வாழ்க்கையில் முன்னேற உதவும் கை நம்பிக்கை. மனிதனுக்கு எத்தனை உறவுகள் கைக்கொடுத்தாலும், அவையெல்லாம் உடன்நிற்கும். ஆனால் நம்பிக்கை மட்டுமே இறக்கும்வரை துணைநிற்கும். இலக்கை அடைவதற்கு முதலில் எண்ணம் உதிக்க வேண்டும். அடிக்கடி தோன்றினால் அது ஆசையாக மாறும். ஆசை மீண்டும் மீண்டும் தோன்றினால் அது திட்டமாக மாறுகிறது. திட்டம் கனவாக மாறி அதுவே செயலாக மாறினால் இவை இலக்கை அடைவதற்கான ஏணிப்படிகள் என்று கூறலாம்.
உழைத்தால் மட்டுமே ஒன்றைச் சாதனையாக மாற்ற முடியும். சிலருக்குச் செயல்களைச் செய்வதில் அச்சம் ஏற்படும். அந்தப் பயமே அவர்களுக்குத் தடையாக இருக்கும். கோடிக்கணக்காகச் செலவுசெய்து கப்பலைக் கட்டுவது கடலில் செல்வதற்காகவே. அது மூழ்கிவிடுமோ என்று பயந்து கொண்டே கரையில் வைத்திருந்தால் எப்படி சாத்தியமாகும். கடலில் புயல் போன்றவற்றால் கப்பலைக் காக்க நங்கூரம் இட்டு வைத்துக்கொள்ளலாமே தவிர பயம் இருக்கக்கூடாது. இருந்தால் இலக்கை நோக்கி ஒரு அடியைக்கூட எடுத்து வைக்க இயலாது.
நீங்கள் இருக்கிறீர்களா? வாழ்கிறீர்களா?
நீங்கள் சமுதாயத்தில் பார்த்தீர்களேயானால் பலர் விலங்குகளைப் போல உயிருடன் இருப்பார்கள். சிலர்மட்டுமே வாழ்வார்கள். உயிருடன் இருப்பது என்றால் மீன் பிடிப்பவர்கள் கடலில் செல்லும்போது பாய்மரக்கப்பலில் பாய் ஒன்றை விரித்துக் கட்டி விடுவார்கள், அது காற்று எந்தத் திசைநோக்கி தள்ளுகிறதோ அந்தத் திசையில் காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல செல்லும். மீனவர்களும் எந்தவித சலனமும் இல்லாமல் மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அவ்வாறே பலர் வாழ்க்கை செல்லும் திசையில் தானும் சென்று முடிந்ததைச் சம்பாதித்து உண்டுஉறங்கி காலத்தையும் முடித்துவிடுவர். இதையே “இருப்பது” என்று கூறப்படுகிறது. வாழ்வது என்பது இலக்கை ஏற்படுத்திக்கொண்டு அடைவதற்கு ஏற்படும் தடைகளை நீக்கி எதிர் நீச்சலிட்டு தான் நினைப்பதைப் போல சமுதாயத்தை மாற்றி ஆக்கத்தை புரிபவர்களே வாழ்பவர்கள் என்று கருதப்படுவார்கள். எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழவேண்டுமே தவிர ஏதோ வாழ்க்கை போனபோக்கில் தானும்சென்று பிறவியை வீணாக்கக்கூடாது.
தன்னம்பிக்கை வேண்டும்
நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மைதான் செய்கிறீர்கள் என்றால் அந்த நற்செயல் வெற்றி அடையும். இது தின்னமாகும். வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை வேண்டும். நேற்று என்பது முடிந்து விட்டது. நாளை என்பது வரும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இன்று இரவு மனிதர்களால் உறங்கச் செல்ல முடியும். நாளை என்பது வராமலும் போகலாம். ஆனால் மனதில் காலையில் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கும். அதைப்போலவே நீங்கள் கொண்ட இலட்சியத்திலும் நம்பிக்கை வேண்டும்.
