தீவிரவாதப் பெண்ணியம் | Radical Feminism

தீவிரவாத-பெண்ணியம்

தீவிரவாதப் பெண்ணியம்


            தீவிரப் பெண்ணியம், 1960-களில் தொடங்கி பெண்ணியத்திற்கும், அதன் அமைப்பிற்கும் புது விளக்கங்களை அளித்தது. இதில் ஈடுபட்ட பெண்கள் அரசியலில் புது இடதுசாரியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தீவிரவாதப் பெண்ணியவாதிகளின் வாதம், பெண்களின் இயற்கையான தன்மைகள் என்ன என்பதை மையமாகக் கொண்டது. மிதவாதப் பெண்ணியவாதிகளும், சோஷலிசப் பெண்ணியவாதிகளும் பெண்களும் ஆண்களைப் போன்று சுதந்திரமான மனிதர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர்.

            இது பெண்ணியத்தின் மையக் கருத்து, ஆனால் அவர்கள் ஆண்களும் பெண்களும் சில தன்மைகளில் வேறுபடுகின்றனர் என்று கருத்து கொண்டனர். அதனால் 19-ஆம் நூற்றாண்டு மிதவாதப் பெண்ணியவாதிகள், பெண்களின் இயற்கையான தன்மைகள் அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு, தாய், தாரம் என்ற கடமைகளை நிறைவேற்றத் தகுதியுடையவர் களாக்குகின்றது என நம்பினர். சோஷலிசப் பெண்ணியவாதிகளும் பெண்களின் இயற்கையான தன்மைகள் ஆண்களிடமிருந்து வேறுபடுகின்றன என்றே கருதினர். அவர்களது வேலைகளைத் தனிநபர் வட்டத்திலிருந்து பொதுவட்டத்திற்கு மாற்றுவது, பாலினத்  தன்மைகளை மாற்றாது என விவாதித்தனர். ஆயின், தீவிரவாதப் பெண்ணியவாதிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலியல் சார்ந்த மாறுபட்ட தன்மைகள் எதுவும் கிடையாது என மறுத்து, அதன் அடிப்படையில் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வேலைப் பங்கீடுகள் நியாயமற்றவை என விவாதித்தனர்.


பெண்ணடிமையின் காரணங்கள்


            தீவிரவாதப் பெண்ணியத்தின் முதல் கோட்பாடு பெண்கள் ஒரு நசுக்கப்பட்ட வர்க்கத்தினர் என்பதாகும். அவர்களது கருத்துப்படி, பாலினப்பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த நசுக்குதல் பொருளாதார அடிப்படையிலமைந்த நசுக்குதலைவிட சமூகத்தின் தன்மைகளை அதிக அளவில் பாதிக்கின்றது என்பதாகும்.


            தீவிரவாதப் பெண்ணியத்தின் முக்கிய கருத்து, ‘பாலியல் அரசியல்’ என்பதாகும். இதில் அரசியல் என்ற சொல் அதிகாரத்தின் அடிப்படையிலான உறவைக் குறிக்கும். ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரை ஆள்வது இதன் இயற்கையான இயல்பு. இதுவரை ஆண் பெண் இரு பாலருக்கிடையே இருந்து வந்த உறவை ஆராய்ந்தால் சரித்திரம் முழுவதும் ஆண்கள் பெண்களை அடிமை கொண்டிருப்பது தெரியவரும். ஆண்கள் பெண்களை ஆள்வதைத் தங்கள் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளனர். இதுதான் இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிப்படையான, சமூகத்தின் எல்லாக் கூறுகளிலும் பரவி நிற்கும், சமூகக் கலாச்சாரக் கோட்பாடாகும். ஆண் நாயகத்தின் மிகப் பெரிய வலிமை, அது எல்லா சமூகங்களிலும் ஆண்டாண்டு காலமாக வழக்கிலிருக்கின்றது என்பதாகும். பாலியல் வேறுபாடுகள் சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளன. அதனால் அவை இருக்கின்றன என்பதே உணரப்படுவதில்லை.

            இக்காரணத்தினால் அவை இயற்கையானவை என்றும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒருவரும் அது குறித்து வினாக்கள் எழுப்புவதில்லை. இதற்குச் சாதகமாக சமூகம் வாழ்க்கையின் தனி மனித அனுபவங்கள் வேறு: புற உலக அனுபவங்கள் வேறு எனப் பாகுபடுத்தி வைத்தது. ஆயின், தீவிரப் பெண்ணியவாதிகள் பொதுவான, மரபு சார்ந்த அரசியல் நிறுவனங்களை ஆராய்ந்து பெண்கள் ஏன் நசுக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயன்றனர். இதன் உண்மை தனிமனித மூலம் அவர்களுக்குத் தெரிய வந்த அனுபவமும் ஒரு அரசியல்தான் (Personal is Political) என்பதாகும். அதாவது, தனிமனித வாழ்வில் பெண்கள் நசுக்கப்படுவது போன்றே பொதுவாழ்விலும் நசுக்கப்படுகின்றனர் என்பதாகும்.

