தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள், ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. ‘சுவிதை நயத்தையும், அக்கவிதைகள் காட்டும் பொருள் வளத்தையும் தெய்வீகச் சிந்தனைகளோடு சேர்த்தே நாம் அறிந்து உணர வேண்டும்’ என்ற உயரிய நினைவே இவற்றுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். புலவர் வரலாறுகளைப் பற்றியவரை, நிலையானவொரு பகுதியாக இன்னொன்றும் விளங்கி வருகிறது. அது, அவர்கள் காலத்தையும் வரலாற்றையும் பற்றி அறிஞரிடையே நிகழும் வாதப் பிரதிவாதங்கள். இந்த இரு வகையான பொது அம்சங்களிலும் காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிட வில்லை.
திருக்குடந்தைப் பகுயிலே, வடமரான பிராமணர் மரபிலே தோன்றியவர் இவர் என்பர். அவ்வூரிற் பிறந்த சோழியப் பிராமணர் என்றும் சிலர் உரைப்பர். நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழ்வது பாண்டி நாட்டுத் ‘திருமோகூர்’ என்னும் தலம் அந்தத் தலத்திலே கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குக் ‘காளமேகப் பெருமாள்’ என்று பெயர். அந்தக் கோயிற் பரிசாரகராயிருந்த ஒருவருடைய மகனார் இவர் எனவும் சிலர் உரைப்பர். இவர் மோகூர்ப் பெருமாளைப் பாடியிருப்பதனையும், அப்பெருமாளின் பெயரும் காளமேகமாக இருப்பதனையும் இக் கருத்திற்குச் சான்றாகவும் அவர்கள் காட்டுவர்.
இவர்களுடைய கருத்துப்படி ‘காளமேகம்’ என்பது இவருடைய இயற்பெயரே ஆகின்றது. மற்றையோர் இதனை ஏற்பதில்லை. தேவியின் அருளினாலே ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிதைகளையும் கார்மேகத்தைப் போலப் பொழிதலைத் தொடங்கிய பின்னரே இப்பெயர் இவருடைய சிறப்புப் பெயராக அமையலாயிற்று என்பார்கள் அவர்கள்.
“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே – பூசுரா
வீண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்”
என்ற செய்யுளை அதிமதுரகவி செய்தனர். இதன் முதல் அடியில் குறிப்பிடப்பெறும் வரதா என்ற சொல்லைக் கொண்டு, அதுவே இவருடைய இயற்பெயராகலாம் என்பர் திரு.மு. இராகவய்யங்கார் அவர்கள். இவருடைய இளமைப் பருவம் எத்தகைய சிறப்பும் இன்றிக் கழிந்திருக்க வேண்டும் என்றே கொள்ளலாம். இவர், பிற்காலத்துப் பரிசாரகத் தொழிலில் அமர்ந்திருந்ததனை எண்ணினால், அவ்வாறு கருதுவதற்கு இடமும் உண்டாகின்றது.
பரிசாரகர் வரதன்
வரதன், தமக்கு வயது வந்ததும், தமக்கு ஏற்ற ஒரு பணியினை நாடித் தம் ஊரிளின்றும் வெளியேறிவிட்டார். பலவிடங்கட்கும் சென்று வேலை தேடித் திரிந்தவர், இறுதியில் திருவரங்கத்துப் பெரியகோயிலை அடைந்தார். அங்கு, அவருக்குப் பரிசாரகர் வேலைதான் கிடைத்தது. கோயில் மடைப்பள்ளி அலுவல்களில் இந்தப் பரிசாரகர் பணியும் ஒன்று. உணவு அங்கேயே கழிந்துவிடும் கிடைக்கிற சிறு ஊதியம் மிச்சம். அதனால் வரதன் திம்மதியாக அவ்வேலையில் இருந்தார். இருந்தாலும், அவருடைய கட்டடிளமைப் பருவம், அப்படி நிம்மதியுடன் நிரந்தரமாக இருக்குமாறு அவரை விட்டுவிடவில்லை. விதி, அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கிற்று.
மோகனாங்கியின் தொடர்பு
திருவரங்கம் பெரியகோயில் ஒரு பிரசித்தி பெற்ற திருமால் திருப்பதி அதனருகே, சிறிது தொலைவிலே திருவானைக்காத் திருக்கோயில் உள்ளது. இது பிரபலமான சிவன்கோயில். சம்புகேசு வரராகச் சிவபிரான் இங்கே கோயில் கொண்டிருக்கின்றார். சம்புகேசுவரர் கோயிலும் ஒரு பெரிய கோயில், இங்கேயும் பணியாட்கள் மிகுதியாக இருந்தனர். இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்து வருவதை மரபாகக் கொண்ட தேவதாசியர் பலரும் அந்நாளில் இந்தக் கோயிலில் இருந்தனர். அவர்களுள் மோகளாங்கி என்பவளும் ஒருத்தி. இவள் நல்ல அழகி; நடனத்திலும் வல்லவன்,
அழகு கொஞ்சிக் குடிகொள்ளும் இளமைப் பருவமும் மோகனாங்கிக்கு அப்போது அமைந்திருந்தது. இயல்பிலேயே அழகியான மோகனாங்கிக்கு. இளமைப் பருவத்தின் செழுமையான பூரிப்பு மேலும் அதிகமான கவர்ச்சியை அளித்தது. அவளைக் கண்டதும் வரதன் அவள்பால் மையல் கொண்டனர். அவளை அடைவதற்கும் முற்பட்டனர். அவளும் அவருடைய அழகிலே மயக்கமுற்றாள். அவர் கருத்திற்கும் இசைந்தாள். இருவர் வாழ்வும் ஒன்றாகிக் கனிந்து, அளவற்ற இன்பநாதத்தை ஒலித்துக் கொண்டிருந்தது. வரதன், ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கி, ஒரு சிவன் கோயில் தாசி. அவர்களின் உறவு சைவர், வைணவர் ஆகிய இருந்திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆளால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் உள்ளம் ஒன்று கலந்துவிட்டபின், உலக விவகாரங்களை நினைப்பதற்கு அங்கு இடமே இல்லை.
