சாலம் பாய் கறிக்கடை |ப பிரபாகரன்|சிறுகதை

சாலம் பாய் கறிக்கடை

     சூரியன் உதிப்பதற்காகவே, சூரிய உதயத்திற்கு முன்பே, குறைந்தது ஒரு ஆட்டையும் ஒரு கோழியையுமாவது காவு கொடுத்து விடிவார். சிலேட்டிலும், கரும்பலகையிலும் சுண்ணாம்புக் கட்டிக்கொண்டு எழுதப்பட்டும், தாளில் அச்சிடப்பட்டும் கடையின் முன்னே தொங்கவிடப்படும் விலைக்கு ஒருபோதும் ஒருவரும் மறுப்பு தெரிவித்ததே கிடையாது; அப்படியே எழுதபட்ட தொகையைக் கொடுத்துவிட்டுக் கறியை வாங்கிச் செல்வார்கள். அந்த கறிக்கடையின் உரிமையாளர் பெயர் சாலம் உசைன் அப்துல்லா. எல்லோரும் சாலம் பாய் என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நினைத்து நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்த இவருக்கு என்று ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

            சாலையின் ஒருபுறம் விநாயகர் கோவில்; அந்த கோவிலுக்கு மணிக்கு குறைந்தது ஐந்து நபர்கள் வருவார்கள்; பயபக்தியோடு தோப்புக்கரணம் போட்டு ஏதேனும் வேண்டி விரும்பி முணுமுணுத்து பிறகுதான் போக வேண்டிய இடத்திற்கு போவார்கள்; இந்த விநாயகர் கோவிலுக்கு வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையைவிட, இதற்கு அடுத்தடுத்து உள்ள ஐந்துக் கறிக்கடைகளுக்கும் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். அதிலும் அங்கு உள்ள மூன்றாவது கறிக்கடைக்கு, வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் ஏராளம்! ஏராளம்! அதுதான் சாலம் பாய் கறிக்கடை.

            அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்போது நேரம் சரியாக காலை 10.30 மணி இருக்கும். வழக்கம்போல், அப்பாவும் மகன் பிபுவும் இறைச்சி வாங்க சாலம்பாய் கறிக்கடைக்குப் போயிருந்தார்கள். இவர்களுக்கு முன்னதாகவே மூன்று நபர்கள் (இரண்டு கிலோ எலும்புக்கறி, ஒன்றரை கிலோ கறி மற்றும் மூன்று கிலோ சிக்கன் என்ற வீதத்தில்) ஆர்டர் கொடுத்துவிட்டு அமைதியாக வரிசையில் காத்திருந்தனர்.

பிபுவின் அப்பா “வணக்கம் பாய், எப்படி இருக்கீங்க? பசங்கலாம் நல்லா படிக்கிறாங்களா?” என்று கேட்டார்.

“வாங்க சார். வணக்கம். அல்லா கருணையால் அல்லாரும் நலம். எங்க சார் ரொம்ப நாளா அளே காணோம்!” என்று சாலம்பாய் பதிலோடு கேள்வியும் கேட்டார்.

“என்ன பாய் மறந்துட்டிங்களா? போன வாரம் ஞாயிற்றுக் கிழமை கூட ஒரு கிலோ மட்டன், அரை கிலோ சிக்கன் வாங்கிக் கிட்டு போனேனே!” இன்னிக்கு ஒரு கிலோ மட்டன் மட்டும் போதும்பாய், அதை வாங்கதான் வந்துருக்கேன்” என்றார் பிபுவின் அப்பா.

சாலம் பாய், “அடடே… ஆமா, ஆமாம். சாரி சார். கொஞ்சம் ஞாபக மறதி. வயசாகுதுல. ஓகே சார். கொஞ்ச வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்” என்றார். ஒரு வழியாக ஆர்டரை கொடுத்துவிட்டு அவர்களும் அந்த வரிசையில் நான்காவதாக காத்திருக்க தொடங்கினார்கள்.

