திருக்குறளில் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை | ச.குமார்

திருக்குறளில் வாழ்வியல் ஆய்வுக்கட்டுரை ச.குமார்
 முன்னுரை
                 
திருக்குறள் என்பது வாழ்வியல் நூலாகும் அந்நூலுள் மனிதன் நல்வாழ்வு வாழ தேவையான அறிவுரைகள் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பெற்றுள்ளது .திருக்குறளில் வாழ்க்கை பற்றி பல கோணங்கள் விவரிக்கப்பெற்றிருந்தாலும் திருவள்ளுவர்  கூறும் வாழ்வியல் நெறிகளை திருக்குறள் வாயிலாக .உற்றுநோக்குவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

திருக்குறளில் வாழ்க்கை
               
மாந்தர் தாம் வாழும் முறையை வாழ்க்கை என்றனர். வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதன்வழி வாழ்க்கையை வாழவேண்டியதற்கான நெறிமுறைகளை திருவள்ளுவர் அழகாக வகுத்துக் காட்டியுள்ளார்.  வள்ளுவர் காட்டும் வாழ்க்கை  நல் வாழ்க்கை, தீயவாழ்க்கை என்று இருவகைகளாக காணமுடிகின்றது. நல் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கையாகும். தீய வாழ்க்கை என்பது மறம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அறம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு அறமே குறிக்கோள். மறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பது அறத்தின் மறுதலையானது ஆகும். அறத்தோடு முரண்பாடு உடையது ஆகும். அறத்து முரணான தீய வாழ்க்கை முறையைத் தவிர்க்க வள்ளுவர் பல்வேறு வழிகளை நமக்கு காட்டுகிறார். வாழ்க்கை என்ற சொல்லைத் தன் குறள்களில் நேரடியாகப் பயன்படுத்தி அக்குறள்வழி வாழ்க்கையின் அடிப்படைகளை உணர்த்த திருவள்ளுவர் முயல்கிறார்.

நல்வாழ்க்கை
               
நல்வாழ்க்கைஎன்பது அறத்தின் வழியில் வாழ்ந்து, பொருளை ஈட்டி, அப்பொருளை தனக்கும்  மற்றவர்களுக்கும் வழங்கி வாழும் சிறந்தவாழ்க்கையே நல்வாழ்க்கை ஆம்.. இந்த ஒரு நற்பண்பினைப் நாம்பெற்றுவி;ட்டால் நலம்பயக்கும் மாந்தர் நல்ல மாந்தராக வாழ்ந்துவிடலாம் .. நன்னெறியை தவறிய மனிதர்கள் எக்காலத்தும் நல்ல மனிதர்களாக ஒருபோதும் வாழ்ந்திட இயலாது.
 
“பழிஅஞ்சிப் பாத்து ஊணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள்-44)
 
திருவள்ளுவர். பழிக்கு அஞ்சி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும். பிறர் பழிக்கா வண்ணம் தன்னுடைய வாழ்க்கை அறம் சார்ந்து பொருள் ஈட்டும் வாழ்க்கையாக அமைந்தால் அதுவே சிறந்த வாழ்க்கையாகும். ஒருவன் தாம் சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு பகுத்து உண்ணும் அளவிற்கு அளித்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்பவன் வழி உலகம் நிற்கும் என்கிறார்
                பழியோடு வரும் செல்வம் என்றுமே நிலைக்காது. அவ்வாறு அச்செல்வம் சேர்த்தாலும் அதனை பகுத்து உண்ணா நிலையில் அது பயன்படாமல் சென்றுவிடும். இவ்வாறு வாழ்தல் எந்நாளும் சிறந்த வாழ்க்கையாகாது. ஆகவே மனித வாழ்வில் அறம் சார்ந்து வாழ்வது பிறருக்கு தன்செல்வத்தை, உணவைப் பகிர்ந்தளிப்பது  சிறந்த வாழ்க்கை முறையாகும். இவ்வாழ்க்கை வாழ்பவரை உலகம் வழிகாட்டியாக கொண்டுப் பின்பற்றி செயல்படும்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று (குறள்-83)
               
என்ற குறட்பா உணர்த்துவது யாதெனில் நாள்தோறும் விருந்தோடு உண்ணும் உணவு முறையானது, செல்வத்தை; மிகுவிக்கும் சிறந்த வாழ்க்கை முறையுமாகும்.

