கி.ரா.வின் கதைகளில் திருமணச் சடங்குகள் | முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்

கி.ரா.வின் கதைகளில் திருமணச்சடங்குகள் முனைவர் அ. ஜனார்த்தலி
ஆய்வுச் சுருக்கம்
               
திருமணச் சடங்கு முறைகள் ஒவ்வொரு காலத்திற்கேற்ப மாறுபட்டு வருகின்றன. ஒரு சமூகம் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய வழியில் சடங்கு முறைகளை மேற்கொண்டு திருமணம் செய்வர். சங்க காலத் திருமணம் வேறு தற்காலத் திருமண முறை வேறாகக் காணப்படுகின்றன. கி.ராவின் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணச் சடங்கு முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை
               
நம் முன்னோர்கள் மக்களை ஒரு வழிமுறைப்படுத்தவும், அவர்கள் தவறுகள் செய்தால் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறி மக்களை நல்வழிப்படுத்தவே சடங்கு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் உருவாக்கினா். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் புதுப்புது சடங்குமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்தனர். அந்தச் சடங்கு முறைகளில் ஒன்றுதான் திருமணம். பருவ வயதை அடைந்த ஆணும், பெண்ணும் தங்களது உள்ளக் குறிப்பினை அறிவிப்பதற்கு முன்பாகப் பெரியோர்களால் பெண் பார்க்கும் நிகழ்வு நிகழ்த்தப்பட்டு பத்து வகையான பொருத்தங்களும் சரியான முறையில் பொருந்திய நிலையில் சீர்வரிசை பேசி அதற்கு உடன்பட்ட பின் ஒரு நன்னாளில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு அச்சடங்கு நிகழும். கி.ரா.வின் கதைகளில் திருமணச் சடங்குகள் பற்றிப் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி ஆராய்ந்து அறிவதே இக்கட்டுரையாகும்.

சடங்குகள்
               
மனிதச் சமுதாயத்தில் நிலவி வருகின்ற பலவகை நம்பிக்கைகள் அதனோடு தொடர்புடைய சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ‘சடங்கென்பது நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும். இது மனிதனின் சுயமான ஆக்கமாகவோ பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் இன்றிச் சடங்குகளிலேயே வெவ்வேறு நாகரிகங்களின் நம்பிக்கைகளும் இலட்சியங்களும் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன. நம்பிக்கைகளையும், இலட்சியங்களையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று சடங்குகள் ஆகும்” (முனைவர் அ. ஜனார்த்தலி பேகம், குறுந்தொகையில் தமிழர் வாழ்வியல், ப.288) என்று ஜனார்த்தலி பேகம் குறிப்பிடுகிறார்.
இதனையே,
 ‘ஒருவர் தமக்கு வந்த துன்பத்தை நீக்கிக் கொள்ள மேற்கொண்ட செயலைப் போலவே மற்றவரும் அத்துன்பத்தை நீக்க அதே செயலை மேற்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு செயல்கள் அனைத்தும் நன்மை தருவன என்பது காலப்போக்கில் சமூகக் கோட்பாடானது. எனவே பின்னால் வந்தவர்களும் காரணம் கேட்காமலேயே வழிவழியாக அச்செயல்களைச் செய்யத் தலைப்பட்டனர். அவ்வாறு செய்யப்படும் செயல்களே சடங்குகள் எனப்பட்டன” (அ.இராஜேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், ப.554)  என்ற அ. இராஜேந்திரனின் கூற்றும் மேற்கூறிய கூற்றிற்கு வழு சேர்க்கிறது.