ஒரு ஊரில் பாட்டி ஒருவர் தன்பேத்தியுடன் வாழ்ந்து வந்தார். அப்போது எட்டுவயது பேத்திக்குக் கதை ஒன்று கூறினார். “ஒரு நாட்டில் இராஜ்யம் இழந்த ராஜா மகன் இருந்தான். அவனுடைய அம்மா ராணி வீடுவீடாகச் சென்று உழைத்த பணத்தை சந்தையில் கொடுத்து விட்டு பூனைக்குட்டியைக் கொள்முதல் செய்தான். கோபம் கொண்ட ராணி தன் தாய்வீடு போகத் தனியாக விடப்பட்டான். பேத்தி கேள்வி கேட்டாள், “பாட்டி இப்படிகூடவா ஒருவன் இருப்பான்” கதை தடைபட்டது. அந்த எட்டுவயது பிஞ்சு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. பல வருடங்கள் சென்று தானும் வாழ்க்கை என்ற சந்தையில் எல்லாவற்றையும் இழந்து விட்டு, “இப்ப தெரியுது பாட்டி அப்படி ஒரு ராஜகுமாரன் இருந்திருப்பான்” என்றாள் பேத்தி. கதை தொடர்ந்தது “சொன்னா நம்பனும் பூனைக்குட்டி மாயமோதிரம் தர அசடு ராஜாவானான்” என்று கதையை முடித்தாள் பாட்டி. அது மாயமோதிரம் அல்ல. தனக்கான நம்பிக்கை என்று மனதில் நினைத்தாள் அப்பெண். மீண்டும் எழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் போதும் இழந்தவற்றையெல்லாம் பெற்றுவிடலாம்.
கற்றுக்கொள்ளும் மனோபாவம்
இந்த உலகில் மற்றவரைப் போல பிறந்து வளர்ந்து இறக்காமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மிகவும் துணையாக நிற்பது நம்பிக்கை ஆகும். ஒருவருக்கு தன்மீது நம்பிக்கை வரவில்லை என்றால் அவருக்கு பல இன்னல்களும் துன்பங்களும் ஏற்பட்டு அவநம்பிக்கையை உண்டாக்கி இருக்கும். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களில் எழுபது சதவிகிதம் உங்களால் ஏற்படுபவையே. மீதி முப்பது சதவிகிதம் மற்றவர்களால் ஏற்படுகின்றன. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவரவர் செயல்பாடுகளே அவர்களுக்குத் துன்பம் தருகின்றன. தான் என்ற அகந்தையும் ஒரு காரணமாகலாம். இந்தக் குணம் கொண்டவர்களால் எதையும் சரிவர கற்றுக்கொள்ள இயலாது. கற்றுக்கொண்டால்தான் ஒரு செயலை செவ்வனே செய்ய முடியும். தனக்கு தெரியாதவற்றை மற்றவரிடம் கற்றுக்கொள்ளும் பணிவான தன்மை வேண்டும். அவ்வாறு அல்லாமல் இவனிடம் நான் கற்றுக்கொள்வதா? என்ற ஆணவம் இருந்தால் அது எதையும் கற்றுக்கொள்ள விடாது. தலையில் கனம் ஏறி தீயவற்றைச் செய்யத் தூண்டும். இந்தச் சூழலில் இலக்கை அடைவது என்பது ஒருபோதும் நடவாது. எனவே தான் என்ற எண்ணத்தை நீக்க வேண்டும். முதலில் உங்களை நீங்கள் மதிக்க வேண்டும். அவ்வாறு மதிப்பு வரவேண்டும் என்றால் பல நல்ல செயல்களை உங்களுக்கோ அல்லது சேர்ந்த மற்றவர்களுக்கோ செய்திருக்க வேண்டும். ஒருவர் தன்னை மதிக்க தெரிந்துகொண்டால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் நன்மைகளையே விளைவிக்கும். தன்னை மதிக்க தெரிந்த ஒருவரால் தீமைகளைச் செய்ய முடியாது. இவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டால் உங்கள் மீது நம்பிக்கை தானாகவே பிறக்கும். தடைகள் வந்தாலும் இடையில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
தேசத்தந்தை மகாத்மா தமது அகிம்சை போராட்டத்தையும் சத்தியாக்கிரகத்தையும் சிலகாலம் ஒத்திவைக்க நேரிட்டது. ஆனால் தகுந்தகாலம் வந்ததும் மீண்டும் தொடரப்பட்டு வெற்றி பெற்றது. அது மகாத்மா காந்தியின் நம்பிக்கை. எத்தனைமுறை கீழே விழுந்தாலும் எழக்கூடிய நம்பிக்கை. இதுவே சாதிப்பதற்கான தன்னம்பிக்கை.
நம்பிக்கை தரும் ஆற்றல்
அம்மன் கோவிலில் நடக்கும் விழாக்களைப் பார்த்திருப்பீர்கள் இறுதி நாளன்று பூ மிதித்தல் என்ற ஒன்று நடத்துவார்கள். பூ மிதித்தல் என்பது பூவை மிதிப்பது அல்ல. அது நெருப்பு அம்மன் கோவிலில் முன்பாகச் சுமார் இரண்டு அடி ஆழத்தில் ஐந்து மீட்டர் தூரத்தில் குழியைத் தோண்டுவார்கள், அதில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு மரக்கட்டைகளையும் விறகுகளையும் போட்டு எரிப்பார்கள்.