            சமூகத்தில் பெண்கள் நசுக்கப்படுவது மறைமுகமாவும், வெளிப்படையாகவும் சமூகத்தின் ஒவ்வொரு கூறிலும் நிகழ்கின்றது. மனித மறு உற்பத்தி, மேலும், சமூக நிறுவனங்களான திருமணம், கட்டாய இருபாலர் உடலுறவு, தாய்மை போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டும், தனி நபர்கள் சமூகத்தில் இப்படித்தான் வாழவேண்டுமென சமூக மயமாக்கப்பட்டும், வழக்கத்திலிருக்கும் சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

 
            தீவிரவாதப் பெண்ணியவாதம் நான்கு முக்கிய கோட்பாடுகளில் அடங்குகின்றது. அவை ஆண் நாயகம், குடும்பம், பாலியல், பெண்களின் வரலாறு என்பவைகளாகும். ஆண்நாயகக் கூறுகள் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அடங்கியுள்ளன. இதை வலியுறுத்த எழுந்த நிறுவனம் தான் குடும்பம். இங்கு ஆண் பெண் இருபாலருக்கிடையே வேறுபடுத்தப்பட்ட வேலைப் பங்கீடுகள் உள்ளன. இங்குதான் ஆண்களும், பெண்களும் ஆண்நாயகச் சமூகத்திற்கியைந்தவாறு உருவாக்கப்பட்டு, ஆண் நாயகத்தைப் பலப்படுத்துகின்றனர். இது ஆணாதிக்கத்தின் அடித்தளமாகும்.

            அடுத்தது, பாலியல் உறவுகள். ஒரு நபர் மணம் என்ற விதிமுறை பெண்ணுக்கு மட்டும் தான் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்குக் கிடையாது. இதுவும், ஆண் பெண்ணின் பாலியல் மீது கொள்ளும் ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. இந்நிலையை மாற்ற பெண்களின் வரலாற்றை ஆராய்வது முக்கியம். சமூக மாற்றத்தில் எப்பொழுது, ஏன் பெண்கள் ஆண் நாயகத்தால் கொடுமைப்படும் வழக்கம் தோன்றியது என்பதை உணர்ந்தால்தான் அந்நிலையை மாற்றும் வழிவகைகளை ஆராய இயலும்.
தீவிரவாதப் பெண்ணியவாதிகள் ஆண்களை எதிரிகளாகக் கருதுகின்றனர். ஆண் நாயகத்தால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மதிப்பீடுகள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டுகின்றனர்.

பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

தீவிரவாதப் பெண்ணியம், ஆண்களால் ஏற்பட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஆண்களே பெண்களுக்கு எதிரிகள் கருதுகின்றது. அதனால் பெண்கள் ஆண்களை எந்த வகையிலும், சாராது, பிரிந்து வாழ வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இதனால் எல்லா தீவிரப் பெண்ணியவாதிகளும் பெண்களுக்குள் உடலுறவு கொள்வதை ஆதரித்து, ஆண்களுடன் உடலுறவு கொள்வதை எதிர்த்தனர். மேலும், ஆண்தாயக அமைப்பிற் கெதிராகப் பெண்களை மட்டும் கொண்ட நிறுவனங்களை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பெண்கள் மட்டும் கொண்ட குழுக்கள், உணவுவிடுதிகள், புத்தகக்கடைகள், பதிப்பகங்கள், பெண்கள் உடல்நலம் பேணும் நிறுவனங்கள் முதலியவை அவற்றில் சிலவாகும்.