திருமணச் சடங்குகள்
               
திருமணச்சடங்கு குறித்து, “சடங்கு யாவற்றுள்ளும் மனித வாழ்வைப் பெரிதும் பாதிப்பது திருமணச் சடங்கேயாதலால் சடங்கு என்னும் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் திருமணத்தையே குறிக்கும். சடங்கு சுற்றி இருப்பவர்களை இணைக்கும் பந்தம் என்றும் இப்பந்தம் இல்லாவிடின் இணைப்பு அறுந்து போய் விடும் என்றும் சமூகவியல் வல்லுநர் கூறுவர்.” (உ)
                என்று திருமணம் குறித்து கார்த்திகேய சிவத்தம்பி விளக்கமளிக்கிறார். குடும்ப வாழ்வின் அடிப்படை நாதமாகத் திகழ்வது ‘திருமணம்’ ஆகும். இத்தகையைத் திருமணத்தின் போது அதிகமான சடங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
 திருமணச் சடங்குமுறைகளை, “திருமணப் பந்தலில் தீ வேட்பதுண்டு. அந்தணர்கள் திருமணச் சடங்குகளை நடத்தி வைத்தனர். மணமகன் மணமகளின் இடக்கையை பற்றிக் கொண்டு தீயை வலம் வந்து மணை மேல் அமர்வான். மணமக்களுக்குக் காப்புக் கட்டுவதுண்டு. பெண்ணின் பெற்றோர் மணமகனுக்குத் தம் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பர்.            ஓமத்தில் நெய்பொரியிடுதல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல் ஆகிய சடங்குகள் நடைபெறும். மணமகளின் மலரடிகளை மணமகன் பாலால் கழுவ வேண்டும். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கம் முதலாம் இராசராசன் காலத்திற்றான் தோன்றியிருக்க வேண்டும்.” (மோகன் ராஜ், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியம், ப. 183) என்று மதிப்பிடுவார் மோகன்ராஜ்.
               
மக்கள் எல்லோரிடமும் திருமணச் சடங்குமுறைகள் இருக்கின்றன. இம்முறையானது மக்கள் சார்ந்துள்ள சாதியின் அடிப்படையில் வேறுபடுவதாகும். எல்லாச் சமூக மக்களிடமும் திருமணத்தின் போது, பெரும்பாலும் ஒரே விதமான சடங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இச்சடங்குமுறைகள் திருமணத்தில் இணையும் தம்பதியின் ஒற்றுமை மேம்பட உதவுகின்றது. அவர்களுக்கிடையே விட்டுக்கொடுக்கும் பண்பை உருவாக்கின்றது. மனித உறவுகளை இணைக்கும் பாலமாகச் சடங்குமுறைகள் அமைகின்றது.
 திருமணச் சடங்குமுறைகளால் தான் அனைத்துச் சடங்குகளும் தோன்றின. எல்லா உறவுகளும் திருமணம் என்ற ஒன்றினால் உருவாக்கப் பெறுகின்றன. மனித நேயப் பண்பு திருமணத்தினால் மேம்படப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பு நல்ல படியாக அமையும் போது தான் நல்ல சமூகம் உருவாகின்றது. சமூகத்தில் மனிதனைப் பண்புடையவனாக மாற்றுவது திருமணமாகும். பண்பு மேம்பட்ட மனிதனால் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கும் வல்லமை கிடைக்கும். ஆகவே, திருமணச் சடங்குமுறைகளால் மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடிகின்றது. திருமணச் சடங்குமுறைகளாக,

1.பெண் பார்த்தல்

2.பூ வைத்தல்

3.பரிசம் போடுதல்

4.மாப்பிள்ளை விருந்து

5. சாந்தி முகூர்த்தம்

6. ஆடிமாதத்தில் புதுமணத்தம்பதியினரைப் பிரித்து வைத்தல்

7. மாறுபட்ட திருமணச்சடங்கு
               
போன்றவை முக்கியவை ஆகும். இவை யாவும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

பெண் பார்த்தல்
               
மனித வாழ்க்கையில் திருமணம் என்றால் முதலில் மாப்பிள்ளை வீட்டாரே பெண் பார்க்கச் செல்வார்கள். பிறகுதான் பெண் வீட்டார் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தல் நடைபெறும். இரு வீட்டாரும் சந்தித்துப் பேசி கொடுக்கல் வாங்கல் எல்லாம்  சரி என்ற பிறகு தான் திருமணம் நடைபெறும்.
                கரிசல் பூமியில் ஏதேனும் வீட்டில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறதெனில் அது அக்கிராமம் முழுவதும் தெரிந்துவிடும். இதை ‘கொத்தைப் பருத்தி’ என்ற சிறுகதையில்,“சம்பாஷணை தொயரத் தொயர உடனுக்குடன் தகவல் வீட்டுக்குள்ளே போய்க் கொண்டே இருந்தது. அந்த வீட்டின் கதவிடுக்கு, ஜன்னல்கள் முதலியவைகளுக்கெல்லாம் ‘காதுகள்’ உண்டு. நடுத்தெருவில் மணல்மீது ஒரு ஊசி தவறி விழுந்தாலும் அந்த வீட்டின் காதுகளுக்குக் கேட்டிடும் போது, வீட்டின் தலைவாசலில் வைத்துப் பேசும் பேச்சு கேட்காமல் போகுமா?” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.302) என்னும் வரிகள் வழியாக அறிய முடிகின்றது.
               
