Abstract
It is no exaggeration to say that literature serves as a guiding light for one’s life. The ideas of literature are indelibly imprinted in the minds of future creators and are the reason for creating new works. In that regard, Vairamuthu and Ponmani Vairamuthu have followed many literary elements in their works, from Tolkappiyam to the poems of Bharathiyar and Bharathidasan. Through this, this study aims to highlight the literary personality and creative ability of Vairamuthu and Ponmani Vairamuthu.
வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் இலக்கியக் கூறுகள்
ஆய்வுச் சுருக்கம்
ஒருவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இலக்கியங்கள் திகழ்கின்றன என்றால் மிகையாகாது. இலக்கியங்களின் கருத்துகள் எதிர்கால படைப்பாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவதோடு புதிய புதிய படைப்புகளை உருவாக்குவதற்கும் காரணமாய்த் திகழ்கின்றன. அந்த வகையில் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து அவர்களின் கவிதைகளில் தொல்காப்பியம் முதல் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் வரை தன்னுடைய படைப்புகளில் பல இலக்கியங்களின் கூறுகளைப் பின்பற்றியுள்ளனர். இதன்வழி வைரமுத்து, பொன்மணி வைரமுத்து அவர்களின் இலக்கிய ஆளுமையையும் படைப்பாக்கத் திறனையும் எடுத்துரைப்பதாக இந்த ஆய்வு அமைகின்றது.
குறிச்சொற்கள்
வெண்முத்தம், களிப்பு,இடுக்கண், நகுக, கேளிர், அன்புச்சுரபி, ஊன்
முன்னுரை
இலக்கியத்திற்கு அழகு ஊட்டுவன அணிகள் மட்டுமல்ல. இலக்கியக்கூறுகளும் படைப்பாளிகள் படைக்கும் படைப்புகளுக்கு மேலும் அழகு ஊட்டுவனாக உள்ளன. அந்த வகையில் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை உள்ள கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள். கவிஞர்கள் இருவரும் இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் உத்தியைக் கையாண்டுள்ளனர். இவர்களுடைய பார்வையில் இலக்கியக் கூறுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
தொல்காப்பியம்
தமிழில் இன்று கிடைக்கும் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல் மட்டுமின்றி பொருள் இலக்கணமும் கூறும் முதல் நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. அச்சகம் வைத்துள்ளவர்களெல்லாம் கவிதை எழுதி வெளியிடுகின்றனர். அல்லது கவிதை எழுதுவோரெல்லாம் சொந்தமாக ஒரு அச்சகத்தைத் தொடங்கிவிடுகின்றனர். இந்நிலை நீடிப்பதால் ஏராளமான நூல்கள் வளர்ந்து அவற்றை வாசிக்கத்தான் ஆட்கள் இல்லை என்பதை,
“வடவேங்கடம் தென்குமரி /ஆயிடைத் / தமிழ்க்கூறு
நல்லுலகத்துள் / பழைய புத்தக / வியாபாரிகளே
இன்று / விமர்சகர்கள்”1
என்னும் அடிகள் வாயிலாக தமிழகம் முழுவதும் இந்நிலை காணப்படுகிறது என்பதைக் குறிக்க தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிர வரிகளை வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியுள்ளார்.
பரிபாடல்
மதுரை நகரைப் பற்றி சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டிலும், மதுரைக்காஞ்சியிலும் விரிவான குறிப்புகள் உள்ளன. துரைக்காஞ்சி மதுரை நகரின் சிறப்புகளையும், தெருக்களையும் அடுக்கிக் கொண்டே போகிறது. மதுரையின் பெருமையை,
“மதுரை தாமரைப் பூவென்றும்-அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை
எம்குடி மக்கள் திரளென்றும் – பரி
பாடல் பாடிய பால்மதுரை
வட மதுராபுரியினும் மேல்மதுரை”2
என்னும் வரிகளில் பரிபாடல் கருத்தை வைரமுத்து பதிவு செய்கிறார்.
