இலக்கியம் என்பது சமுதாயத்தில் வாழக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை வெளிப்பாட்டினைக் வெளிக்கொணருவதாகும். அதனில் மனிதனின் வாழ்க்கைத் தன்மையானது சமுதாயத்தோடு, இணைந்தும். முரண்பட்டும் வாழ்ந்த நிலையினை உணர்வுப்பூர்வமாக வெளிக்காட்டுகிறது. அவ்விலக்கியத்தில் அதனின் தோற்றம், பொருள், பயன்பாடு, ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதனுக்கு உள்ள தொடர்பினை விளக்குவது சமுதாயவியல் திறனாய்வின் அடிப்படை ஆகும்.
சமுதாய வரலாற்று மரபில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றுகின்ற இலக்கியம், படைப்பாளியின் அனுபவ உணர்வுகளையும், படைப்பாற்றலுக்கு ஏற்ற நோக்கு மற்றும் கருத்தின் தன்மையையும், பெற்றதாக அமைகிறது.
இலக்கியம், சமுதாயம் இரண்டிற்குமுள்ளத் தொடர்பானது புலனறிவு (Sensory Perception) போல மிகவும் இயல்பான, எளிமையான ஒன்றாக உள்ளது. தே பொனால்ட் (De Bonald) எனும் பிரான்சு நாட்டு அறிஞர். இலக்கியத்தை சமுதாயத்தின் புலப்பாடு (Literature is the expression of society) என்கிறார். ரெனி வெல்லக் (Rene Wellak) அவர்கள். தன்னுடைய ‘இலக்கியக் கொள்கை” என்னும் நூலில், ‘இலக்கியம் என்பது சமுதாய காரணங்களின் விளைவு மட்டுமல்ல, சமுதாய விளைவுகளின் காரணமாகவும் தோன்றப்பட்டது’ என்று சமுதாயத்திற்கும், இலக்கியத்திற்கு முள்ள உறவுநிலையை விளக்கியுள்ளார். சமுதாய மதிப்புகளானது காலம் செல்ல, செல்ல சூழ்நிலைக்கு ஏற்ப மாறிய வண்ணமாக உள்ளன.
மார்க்சிய வாதிகளின் சிந்தனைகளானது சமுதாயத்திற்கும். இலக்கியத்திற்கும் உள்ள உறவுநிலைப் பற்றி ஆழமாகவும், அதிகமாகவும் சிந்திக்கக் கூடிய தன்மைப் பெற்றதாக அமைந்துள்ளது. மார்க்சிய கொள்கைகளில், சமுதாயச் சிந்தனையானது,
1. அடிப்படையான பொருளியல் (Material)
2. வாழ்க்கைக்கான ‘சமுதாய இருப்பு’ (Social Being)
3. கருத்து நிலையால் ஏற்படும் சமுதாய உணர்வுகள் (Social consciousness)
இவற்றைப் பற்றிதான் இலக்கியம் பேசுகின்றது என்கின்றனர். இவ்வுலகின் தன்மையை வெளிக்கொணருவதற்குச் சமுதாயவியல் திறனாய்வு சிறப்புடையதாக அமைகிறது.
சமுதாயவியல் திறனாய்விற்கு அடிப்படை
ஓர் இலக்கியம் இயற்றப்படும்போது, அவ்விலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் நெரு தொடர்புண்டு என்பதைக் கருத்தில் கொண்டு, படைக்க முயல்வோர், சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். திறனாய்வாளர், சமுதாய நிலை இலக்கியமாகக் காணப்படும் இதனுள்,
1. இலக்கியம் புலப்படுத்தும் உண்மைகளைக் காரண, காரியங்களோடு (Cultural Factors) கண்டு விளக்குதல்
2. சமுதாய நிகழ்வுகளை (Social Determinants) வெளிக்கொணருதல்
3. இலக்கியத்தின் அமைப்புமுறைப் பற்றி பேசுதல்
4 அதனின் இடம்பெற்றுள்ள பொருளமைவுகள் பற்றி கூறுதல்.
இவற்றைக் கருதுகோளாக வைத்து சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது அமைகிறது. இலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் உள்ள உறவுநிலையைக் கீழ்க்கண்ட பரிணாமங்களின் துணைக்கொண்டு திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர்.
(1) சமுதாயப் பின்னணி (Social Context)
¤ படைப்பிற்குரிய காலப் பின்னணி
¤ படைப்பாளனுடைய காலப் பின்னணி
(2) எதிர்கோள் (Reader’s Response)
¤ சூழலை எதிர்கொள்ளுதல்
¤ சூழலைப் போற்றுதல்
(3) சமுதாயத்தைக் காட்டும் விதம் (Social Content)
1. குடும்ப அமைப்பு
2. உறவு நிலை
3 நிறுவனங்கள்
4. அரசாட்சிமுறை
5. சமுதாய நிலைப்பாடு
1. கிராம மக்களின் வாழ்வு
2. நகர்ப்புற மக்களின் வாழ்வு
3. சாதி நிலை
4. சீரழிவான நிகழ்வுகள்
5. சிக்கல்களைக் கொண்ட சமுதாயச் செயல்கள்
6. பிரச்சனையை தீர்க்கும் வழிகள்
7. கருத்துநிலை மாற்றங்கள்
என்ற தன்மைகளில், முரண்பட்ட சமுதாயச் சூழலைத் திறனாய்வு செய்து தீர்வினைக் காண்கின்றனர். சமுதாயத்தில் நிகழக்கூடிய இவ்வகையான மாற்றங்கள் எப்போதும் முன்னோக்கியே நடைபெற்றுள்ளதாகும்.