கேலியும் ஊடலும்
ஒரு சமயம், மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பாடலை அவர்கள் பாடத் தொடங்கினார்கள். ‘எம்கொங்கை நின் அன்பர்அல்லார் தோள் சேரற்க’, என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாட முடியும்? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். ஆகவே, அவன் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள, அவள் செயலற்று நின்றுவிட்டாள். இயல்பாகவே அவள் கொண்டிருந்த பொருத்தமற்ற உறவினை வெறுத்து வந்த அந்தப் பெண்கள், மோகனாங்கியைச் கட்டி, அப்போது வெளிப்படையாகவே பழிக்கத் தொடங்கி விட்டனர். ‘எப்படியடீ உன்னால் பாடமுடியும்?’ என்ற அவர் களின் ஏளனமான கேள்வி மோகளாங்கியை வாட்டி வதைத்தது. மோகனாங்கி சிலையானாள். அவள் தோழியர் கும்மாள மீட்டனர்; கைகொட்டிச் சிரித்தனர். அவர்களின் குறும்புகளால் அவளது வேதனைத் தீ சுவாலையிட்டு எரியத் தொடங்கிற்று. தூய சிவபக்தி அவளை அப்போது ஆட்கொள்ள, அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.
மூடிய கதவம்
“வாயிற் கதவைச் சார்த்திவிடு; வரதர் இன்றிரவு வந்தால் உள்ளே நுழைவதற்கு இடம் தரவேண்டாம். சிவன் கோயில் தாசியாகிய நான், வைணவரான அவருடன் திருவரங்கத்துக் கோயில் பரிசாரகரான அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த உறவு அனைத்தும் இன்றோடு முடிந்தது” என்று தன் வேலைக்காரியிடம் கூறிவிட்டுப் படுக்கையில் படுத்தும் உறக்கங் கொள்ளாமல் தான் செய்த சிவ அபசாரச் செயலை நினைத்து வருந்தியவளாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் மோகனாங்கி. வழக்கம்போல் வரதன் வந்தார். “மோகனா” என அன்புடன் அழைத்தவாறே கதவைத் தட்டினார். கதவு மெல்லத் திறந்தது. வேலைக்காரி எதிரே நின்றாள். தன் தலைவியின் நிலையைச் சுருக்கமாகச் சொல்லி விளக்கினாள். வரதன் நிலைகலங்கினார். தம்முடைய உறவுக்கு இடையூறாகத் தம் மதக்கொள்கை இருப்பதை நினைத்தார். ஒரு முடிவுடன் விரைந்து சென்றார். அந்த முடிவுக்கு வந்ததுமே அவர் முகம் தானாக மலர்ந்தது. அவரிடம் புதியதொரு மிடுக்கும் எழுந்தது. அவர் நடையிலே என்றுமில்லாத ஒரு விரைவும் காணப்பட்டது.
அன்பின் ஆற்றல்
மறுநாள் பொழுது விடிந்ததும் வரதன் சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தாம் சிவசமயத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு விரும்புவதாகக் கூறினார். அவருடைய முடிவைக் கேட்டு அங்கிருந்தோர் அதிசயித்தனர். ஆனாலும், வைணவர் ஒருவர், தாமே வலிய வந்து சிவநெறியை ஏற்க விரும்புவதை மகிழ்வுடன் வரவேற்றனர். அவருக்குச் சிவதீட்சை செய்துவைத்துச் சிவசமயத்திற் சேர்த்துக் கொள்வதற்கான சடங்குகளையும் உடனே செய்து வைத்தனர். வரதன் சைவசமயி ஆயினார். அவரைச் சம்புகேசுவரர் கோயிற் பரிசாரகராகவும் அவர்கள் நியமித்தனர். சிவ சின்னங்கள் உடல் முழுவதும் பொலிவுடன் விளங்கத் தம் அன்புடையாளைக் காணச் சென்றார் வரதன். அவள் கொண்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அகமும் முகமும் மலர் அவரை வரவேற்று உபசரித்தாள். தளக்காக அவர் சைவராக மாறின செயல், அவள் உள்ளத்தே நிரம்பி நின்றது. அவரை ஆர்வத்துடன் தழுவி, அவரது காதலன்பின் பெருமைக்கு அடிமையாகிப் போற்றி இன்புற்றாள். வரதனும் கவலை தீர்ந்தவராகிக் களிப்பிலே திளைத்திருந்தார்.