      அப்போது கறிக்கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம், சக்கரம் முறிந்து உடைந்துபோய் பயன்பாட்டிலே இல்லாத ஒரு தள்ளுவண்டி இருந்தது. அந்த தள்ளுவண்டிக்கு அடியில் பொழுது விடிந்தது கூட தெரியாமல் ஒரு நாய், “கண்களை மூடித் தூங்கி கொண்டுயிருப்பதனால், இந்த உலகம் முழுவதும் இன்னும் பொழுது விடியல, இப்படி இருட்டாகத்தான் இருக்கும்” என்று நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கி கொண்டிருந்ததை அப்பாவும் மகனும் நோட்டமிட்டுக் கொண்டு நின்றனர்.

      திடீரென அங்கு ஒருவர் பைக்கில் வந்து நின்றார். அவர் பைக்கை நிறுத்தவுமில்லை; வண்டியை விட்டு கீழே இறங்கவுமில்லை. பைக்கில் அமர்ந்து கொண்டே, பாய் “லேட்டாகும் போல, நமக்கு இரண்டு கிலோ போட்டு வச்சிருங்க; நான் கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போயிட்டு வருகிறேன்; மறக்காம நல்லா தொடைக்கறியா போடுங்க, அதோடு கொழுப்பும், ஈரலும் சும்மா கொஞ்மாக மருந்துக்கு வையுங்க” என்று கூறிக்கொண்டே கிளம்பிவிட்டார்.

“போட்டு வச்சிருக்கேன், போயிட்டு வாங்க சார்!” அப்படினு பாய் கூறிய பதில் பைக்கில் வந்துச் சென்ற நபருக்கு காதில் விழுந்து இருக்க வாய்ப்பெ இல்லை. காரணம் அவர் வந்தார்; சொன்னார்; சென்றார்.

     பிறகு அந்த கடைக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்த நபர் கீழே இறங்கி வேகவேகமாகவே கறிக்கடைக்கு வந்து பிபுவுக்கு பின்னே நின்றார். “பாய் ஒரு குடல் இருக்கா?” என்று வேகமாக பக்கத்தில் இருந்த கடைகளுக்கெல்லாம் கேட்கும்படியாக கத்தினார். கத்தி கேட்டவர் அப்படியே விட்டு விடவில்லை. காத்திருந்த எல்லோரையும் கடந்து, கறி வெட்டிக் கொண்டிருந்த சாலம்பாய்க்கு அருகில் உள்ளேச் சென்று அவர் காதுகளில் ஏதோ முணுமுணுத்தார்.

     சாலம் பாய், கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு, மேசையின் மீது இருந்த அந்த ஒரே ஒரு குடலையும் எடுத்துக் கொடுத்தார். அப்படி என்னதான் சொன்னரோ? தெரியவில்லை. மேலும் அந்த பாய் அவரிடம் குடலுக்கான தொகையையும் வாங்கவில்லை.

      ஒருவருரின் காலிலே கொதிக்கும் எண்ணெயோ அல்லது கொதிக்கும் தண்ணீரோ பட்டுவிட்டால் எப்படி குதிப்பார்? என்று யோசித்துப் பாருங்கள். அப்படியே அச்சு அசல், அது போலவே அந்த குடல் வாங்க வந்த நபரின் செயல் நடந்து முடிந்தது. இப்படி அங்கு காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் அநேகர் வந்தும், சம்பவங்கள் பலபல நிகழ்ந்து கொண்டும் இருந்தது.

       ஒருவர் முதன் முதலாக இரண்டு கிலோ எலும்புக்கறி கேட்டு காத்து இருந்தார் அல்லவா! அவர் கேட்டது போலவே சூப் எலும்பு அல்லது நல்லி எலும்பு, நல்ல கறித்துண்டு, கொழுப்பு மற்றும் நெஞ்சு எலும்பு இப்படி எல்லத்தையும் எடுத்து தராசில் வைத்து அளந்தார். தராசில் சரியாக 2.025 கிகி என்று இருந்தது. அந்த எடையில் இலவசமாக சேர்த்த கொழுப்பு தான் இந்த 25 கிராம் அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். முதலில் சூப் எலும்புத்துண்டை எடுத்து கறி வெட்டும் கட்டையில் வைத்தார். பல ரது இடையூறுகள் அடிக்கடி வந்ததையும், சிலர் கண்ணெதிரே காத்திருப்பதையும் சாலம் பாயின் கண்கள் உணர்ந்தது. கைகள் தானாகவே எப்போதும் வெட்டும் வேகத்தை விட சற்று அதிக வேகத்தோடு கறியை வெட்டியது. அங்கு இருந்தவர்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை. வெட்டப்பட்ட எலும்புத்துண்டின் ஒரு பகுதி மேசையின் மீதும், மறுபகுதி நின்று கொண்டிருந்த எங்களுக்கு அருகில் தரையிலும் வந்தும் விழுந்தது.