படைப்பாளன் – படைப்பு – சமுதாயம் இம்மூன்றும் ஒன்றை ஒன்றுத் தழுவி நெருக்கமுற பிணைப்புக் கொண்டதாக சமுதாயவியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். இலக்கியத்தின் கலையுருவாக்க தன்மைகளுக்கு ஏற்பவும், சமுதாயத்தின் நெறிமுறைகளுக்கு தகுந்த முறையிலும் அதனின் மதிப்பீடுகள் அமைகிறது. அதனடிப்படையில் அப்பரின் உழவாரத் தொண்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. முடிவாக, அப்பர் வைத்திருந்த உழவாரப்படை வேளாள எழுச்சியின் ஆயுதமாகவோ வெறும் அடையாளப் படுத்திக் கொள்ளும் குறியீடாகவோ. எண்ணாமல், அன்றைய காலக்கட்டத்தின் சமுதாயச் சூழ்நிலைகளைப் புரிந்துக் கொள்வதற்கான கருவியாக எண்ணுதல் வேண்டும் என்கின்றனர்.
எதிர்கொள்ளும் தன்மை
ஒரு குறிப்பிட்ட படைப்பு குறிப்பிட்ட சமுதாயத்தினால் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்றும் அதனின் தரம், பயிற்சி, முதலிய தகைமைகள் நிர்ணயம் செய்யப்படும் தன்மை ஆகியவைப் பற்றி சமுதாயவியல் திறனாய்வாளர்கள் பேசுகின்றனர். மேலும், குறிப்பிட்ட படைப்பினை வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் அவர்களின் மனநிலை மாறுதல்கள் என்ன என்பது பற்றியும் பிரெஞ்சு இலக்கிய அறிஞர் ஹென்னக்யுன் (E.Hennequin) மற்றும் ருசிய அறிஞர்கள் பொதப்னியா (A. Potebnya) முதலியவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
ஆங்கிலத் திறனாய்வாளர்களான 1) க்யூ டி. லீவிஸ் – விரிவாக்க முயற்சியில் சமுதாயவியல் (Fiction and the Reading – Public) கொள்கையை, ஒப்பிலக்கியம் ‘ஏற்றல் கொள்கை’ (Reception Theory) மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். எதிர்கொள்வின் இன்றியமையாமை:
1. வாசகரின் நேரடிப் பேட்டிகள்
2. விற்பனை பற்றிய குறிப்பு
3. தொடர்ச்சியாக வெளிவரக்கூடிய பதிப்பு
4. மதிப்புரை மற்றும் விமர்சனங்கள்
5. மேற்கோள்கள்
6.பிறரால் மொழிபெயர்க்கப்பட்டது
7. பிறரால் எடுத்தாளப் பெற்ற வரிகள்
முதலியவை குறிப்பிட்டகலை இலக்கியப் படைப்பின் எதிர்கொள்வாக திறனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சமுதாய சூழலின் சித்தரிப்பில் இடம்பெறுகின்றதாக
(1) சாதிகள்
(2) குலங்கள்
(3) மொழி அடிப்படையில் அமைந்த சமுதாயப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் (Social Ethnic Groups) பற்றிய விரிவான ஆய்வுத் தன்மையும், வட்டாரம், மொழி. அடிப்படையில் பகுக்கப்பட்ட
(1) தேசியம்,
(2) துணைதேசியம் இனங்கள்
(3) வர்க்கப் பிரிவினைகள்,
(4) பழக்க வழக்கங்கள் (Social Habits)
(5) நம்பிக்கைகள்
(6) சடபங்குகள்
(7) சமுதாயத்தின் தேக்கச் சீரழிவுகள்
(8) வறுமை
(9) வேலையின்மை
(10) குடும்பச் சிதைவின் வழி வரும் சமுதாயச் சீர்க்கேடுகள்
(11) சமுதாய மாற்றங்கள்
என்று சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது விசாலமானப் பார்வைக் கொண்டதாக பரந்துபட்டுச் செல்கிறது.
சமுதாயவியல் திறனாய்வானது கலைப் படைப்பில், நுணுகி ஆராயும் தன்மைக் கொண்ட விஞ்ஞானியின் பார்வையைப் போன்று ஆழ்ந்து நோக்கும் தன்மையினைக் கொண்டதாகவும், உலகக் கண்ணோட்டத்தினை (World outlook) உடையதாகவும் அமைந்துள்ளது. ஏனைய திறனாய்வினை விட மிகச் சிறப்பிற்குரிய திறனாய்வாக இதனை அடையாளம் காட்டுகிறது.