தேவி உபாசகன்
தேவி உபாசகன் ஒருவன் தனக்கு நிறைந்த புலமையைத் தந்தருளுமாறு ஒரு சமயம் தேவியை வேண்டுவானாயினான். திருவாளைக் காவிலே. சம்புகேசுவரரின் தேவியாகக் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் திருமுன்னே, இரவு பகலாகநோன்பு இயற்றியும் வந்தான். அவனுடைய கடுமையான உபாசனை, தேவியின் திருவுளத்தேயும் அவனுக்கு அருளவேண்டும் என்னும் கருணையினை உண்டாக்கிற்று. தேவி, ஒரு சிறு பெண்ணாக வடிவு எடுத்தாள். இரவின் நடுச்சாம வேளையிலும் கண்ணுறங்காதவனாகத் தியானத்திலே இருந்த அந்த உபாசகனின் முன்னே சென்று நின்றாள். அவள் திருவாயிலே தாம்பூலம் நிறைய இருந்தது. அதனை அவள் மென்றுகொண்டும் இருந்தாள். “அன்பளே! நின் வாயைத் திற, இதனை நின் வாயில் உமிழ்கின்றேன். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்” என்றாள் தேவி, அவன் கண்விழித்தான். எதிரே நின்ற சிறுபெண்ணின் வடிவைக் கண்டான். அவள் வாய் நிறையத் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருந்த நிலையையும் கண்டான். ‘தன் தவத்தைக் கலைக்கவந்த பெண்’ என்று தவறாகக் கருதி மயங்கினான். அவளைக்கடிந்து வெருட்டவும் முற்பட்டான். ‘ஏடீ, சிறு பெண்ணே! என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து, என்னைக் கெடுக்கவோ நினைத்தனை. உடனே இங்கிருந்து அகன்று போய்விடு, இன்றேல், நான் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது’ என்று கூச்சலிட்டான்,
நிறைவான அறிவு பெறுவதற்கு உரிய நற்காலம் அவனுக்கு வரவில்லை என்பதைத் தேவி அறிந்தாள். தான்கொண்ட அந்த வடிவுடனேயே திரும்புவாளானாள், வழியிலே ஒரு மண்டபத்தே உறங்கியிருந்த வரதனைக் கண்டாள். அவனுடைய நல்லூழ் அவள் நினைவிற்பட்டது. அவன் அருகே சென்று, அவனைத் தட்டி எழுப்பினாள். அருள் பெற்றான் ‘இன்று எனக்குக் குடவரிசைப் பணி உளது. இரவில் வீடு திரும்புவதற்கு நெடுநேரமாகும். தங்கள் பணி முடிந்த பின், அம்மன் கோயில் மண்டபத்தே எனக்காகக் காத்திருங்கள். நானும் அங்கே வருகிறேன். இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குப் போய்விடலாம்’ இப்படிச் சொல்லியிருந்தாள், அன்று மாலை மோகனாங்கி. அவன் விருப்பப்படியே, தம் பணி முடிந்ததும், மண்டபத்தே சென்று வரதர் அவளுடைய வருகையை எதிர் பார்த்தபடி காத்திருந்தார். அங்கேயே படுத்து அயர்ந்து உறங்குபவரும் ஆயினார்.
மோகனாங்கி தான் சொன்னபடியே மண்டபத்திற்கு வந்தாள். அவர் உறங்கிக் கிடப்பார் என்று நினையாத அவள். அவரைக் காணாமையால், அவர் வீட்டிற்கே போயிருப்பார் எனக் கருதித் தானும் சென்றுவிட்டாள். கோயிலாரும், குடவரிசை முடிந்தபின், கோயிற் பெருங் சுதவை மூடித் தாளிட்டு விட்டனர். அந்த நிலையிலேதான், தேவி அவரிடத்தே சென்றனள். வரதரை எழுப்பி, ‘வாயைத் திற’ என்றதும், அவர் வாய் தானாகவே எவ்வித மறுப்புமின்றித் திறந்து கொண்டது. தேவியும் தன் வாயின் தாம்பூலச்சாற்றை அவர் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள். அந்தக் கணமே, வரதராகிய பரிசாரகரின் உள்ளத்தில் பெரியதொரு உத்வேகம் எழுந்தது. கடல் மடை திறந்தாற் போன்று அவர் கவிமழை பொழியலானார்; அவருடைய அந்தப் புதிய சக்தியை நினைந்ததும், அவருக்கே வியப்பாக இருந்தது. தேவியின் கருணைப் பெருக்கை எண்ணி அவளைப் பாமாலையால் போற்றினார்.
காளமேகம் ஆயினார்
பொழுது விடிந்ததும், பழைய பரிசாரகராக வரதர் இல்லை. முத்தமிழ் தவழ்த்துவரும் செஞ்சொற் கவிஞராக அவர் விளங்கினார். தம் அன்புக் காதலியிடம் சென்று தம்முடைய கவித்திறனைக் காட்டினார். தேவியின் திருவருளையும் விளக்கமாக உரைத்தார். அவளும் அதனைக் கேட்டதும், தேவியின் திருவருளைப் போற்றிப் பேரின்ப வயத்தினளாயினாள். அன்று முதல், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பொழியும் காளமேகமாக ஆயினார் வரதன். தமக்கு அருள்பாலித்த தேவியின் கருணைக்கு நன்றியாகத் ‘திருவானைக்கா உலா’ என்னும் அரியதொரு பிரபந்தத்தைச் சொற்கவையும் பொருட் சுவையும் மிளிரும்படியாக இயற்றினார். உலாவின் இனிமை அறிவுடையோரை ஆட்கொள்ள, அன்று முதல் அனைவரும் கவி காளமேகம் என்றே அழைக்கலாயினர்,”
தல யாத்திரை
திருவானைக்காவிலே தம் அன்பிற்கு உரியவளான மோகனாங்கியுடன் சில காலம் இன்புற்று இருந்த பின்னர் தமிழகம் முழுவதும் சென்று தம் கவிதை வெள்ளத்தைப் பரப்பிவர வேண்டுமென்னும் பேரவா இவருக்கு எழலாயிற்று. அதனால், அவனிடத்தே பிரியாவிடை பெற்றுத் தமிழ் நாடெங்கணும் காளமேகம் செல்வாராயினார். செல்லும் இடங்களில் எல்லாம் கவிமழை பொழிந்து, தமிழகம் முற்றும் தம்மைப் போற்றப் புகழ்க்கொடியும் நாட்டினார். பின்னர், மீண்டும் திருவானைக்காவிற்கே வந்து மோனாங்கியுடன் இன்பமாக வாழ்ந்திருந்தார்.