கலித்தொகை
பொன்மணி வைரமுத்துவின் மாணவி ஒருத்தி திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு தன் வெளிநாட்டு வாழ்க்கையை நினைத்து வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கு கலித்தொகை இலக்கியத்திலிருந்து வரிகளைத் தேர்ந்தெடுக்கிறார். உடன் போக்கிற்குச் சென்ற தலைவன் தலைவியரைத் தேடிச் செல்லும் செவிலிக்குக் கண்டோர் கூறுவதாகப் பின்வருமாறு பாடல் அமைகின்றது.
“சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லவை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தான் என் செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே”3
என்று அமையும் பாடல் கருத்தை ஒட்டி,
“நீரிலே பிறந்த முத்துக்களை இங்கு / நீரா அணியும்
வேறொருவன் தான் என்ற கலித்தொகைப் பாட்டு
களிப்பாய்க் கேட்ட கிளிப்பிள்ளை நீ / காலமெல்லாமா
கல்லூரி வானில் / பறக்க முடியும்”4
என்று அறிவுறுத்தி, இல்வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்க அறிவுறுத்துகிறார்.
புறநானூறு
பழந்தமிழரின் வீரத்தையும் பண்பாட்டையும் பேசுவது புறநானூறு. மனிதன் வாழ்வதற்கான நன்னெறிகளையும் வகுத்துச் சொல்கிறது இந்நூல்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”5
என்னும் அடிகளில் நமக்கு வரும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நாம் செய்யும் செயல்களே காரணமே ஒழியப் பிறரைக் காரணமாக்குவது சரியல்ல என்பதை கவிஞர் வைரமுத்துவும் இக்கருத்தை உணர்த்த வந்த போது,
“காலமே / என்னைக் / காப்பாற்று / தீதும் நன்றும்
பிறர்தர வாரா / என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்”6
என்ற பாடலில் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்தியுள்ளார். புறநானூற்றில் வள்ளல் பலரைக் காண்கிறோம். அவர்களுள் தமிழுக்காகத் தன் தலையையும் கொடுக்க முன்வந்தவர் குமணன். வாழையின் கொடையைக் குறிப்பிட வந்த பொன்மணி வைரமுத்து குமணின் கொடையோடு ஒப்பிடுகிறார். இதனை,
“வள்ளல்களை விஞ்சுகின்ற / வாழை இந்த வாழை
குமணன் தன் தலையைக் / கொடுப்பதாய்த் தான் சொன்னான்
இதுவோ / குலையென்னும் தலையைக் / கொடுத்தே விடுகிறது”7
என்னுமிடத்தில் புறநானூற்றுச் செய்தியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
திருக்குறள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். இது நீதி நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. சிரிப்பு என்பது நோய் தீர்க்கும் மருந்து. பிறரைப் புண்படுத்தாத சிரிப்பே விரும்பப்படுவது. தன்னுடைய மனமகிழ்ச்சியைக் சிரிப்பாக வெளிப்படுத்தவேண்டுமே ஒழிய, பிறருடைய துன்பம் கண்டு மகிழ்வதோ பிறரை ஏளனமாகக் கருதி சிரிப்பதோ கூடாது. தன்னுடைய துன்பம் கண்டு தானே சிரிக்கும் மனோபாவம் வாய்க்கும் போதுதான் நம்மால் வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொண்டு வாழமுடியும். இதனை,
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ த/தொப்ப தில்”8
என்கிறார் வள்ளுவர். இக்குறளைத் தழுவி,
“இடுக்கண் வருங்கால் / நகுக என்றான் வள்ளுவன்
சிலர் நகைத்தால்தான் / இடுக்கண்ணே வருகிறது”9
