கூனி, கைகேயின் உரையாடல்கள் – ஃபிராய்டிய உளவியல் நோக்கு

இலக்கியங்கள் மனித மனங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒருவனது நடைமுறை வாழ்க்கையில் அமையும் நிகழ்வுகள் (இன்பம், துன்பம், வாழ்க்கைச்சிக்கல்) அவனது இலக்கியப் படைப்பிலும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, இது கவிஞனின் மன அழுத்தம். கற்பனை, அனுபவம் போன்றவற்றினால் எழும் ஆளுமையின் வெளிப்பாடாகும். கம்பர் வடமொழி இராமாயணததைத் தழுவித் தமிழில் கம்பராமாயணம் என்ற கதை நூலை இயற்றினார். அதில் எண்ணற்ற காட்சி நிகழ்வுகள் தோன்றினாலும் இக்கதையின் திருப்பு முனையாக அமைவது மந்தரை சூழ்ச்சிப்படலம். கைகேயி சூழ்வினைப் படலம் ஆகிய இரண்டும் ஆகும். இவ் இரண்டு படலத்திலும் கூனியின் மனத்தையும் கூனியால் பாதிக்கப்படும் கைகேயின் மனத்தையும் பற்றிக் கூறுகின்றது. கூனி, கைகேயின் மன உணர்ச்சிகளை உளவியல் அறிஞர் சிக்மன்ஃபிராய்டின் “உளவியல் கோட்பாடு” அடிப்படையில் ஆராய இக்கட்டுரை முயல்கிறது.

மந்தரைச் சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப்படலம் : கதைச்சுருக்கம்

இராமன் சிறுவயதாக இருக்கும் போது கூனியின் வளைந்த முதுகில் மண்உருண்டையை அம்பாகச் செய்து எறிகின்றான். அடிவாங்கிய கூனி அவன்மீது மிகுந்த சினம் கொண்டு அவனைப் பழிவாங்க நினைக்கிறாள். ஆனால், கூனி ஒரு வேலைக்காரியாக இருப்பதினால் அரச மகனான இராமனை நேரடியாக வஞ்சித்துக் கொள்ள முடியவில்லை. தசரத மன்னன்பரதன் கோசாம்பி (தாய் பிறந்த கேகய மன்னன் நாட்டிற்கு) நாட்டிற்குச் சென்றிருந்தபோது இராமனுக்கே முடிசூட்டு விழா ஏற்பாடு செய்கின்றான்.

“ஏவின வள்ளுவர் இராமன் நாளையே

              பூமகள் கெழுநனாய்ப் புனையும் மௌவிஇக்” (கம்.பாடல்:33)

என்று கூறி மக்களுக்கு முடிசூட்டும் நிகழ்வை அறிவிக்கின்றனர். தெளிந்த சிந்தனையிலும், நாளை இராமன் முடிசூட்டப் போகிறான் என்ற மன மகிழ்ச்சியில் உறங்கிக் கொண்டிருந்த கைகேயிடம் கூனி செல்கிறாள். கொடிய விடமுள்ள பாம்பு (இராகு) மதியை விழுங்க வரும்போது ஒளியை வீசுவதைப் போல, உனக்குப் பெரிய துன்பக்கட்டம் நெருங்கி வரும் போதும் கவலைப்படாமல் உறங்குகிறாய் என்கிறாள் கூனி. அதற்குக் கைகேயி எதிரிகளை அழிக்கும் வில்லைக் கையிலேந்திய என்மக்கள் செம்மையாக இருக்கும் போது என்கென்ன கவலை. உலக வேதத்தை ஒத்த இராமனைப் பெற்ற எனக்குத் துன்பமா? என்கிறாள். இவ் மந்தரை கைகேயிடம் நீ செல்வம் இழக்கப் போகிறாய். இராமனுக்கு முடிசூட்டுவதனால் நின்மகன் பரதன் பயனற்றுப் போகிறான், தசரதன் நெடுங்காட்டிற்குள் பரதனை அனுப்பியதன் சூழ்ச்சி இப்பொழுதாவது அறிந்துகொள். பரதனுக்குக் கிடைக்க வேண்டிய பதவி (அரசுரிமை) புல்லில் கொட்டிய அமுதம் போல பயனற்றுப் போயிற்றே என்று சினத்துடன் உரைக்கின்றாள்.

மேலும், உன் மீது பகை கொண்டு துன்புறுத்தாவிட்டாலும் மனம் நோகும்படி தொடர்ந்து துன்பத்தை உண்டாக்குவர். இது மட்டுமன்றி உன்னிடம் இரங்கி வந்தவர்களுக்குப் பிச்சைக்கொடுக்க முடியால் கோசலையிடம் “தா” என்று இரங்கி நிற்பாயா? இலலை உன் தந்தைக்கும் சீதையின் தந்தைக்கும் போர் நேருமானால் இராமன் உனக்கு உதவி செய்வானா? மனைவிக்கு உதவி செய்வானா என்பதை அறிந்து செயல்படு என்கிறாள் கூனி. அதற்குக் கைகேயி தூயசிந்தனை திரிந்து, நல்லருள் துறந்தாள். இரக்கம் இன்மை எல்லாம் கெடநின்றாள். அப்போது கூனியை விருப்பத்துடன் பார்த்து நீ என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறாய், என்மகன் முடிசூட்ட வழிசொல் என்கிறாள் கைகேயி. அதற்கு கூனி தசரத மன்னன் விரும்பித்தந்த இரண்டு வரத்தையும் பெற்றுக்கொள். இரண்டு வரங்களில் ஒன்றினால் அரசாட்சியைப் பெற்றுக் கொண்டு, மற்றொன்றின் மூலம் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டில் திரியும் படியும் செய் என்றாள்.