திருமலைராயன்
தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையோரத்தே, நாகைக்குச் சில கல் தொலைவிலே விளங்கும் திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரினைத் தலைநகராகக்கொண்டு, அந் நாளையிலே ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் திருமலைராயன். விஜயநகர மன்னர்கட்கு உட்பட்ட தலைவனாக அவன் அந்தப் பகுதியை ஆண்டுவந்தான் (கி.பி.1455-1468). அவன் தெலுங்கு மொழியிளன். எனினும் அவன்பால் தமிழார்வமும் நிரம்ப இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலரைத் தன் அவையிலே வைத்து அவன் உபசரித்து வந்தான். அவனுடைய தமிழன்பின் சிறப்பையும், வள்ளன்மை யினையும் கேட்டறிந்தார் காளமேகம். தாமும் சென்று அவனைச் காணவும், அவனைப் பாடி பரிசில்பெற்று வரவும் விரும்பினார். அந்த விருப்பத்தைச் செயற்படுத்துவதற்கான தக்க நேரத்தையும் எதிர்பார்த்திருந்தார்!.
தண்டிகைப் புலவர்கள்
மேற்சொன்ன திருமவைராயன் அவையிலே, அறுபத்து நான்கு புலவர்கள் ‘தண்டிகைப் புலவர்கள்’ என்ற சிறப்புடன் திகழ்ந்தனர்.அரசனால் அளிக்கப்பெற்ற விருதான பல்லக்குகளிலே அமர்ந்து அவர்கள் செல்வார்கள். அதனால் தண்டிகைப் புலவர்கள் ஆயினர். அந்தச் சிறப்பும் செழுமையும் அவர்க ளிடத்தே புலமையைக் காட்டினும் செருக்கினையே பெருக்கிக் கொண்டிருந்தன. தம் அரசனின் உதவியை நாடிவரும் பிறபுலவர் சுளை எல்லாம் வஞ்சகமாக மடக்கிக் தலைகவிழச் செய்து, அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.
வறுமையிலே வாடி. அரசனின் உதவியை எதிர்பார்த்தவர்க ளாகவும், புலமையால் அரசனிடத்தே பரிசுபெறுவதை விரும்பியவ ராகவும் வந்த புலவர்களுட் பலர், இந்தத் தண்டிகைக் கூட்டத்தினரின் செயலினால் மனங்குன்றி, யாதும் பெறாதே வருத்தமுடன் திரும்பிச் செல்வாராயினர். இந்த கும்பலின் கொடுஞ்செயல் பற்றிய செய்தி தமிழகத்தின் எப்புறத்தும் பரவி இருந்தது. ‘இவர்கள் செருக்கினை அடக்கி இவர்களுக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும்’ எனக் காளமேகம் நினைத்தார். அதிமதுரக் கவி இந்தத் தண்டிகைப் புலவர்களின் தலைவராகத் திகழ்ந்தவர் அதிமதுரக் கவிராயர் என்பவர். மிகவும் இனிதான கவிதைகள் இயற்றலிலே வல்லவர் அவர். அதனால் அரசன் அவருக்கு மனமுவந்து அளித்த விருதே ‘அதிமதுரக் கவிராயர்’ என்பது. அந்தப் பெயருக்கு ஏற்றவாறே புலமைச் செறிவு உடையவராகவும் அதிமதுரம் விளங்கினார். இவருடைய சொந்த ஊர் ‘திருக்கோயிலூர்’ என்பர். இதற்குச் சான்றாகக் ‘கோவன் மதுரா’ எனஒரு செய்யுளில் வருவதனையும் காட்டுவர். திருக்கோயிலூர் மலையமான்களுக்கு உரியதாகப் புகழுடன் விளங்கியதோர் ஊராகும். இந்நாளில், தென்னாற்காட்டு மாவட்டத்தே உள்ளது. இவ்வூரவரான இப்புலவர், தம்முடைய கவிவன்மையினாலே, திருமலை ராயளின்பாற் சென்று, அவன் அன்பைப்பெற்று, அவன் அவைப் புலவர் தலைவராகவும் விளங்கிவந்தனர்.