ஆகவே, கிராமத்தில் ஒரு வீட்டில் நடைபெறும் நிகழ்வானது, அக்கிராம மக்கள் எல்லோரும் அறிந்து இருப்பதை உணர முடிகின்றது. ஒரு வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெறுகின்றது எனில் அக்கிராமத்திற்குத் தெரிந்துவிடும். கரிசல் கிராம மக்கள் அரசு வேலையில் இருப்பவர்களுக்குப் பெண் தர மறுத்துள்ளனர். இக்கூற்றை,
   “நிலம் ஒரு ஏக்கர் கூடக் கிடையாது என்று தெரிந்ததுடன், பையன் கலெக்டராக இருந்தாலென்ன, கவர்னராகத் தான் இருந்தாலென்ன; கிடையாது பொண்ணு என்று கராராகச் சொல்லி விட்டார்கள். ‘என்னய்யா பையன் ஜில்லாக் கலெக்டராகப் போறான்; பொண்ணு கிடையாதுன்னு சொல்றீங்களே’ என்று மலைத்துப் போய்க் கேட்டார் வந்தவர். ‘கலெக்டரா இருந்தால் அது அவன் மட்டுக்கும். நாளைக்குப் பையனுக்கு ஏதாவது ஒண்ணு ஆகிவிட்டால் என் பொண்ணுல்ல தெருவில் நிப்பா. பையனுக்கு நாலேக்கர் நிலமிருந்தா அவள் அதிலே கிண்டிக் கிளறித் தன் பாட்டையாவது கழிச்சிடுவா. ஒண்ணுமில்லாதவனுக்கு உத்தியோகத்தை நம்பி யாரு கொடுப்பா பொண்ணு?’ என்று ஓங்கிக் கேட்டார் கோனாரி.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.304) என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
இதில் கலெக்டர், கவர்னராக இருந்தாலும் பெண் தர மறுத்துள்ளதை அறிய முடிகின்றது. மாப்பிள்ளை நிலம் வைத்திருக்க வேண்டும். அவர், உழுது விவசாயம் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால், நாகரிகம் வளர வளர இத்தகைய நிலை மாறியுள்ளது.

பூ வைத்தல்
               
திருமணச் சடங்கு முறைகளுள் பூ வைத்தல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. திருமணம் என்றால் எல்லா வீடும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வீட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஒவ்வொரு மக்கள், தங்களின் வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். இக்கருத்தினைச் சித்திரிக்கும் வகையில் ‘பூவை’ என்ற சிறுகதையில்.
“கல்யாணம் நடக்கிற வீடு, ஒரு பட்டகசாலையும் ஒரு அரங்கு வீடும் கொண்டது. முன் பக்கம் சமையல்கட்டும் மாட்டுத் தொழுவமும். அரங்கு வீட்டுக்குள்தான் கல்யாணப் பெண் இருந்தாள். சிங்காரித்து முடிந்தது. முகூர்த்த நேரமும் நெருங்கி விட்டது. மணவறையில் வந்து மாப்பிள்ளை உட்கார்ந்து விட்டான்.            பட்டகசாலையில் தான் மணவறை. நாங்கள் பட்டகசாலைக்கும் சமையலறைக்கும் மத்தியிலுள்ள முத்தவெளியில் உட்கார்ந்திருப்போம். நாங்கள் அங்கே ஐமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போடுகிறோம் என்கிற பேரில், வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளியெறிந்தும் வெற்றிலையின் நரம்புகளைக் கிள்ளியெறிந்தும் ஐமுக்காளத்தைக் குப்பையாக்கியும் வெற்றிலைச் சக்கையையும் எச்சிலையும் துப்பித் துப்பித் தரையை அசுத்தப் படுத்திக் கொண்டு வாயையும் கறையாக்கிக் கொண்டும் அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சில் ‘கரீபிஹடாவ்’ பலமாக அடிபட்டது. கல்யாணம் எங்களுக்கு ரெண்டாம் பட்சமாகிவிட்டது. ஒரு வகையில் உண்மையும் அது தான்.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., பக்.227-228) 
என்றும் வரிகள் வழியாக அறியப்பெற முடிகின்றது. கல்யாண வீடானது, எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும். அங்கு மக்கள், தங்கள் தொடர்பான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தான் கல்யாண வீட்டிற்கு வருகின்றனர்.
               
