கும் அளவுக்கு மாணவன் சிறந்து விளங்க வேண்டும். அதுவே ஒரு மாணவன் தன் ஆசிரியருக்குச் செய்யக்கூடிய நன்றிக்கடன் ஆகும்..

4.எவ்வறிவுரை ஆசான்வாய்க் கேட்பினும் அவ்வறிவுரை   
கேட்டதும் நடத்தல் பணிவு.         
          ஆசிரியர் சொல்லும் எந்த அறிவுரையையும் முழு மனதுடன் ஏற்று, அதன்படி நடப்பதே மாணவனுக்கு அழகு. ஆசிரியரின் அறிவுரை எதுவாக இருந்தாலும், அதைக் கேட்டு நடப்பதே மாணவனின் சிறந்த பண்பு.

5.எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை    
தம்ஆசான் மறந்த மாணாக்கர்க்கு
         
          ஒருவர் எந்த நன்மையை மறந்தாலும் அதிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால், தனக்குக் கல்வி அளித்த ஆசிரியரின் நன்றியை மறந்தவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற மாட்டார்கள். ஆசிரியரின் உதவியை மறப்பது மிகவும் பெரிய தவறு.

6. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை   
மாணாக்கர் இகழ்தல் பொறுத்தல் தலை
         
         தன்னைத் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும் நிலத்தைப் போல, சில சமயங்களில் தன்னை இகழும் மாணவர்களையும் ஆசிரியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையே ஓர் ஆசிரியருக்கு அழகு.

7. கற்றலும் கற்பித்தலும் கேட்டலும் கேட்டற்கு   
விடையளித்தலும் ஆசானுக் கழகு.
         
       ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகள்: எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குக் கற்பிப்பது, மாணவர்களின் கேள்விகளைக் கவனமாகக் கேட்பது, அந்தக் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிப்பது ஆகியவையே.

8. பேச்சில் இனியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்    
மீக்கூறும் ஆசான் உலகு.         
       இனிய சொற்களைப் பேசி, யாரையும் கடுஞ்சொற்களால் காயப்படுத்தாத ஆசிரியர் உலகத்தால் பெரிதும் போற்றப்படுவார். சிறந்த பேச்சும் மென்மையான அணுகுமுறையும் ஓர் ஆசிரியரின் மாண்பை உயர்த்தும்.

9. அன்பு அறிவாற்றல் பொறை இந்நான்கும்  
உடையான் ஆசானுள் தலை 
         
          அன்பு, அறிவு, ஆற்றல், பொறுமை ஆகிய நான்கு பண்புகளும் ஒருசேரப் பெற்றவரே சிறந்த ஆசிரியர். இந்த நான்கு பண்புகளும் ஒருவரை முழுமையான ஆசானாக உருவாக்குகின்றன.

10. குறைகளைந்து கற்பிக்கும் ஆசான் மாணவர்க்கு      
இறையென்று போற்றப் படும்.         
         மாணவர்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கி, சரியான பாதையில் சென்று கல்வி கற்க வழிகாட்டும் ஆசிரியர், மாணவர்களால் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுவார்.

குறள் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை – சென்னை 44.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here