Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா

ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா

ஆண் தேவதைசிறுகதைச.அபர்ணா

       திகாலை 4.30 மணிக்கு அலாரம் அடிக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர் போல் எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு, நடுங்கும் குளிரிலும் எழுந்து அரிசியை ஊற வைத்துவிட்டு பருப்பை வேக போட்டு, காப்பியுடன் மனைவியை எழுப்புகிறார் வீட்டுத் தலைவர் சரவணன்.
        

            சமையலுக்கு உதவி செய்துவிட்டு,  மனைவிக்கு குளிக்க சுடுநீர் போட்டு கொடுத்து, மதிய உணவை கட்டிக் கொடுத்து 6.10 மணி பேருந்துக்கு வண்டியில் ஏற்றி, பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பி சற்றே அமர்ந்தார். இளைய மகள் இனியாள் எழுந்துவிட்டால் தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு காப்பி தயாராக இருந்தது.
       

            மீதமிருக்கும் பாத்திரத்தை கழுவி விட்டு சற்றே அமர்கையில் இனியாளின் குரல் ‘போலாமா அப்பா? ‘  இனியாளுக்கும் நேரத்துடன் கிளம்புவதற்கும் ஏழாம் பொருத்தம் பேருந்துடன் ஓட்டப்பந்தயம் வைத்து தான் சென்று வருவாள். திரும்பி வந்து சரவணனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட தலை சுற்று 10 மணிக்கு மேல் வெயில் வந்துவிடும் தலை சுற்றலுக்கு மருந்தாய் ஒரு காபி குடித்துவிட்டு மனைவி மகளுடைய துணிகளை எடுத்துக் கொண்டு மாடி சென்று துவைக்கிறார்.
          

       அந்நேரத்தில், பக்கத்து வீட்டு சுந்தரம் ‘என்ன சரவணன் வேலையா ?’ சரவணனோ ‘ஆமாம்பா  வெயிலுக்கு முன்னாடி துவைக்கணும்ல  என்று சொல்வதைக் கேட்டு சுந்தரம் , ‘உண்மையில் நல்ல மனுஷன்யா நீ’ சிரித்தபடியே சென்றார். ‘சரியான இளிச்சவாயனா இருக்கான் சரவணன் எனக்கு எல்லா வேலையும் பொட்டச்சி மாதிரி பண்ணிட்டு இருக்கான்’  தன் மனைவியிடம் சொல்ல,  சுந்தரத்தின் மனைவியோ ‘ஆணாதிக்கவாதி’ என்னும் சொல் அறியாதவளாய் ‘ஆமாங்க’ என்று சொல்லி நகர்ந்தாள்.


            சில நேரம் கழித்து நியாயவிலை கடைக்கு சென்றார் சரவணன் ஆளே இல்லாத ஆண் வரிசையில் நின்று பொருள் வாங்கிக் கொண்டு திரும்புகையில், மங்களத்தின் குரல். ‘நல்ல ஆம்பளைக்கு அழகு வேலைக்கு போறதில்லையா?  பொட்டச்சி கணக்கா வரிசையில் நின்னு பொருள் வாங்கிட்டு நிக்கிறான் பாரு ‘  என்று தங்களுக்கென தள்ளப்பட்ட வேலையை செய்தபடியே சொன்னாள்.
       

     சரவணனுக்கு இது எதைப் பற்றிய கவலையும் இல்லை. இன்றா, நேற்றா ? எட்டு வருடங்களாக சமைக்கும்போதும், வாசல் கூட்டும் போதும்,  கடைக்கு செல்லும் போதும், துணி காய வைக்கும் போதும் என எத்தனையோ குரல்கள் அவர் காதுகளுக்கு பரீட்சையம் திருப்பிபப் பேச துளியும் விருப்பமில்லை.
 

    திடீரென்று ஒரு நாள்,  ‘சரவணன் நல்லவன் பா. அவன் தனியான நின்னு இந்த குடும்பத்தையே காப்பாற்றினான்’ என்ற  சுந்தரத்தின் குரல்.
 ‘ பின்ன… மூத்ததை கட்டிக் கொடுத்து , இரண்டாவத படிக்க வைத்து வேலைக்கு சேர்த்து,  பையனையும் படிக்க வைத்திருக்கிறார் என்றால் சும்மாவா..? ‘ என்று மற்றொரு ஆண்.
 ‘இந்த பிள்ளைகளுக்கு மட்டும் ரெண்டு அம்மா, அப்படித்தானே பாத்துக்கிட்டாரு சரவணன் ? ‘ என்று மங்களம்.
 ‘சரவணன் போல ஒரு தகப்பன் இந்த உலகத்துல இருக்கவே முடியாது. இந்த குழந்தைக எல்லாம் புண்ணியம் பண்ண குழந்தைங்க ‘மனதார கூறினாள் ஒரே ஒரு பெண்.
 

     இப்போதும் சரவணனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை அவர்களை எல்லாம் ஏதாவது கேட்டு விட வேண்டும் போல் இருந்தது .
     

       அதற்குள் ஒரு குரல்,  நேரமாச்சு சொல்லிட்டீங்கனா பொனத்தை எடுத்துடலாம்.
  ஆண் தேவதை செல்லும் நேரம் வந்துவிட்டது.


சிறுகதையின் ஆசிரியர்

ச.அபர்ணா,


உதவிப் பேராசிரியை,


KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி,


அரசூர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »