நூல் மதிப்புரை| வீரயுக நாயகன் வேள்பாரி |சு.வெங்கடேசன்

நூல் மதிப்புரை - வேள்பாரி - சு.வெங்கடேசன்

நூலின் பெயர் :வேள்பாரி வீரயுக நாயகன் வேள்பாரி


ஆசிரியர்           : திரு சு.வெங்கடேசன்


சிறப்பு                 : 6000 பிரதிகளைத் தாணடி விற்பனையில் உள்ளது.


பதிப்பகம்         : விகடன் பிரசுரம்


 
முன்னுரை
               
     வீரயுக நாயகன் வேள்பாரி நூலானது  வரலாற்றுச் சிறப்பு மிக்க நாவல் ஆகும். தமிழர்கள் மட்டுதமில்லாது அனைத்து மொழியினரும் ஒருமுறையாவது இந்த நாவலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஒரு தமிழன் இந்நூலினை வாசித்தால் தன்இனத்தின் பழமையையும் இயற்கையோடு இயைந்து எவ்வாறு தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும் புரிந்து கொள்வான். பிற மொழிக்காரர்கள் படித்தால் தமிழினம் எவ்வளவு பண்புநலன், கலாச்சார ஒருங்கிணைப்போடு தங்களுடைய வாழ்வினை கொண்டிருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள். திரு. சு.வெங்கடேசன் அவர்களால் விகடன் இதழில் தொடர் கதையாக எழுதப்பட்டு, பின்னர் அவை முழுமையாகத் தொகுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இத்தனை சிறப்புடைய வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் நூலின் மதிப்புரையை இங்கு காணலாம்.

கதையின் ஓட்டம்
                               
su venkatesan
 
         திரு சு.வெங்கடேசன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறுகையில், “இன்றைய சூழலில் ஒரு இளைஞனைப் பத்து வரிகளுக்குமேல் அமர வைப்பது கடினம். அதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நூலினுள்ள வரிகள் அனைத்தும் விறுவிறுப்பாக மையக்கதையை நோக்கி செல்ல வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வாசகர்களுக்குத் தெரியாத புதுமையான விஷயத்தைக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.   அதனை அப்படியே தன்னுடைய நாவலான வீரயுக நாயகன் வேள்பாரியில் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை கையாண்டுள்ளார் என்பது இந்நாவலை படித்தவர்களுக்குப் புரியும்.
 
 
வார்த்தை விளையாட்டு           
      ஏழிலைப் பாலை, காக்கா விரிச்சி, பால் கொறண்டி, தனைமயக்கி மூலிகை, இராவெரி மரம், பறக்கும் சிறகு நாவற்பழம், தேவவாக்கு விலங்கு, சுண்டாப் பூனை, ஆட்கொள்ளி மரம் போன்ற இதுவரை தமிழ்மக்கள் அறிந்திராத பல விஷயங்களை நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை ஆச்சர்யம் பொங்கும் வகையில் தமது வார்த்தைகளிலே வடித்து தந்திருப்பார் ஆசிரியர்.
                நாவலின் வரிகள் எந்தச் சூழலை விளக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்தில் -அந்தக்கணம் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்குக் கதைக்குள்ளே முற்றிலும் மூழ்கிப்போயிருப்போம் நாம்.
               
திரு.சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்துக்கள் நம்மை பறம்பு மலையிலேயே இருக்கச் செய்து விடுகிறது. இந்த நாவலின் வாசகர் ஒவ்வொருவரும் பறம்பு மலையில் நாம் பிறந்திருக்க கூடாதா? ஒருமுறையேனும் பறம்பு மலையைப் பாரத்து விடமாட்டோமோ? என்று ஏங்கச் செய்துவிடுகிறது.

வீரயுக நாயகன் வேள்பாரியின் கதைக்களம்           
           இந்நாவலின்கதாநாயக் வேள்பாரி. அவனுடைய குலம் – வாழ்ந்த பகுதி பறம்பு மலை – மலைப்பகுதி ஆதலால் குறிஞ்சி நிலத்தின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டது இக்கதைக்களம்.
 “முல்லைக்குத் தேர்க்கொடுத்தான் பாரி” இதை  தவிர பாரியைப் பற்றி பெரும்பாலோனோருக்கு பெரியதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்த வாசகமானது எவ்வளவு வலிமை மிக்கது என்பது நாவல் படித்தோர்க்குப் புரியும்.
               
     தமிழ்க்கடவுள் முருகனை வீரப்போர் புரிந்து அசுரர்களை வென்ற நாயகனாக நமக்குத் தெரியும். ஆனால், நாம் யாரும் கண்டிராத காதல் நாயகனாக மீண்டும் நம் உள்ளங்களில் நிறைய வைக்கின்றார் ஆசிரியர் திரு வெங்கடேசன் அவர்கள்.  முருகன் வள்ளியின் காதல் வசனங்களும் அதற்குரிய காட்சிப்படுத்தலும் நம்மை புல்லரிக்கச் செய்து விடுகிறது.
               