புலமைச் செறிவுடையவர் எனினும், ஒருவர் அகந்தைப் பெருநோய்க்கு இடங்கொடுத்தால் அவர் புகழடைதல் கூடுமோ! அந்த நிலைக்கு அதிமதுரமும் உள்ளாயிருந்தனர். அரசன் அளித்த தகுதியும், செல்வ சம்பத்துகளும் இவரை அகந்தையுடையோராக ஆக்கியே அலைக்கழித்தன. இவருடைய செருக்கை அடக்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் காளமேகத்திற்கு எழுந்தது. அது நிறைவேறத் தொடங்கும் காலமும், திருமலைராயன் பட்டினத்து முத்துக் குளித்தலின் தொடக்கத்துடன் வரலாயிற்று,
முத்து வேண்டும்
நாட்டின் பல பகுதிகளிலும், திருமலைராயன் பட்டினத்து முத்துக்குளித்தலைப் பற்றிய செய்தி பரவலாயிற்று, அங்கு தன்முத்துக்கள் பல கிடைத்தும் வந்தன. அவற்றை வாங்கும் பொருட்டுப் பல திசையினரும் அங்குச் செல்வாராயினர். அப்படிச் சென்று வந்தவர்களுள் ஒருவர் மோகனாங்கியிடம் சென்று, தாம் கொண்ட சிறந்த முத்துக்களைக் காட்டினர். அவற்றைக் கண்டதும், அவளுடைய உள்ளத்தே ஆசைப்புயல் கால்கொள்ளலாயிற்று. அவள் பெண் அல்லவா! திருமலைராயனைக் கண்டு, அவனால் அளிக்கப் பெறும் பரிசினைப் பெற்றுவர வேண்டும் என்ற ஆர்வமும், அவன் அவைத் தலைவரான அதிமதுரத்தை வென்று செருக்கொழித்து வரவேண்டும் என்ற தினைவும் கொண்டிருந்த காளமேகத்திடத்தே, மோகனாங்கி, ஒருநாள் தன் முத்து விருப்பத்தையும் பக்குவமாகச் சொன்னாள். ”சுவாமி! திருமலைராயன் பட்டினத்திற்குப் போய் ஒரு முத்துமாலைக்குத் தேவையான அளவு முத்துக்கள் பெற்று வாருங்களேன்” என்றாள் அவள். அவரும் அதற்கிசைத்தவராக அன்றே தம் பயணத்தைத் தொடங்கினார்.
கண்ட சாட்சி
பல நாட்கள் நடந்து, பல ஊர்களையும் கடந்து, ஒரு நாள் காலை வேளையிலே திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார் காளமேகம். அந்த ஊரின் வளமையைப் பறைசாற்றுவன போல மாடிவீடுகள் இருபுறமும் வானத்தைச் சென்று முத்தமிட முயல்வனபோலத் திகழ்ந்த ஒரு தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்தார். ஒரு பெரிய ஊர்வலம் அப்போது எதிரே வந்துகொண்டிருந்தது.
மங்கல பேரிகைகள் ஜாம் ஜாமென்று முழங்க, சுற்றிலும் மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்திப்போற்ற, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பெற்ற பல்லக்கு ஒன்றிலே அமர்ந்தபடி, அதிமதுரக் கவிராயர் அந்த ஊர்வலத்தின் நடுநாயகமாக வந்து கொண் டிருந்தார். அவரைத் தொடந்து அறுபத்து மூன்று பல்லக்கு களிலும் புலவர்கள் அமர்ந்து வந்தனர். கட்டியக்காரன், ‘அதிமதுரக் கவிராய சிங்கம் பராக்’ என்று கூறிவர, அத்த முழக்கம் அனைவராலும் தொடர்ந்து முழக்கப்பெற்ற முழக்கொலி வானதிர எழுந்து கொண்டிருந்தது. தமிழ்வாணர்கள் செல்லும் தகவுடைய அந்தப் பெருமிதத்தைக் கண்ட கவிஞரின் உள்ளம் பூரிப்படைந்தது. திருமலைராயனின் தமிழார்வத்தை உள்ளத்தாற் போற்றினார். ‘தமிழறிந்தாரின் நல்வாழ்வே தமிழின் தமிழரின் நல்வாழ்வாகும்’ என்பதனை உணர்ந்து, செயலிலேயும் அதை நிறைவேற்றி வந்த திருமலைராயனின் செயல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டது, நடுத்தெருவில் தம்மை மறந்தவராக மெய்மறந்து நின்று கொண்டிருந்தார் காளமேகம்.
எதிர்பாராத சம்பவம்
கட்டியக்காரர்களுன் ஒருவன், தமிழ் மயக்கத்தால் மெய் மறந்து நின்ற காளமேகத்தைக் கண்டான். அனைவரும் முழக்கும் அதிமதுரக் கவிராய சிங்கத்தின் புகழ் வாசசுத்தை அவர் கூறாது நிற்பதறிந்து வெகுண்டான். அவரருகே சென்று, தன் கைத்தடியினாலே தட்டி அவர் மயக்கத்தைக் கலைத்து, “நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைப் பிறருடன் முழக்குவாயாக” என்றான். காளமேகம் வெகுண்டார். எனினும் நோவவேண்டியது அவனையன்று என்பதனை அறிந்த அவர், அதிமதுர மென்றே அகிலம் அறியத்துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக் கூட்டுச் சரக்கதளைக் கூறு- என்ற செய்யுளை உடனே சொன்னார். ‘அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு: அதை எதற்காக இப்படிப் போற்றி முழக்க வேண்டும்?” என்ற ஏளனம் செய்யுளில் எதிரொலித்தது. கட்டியக்காரன் அவரைப் புலவர் என்று அறிந்து கொண்டான். அந்தச் செய்யுளையும் நடந்த சம்பவத்தையும் அதிமதுரத்திடம் சென்று சொன்னான். அவர் அதனைக் கேட்டதும், ஏளனம் செய்தவரைத் தலைகுனிய வைக்க எண்ணினார். அவர் யாவரென அறிந்து வருமாறு அந்த ஏவலனைப் பணித்துவிட்டு, ராஜசபையை நோக்கிச் சென்றார். சூழ்ச்சிக்கு முனைதல் அரசவையினை அடைந்த அதிமதுரம், வழியிடையே தாம் கண்ட புதிய கவிராயரையும், அவர் சொன்ன செருக்கான அந்தச் செய்யுளையும் தண்டிகைப் புலவர்கட்கும் அரசனுக்கும் மிக வருத்தத்தோடு எடுத்துச் சொன்னார். அவரை எப்படியும் அவமானப்படுத்தி அனுப்பவேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார்.