அது எரிந்து நெருப்பு கனகன என்று அனல் பறக்கும். மாலை வரை அது கனென்று கொண்டே இருக்கும். மாலை ஐந்து மணி அளவில் பெண்களும் ஆண்களும் குறிப்பிட்ட நாட்களில் விரதமிருந்து தண்ணீர் ஊற்றிகொண்டு அந்த நெருப்பில் நடப்பார்கள். இது எப்படி சாத்தியம்? ஸ்டவ் பற்ற வைக்கும் போதும் ஊதுபத்தி கொழுத்தும் போதும் சிறிது தீப்பட்டால் கூட சூட்டு கொப்புளங்கள் போடவைக்கும். எவ்வாறு? அதன் மீது நடக்கும் போது நெருப்பு சுடவில்லை? காரணம் நம்பிக்கை. அம்மனுக்காகத் தீ மிதிக்கின்றோம் அது ஒன்றும் சுடாது என்று அந்த மக்களுக்கு மனதில் உள்ள நம்பிக்கை. கவனியுங்கள் இது எவ்வளவு பெரிய அசைக்க முடியாத நம்பிக்கை. அறிவியல் ஆய்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஒரு மனிதனின் நம்பிக்கை என்பது காட்டையும் நாட்டையும் எரிக்கும். நெருப்பால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வாறு இருக்கும் போது உங்களின் நம்பிக்கை உறுதியாக இருந்தால் மற்ற தடைகள் எல்லாம் தவிடுபொடி ஆகாதா? சிந்தித்து பாருங்கள்.
விடா முயற்சி
தன்கையே தனக்குதவி என்பதை விட நம்பிக்கையே தனக்கு துணை என்று கூறலாம். நீங்கள்தான் என்ற அகந்தையை நீக்கி பணிவான மனநிலை கொண்டு மற்றவர்களிடம் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு சாதிக்க ஒரு இலக்கை ஏற்படுத்தி அதனை அடைய பல போராட்டங்களை எதிர் கொண்டு பொறுமையைக் கடைபிடித்து உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் வானமும் தொட்டுவிடும் தூரம்தான்.
ஹோண்டா பைக் பார்த்திருப்பீர்கள் அதை உருவாக்கியவர் ஹோண்டா என்பவர் ஆவார். அவருக்கு சிறு வயதிலேயே மோட்டார் இஞ்சினைச் சிறிது மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு பிறகு அவர் அந்தச் சூழ்நிலையை அடைந்ததும், பணத்தைச் செலவுசெய்து இஞ்சினை மாற்றி ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால் யாரும் அவரை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவரின் பேச்சைக்கூட யாரும் செவிமடுக்கவில்லை. இவரும் சலைக்காமல் நம்பிக்கையுடன் பலமாதங்கள் நடந்தார். இறுதியாக ஒரு கம்பெனியில் பார்க்கலாம் என்று கூறினார்கள். பின்னர் அவ்செயல்பாட்டைப் பயன்படுத்தி பார்ப்பதற்குச் சில மாதங்கள் ஓடின. ஒரு கம்பெனி இவரின் இஞ்சினுக்குப் பச்சைக்கொடி காட்டியது. உடனே கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அந்த இஞ்சினைத் தயாரிக்கிறார். பெருமளவில் பொருள் இழப்பு ஏற்பட்டு மூடப்பட்டது. வேறு ஊருக்கு சென்று வீடுவாசல் என்று எல்லாவற்றையும் விற்று மீண்டும் கம்பெனியைத் தொடங்குகிறார். சில ஆண்டுகள் கடந்தன. தீ விபத்து ஏற்பட்டு கம்பெனி முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. ஆனாலும் அவர் மனம் தளராமல் நம்பிக்கையுடன் சில ஆண்டுகளில் மீண்டும் கம்பெனி ஆரம்பித்து நடத்தி வெற்றிபெற்றார் ஹோண்டா. எனவேதான் உலகத்திற்கு ஹோண்டா பைக் கிடைத்தது. இது விடா முயற்சி.
பதறிய நாக்கினால் நட்பு கெடும். விடாமுயற்சியால் தாழ்மை கெட்டு மேன்மையுறும்.
ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி
விஜய் வித்யாலாயா கல்லூரி, தர்மபுரி.