கரிசல் மக்கள், தங்கள் வீடுகளும் பல்வேறு திருமணங்கள் நடத்தப்பட்ட வீடாக இருக்க வேண்டுமென நம்புகின்றனர். அங்கு வாழும் மக்கள் இதனைச் சிறப்பு மிக்கதாகக் கருதுகின்றனர். இதனை, ‘நூறு கல்யாணம் கண்ட வீடு சிறப்பானது’ என்று ஒரு நம்பிக்கை. இதில் பூ வைக்கும் சடங்கு முறை அடங்கும். மணப் பெண்ணுக்குத் திருமணத்தின் போது பூ வைத்து அலங்கரிக்கின்றனர். இதனால், பெண்கள் தலையில் பூ வைத்து ஒப்பனை செய்து கொள்கின்றனர். பெண் தன் வாழ்வில் பூவைத் தலையில் வைக்காத நிலை இருக்கின்றது. இக்கருத்தை,
 “என்னவென்று விசாரித்து அறிய நான் எழுந்தேன். அதற்குள் பாட்டியே வெளியே வந்து எல்லோரிடமும் சொன்னாள். ‘கழுதை! ஒரு நாளாவது தலையில் பூ வைத்திருந்தாளல்லவோ; இண்ணைக்குச் சிங்காரிக்கும் போது பூ வாசம் தாங்காமல் மயக்கம் போட்டுட்டது!’ பாட்டி சொன்னதைக் கேட்ட எல்லோருடைய முகங்களிலும் ஆச்சரியம் விரிந்து, பிறகு அது சிரிப்பாக வழிந்தது.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.230)
                என்று பதிவிடுவதல் மூலம் பெண்கள் எல்லா விதமான ஒப்பனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். திருமணத்தில் பூ வைக்கும் சடங்குமுறைகள் இருக்கின்றன. பெண்கள் குழந்தைப் பருவத்திலிருந்து பூ வைக்கப் பழக்கி தனது உடலைப் பக்குவப்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும்.

பரிசம் போடுதல்
               
கரிசல் மக்களிடம் திருமணத்திற்கு முன்னர் பரிசம் போடுதல் என்ற திருமண ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தம்பதியினர் இரு குடும்பமும் திருமணத்தை உறுதி செய்து கொள்ள பரிசம் போடுதல் நடைபெறுகின்றது. இச்சிந்தனை அடியொற்றி ‘மகாலட்சுமி’ என்ற சிறுகதையைப் படைக்கப் பட்டுள்ளது. இதில் பரிசம் போடும் நிகழ்வு நடைபெறுகின்றது. இதனை,
 “அவர்களில் பெண்ணுக்குப் பரிசம் போடுகிற வழக்கம்; நிச்சய தாம்பூலத்து அன்று பெண்ணை மாப்பிள்ளைக்குப் பேசி முடிவு செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்வார்கள். பின்னொரு நல்ல நாளில் இரவு நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் சுற்றத்தாரும் பெண்ணின் வீட்டுக்குப் போய் முடிப்புடன் வாசலில் வந்து நிற்பார்கள். பெண் வீட்டார் அவர்களை ஆரத்தி எடுத்து அவர்களுக்கு இருபுறமும் தரையில் சென்னீர் கொட்டி இந்தச் சென்னீர் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தது; அதில் பருத்திக் கொட்டையும் கிள்ளிப் போட்ட வெற்றிலைத் துணுக்குகளும் மிதக்கும். பின்பு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டு செல்வார்கள். பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வருகிற பரிச முடிப்பில் அவர்களவர்கள் சக்திக்கு ஏற்ப பொருட்கள் இருக்கும். மோகிக்கு மாப்பிள்ளை வீட்டார் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பத்துப்பவுனில் நகையும் வெற்றிலை, தேங்காய், பூ, பழம், சந்தனம் முதலிய மங்கல வஸ்துக்களோடு பெண்ணுக்கு அவர்கள் தரும் பட்டாடைகளும் அடங்கிய முடிப்பைக் கொடுத்தார்கள். முடிப்பை ஏற்றுக் கொண்ட மோகியின் பெற்றோர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குப் பருப்புச்சோற்று விருந்து அளித்தார்கள்.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.222-223) என்னும் வரிகள் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் பருப்புச் சோற்று விருந்து என்பது சாதத்தில் பருப்பும் நெய்யும் விட்டுப் பரிமாறப்பட வேண்டும். காரம், புளிப்பு இட்ட எந்த உணவும் இடம் பெறக் கூடாது. இவ்வாறு மோகியின் திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை விருந்து
               