காளமேகத்தைப்பற்றி அறியச் சென்ற கட்டியக்காரன் அவைக்கு வந்தான், கவிராயரே தந்த ஒரு சீட்டுக்கவியினை அதிமதுரத்திடம் தந்து நின்றான். அதனைப் படித்ததும் அதிமதுரம் மேலும் சினம் கொண்டார், அதனைப் படித்த அரசனும் அறிந்த பிறரும் அவ்வாறே ஆயினர். அவையில் வந்தனர். ‘அந்தப் புலவரை உடனே இங்கு கொண்டு வருக. நம் அவைப்புலவர் பெருமானைப் பழித்த அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கட்டி இழுத்தாயினும் கொணர்க’ என்று ஆணையிட்டுத் தன் ஏவலரைப் போக்கினாள் திருமலைராயன். அவர்களும் காளமேகத்தை அணுகி அரசனின் ஆணையைக் கூற அவரும் நிகழ்ந்திருக்கும் குமுறலை எண்ணியவாறே அவர்களைத் தொடர்த்தார். அரசவையிலே நுழைந்தார் காளமேகம், மன்னனை வாழ்த்தினார். தாம் கொண்டு வந்திருந்த எலுமிச்சம் பழத்தை அவளிடம் அளித்தார். அதனை வாங்கிய அவன், அவருக்கு இருக்கை அளித்து உபசரியாமல் வாளாயிருந்தான். காளமேகம் அதனைக் கண்டு சிரித்தார். அதிமதுரத்தின் சூழ்ச்சி வலையிலே அரசனும் சிக்கியிருந்த உண்மையைக் கண்டார். தமக்கு உதவும் தேவி அகிலாண்டவல்லி கோயில் கொண்டிருக்கும் திசையை நோக்கிக் கரங்குவித்து தியானித்தார். அதன்பின் தமக்கொரு இருக்கை அருளுமாறு கலைமகளை வேண்டிப் பாடினார்.
அப்போது திருமலைராயன் வீற்றிருந்த சிம்மாசனமே ஒருபுறமாக வளர்ந்து பெருகிற்று. பெருகி வளர்ந்த அந்தப் புறத்தே சென்று கம்பீரமாக அமர்ந்துகொண்ட காளமேகம், தமக்குத் துணை செய்த கலைவாணியை மீண்டும் போற்றினார். கண்டோர் அனைவரும், அவருடைய தெய்வீக சக்தியைக் கண்டு, எதுவும் சொல்லுவதற்கு வாயெழாமல் திகைப்புற்றிருந்தனர். காளமேகமோ அங்கிருந்த புலவர்களைச் சுட்டி, ‘நீவிர் யாவரோ?’ என்று மிகவும் கனிவாகக் கேட்டனர். அவர்கள் ‘யாம் சுவிராயர்கள்’ என்றனர். ‘கவிராயர்’ என்ற பதத்தினைக் ‘குரங்குகள்’ என்று பொருள்கொண்டு காளமேகம் கேலியாக உரையாடப் புலவர்கள் பெரிதும் சீற்றங்கொண்டனர். ‘நீவிர் யாவரோ?’ என்று அவர்கள் கேட்க, இவர் ‘யாமே காளமேகம்’ என, அதனைக் ‘கார்மேகம்’ எனப்பொருள் கொண்டு அவர்களும் ஏளனம் செய்தனர். அதனைக் கேட்டதும் கவிபாடுதலில் தாம் காளமேகம் என்று ஒரு செய்யுனைக் கவிஞர் சொல்லினர்.
அதிமதுரக் கவிராயர், ‘எம்போல் நீவிர் விரைவாகக் கவிபாட வல்லீரோ? என்னும் பொருள்பட, ‘மூச்சு விடு முன்னே’ என்ற செய்யுளைச் சொல்வக் காளமேகம் ‘அதனினும் விரைவாகப் பாடுவோம்’ என்று பொருள்படும் ‘அம்மென்னும் முன்னே’ என்ற செய்யுளைச் சொல்லினர். அரிகண்டம் காளமேகத்தின் செயலினால் சினம் மிகுதியாகப் பற்றித் தம்மை எரிக்க, அதிமதுரம், ‘நீர் அரிகண்டம் பாடி எம்மை வெற்றிபெற இசைகின்றீரா?’ என்றனர். ‘அரிகண்டமோ? அதன் முறைமை எப்படியோ? சொன்னால், யாம் அதன்பின் எம் இசைவைச் சொல்வோம்’ என்றனர் காளமேகம். “கழுத்திலே சுத்தியைக் கட்டிக்கொள்ள வேண்டும். கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் செய்யுள் சொல்ல வேண்டும்; சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை இல்லாமலும் இருக்க வேண்டும். பிழைபட்டால் கழுத்து வெட்டப்படும்; வென்றால் பாராட்டப் பெறுவார்கள்’ என்று விளக்கினார் அதிமதுரம். அதனைக் கேட்டுக் காளமேகம் கதிகலங்கிப் போவார் என்று எதிர்பார்த்த அதிமதுரம் திடுக்கிட, ‘அரிகண்டம் ஒரு பெரிதோ? ‘யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வோம்’ என்று காளமேகம் முழங்கினார். ‘எமகண்டமோ’ என்ற திகைப்புடன் அதிமதுரம் வினவ, காளமேகம் அதனை விளக்கினார்.