      எலும்புத்துண்டு விழுந்த சத்தம் கூட எங்களுக்குச் சரியாக கேட்டிருக்காது. அடுத்த கணமே சாலம் பாய், இந்தடீ… இந்தடீ. என்று அதிவேகமாக கணத்தக் குரலில் கத்தி அதட்டினார். என்னவென்று பார்த்தால், விழுந்த இடத்தில் எலும்புத்துண்டைக் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு கல் மட்டும் உடல் முழுவதையும் பூமிக்குள்ளே மறைத்துக்கொண்டு, ஊசி போன்ற தலையை மட்டும் பூமிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் எலும்புத்துண்டை ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடுவதை சாலம் பாயுடன் சேர்ந்து எல்லோருமாக விரட்டுவதைக் கண்டனர். ஒரு நாய் கடைக்கு எதிரே தூங்கிக் கொண்டிருந்ததே அந்த நாய் தான் அது.

     நாய் தூங்கிக் கொண்டு தான் இருந்தது என்று பார்த்தால் நல்ல சூப் எலும்புத் துண்டு வெட்டும் சத்தத்தைக் கேட்டோ அல்லது வெட்டப்பட்ட எலும்புத்துண்டு கீழே விழுந்த சத்தத்தை கேட்டொ வேகமாக எழுந்து மின்னல் வேகத்தில் வந்து, அந்த எலும்புத்துண்டை கவ்விக் கொண்டுச் சென்றது; அங்கு இருந்தவர்களில் பிபுவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.  ஏனெனில் சிலவினாடிக்கு முன்பு தான் அவர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் நாயைப் பார்த்தனர் அல்லவா!

     கையில் கற்களை வைத்துக் கொண்டு அந்த நாயைத் துரத்திச் சென்றவர்கள், கல்லால் ஒரு அடி கூட அடிக்க முடியவில்லையே என்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அவர்களுடன் திரும்பி வந்த சாலம்பாய், “சரி விடுங்க போய் தொலயட்டும்!” என்று கூறி திரும்பினர்.

     அப்போது முன்பு எலும்புத்துண்டு விழுந்த இடத்தில் ஒரு சிறிய கல் இருந்தது தானே, அந்த கல் எதிர்பாராத விதமாக சாலம் பாயின் கட்டைவிரலை பதம் பார்த்தது. கட்டைவிரலின் மேல்பகுதியில் இருந்து இரத்தம் பீறிட்டு கசிந்ததை பார்த்ததும் ஏ! அல்லா! என்று கத்தி தன்னையறியாமல் கண்கள் கலங்கினார்.

       தினமும் விலங்குகளின் இரத்தத்தில் குளிக்கும் சாலம்பாய்க்கு அவருடைய இரத்தத்தைப் பார்த்ததும் அன்று எப்படி இருந்ததோ, பாவம்! வலியை சொல்லவும் முடியாமல் வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல் கொஞ்ச நேரம் திக்குமுக்கு ஆடிவிட்டார். ‘வெளியில சொன்னால் வெட்கக்கேடு’ என்று நினைத்து உள்ளுக்குள்ளே போட்டு புதைத்து விட்டார். அங்கு கறி வாங்க காத்திருப்பவர்களைக் கண்டதும் அவருடைய வலியானது “பாலைவனத்திலே விழுந்த மழைத்துளி போல” காணாமல் போனது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.ப பிரபாகரன்

இலால்குடி, திருச்சி

மேலும் பார்க்க..

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here