மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான மூங்கில் கூடைகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. 

            இன்றைய வளரும் தலைமுறையினருக்குப் பிளாஸ்டிக், இரப்பர்,  தோல் ஆகியவற்றின் மூலமாகக் கிடைக்கக் கூடிய கூடைகள் மிகஎளிதாக கிடைப்பதால் மூங்கில் கூடையை மறந்தே போயுளளனர் எனலாம்.  மூங்கில் கூடையைப் பயன்படுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன.

  • காற்று இடைவெளி இருப்பதால் கூடையில் வைத்திருக்கும் பொருட்கள் காற்றோட்டமான சூழல் ஏற்படும்.
  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்டது என்பதால் நீண்ட நாட்கள் தாங்கும்.
  • நோய்க்கிருமிகளின் ஊடுறுவல் அதிகம் இருக்காது.
  • பார்வைக்கும் அழகாக இருக்கும்.     
  • கூடையின் மேல்பகுதியில் வளைவு இருப்பதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். 
  • ஒருவேளை மக்கினாலும் மண்ணுக்கு உரமாக மாறிவிடும்.
இலக்கியத்தில் கூடை பின்னுவோர்
        சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் கூடை பின்னும் தொழில் செய்யும் கம்மியர்களைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன. 
            
    “கைவல் கம்மியன் முடுக்கலின், புரைதீர்ந்து” (நெடுநல்வாடை.85)
 
            கைத்தொழிலில் வல்லமை பெற்ற தச்சர்கள் இடைவெளி தோன்றாமல் பல மரச்செதில்களை ஒன்றாகச் சேர்த்து முடுக்கி மதிலின் வாயிலை உருவாக்க முடியும் என்கிறார் நக்கீரர். கூடையைப் பின்னுகின்றது போலவே இங்கு மதிலின் வாயிலை மூங்கில் குச்சியை ஒன்றோடு ஒன்று சேர்த்து பின்னுதல் வேண்டும் என்கிறார்.  தமிழகக் காடுகளில் மூங்கிலின் வளர்ச்சி அபரிதமானது. இலக்கியங்களில் மூங்கிலைப் பற்றிய குறிப்பகள் பல இடங்களில் காண முடியும். 

     மூங்கிலை வெட்டியும் சீவியும் கூடை பின்னுகின்ற தொழிலாளிகள் இன்றைய தலைமுறையில் கொஞ்சகொஞ்சமாகக் குறைந்து வருகிறார்கள்.  மக்கள் யாரும் மூங்கில் கூடையை விரும்பாததால் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகக்  குலத்தொழிலை விட்டுவிட்டு பிறதொழில்கள் செய்ய முற்படுகின்றனர். 

  இனியவைக் கற்றலின்   தமிழ்ப் பாரம்பரியத்தைக் காப்போம்

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

Leave a Reply