தசரதன் துவண்ட நிலையில் படுத்துக்கிடக்கும் கைகேயின் உடலைத் தூக்க அவள் தசரதன் கையை விலக்கி எதுவும் பேசாமல் தரையில் விழுகிறாள். உன்னை இந்த நிலைக்கு ஆட்படுத்தியது யார் சொல், இப்போதே கொன்று விடுகிறேன் என்கிறான் தசரதன். என்மீது உமக்குக் கருணை இருக்கிறதா? என்கிறாள் கைகேயி. உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன். விரும்பியதைக் கேள். இது உன் மகன் இராமன் மீது சத்தியம் என்கிறான். அதற்கு அவள் முன்பு அளிக்கவிருந்த இரண்டு வரங்கள் எனக்கு வேண்டும் என்கிறாள். இரண்டு வரங்களில் ஒன்று என்மகன் பரதன் நாடாள வேண்டும், சீதையின் கணவனாகிய இராமன் காடாளவேண்டும் என்கிறாள். இதைக் கேட்ட தசரதன் இவளைவிட தீயவள் இவ்வுலகில் இருக்க முடியாது என்று எண்ணிமடிந்து விழுகின்றான், அழுகின்றான், புலம்புகின்றான். கைகேயி கண்டு கொள்ள வில்லை. தசரதன் அவளிடம் நீ சிந்தனை செய்து கொல்கிறாயா? இல்லை உன்னை தூண்டி விட்டார்களா? என்கிறான். அதற்கு, அவள் நீ வரங்களைத் தரவில்லை என்றால் மடிந்து சாகப்போகிறேன். அவ்வாறு செய்தால் பழி உன் மீதுதான் வரும் என்கிறாள். உன்மகன் பரதன் நாடாளட்டும். ஆனால், என் மகன் இராமன் காட்டிற்குச் சென்றால் அவனைப் பார்க்காது இறந்து விடுவேன் உன் எண்ணத்தை மாற்றிக்கொள் என்று காலில் விழுந்து கெஞ்சிக்கேட்கிறான் தசரதன். வரங்களைக் கொடுத்து நிறைவேற்றாதிருப்பது என்னநியதி என்கிறாள். தசரதன் எது கூறியும் கைகேயி தன்முடிவிலிருந்து விலகாமலிருந்தாள். தசரதன் “ஈந்தேன் ஈந்தேன்” என்று கூறி வரங்களைக் கொடுக்கின்றான். இதன் படி இராமன் காட்டிற்குச் சென்றான் என்பது கதையாகும்.

சிக்மன்ஃபிராய்டின் உளவியல் கோட்பாடு

 ஃபிராய்டு மனித மன அமைப்பினை மூன்று பிரிவுகளைக் கொண்டதாக விளக்குகிறார். அவை இச்சை உணர்ச்சி, தன் முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி என்பவையாகும். இச்சை உணர்ச்சி என்பது மனிதன் பிறக்கும் போதிலிருந்தே இருப்பது; பிறப்பிலேயே பெற்றுக்கொண்டது ஆகும். இச்சை உணர்ச்சி வேறு எதனையும் பொருட்படுத்தாது; தனது தேவையை உடலின் துணையோடு தீர்த்துக்கொள்ள முனையக் கூடியது. கருத்துச் சொல்வது எனின் இச்சை உணர்ச்சி என்னும் பகுதியில்தான் மனிதனின் அடிப்படையான உணர்வுகள் உறைந்துள்ளன. இங்கிருந்துதான் `அவை மனித உடல், செயல்பாடுகள் வழி வெளிப்படுகின்றன.

பண்பாட்டுணர்ச்சி என்பது புறஉலகின் பண்பாட்டுப் பகுதியாகும். இதுவே, பண்பாட்டில் காணப்படும் சட்டம், ஒழுங்கு பற்றி விதிமுறைகள் ஆகும். இதற்கு நேர் எதிரானது இச்சையுணாச்சி பண்பாட்டுணர்ச்சி தொடர்ந்து இச்சையுணர்ச்சியினைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கும். அதனை, முழுமையாகத் தடைசெய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாத போதிலும் தொடர்ந்து இச்சையுணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கும்.