என்னும் கவிதையில் குறள் கருத்தைக் கொண்டு விளக்குகிறார். பொய் சொல்லக் கூடாது என்றுதான் எல்லா அறநூல்களும் அறிவுறுத்துகின்றன. ஆனால் நடைமுறையில் ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று உள்ளது. வள்ளுவப் பெருந்தகையோ நாம் சொல்லும் ஒரு பொய்யால் நன்மை விளையுமானால் பொய் சொல்லலாம் என்கிறார். இதனை,
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்”10
என்ற குறளின் கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மக்கள் ஏராளமான பொய்களைக் கூற தயங்குவதில்லை என்கிறார். பொன்மணி வைரமுத்து சத்தியத்திடம் உரையாடுவதாக அமைந்த கவிதையில் சத்தியமாகிய உன்னைப் பற்றி வள்ளுவர் நிறையப் பாடியிருக்கிறாரே என்கிறார். அதற்கு சத்;தியம்,
“குற்றம் இல்லாத நன்மை தருமென்றால்
பொய்யும்கூட / மெய்போலத்தான் என்று பாடியிருக்கிறார்
அவசியம் கருதி அவர் பாடியதை
வசதியாக்கிக் கொண்டார்களே”11
என்று வருத்தப்பட்டது. பொதுவாகவே நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டாலும், அச்சட்டத்தில் சிறு விதிவிலக்கு இருந்தாலும், அதைக் காட்டித் தப்பிப்பது போல வள்ளுவரின் இக்குறளைப் பயன்படுத்தித் தம் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
சிலப்பதிகாரம்
இரட்டைக்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரால் புகழப்பட்ட சிறப்புடையது சிலம்பு. தன்னுணர்ச்சிப் பாடல்களாக இருந்து வந்த தமிழ்க் கவிதை மரபில் முதன்முதலில் காப்பியத்தை இயற்றிப் புரட்சி செய்தவர் இளங்கோவடிகள். மதுரை நகரம் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பண்டைய வரலாற்றோடு தொடர்புடையது. கடைச்சங்கம் தமிழை வளர்த்தப் பெருமைக்குரியது. பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது. இந்நகரத்தின் பெருமைகளைப் பட்டியலிட்டு வரும் கவிஞர், இந்நகரம் இன்று சாதியத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பல்வேறு சிறப்புக்களுக்குப் பெயர் பெற்ற நகரம் இன்று சாதிக் கலவரங்களுக்கும் தீண்டாமைக்கும் பெயர் பெற்றிருக்கிறது என்று வருந்துகிறார். ஒரு காலத்தில் நீதிக்குப்; பெயர் பெற்ற இந்நகரத்தில் இன்று சாதியால் தாழ்ந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறார். இதனை,
“தென்னன் நீதி பிழைத்ததனால் – அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை”12
என்ற அடிகளில் நீதி நிலைநாட்டப்பட்டதை உணர்த்துகிறார்.
மணிமேகலை
‘மணிமேகலைத் துறவு’ என்று அழைக்கப்படுகின்ற ‘மணிமேகலை’ சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. பெற்றோர்கள் பலர் பெண்ணின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது. முதல் தேதியானால் கிடைக்கும் அவளது வருமானம் போய்விடக்கூடாதே என்பதற்காகவே பல பெற்றோர்கள் பெண்ணின் திருமணத்தைத் தள்ளிப் போடக் கூடிய அவலமும் நடக்கிறது என்பதை கவிஞர் வைரமுத்து பின்வரும் கவிதைவரிகளில்,
“ஒண்ணாந்தேதி அமுதசுரபிகள்
வைத்ததிருப்பதால் / சில பெற்றோர்கள் அவர்களை
மணிமேகலைகளாய் / மாற்றிவிட்டனர்”13
என்கிறார். மேலும் கவிஞர் பொன்மணி வைரமுத்து அன்னை தெரசா குறித்து எழுதிய கவிதையொன்றில் அவருடைய வற்றாத அன்பையும் குறையாத இரக்கத்தையும் அமுதசுரபிக்கு இணையாக்குகிறார். இதனை,
“அன்புச் சுரபியேந்திய / இன்னொரு மணிமேகலை” 14
என்ற வரிகளில் அன்னை தெரசாவின் கருணையைப் பாராட்டுகின்றார்.