கரிசல் மக்களிடம் மாப்பிள்ளை விருந்து என்ற ஒன்று காணப்படுகின்றது. மாப்பிள்ளை விருந்து என்பது மாப்பிள்ளைக்கு மூன்று மாதம் மாமனார் வீட்டில் விருந்து அளிக்கப் பெறும். இவையெல்லாம் மாப்பிள்ளை, தன் மனைவி மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறுகின்றன. பெண்ணின் கர்ப்பக்காலங்களில் கணவன் செலுத்துகின்ற அன்பை அளவிட முடியாது. மோகியின் கணவன் அன்பு செலுத்தினான். மேலும், அவள் குடும்பத்திலுள்ள அனைவரின் இரக்கத்தைப் பெற்றதை, “மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் மூணுமாச விருந்தும் தலை தீபாவளியும் முடிந்தது.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.223) என்னும் வரிகள் உணர்த்துகின்றன.

சாந்தி முகூர்த்தம்
               
கிராமங்கள் திருமணத்தில் இணையும் தம்பதிகளுக்குப் பெரியோர்கள், சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதில்லை. அவர்கள், தாங்களாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இது கணவன், மனைவி உறவுநிலைக்குள் போராட்டத்தை ஏற்படுத்தும் என்பதை,
 “ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்கள் நிலவி வருகிறது. இவர்களுடைய சமூக முறைப்படி கல்யாணம் முடிந்தவுடன் ஒரு நாள் பார்த்து முதல் இரவு என்ற ஏற்பாட்டைப் பெரியவர்கள் செய்விப்பது இல்லை. இங்குள்ள பெரியவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டால், ‘சை! அது என்னங்ஙெ அசிங்கம்; பசு மாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி காளையை அவுத்துவிடுகிற மாதரி நாம்பள்ளாம் மனுசனில்லையா’ என்று கேட்பார்கள்! கனிந்தவுடன் மணமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது தான்!            ஆனால் இப்படி உண்டாக அவர்களவர்கள் மனப்பக்குவத்தின் படி வாரக்கணக்கு மாசக்கணக்கு என்று நாட்களாகி விடும். அதோடு, சீக்கிரம் இணங்கிவிடுகிற பெண்ணுக்கு சமூகத்தில் மதிப்பில்லை. பெண்ணுக்கு ஆணும் இளைத்தவளில்லை தானே? இந்த விளையாட்டைக் குடும்பத்தின் ‘நடுவர்கள்’ பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை இவர்கள் அறிவார்கள்.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.210) என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
               
இதனால், கரிசல் சமூக மக்கள் ஆணாதிக்கத்தின் காரணமாக ஆண், பெண் இணையும் முதல் இரவு கூட பாதிக்கப்படுகின்றது. இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒருவர், மற்றொருவரை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே இன்பம் நிலைக்கும்.

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல்
               
சமூகம் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்க எண்ணிக் கொண்டிருக்கும். அதற்கான காரணங்களும் அதிகமாக உள்ளன. கரிசல் நில மக்கள் ஆடி மாதத்தில் மாப்பிள்ளை, பெண்ணைப் பிரித்து வைக்கின்றனர். இதனை,
 “ஆனாலும் மல்லம்மாவையும் கொண்டையாவையும் பிரித்து வைப்பதற்குக் காரணங்களா கிடைக்காது இந்த உலகத்துக்கு, சில்லுண்டிக் காரணங்கள் போக, ஆடிமாசம் குறுக்கிட்டது. மலை போல் இளம் தம்பதிகளுக்கு இது ஒரு கொடுமையான மாசம். என்ன காரணத்துக்காக ஆணும் பெண்ணும் இந்த மாசத்தில் மட்டும் பிரிந்திருக்க வேணும் என்று அவளுக்குத் தெரியவில்லை. பாவம், அவர்கள் இதைக் கேட்டதும் ரொம்பவும் சோர்ந்து போனார்கள். ஆடிமாதம் தனது இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கு ஊடே புகுத்தி அகலப்படுத்தி அவளை அந்தப் பக்கமும் அவனை இந்தப் பக்கமும் தள்ளிவிட்டது. அந்தச் சிறிசுகள் திரும்பவும் நாட்களை எண்ண ஆரம்பித்தார்கள். ஆண்டு பாதி ஆடி பாதியாகத் தெரிந்தது அவர்களுக்கு.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.214) என்னும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

