தாத்தாவின் பழைய வீடு|முனைவர் ஈ.யுவராணி |வாழ்வியல் கட்டுரை

தாத்தாவின் பழைய வீடு
     பள்ளிகூடம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் மலர். அங்கே அப்பா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். ‘அப்பா எனக்கு நிறைய அட்டை, கலர்பேப்பர், கலர்பேனா எல்லாம் வேணுப்பா’ “எதுக்கம்மா பள்ளிக்கூடத்துல ஏதாவது போட்டியா” போட்டியெல்லாம் இல்லப்பா, அந்தகாலத்துல வாழ்ந்த மக்களோட வீடுகள், அரண்மனை மாதிரி செய்து காட்டனும்ப்பா, அதுக்கு மார்க் உண்டுப்பா” ‘அப்படியா, சரிம்மா. அப்பா நாளைக்கு வாங்கி தாறேன்’. மறுநாள் எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்தார் அப்பா.
    பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய வீட்டு பாடங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு நேரங்களில் அப்பா வாங்கி தந்த பொருட்களைப் பயன்படுத்தி, அந்தக் காலத்து வீடுகள், அரண்மனை, கோவில், கிணறு என ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தாள் மலர். ஒருவாரம் கழித்து எல்லாவற்றையும் செய்து முடித்தாள். அதில் ஒரு அரண்மனை, சில வீடுகள், கிணறு, கோவில், தோட்டம் அமைந்திருந்தாள்.
        பின் தனது அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து, தான் செய்தவற்றை காட்டினாள். அதை பார்த்த அவர் ஆச்சரியப்பட்டு, மலரைத் தூக்கி முத்தமிட்டு, “ரொம்ப நல்லா செய்திருக்க, அப்படியே தத்ரூபமா இருக்கு” என்று பாராட்டினார். 
   மறுநாள், மலர் செய்து வைத்திருந்த மாதிரிகளைப் பள்ளியில் காண்பிக்க எடுக்க சென்றாள்.  அங்கே ஒரு மாதிரி வீடு உடைந்திருந்தது. அதை பார்த்த அவள் “அப்பா ஒரு மாதிரி வீடு உடைச்சிருப்பா மார்க் எல்லாம் போச்சு” என்று அழ ஆரம்பித்தாள்.  மலரை தூக்கி வைத்து “அழாதம்மா” என்று சமாதானப்படுத்தினார் அப்பா.  ‘அப்பா இதெல்லாம் நான் எவ்வளவு யோசிச்சு, யோசிச்சு, செய்தேன் தெரியுமா. அதுவுமில்லாம ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் கண் முழிச்சி இருந்து கஷ்டப்பட்டுச் செய்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சே’ என்று சொல்லி அழுது கொண்டேயிருந்தாள்.  மலரின் அப்பா, அவளை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.  இதைப்பார்த்த பக்கத்து வீட்டு, தாத்தா மலரை கூப்பிட்டு, அந்த உடைந்த வீட்டை கொண்டுவரச் சொன்னார்.  ‘பாப்பா, அழக்ககூடாது, நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அப்படி செய்றியா..?’
‘ம்ம்.. சரிதாத்தா சொல்லுங்க” ‘உடைஞ்ச வீடு பக்கத்துல தாத்தாவின் பழைய வீடுன்னு எழுதி வைச்சிடு. யாராவது கேட்டால்,, அது அந்த காலத்துல எங்க தாத்தா வீடா இருந்துச்சு. பெரிய மழையை பெய்தப்ப இடிச்சிருச்சுன்னு சொல்லிடு, மார்க்கெல்லாம் குறைக்க மாட்டங்க சரியா பாப்பா” என்றார் தாத்தா.  கண்களைத் துடைத்துவிட்டு, ஒரு அட்டையில் தாத்தாவின் பழைய வீடு என்று எழுதி, உடைந்திருந்த வீட்டில் ஒட்டிவைத்து. விட்டு ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்றாள்.  ‘ஹலோ குட்டிப்பாப்பா ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அதை எப்படி சரி பண்ணலாம்னுதான் பார்க்கனும், அதை விட்டுட்டு அழதுக்கிட்டே இருந்தால் எந்தப் பயனும் இல்ல சரியா  என்று சொல்ல. ‘மம் சரி தாத்தா இனி அழமாட்டேன். பள்ளிக்கூடம் போயிட்டு வர்றேன். ; டாட்டா தாத்தா” என பள்ளிக்கு உற்சாகமாகக் கிளம்பினாள் மலர்.