திருமந்திரம்
திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக அமைந்து பக்தி கருத்துக்களைக் கொண்டதாக இருந்தாலும், இறையைப் பற்றிப் பிற இலக்கியங்கள் கூறுவதிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. இதன் ஆசிரியரான திருமூலர் இறை என்பது நமக்குள்ளேதான் இருக்கிறது என்றும் வேறு இடங்களில் அதனைத் தேட வேண்டியதில்லை என்று உணர்த்தியவர். திருமூலர் நமக்குள்ளேயே இறைவன் உள்ளான் என்று பாடியவர். அவருடைய கருத்தை அவ்வாறே கூறிய கவிஞர் பொன்மணி, பெண்ணையும் இறைக்கு நிகராகக் காண்கிறார் என்பதனை,
“ஊனுக்குள் ஈசன் / கோயில் கொண்டிருப்பதால்
உடம்பைக் காக்கின்றேன் என்றார் திருமூலர்
பெண்ணும் அப்படியே / அவள்
தனக்குச் செய்துகொள்ளும்
அலங்கார மெல்லாம் / தனக்குள்ளிருக்கும்
அம்பிகைக்குச் செய்யும் அலங்காரமே”15
என்னும் கவிதை வரிகள் அவருடைய பெண்மை மீதான மதிப்பீட்டைக் காட்டுகின்றன.
ஆண்டாள்
பக்தி இலக்கியங்கள் நாராயணன்மேல் காதல் கொண்டு அவனையே மணாளனாக அடைந்த பெருமைக்குரியவளாகப் படைத்துக் காட்டுக்கின்றன. ஆனால் இன்று வரதட்சணை வாங்காமல் எந்த ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதில்லை. அதனால் நல்ல கணவன் வாய்ப்பதற்கு விடியற்காலையிலே நீராடி நோன்பிருந்தால் மட்டும் போதாது நிறைய நகைகளும் பணமும் இருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்பதை,
“பாரடி…/ வெளிச்சம் உதிராத கருப்பு விடியலில்
அவரவர் கண்களிலேயே / நீராடிக் கொண்டு…
ஆயிரம் உணர்வுகளோடு / போராடிக் கொண்டு…
உன் / வில்லிபுத்தூர்த் தோழிகள் இன்னும்
வீட்டிலேயே இருக்கிறார்கள் / வெவ்வேறு வீடுகளில்
வெவ்வேறு ஊர்களில்… / வெவ்வேறு பெயர்களில்;…”16
என்று பெண்களின் நிலையைப் பாடியதோடு நில்லாமல் வருங்காலத்தில் வரன் வேண்டுமென்றால் வரதட்சணை இன்றி முடியாது. எனவே வரதட்சணைக் கேட்காத மாப்பிள்ளைகள் வரும் வரை இந்தப் பெண்களுக்கு வயது கூடாமல் மார்க்கண்டேயனிகளாய் இருக்கும்படி உன் மாதவனிடம் வரம் வாங்கித்தா என்று ஆண்டாளிடம் கோரிக்கை ஒன்றையும் வைக்கிறார் பொன்மணி வைரமுத்து.
இராமாயணம்
நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கத்தையே மனிதன் சிதைத்தான். நெருப்பைக் கடவுளாக வழிபட்டனர். நெருப்பை தீபங்களில் ஏற்றி வழிபட்டனர். குளிர் காய்வதற்காகவும், விலங்குகளை விரட்டவும், சமைக்கவும், சைகை புரியவும், கருவிகள் செய்யவும், களிமண்ணைச் சுட்டப் பாத்திரங்களாக்கவும் பயன்பட்ட நெருப்பை பெண்ணின் கற்பைச் சோதித்தறியும் கருவியாக மாற்றினான் மனிதன். முதன் முதலில் இராமாயணத்தில்தான் பெண் தன் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஏகபத்தினி விரதன் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளன் என்றும், புகழப்பட்ட இராமன் இச்செயலால் பலரது விமர்சனத்துக்கும் ஆளாகிறான் என்பதை,
“கருவி செய்ய – களிமண் சுடப் / பயன்பட்ட நெருப்பை
கற்பைக் கண்டறியும் தர்மா மீட்டராய்
அழுக்குச் செய்தான் அயோத்தி மன்னன்”17
என்னும் அடிகளில் நெருப்பு அழுக்கை நீக்கிப் புனிதப்படுத்தியது போய் தன்னுடைய செயலால் நெருப்பையே அழுக்குச் செய்துவிட்டான் இராமன் என்று ஆதங்கப்படுகிறார் வைரமுத்து. பொன்மணி வைரமுத்து தன் எழுதுமேசை பற்றிய கவிதையில் நீண்ட நாட்களாக அது பயன்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்த்து, அதன் பயன்பாடுகளைப் பட்டியலிடுகிறார். அதை அழகுபடுத்தலாமா என்று யோசித்த அவர் அதன் பழந்தன்மையே தனக்கு மிகவும் பிடித்திருப்பதாய்க் கூறுகிறார். இதனை,