                திருமணம் முடிந்த பின் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பிரிவுகள் அதிகரிக்கக் கூடாது. ஆனால், சமூகத்தில் கணவன், மனைவி இருவருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அதிகமாக உள்ளன. அதனையறிந்து கணவன், மனைவி விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும். இது கணவன், மனைவி இருவரின் மகிழ்வை அதிகரிக்கும்.

மாறுபட்ட திருமணச்சடங்கு
               
கரிசல் மக்களிடம் திருமணத்தின் போது நடக்கும் சில மாற்றங்களையும் கி.ரா., பதிவு செய்துள்ளார். பொதுவாகப் பெண்கள் திருமணத்தின் போது மிகவும் பொலிவுடன் திகழ்வார்கள். ஆனால் கரிசல் நில மக்களிடம் இது மாறாக உள்ளது. அப்பெண் பிறந்த வீட்டில் மூன்று தினம் அழுகின்ற சூழ்நிலை உள்ளது. இது ஒரு சடங்குமுறையாகக் கருதப்படுகின்றது. இதனை, “எல்லாப் பெண்களையும் போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒரு நாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக் காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்று வரைக்கும் நான் யாரிடமும் காரணம் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.
 ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணு நாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள். வழக்கம் போல் மூன்று நாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் பொண்ணுக்கு இருந்த அழகைச் சொல்லி முடியாது. கல்யாணம் முடிந்த நாலாம் நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக் கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின் ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்.
               
‘மாயம்ம லஷ்மி போயிராவே            (எங்கள் தாயே லகூஷ்மி தேவியே போய் வருவாய்)
அந்தக்காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது.”
(கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.105)
என்னும் வரிகளில் கி.ரா., உணர்த்துகிறார்.
 கரிசல் மக்கள் வாழ்வில் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. பிறந்த வீட்டில் செய்யும் சடங்குமுறைகள் பெண்ணின் புகழைச் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
                இவ்வாறு கரிசல் நில மக்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் திருமண நிகழ்வில் பல்வேறு சடங்கு முறைகளைப் பின்பற்றுவதை கி.ரா. அவர்கள் தங்களது படைப்புகளில் விளக்கமாகப் பதிவு செய்துள்ளமையைக் காண முடிகிறது.

முடிவுரை
               
கரிசல் நில மக்கள் திருமணத்திற்கு அதிகமான சடங்குமுறைகளைப் பின்பற்றுகின்றனர். மனிதனுக்கு உறவுமுறைகளை ஏற்படுத்தி, குடும்ப அமைப்பிற்குக் கொண்டு செல்லக் கூடியதாகத் திருமணம் அமைகின்றது. இதனால் தான் எல்லாச் சமூக மக்களும் தங்களது வாழ்வில் திருமணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஏனெனில் உலகில் வாழுகின்ற நாட்கள் முழுவதும் கணவன், மனைவி உறவுடன் மனிதன் வாழ்கின்றான். மனித வாழ்வு திருமணத்தினால் தான் முழுமை அடைகின்றது. ஆகவே திருமணம் தொடர்பான சடங்குகள் மக்களால் ஆராயந்து பின்பற்றப்படுகின்றன.

சான்றெண் விளக்கம்
1. அ.இராஜேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், ப.554

2. மோகன் ராஜ், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியம், ப. 183

3. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.302

4. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.304

5. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., பக்.227-228

6. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.230

7. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.222-223

8. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.223

9. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.210

10.கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.214

11. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.105

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ. ஜனார்த்தலி பேகம் 
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620020.

 

Leave a Reply