தீய வாழ்க்கை
               
நாணயம் போன்று இருகூறு உடையது. நல்ல வழியை ஒரு சாரார் பின்பற்றியது போன்றே தீய வழியை சிலரும் பின்பற்றி வந்துள்ளனர்.
 வள்ளுவர் தீய வழியில் செல்வோரை தடுக்க  திருக்குறளை எழுதி இருக்கவேண்டும்.  
உயிருடன் உடம்பு நீக்கியார் என்ப செயிர்
உடம்பின்செல்லாத் தீவாழ்க்கை யவர். (குறள்-330)
               
எவ்வுயிர்களையும் கொல்லாமல் வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகும். இவ்வகையில் உயிர்க்கொலை தவிர்ந்த வாழ்க்கை உடையவர்கள் உலகில் சிறந்த வாழ்வைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். உலக மாந்தர் அனைவரும் தனக்கு எதனால் கேடு ஏற்படும் என்று தெரிந்தே வாழ்கின்றனர்.  தீமை வரும் என்று தெரிந்த நிலையில்  தன்னிடம் தீமை வந்து சேராமல் காத்துக் கொள்ள முன்னேற்பாடு செய்து கொள்ளும் வாழ்க்கை இனிதாக அமைகிறது.. அவ்வாறு எதிர் வருவதை அறியாமல் வாழ்பவனின் வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த எரி பொருளை ஒத்ததாக அமையும். இதனை திருவள்ளுவர்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள்-435)

என்று எடுத்துரைக்கிறார் . தம் வாழ்வின் எல்லை அறிந்து இவ்வளவே தன் எல்லை என அறிந்து அதற்கேற்ப  வாழும் வாழ்க்கை உடையவன் சிறந்த வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை
உளபோலஇல்லாகி.தோன்றக் கெடும் (குறள்-479)
என்ற குறட்பா இதனை .வலியுறுத்தும். வாழ்க்கை என்பது இனிதானது. இனிதானவர்களுடன் பழகி இனிதே செய்வதே வாழ்வின் இனிமையாகும். ஆனால் சிலர் மாறுபட்டு வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்துவருகிறார்கள்.

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து (குறள்-856)
இக்குறள் காட்டும் வழி சமுதாயத்துடன் இணங்கி வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதைச் சுட்டுகிறது.
தன்னோடு உடன்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். முரண்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கையானது கொடுமையானது ஆகும்.
பாம்புடன் ஒரே குடிலுள் ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை போன்றது உடன்பாடு இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இல்வாழ்க்கையிலும் இதே நிலைதான். பொதுவாழ்க்கையிலும் இதே நிலைதான்..
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று (குறள்-890)
              
  என்ற குறள் காட்டும் வாழ்க்கை நெறியானது உலக வாழ்க்கையின் தன்மையை அழகாக விவரிக்கிறது
மானம் காப்பது
ஒருவன் மானத்துடன் வாழும்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். மானத்தை விடுத்து வெறும் உடம்பை வளர்த்து வாழும் வாழ்க்கை . வாழ்க்கையாகாது. ஒருவனுடைய பெருந்தன்மையால் அவனுக்கு வந்த புகழ் அழியும்நிலையில் வெறும் உடம்பை மட்டுமே பேணி வாழும் வாழ்க்கையில் ஒருபோதும் பயன் இருக்காது. மானம் காத்து வாழும் வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து ஆகும்
.
மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை
பெருந்தகைமைபீடழிய வந்தவிடத்து (குறள்-968)
               
என்ற குறளில் வள்ளவர் யாதெனில் மானத்துடன் வாழும் பெருந்தன்மை வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து என்று குறிப்பிடுகிறது.
 
இல்வாழ்க்கை
               
வாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன். தன்னலம் கருதாது பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி. பிள்ளைகள் பெற்றோர். சுற்றத்தார். வறியவர்கள். மூதாதையர். என சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன்.
 இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.இதனை வள்ளுவர்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை”          (குறள்41)
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை”     (குறள்42)
 
மேலும். இல்லறத்தாரின் கடமையாவது குடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்பதே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும்.

முடிவுரை           
திருக்குறளில் வாழ்க்கைக்கு  தேவையான அனைத்து வாழ்வியல் நெறிகளும் பரவலாக காணக் கிடைக்கிறது.திருவள்ளுவர் அறத்தின் வழியே பொருளை சம்பாதித்து நற்செயல்களில் ஈடுபாடு கொண்டு இன்பம் துய்த்தலையே முப்பாலின் வழி நிறுவுகிறார். உலகப் பொதுமறையான வள்ளுவம் காட்டிய வழி நல்வழி.தீய வழி. இல்லற வழி. துறவற வழி என பலவாறு வாழ்வியல் நன்னெறிகளை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறட்பாக்களை படைத்து வழிகாட்டி சென்றிருக்கிறார். நாமும் திருக்குறள் காட்டும் வாழ்வியல் மறைகளை பின்பற்றி நடப்போமாக!. வள்ளுவம் வாழ்வாங்கு வாழட்டும்..

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச.குமார்

தமிழ்த்துறை

உதவிப்பேராசிரியர்
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

இராஜபாளையம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here