எம கண்டம்
பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழம் உடையதாகப் பூமியிலே ஒரு பெரிய குழியினை முதலிலே வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நாற்றப் பெறும். அவற்றின் மேலாக, நாற்புறமும் சட்டமிட்டு, அச் சட்டங்களின் நடுப்பகுதியிலே இரு குறுக்குச் சட்டங்களை இடவேண்டும். அந்தக் குறுக்குச் சட்டங்கள் சந்திப்பதும், குழிக்கு நடுவே மேலேயிருப்பதுமான பகுதியிலே இரும்புச் சங்கிலிகளால் தாழவிடப்பெற்ற உரியொன்று தொங்கும். குழியினைப் பருத்த புளியங்கட்டைகளால் நிரப்பி, அதன் நடுவிடத்தே ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பரையை வைத்து, அதனுள் அரக்கு, மெழுகு, குங்குலியம் போன்றவைகளை இடவேண்டும். கட்டைக்கு நெருப்பிட்டு, அந்த எண்ணெய்க் கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கும் பருவத்திலே, போட்டி விடுபவர் அந்த உரியிற் சென்று அமர்ந்து கொள்வார். நயமான எஃகினாலே அடித்ததும், கூர்மையாகச் சமைத்ததும், பளபளவென்று தீட்டப்பெற்றதுமான எட்டுக் கத்திகளைச் சங்கிலியிற் கோர்த்து, அப்படி உரியிலிருப்பவர் தம் கழுத்தில் நான்கும், இடையில் நான்குமாகக் கட்டிக் கொள்வார்.
குழியின் நான்கு முனைகளிலும் நாற்றியிருக்கிற தூண்களருகே நான்கு யானைகளை நிறுத்தி, அந்தக் கத்திகளிற் கோர்த்த சங்கிலிகளை அவற்றின் துதிக்கைகளினாற் பற்றியிருக்கும் படியும் செய்யவேண்டும். இந்த நிலையிலே, உரியிலிருப்பவர், கொடுக்கப்பெறும் குறிப்புகளின்படி எல்லாம் அரை நொடி அளவிற்குள்ளாக ஏற்ற செய்யுட்களைச் சொல்லி வருவார். அச் செய்யுட்கள் பிழைபட்டாலோ, அன்றி அவர் செய்யுளே கூறத் தவறினாலோ, யானைகள் பற்றியிருக்கும் சங்கிலிகளை இழுக்க கழுத்தும் இடையும் துண்டிக்கப்பட்டு, அவர் உடல் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரையுள் வீழ்த்தப்படும். இதுவே எமகண்டம் பாடுவது என்பது. இதனை நீர் செய்வதற்கு வல்லீரோ?” என்றனர் காளமேகம்.
வென்ற கவிஞர்
அதிமதுரத்திற்கு அதனைக் கேட்டதும் நடுக்கம் எடுத்தது. அத்தகைய போட்டியை நினைக்கவே அச்சம் எழுந்தது. காளமேகத்தையே அதனிடத்து ஈடுபடுத்திவிட நினைத்தார். “எம்மைப் பாடுவீரா? எனக் கேட்கும் நீர்தாம் அங்ஙனம் பாட வல்லீரோ?” என்றார். காளமேகம் அதற்கு இசையவே, திருமலைராயன் போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லாம் விரைவாகச் செய்தான். போட்டி பற்றிய செய்தி நாற்றிசையும் பரவிற்று.
திருமலைராயன் பட்டினத்தே நிகழும் அந்த வைபவத்தைக் கண்டு களிப்பதற்கெனப் பெரியதொரு புலவர் கூட்டமும் வந்து திரண்டது. போட்டியும் தொடங்கிற்று. அதிமதுரமும் அவரைச் சேர்ந்த தண்டிகைப் புலவர்கள் அறுபத்து நால்வரும் பற்பல குறிப்புகளைக் கொடுத்தனர். அவற்றுக்கு எல்லாம் ஏற்ற செய்யுட்களைச் சொல்லியபடி கம்பீரமாக வீற்றிருந்தார் காளமேகம், போட்டியில் அவர் வெற்றிபெற்றார் என்றும் அறிவித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற பின்னரும், அவரைப் போற்றி உபசரியாது அலட்சியப்படுத்தினான் திருமலைராயன். தன் அவைப் புலவர்களை அவர் அவமானப் படுத்திவிட்டார் என்ற நினைவே அவன்பால் நிரம்பி நின்றது. காளமேசும் அரசனின் செயலைக்கண்டு மனங்குமுறினார், இவர் கவிதையுள்ளம் கனலும் உள்ளமாயிற்று. அவ்வூர் அப்படியே அழியுமாறு வசை பாடினார். தாம் விரும்பிவந்த முத்துக்களையும் மறந்து வெளியேறினார். பல இடங்கட்கும் சென்று மீண்டும் திருவாரூர் வந்து தியாகராசப் பெருமானை வழிபடுபவராகச் சில நாட்கள் அவ்விடத்தே தங்கியிருந்தார்.