            செல்வம் என்பது நிறைய பணமும் பொருளும் வைத்திருப்பது அல்ல. இருப்பது போதும் என்ற மனநிலையில் இருப்பதே மகிழ்ச்சி தரும். எந்த ஒரு செயலை செய்யும் போதும், உடல் மனம் இரண்டும் இணைந்து முழு ஈடுபாட்டுடன், விருப்பத்துடன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.  ஆனந்தமாக இருப்பது மிகப் பெரிய பாக்கியம், சோகமாக இருப்பது, நமக்கு நாமே இழைத்து கொள்ளும் துரோகம். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் நேரத்தை பயன்படுத்தினால், மற்றவர்களைக் குறைகூற நேரம் இருக்காது.  பிறரிடம் இருந்து எதிர் பார்ப்பதுதான் ஏமாற்றம் வரக்காரணம்.  உங்கள் தேவைகள் அனைத்தையும் நீங்களே பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.  எதைப் பற்றியும் அளவிற்கு அதிகமாக யோசிக்கிற வியாதியே மிக பயங்கரமானது. நம்மையும் சந்தோஷமாக இருக்கவிடாது. சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடாது.  பொய் சொல்லி பிறரைக் கவர்வது வாழ்க்கை அல்ல. எவரையும் காயப்படுத்தாமல் வாழ்வதே வாழ்க்கை. சோர்ந்து போகும் மனதை, உற்சாகமூட்டும் வண்ணம் செயல்படுபவர்கள் இச்சமூகத்திற்கு மிகவும் தேவை.
     நாம் செய்யும் செயலில் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். அந்தச் செயல் நமக்குப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் விருப்பம் இல்லாமல் செய்தால் அது கடமைக்குச் செய்யும் செயலாகி விடும்.
சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். தன்னம்பிக்கை மனதில் இருக்கும் ஒரு மாபெரும் சக்தி. தன்னம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் பேச்சு, செயல், நடை உடை பாவனை மூலம் அறிந்து கொள்ளலாம்.  யாரெல்லாம் தமது தவறுக்கு அடுத்தவர் மீது பழி போடாமல் இருக்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவு வராது.  துரோகங்களை ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளும் தருணங்களால், பேச்சின் வீச்சு குறைந்து மனம் ஆழ்கடலில் நிலவும் அமைதி ஞான நிலைக்குச் செல்கிறது.
            நல்ல நாளும், நல்ல நேரமும் நம்மைத் தேடி வருவதில்லை. நம் செயல்களால் நாம் தான் உருவாக்க வேண்டும்.  உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது. ஆனால் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் அதை சிக்கல்களாக உருவாக்கி விடுகின்றன.  நமது கைபேசி  உலகத்தையே உள்ளங்கையில் காட்டுகிறது. ஆனால் உலகத்தை விட்டு நம்மை தனியே பிரித்து விடுகிறது. நாம் நம்மால் முடிந்த வேலையைக் கூட செய்யாமல், பிறர் உதவியை நாடுவதே பிரச்சினை வரக் காரணம். தவறாக செய்து விடுவோமோ என்ற பயத்தில் இருப்பவருக்கு, நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே ,ல்லை.
            ஒரு பணியைச் செய்யத் தொடங்கிய பின் தோல்வி குறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.  இரண்டு வகையான மனிதர்களைக் காணலாம். எதையுமே சிறப்புற குறைவு இன்றி செய்யும் மனிதர்கள் ஒரு வகை. செய்தாக வேண்டுமே என்பதற்காக ஏனோ தானோவென செய்யும் மனிதர்கள் மறு வகை.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்.

ஈரோடு மாவட்டம் – 638 476

மேலும் பார்க்க..

1.கற்பதை கசடற கற்க

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here