       பாரி – ஆதினியின் உன்னதமான காதல், நீலன் – மயிலா காதல் காட்சிகள் மட்டுமில்லாது தங்களின் காதல் இணையர்க்குக் கொடுக்கும் ஆச்சர்ய பரிசுகள் எல்லாம் நம்மை வியப்பின் ஆழத்திற்கு கொண்டு செல்வது மட்டுமில்லாமல் நம்மையும் காதல் செய்யத் தூண்டும் ஒரு காவியப்படைப்பாக வீரயுக நாயகன் வேள்பாரி  என்னும் நாவல் விளங்குகிறது.
               
         குறுநில மன்னனாகிய வேள்பாரியின் கதை ஒருபுறம் இருக்க, பறம்புமலையை அடைய துடிக்கும்  மூவேந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் காட்சிகளும் போர்க்காட்சிகளும் நம்மை மறக்கச் செய்து மனமானது நூலில் உள்ளேயே பறம்பு மலைக்குச் சென்று நேரடியாகப் பார்ப்பது போன்று புல்லரிக்கச் செய்து விடுகிறது. பாரியின் பொறுமையும் புத்தி சாதுர்யமும் நம்மை பாரி ஒரு சிறந்த தலைவன் என்று ஒப்புக்கொள்ள வைத்துவிடுகிறது.
               
         இந்த நாவலில் வரும்  தேக்கன், பழையன், நீலன், உதிரன், திசைவேழர், வாரிக்கையன், கபிலர், பொற்சுவை போன்ற அனைத்துக் கதாப்பாத்திரங்களும் நம் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியரின் சொல் வளமைக்குச் சில சான்றுகள்
“காதல் தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவடையும்”su venkatesan 1
“பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும்
மயக்கங்களைத்தான் உருவாக்கும்,
காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினை வைச் செழிக்கச் செய்யும்”
பொற்சுவை என்ற கதாபாத்திரத்தின் அழகை அவளது கண்களில் கொண்டு வந்து நிறுத்தி நம்மை மயங்கச் செய்திருப்பார் ஆசிரியர், இங்கே அப்பெண்ணைப் பற்றி…

“அவளது புருவங்கள் இசைவாய் வளைந்து கீழிறங்குவதும்
இமையோரத்து மயிர்க்கால்கள் அதை எவ்விப் பிடிக்க முயல்வதும்
யாராலும் வரைய முடியாத ஓவியம்போல் இருந்தன” என்கின்றார் ஆசிரியர்.

உண்மையையும் மனதையும் இணைத்து ஒரு உளவியல் செய்தியைக் கீழ்க்கண்டவாறு  போகிற போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

“மனம் உண்மையோடு கரைகிறபோது
சொல் தன்னியல்பில் முளைத்து மேலெழுகிறது”
“நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை.
அதுவே முழு உண்மையாகிவிடாது.
எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை..
எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை”
       இவ்வாறு நாவல் முழுக்க உளவியல் கருத்துகளை ஆழ விதைத்துள்ளார் ஆசிரியர். மூவேந்தர்களிடமிருந்து பல்வேறு குடிகளைத் தன் குடிகள்போல் ஆதரித்துக் காத்துவரும் வேள்பாரி பறம்புமலையை எவ்வாறு காப்பாற்றினான் என்பதே கதை.

முடிவுரை           
           இவ்வளவு  அதிஅற்புதமான பிரமாண்ட காவியத்தை நாம் வாசிப்பதற்கு விருந்தளித்த  ஆசிரியர் வேள்பாரியின் இறுதி அத்தியாயத்தை எழுதாமல் விட்டுச்சென்றுள்ளார். மூவேந்தர்களின் சூழ்ச்சி தெரிந்தும் பறம்பு மலையைவிட்டுக் கொடுத்த வள்ளல் வேள்பாரியின் மரணம், தன் மகள்களின் கண்முன்னே நடந்தேறிய கொடூர நிகழ்வைப் பதியாமல் முடித்து விட்டார் ஆசிரியர். ஒரு வரலாற்றுக் கதாப்பாத்திரத்தின் தொடக்கத்தைக் கூறியவர் முடிவையும் கூறியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. காதலையும் வீரத்தையும் மிகப்பிரம்மாண்டமாக வரலாற்றோடு இணைத்துக் காட்சிப்படுத்தி ஒரு பெரும் தமிழ்விருந்து படைத்த ஆசிரியர் திரு சு.வெங்கடேசன் அவர்களுக்கு என் சிரம் பணிந்த நன்றிகளும் வாழ்த்துகளும்!!

ஆசிரியர்
ம.தமிழரசு
ஓசூர்-635 109.

 

Leave a Reply