பெண்களின் நசுக்குதல் என்பது சமூகத்தில் ஒவ்வொரு கூறிலும் நிகழ்வதால் சமூகத்தின் மேல் மட்டத்தில் பெண்களுக்காகச் செய்யப்படும் சீர்திருத்தங்கள் எந்தவித பயனையும் அளிக்காது; அதனால் புது சமுதாய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் தீவிரமாக ஆதரித்தனர். இதற்கு முதலாவதாக, குடும்பம் என்ற அமைப்பு தகர்க்கப்படவேண்டும்; பாலியல் தொடர்புகளில் முழு சுதந்திரம் வேண்டும்; இருபாலர் உடல் உறவு, பலருடன் உடலுறவு, ஒரு பாலரிடையே உடலுறவு, உடலுறவு இன்றி வாழ்வது என்ற வாழ்க்கை முறைகளில் எப்படி வேண்டுமானாலும் வாழச்சுதந்திரம் வேண்டும் எனக் கோரினர். பெண்களின் உடல் மனித மறு உற்பத்தியோடு இணைக்கப்பட்டிருப்பதால் ஆண் இனம் அதைக் காரணம் காட்டி பெண்களைத் தாழ்மைப்படுத்திற்று, அந்நிலையிலிருந்து பெண்கள் விடுதலையடைய குழந்தை பெறும் பொறுப்பிலிருந்து சுதந்திரம் பெற வேண்டும். இதற்கு சுலாமித் பயர் ஸ்டோன் என்பவர் குழந்தைகள் பெண்களின் உடலுக்கு வெளியே செயற்கையான சூழ்நிலையில் உருவாக்கப்பட வேண்டுமென்ற வழிமுறையைக் கூறினர். அதேபோன்று, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பிலிருந்தும் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் கூட்டுமுறையில் சமுதாயத்தால் வளர்க்கப்பட  வேண்டும். இது குழந்தை வளர்ப்பில் உள்ள மேம்பட்ட அறிவும், அனுபவமும் குழந்தைகளுக்குக் கிடைக்க வழி செய்யும் எனவும் கருதினார். மேலும், குழந்தைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களிடையே சுயநம்பிக்கையை ஏற்படுத்தும். பெண்களையும் குழந்தைகளையும் சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஈடுபடுத்தி, ஒன்றுபடுத்த வேண்டும். ஆண் பெண் இருபாலருக்கிடையே உள்ள வேலைப் பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும் அறவே நீக்க வேண்டும் என்பவை தீவிரவாதப் பெண்ணியவாதிகளின் வழிமுறைகளாகும்.


குறைபாடுகள்

தீவிரவாதப் பெண்ணியவாதிகள் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட போதிலும் அவர்கள் கோட்பாடுகளிலும், அணுகுமுறைகளிலும் சில குறைபாடுகள் இருந்தன. உயிரியல் காரணிகள் மட்டும் ஆண் பெண் வேறுபாடுகளைத் தீர்மானிப்பதில்லை. அதற்கு வேறு காரணிகளும் உண்டு. ஆயின், ஆண் பெண் வேறுபாடுகளுக்கு உயிரியல் காரணிகள் எந்த வகையிலும் ஆதாரமானதன்று என்பது தவறான வாதமாகும்.
ஆண், பெண் இருபாலருக்கிடையே உள்ள உயிரியல் வேறுபாடுகள் படைப்பில் அமைந்தவை; இயற்கையானவை. ஆயின், தீவிரப் பெண்ணியம் அதற்கு எதிரிடையாகச் செயற்பட்டது. அச்செயற்பாடுகள் தீவிரமாகவும் இருந்தன. இதைப் பெரும்பான்மையான பிற பெண்ணியவாதிகளும், பொது மக்களும் ஒப்புக் கொள்ளவில்லை.

தீவிரப் பெண்ணியவாதிகள் ஆதரித்த ஒருபாலர் பாலுறவு, குடும்ப எதிர்ப்பு, கருப்பைக்கு வெளியில் குழந்தைகளை உருவாக்குவது போன்ற கருத்துக்களைப் பெரும்பான்மையோர் எதிர்த்தனர். தீவிரப் பெண்ணியவாதிகள் சிற்சிறு குழுக்களாகப் பிரிந்து, சரியான தலைவர்கள் இன்றி, வெவ்வேறுபட்ட இலக்குகளோடும், வழிமுறைகளோடும் செயற்பட்டனர். அவர்களிடையே ஒரு சரியான அமைப்போ, எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்டங்களோ இல்லை.

முடிவுரை

1.மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

2.மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

3.சோஷலிசப்  பெண்ணியம் | Socialist Feminism

4.தீவிரவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் சீர்திருத்தத்தில் நம்பிக்கை உடையது.

சோஷலிசப் பெண்ணியமும், தீவிரவாதப் பெண்ணியமும் ஒரு சுதந்திரமான சமூகத்தை உருவாக்க முற்படுகின்றன.

மார்க்சியப் பெண்ணியம் வர்க்கத்திற்கும், தீவிரப் பெண்ணியம் பாலியல் போராட்டத்திற்கும் முதலிடம் கொடுக்கின்றன.

சோஷலிசப் பெண்ணியம் சமூக நசுக்குதலுக்குக் காரணமானவைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டுமென விழைகின்றது.

 

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்,

ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here