இச்சை உணர்ச்சிக்கும் பண்பாட்டுணர்ச்சிக்கும் இடையே பாலமாக அமைவது தன் முனைப்பு ஆகும். இது பண்பாட்டுணர்ச்சியைக் (சமூக ஒழுங்கு, விதிமுறைகள்) காரணம் காட்டி இச்சையுணர்ச்சியைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு இச்சையுணர்ச்சியிலான இயல்பான, கட்டுப்பாடற்ற செயல்பாட்டைப் பண்பாட்டுணர்ச்சி மூர்க்கமாக எதிர்க்கும். இவ்விரண்டுக்கும் இடையே தன்முனைப்பு செயல்பட்டு இச்சையுணர்ச்சி அதன் முழு வீச்சோடும் பரிமாணத்தோடும் எழாமல் தடுக்கும்” (உஷா நம்பூதிரிபாடு சா.பிலவேந்திரன் கட்டுரையிலிருந்து, 2003),

சிக்மன் ஃபிராய்டு குறிப்பிடும் அமுக்கப்பட்ட உணர்வுகள் என்பது பாலியல் உணர்வுகளை மட்டும் குறிப்பதன்று. அது பண்பாட்டில் காணப்படும் எல்லா வகையான அமுக்கப்பட்ட உணர்வுகளையும் குறிக்கிறது என்கிறார். இதனையே நலங்கிள்ளி “காமயிச்சை என்பது வெறும் உடல்சார்ந்த பாலியல் தினவு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. இது முதன்மை நிலையில் மனம் சார்ந்த உணர்வு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என (1999-2000) குறிப்பிடுகிறார்.

அமுக்கப்பட்ட உணர்வுகள் எப்போதும் கனவுகளாக மட்டுமல்லாமல் “மாறுவேட வடிவிலேயோ, அரைகுறை மாறுவேட வடிவிலேயோ ஆசைகள் கனவாகலாம். அமுக்கப்பட்ட எண்ணங்கள் தணிக்கை செய்யப்பட்டுக் கனவாக வெளிப்படுகையில் அடையாளங்கண்டு கொள்ள இயலா வடிவில் வெளிப்படவதோடு மட்டுமன்றி பண்பாட்டிற்கு இசைவான வகையில் திட்டமிட்ட அமைப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்” என பிராய்டின் கருத்தைப் பிலவேந்திரன் எடுத்துரைக்கின்றார் (2003, எண்.22).

இக் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டுள்ள “கூனி கைகேயி ஆகிய இருவர்களுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில் பண்பாட்டு அடிப்படையில அமுக்கப்பட்ட உணர்வு ஒன்று வெளிப்படும் விதத்தைக் காணலாம்.

இக்கதையின் மையப்பொருள் இராமன் முடிசூட்டப்படாமல் காட்டிற்கு அனுப்பப்பட்டதாகும். இந்நிகழ்விற்கான காரணம் இராமன் கூனியின் வளைந்த முதுகில் மண் உருண்டையால் அடித்ததாகும். தவறு செய்த இராமனைக் கூனி உடனடியாகத் தண்டித்திருக்கலாம். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை. அவள் கொண்டிருந்த இந்த தண்டனை என்ற எண்ணத்தை மனதின் இச்சை உணர்ச்சி எனலாம். இவ்வாறு அவள் இராமனைத் தண்டிக்காமலிருந்ததிற்குக் காணரங்கள் பல உண்டு. அவன் அரசப் பரம்பரையைச் சார்ந்தவன். அரச பரம்பரையைச் சார்ந்த ஒருவரை அவரது தொழிலாளி தண்டித்தல் கூடாது என்பது பண்பாட்டு விதியாகும். இந்த பண்பாட்டு விதியைப் பண்பாட்டுணர்ச்சி எனலாம். இந்த பண்பாட்டு விதியின் அடிப்படையிலேயே கூனியின் தன்முனைப்புச் செயல்பட்டு அது, கூனி இராமனைத் தண்டிப்பதைத் தடுத்தது. ஆனால், இந்த உணர்வு கூனியின் மனதில் பதிந்துகிடந்தது. ஒருவரது அமுக்கப்பட்ட எண்ணம் பிற வழக்காறுகளின் வழியாக வெளிபப்டும் என்பது ஃபிராயிடியத் தத்துவத்தின் அடிப்படையாகும். அதன்படி கூனியின் மனதிலுள்ள இராமனைத் தண்டிக்க வேண்டும் என்ற இச்சை உணர்ச்சி அதற்கான நேரத்தை எதிர்பர்த்துக் கொண்டிருந்தது. அது இராமனின் முடிசூட்டு விழாவின்போது கைகேயி உடனான கருத்தாடலாக மாறியது. அதாவது, கூனி கைகேயியுடன் கலந்து பேசி அவளது எண்ணத்தை மாற்றியமைக்கிறாள். அப்போது கூனியின் தன்முனைப்பு குறைந்து இச்சை உணர்ச்சி செயல்படத் தூண்டுகிறது. இதன் விளைவே இராமன் காட்டிற்கு அனுப்பப்பட்டதாகும். அதாவத, கூனியின் இச்சை உணர்ச்சி செயல்பாட்டை இக்கதையாடல் எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

எழுதிகச் சாங்கியம்

1 COMMENT

Leave a Reply