மண்தின்ற பாணம்
அப்படித் தங்கியிருந்த நாளிலே, அதிமதுரக் கவிராயரும் திருவாரூர்ப் பெருமாளைத் தரிசிக்க வந்திருந்தார். பெருமானைப் போற்றிச் செய்யுள் செய்ய நினைத்த அவர் ‘நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்,’ என்று தொடங்கி, மேலே முடிக்கும் வகையறியாதவராய் மதிற்சுவரில் எழுதிவிட்டுச் சென்றிருந்தார். பிற்றைநாள் வந்தவர், தம் செய்யுள் முடிக்கப் பெற்றிருந்ததைக் கண்டதும் வியந்து நின்றார். நானொன்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தாள் மண்தின்ற பாணமே-தாணுவே சீராரூர் மேவும் சிவனேநீ யெப்படியோ
நேரார் புரமெரித்த நேர் என்ற அந்தச் செய்யுளின், ‘மண் தின்ற பாணம்’ என்ற வாசகம் அவரை அப்படியே மெய்ம்மறக்கச் செய்தது. அதனை எழுதியவர் காளமேகமே என்று அறிந்த அவர், அவர் புலமைச் செறிவை வியந்து உளமாறப் பாராட்டி உவந்தார். தாமும் பிற புலவர்களும் சேர்ந்து அவரை எதிர்த்து வாதிட்டதெல்லாம் அவர் நினைவில் அலையலையாக எழுந்தன, கவிராயரின் சாபத்தினாலே மண் மாரியுற்று அழிந்த திருமலைராயன் பட்டினத்தையும் நினைத்துக் கொண்டார். தம்முடைய தவறான போக்கே அதற்கெல்லாம் காரணமாயிற்று என நினைத்து வருந்தினார்.
அவர் உள்ளத்தே காளமேகத்தின்பாற் கொண்டிருந்த பகைமையும் மறையலாயிற்று, புதியதொரு அன்பும் மதிப்பும் ஊற்றெடுக்க வாயிற்று. அவரைக் காண விரும்பி அவர் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்தார். ஆனால், அதற்குள் காளமேகம் புறப்பட்டு வேற்றூர் சென்று. விட்டதறித்தார், வருத்தமுடன் திரும்ப வேண்டியதாயிற்று. காலமும் சூழ்நிலையும் மனத்து எழுகின்ற ஆணவ நினைவுகளை எப்படியோ மாற்றிவிடுகின்றன. அந்த அதிசய சக்திகள், அதிமதுரத்தையும் காளமேகத்தைப் பாராட்டும் உயரிய நிலைக்குக்கொண்டு செலுத்தின.
மறைவும் துயரமும் பல
திருவாரூரிலிருந்து புறப்பட்டார் காளமேகம். ஊர்களுக்கும் சென்று வழிபட்டவராகத் திருவாளைக்காவிளை முடிவிற்சென்று சேர்ந்தனர். அங்கே மோகனாங்கியிடம் நடந்ததைக் கூறினார். அவளும் முத்தினை மறந்து அவருடைய செயலைப் போற்றிப் புகழ்ந்தாள். இருவருடைய வாழ்வும் இப்படியே சிலகாலம் இன்பமுடன் நடந்து கொண்டிருந்தது. காளமேசுத்திற்கு வயதுமுதிர்ச்சியின் தளர்வும், சோர்வும் தொத்திக்கொள்ளத் தொடங்கின. சுவிமழை பொழிந்த காளமேகம், கவிச்சுவையால் கல்விவல்வோரையும் தலை வணங்கிப் போற்றச்செய்த புலவர்பெருமான், ‘வசை பாட காளமேகம்’என்ற இசையோடு வாழ்ந்த தமிழ் வீறு உடையார், ஒரு நாள் உடற்கூட்டைவிட்டு நீங்கினர். மோகனாங்கி மட்டும் அன்று கதறிக் கண்ணீர் சொறியவில்லை, அவருடைய மோகனக் கவி இனிமையிலே தினைத்த தமிழகம், தமிழ்ப் புலவர் உலகம். முழுவதுமே சுதறிக் கண்ணீர் பெருக்கியது.
அதிமதுரப் பாடல்
அதிமதுரக் கவியின்காதுகளிலும் இந்தத் துயரச் செய்தி சென்று விழுந்தது. வேதனைக் கடலிலே சிக்கி அவர் மனம் மீளாத்துயருற்றது. அப்போது அவர் பாடிய கவிதை மிகவும் உருக்கமானது.
வாச வயல் நந்தி வரதா திசையனைத்தும்
பூசு கவிகாள மேகமே-பூசுரனே விண்தின்ற
வெவ்வழலில் வேகுதே பாவியேன் மண்தின்ற
பாணமென்ற வாய்.
என்பது அந்தச் செய்யுள். ‘மண் தின்ற பாண மென்ற வாய்’ என்று சொல்லித் துயருற்றுப் புலம்பினார் அவர். இப்படித் தமிழ் நாவலர் சரிதையிலே விளங்குகிறது இந்தத் திருவாரூர் நிகழ்ச்சி. இது இரட்டையர்கட்கும் இவர்க்கும் நடைபெற்றதாகவும் சிலர் கூறுவர்.
நன்றி – புலியூர்க் கேசிகன்