“அலங்காரஞ் செய்யாது / அசோகவனத்திலிருந்தபடியே
ராமனைப் பார்க்க வந்த சீதையைப்போல /
அதன் பழஞ்சுவடுகளோடு அது இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது”18
என்ற கவிதை வரிகளின் மூலம் கவிஞர் பழைய மேசைக்குச் சீதையை ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
ஒளவையார்
சங்ககாலம் முதற்கொண்டு ஒளவை என்னும் பெயரில் பல்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். குமரகுருபரர் காலத்தில் வாழ்ந்த ஒளவை கல்வியைக் குறித்து கூறும்போது ‘யாரும் முழுவதும் கற்றவரில்லை. ஒன்றும் அறியாதவரும் இல்லை. அதனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்புக் கொள்ளக்கூடாது’ என்கிறார். ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்னும் நீதிநூல் பாடலில் எறும்பும் தன்கையால் எண்சாண் என்றார். இதே கருத்தினை,
“கற்றது கைம்மண்ணளவு என்று / கலைமகள் ஓதியது
குமரகுருபரர் காலத்தில் / இன்றைய கலைமகள்கள்
கற்றிருப்பது உலகளவு / சுற்றுவது வானளவு”19
எனும் வரிகள் மூலம் பொன்மணி வைரமுத்து பெண்கள் கற்றிருப்பது கைம்மண்ணளவு அல்ல. உலகளவு, வானளவு என்று கூறி மகிழ்கிறார்.
உமர்கய்யாம்
உமர்கய்யாம் பாரசீகக் கவிஞர். இவரது கவிதைகள் ‘ருபாயத்’ என்னும் தொகுப்பாக வெளிவந்தவை. கவிமணி அவர்கள் அக்கவிதைகளைத் தமிழில் ‘உமர்கய்யாம் கவிதைகள்’ என்னும் பெயரிலேயே மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் சிறந்த கவிதையாகப் பெரும்பான்மையான இலக்கிய வரலாற்றாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்படுவது பின்வரும் கவிதையாகும்.
“வெய்யிற் கேற்ற நிழலுண்டு / வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு / கலசம் நிறைய மதுவுண்டு”20
பொன்மணி வைரமுத்து உமர்கய்யாமின் கவிதையை இவரது வார்த்தைகளாக்குகிறார். இதனை,
“வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்
என் / விருப்பத்திற்குரிய வேப்பமரம்
ஒருகையில் தேநீர் / இன்னொரு கையில் புத்தகம்
இதைவிடவா ஒரு வாழ்க்கை”21
என்னும் கவிதை வரிகளின் மூலம் அறியமுடிகிறது.
பாரதி
பாரதியின் கவிதையையொற்றி பொன்மணி வைரமுத்து ‘புரட்சிப்பெண்கள்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் புதுமைப்பெண்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் என்பதை,
“இந்நூற்றாண்டுப் பூவையர் / நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையுமாய் / புகுந்த வீட்டிற்குப்
புறப்பட்டுப் போய் / ‘காஸ் ஸ்டவ்’ ஏற்றினர்”22
என்னும் வரிகளில் புதுமைப்பெண்களை எள்ளல் செய்யும் தொனியில் கூறியுள்ளார். முற்காலத்தில் உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்கள் இன்று நவீனமாய் காஸ் ஸ்டவ்களால் கொளுத்தப்படுகிறார்கள். தண்டனை வடிவம்தான் மாறியுள்ளதே தவிர தண்டனை மாறவில்லை என்ற அவலத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். இருபதாம் நூற்றாண்டில் பெண் கல்வி வலியுறுத்தியவர்களுள் பாரதி முன்னோடி. அவருக்குப்பின் பாரதிதாசன் முதலானோர் தொடர்ந்து பெண்கல்வியை வலியுறுத்தினர். இன்று கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இதைப் பொன்மணி வைரமுத்து,
“அப்பா பாரதி / நீ பாடியது சரிதான் / அதிகரிக்கிறது
பெண்கல்வி / ஆணுக்குப்பெண் இளைப்பில்லைதான்”23
என்ற வரிகளில் தன் மகிழ்வைத் தெரிவிக்கிறார்.
பாரதிதாசன்
பாரதி பாதையில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன். அதனால்தான் புரட்சிக்கவிஞர் எனப்பட்டார். குறிப்பாகப் பெண் சார்ந்தத சிக்கல்களுகு;கும் விழிப்புணர்வுக்கும் பாரதிதாசன் பாடுபட்டார். பெண் கல்வியை வற்புறுத்தினார். பெண்களுக்குக் கல்வி வேண்டும். குடித்தனம் பேணுதற்கே என்றார். அதையே பொன்மணி வைரமுத்து,
“ஐயா! கனகசுப்புரத்தினம் இனி / ஆண்களுக்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே என்று / பாட்டை மாற்றிப்
பாடவேண்டும்”24
என்று கூறியிருப்பதில் பெண் கல்வியில் சமூகம் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துகிறார். மேலும் ஆண்கள் குடித்தனம் பேணுவதற்கு கல்வி வேண்டும் என்கிறார்.
முடிவுரை
வைரமுத்து, பொன்மணி வைரமுத்து ஆகிய இருவரும் பழைய இலக்கியங்களில் இருந்து ஓரிரு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளனர். சில கவிதைகளில் இலக்கியங்களின் கருத்துக்களும் இலக்கியச் செய்திகளும் புதுக்கவிதை நடையில் விரித்து கூறப்பட்டுள்ளன. காப்பியப் பாத்திரங்களை இன்றைய நடைமுறைச் சிக்கல்களுக்குப் பொருத்திக் காட்டப்பட்டுள்ளது. இலக்கியக் கருத்துக்கள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய நிலையிலிருந்து அவற்றை விமர்சிக்கும் வகையிலான கவிதைகளும் அமைந்துள்ளன. திருக்குறள், இராமாயணம் ஆகிய நூல்களில் இருந்து மிகுதியான கருத்துகள் கவிஞர்களால் கையாளப்பட்டுள்ளன. ஒளவையார், உமர்கய்யாம், பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் கவிதைவரிகளும் கருத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1.வைரமுத்து ,திருத்தி எழுதிய தீர்ப்புகள்,ப.31
2.வைரமுத்து,பெய்யெனப் பெய்யும் மழை,ப.157
3.விசுவநாதன்,அ.,( உ.ஆ) கலித்தொகை,பா .எண்.34
4.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,பக்.89- 90
5.பாலசுப்பிரமணியன்,கு.வெ.விசுவநாதன். அ. (உ.ஆ) முதலியோர், புறம்.பா.எண் .192,வ.2
6.வைரமுத்து,பெய்யெனப் பெய்யும் மழை,ப.73
7.பொன்மணி வைரமுத்து, பொன்மணி கவிதைகள்,ப.61
8.கல்யாணசுந்தரம். திரு.வி.,(வி.உ), குறள் எண்.621
9.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.129
10.கல்யாணசுந்தரம்.திரு.வி.,(வி.உ), குறள் எண் .292
11.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.206
12.வைரமுத்து,பெய்யென பெய்யும் மழை, ப.157
13.வைரமுத்து, இன்னொரு தேசிய கீதம்,ப.48
14.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.250
15.மேலது,ப.245
16.பொன்மணி வைரமுத்து ,பொன்மணி கவிதைகள்,ப.3
17.வைரமுத்து,தமிழுக்கு நிறம் உண்டு,ப.31
18.பொன்மணி வைரமுத்து,மீண்டும் சரஸ்வதி,ப.25
19.பொன்மணி வைரமுத்து ,பொன்மணி கவிதைகள்,ப.146
20.தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி சி.,உமர்கய்யாம் ,பா.எண் .106
21.பொன்மணி வைரமுத்து ,மீண்டும் சரஸ்வதி,ப.124
22.பொன்மணி வைரமுத்து,பொன்மணி கவிதைகள்,ப.28 23.மேலது,ப.28
24.மேலது,ப.146
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மோ.ஜ.மகேஸ்வரி,
இணைப்பேராசிரியர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சேலம் 16.