Sanga Ilakkiyam Thotte Thangam| Mrs.Guna.Priyanka

சங்க இலக்கியம் தொட்டே தங்கம்_குணா.பிரியங்கா

“ சங்க இலக்கியம் தொட்டே தங்கம்”

Abstract
 

         In the Culture of Tamil sangam age literally known as golden Age. In Tamil literature marriage earrings ceremony function for girls like religious and rational belief gold to come prominent place in life of Tamil which we couldn’t  separated people with gold.Gold (phoon) remarkable item of Tamil life which was male, female used to wear where are ornament. They used gold as a utensils and they gifted gold as a precious gift. Because it was considered as valuable metal of all. Still now middle class family allocates one part of savings in gold. Once in society of women those who  were the lot of ornaments considered as a high class people. But the  gold we used buy forprestigious purpose and saving purpose. Gold which was entering in life of human as valuable things now day asking your life of human which it was unvaluable. Thus it’s a fact of life.

ஆய்வுச்சுருக்கம்
         

     தமிழர்களின் சங்க காலத்தை “தங்க காலம்” என்பார்கள். சங்க இலக்கியங்களிலும், திருமணம், செவிக்கு பொன் சேர்ப்பு விழா போன்ற அனைத்து சடங்கு முறைகளிலும் தங்க ஆபரணங்கள் தவிர்க்க இயலாத ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது . ஆண்கள் ,பெண்கள் அணியும் அணிகலன்களாகவும், புழங்கு பொருளாகவும், பரிசு பொருளாகவும் பொன்னையே உபயோகித்ததால் சிறப்பு வாய்ந்த மதிப்புமிக்க பொருளாகவும் பொன்னே இருந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம். தங்கம் அதிகம் அணிந்த பெண்கள் உயர்தர வர்க்கத்தினராக சமுதாயத்தால் கருதப்படுகிறது. மதிப்பிற்காகவும், தேவைக்காகவும் வாங்கப்பட்ட தங்கம் தற்போது உயிர் பலியையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்துகிறது. தங்கம் தற்போது மதிப்பு மிகவும் உயர்ந்துள்ளதால் விளிம்பு நிலை மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.


முன்னுரை
         

      பொன்னான வாக்கு, பொன்மனச் செம்மல் போன்ற சிறந்த உவமையாக பொன்னையே கூறுவோம். பொன் என்றால் ஒரு தங்கத்தாது. பொன் என்னும் பெயர்ச்சொல் மினுக்கம் உள்ள ஒருவகை உலோகத்தாது. சங்க காலம் முதல் இதிகாச கதைகளிலும், புராணங்களிலும், தங்கத்தின் பயன்பாடு இருந்துள்ளது.  இதனை தற்போது விரிவாகக்  காணலாம்.


முதற் பயன்பாடு
         

        சங்ககாலத்தில் இருந்தே நம்மோடு ஒன்றிப் பிணைந்த ஒன்று தெய்வ வழிபாடு. தெய்வ வழிபாட்டின் போது அருளாளர்களின் உருவ சிலைக்கு அணிவிப்பதற்கு மட்டுமே பொன்னாளான நகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு அரசர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
 

கானவர் பொன்புனை பகழி செப்பங் கொண்மார்” (குறுந்தொகை )
         

          பொன்னால் அழகுறச் செய்த அம்பினைச் செம்மையாக்கும் கருமார் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார்.  காலப்போக்கில் சக மனிதர்களின் பயன்பாட்டிற்கும் தங்கம் வந்துள்ளது. மொகஞ்சதாரோவில் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய நகைகள் மிகவும் மென்மையானதாகவும், நுணுக்கமானதாகவும் மாறியது. முகலாயர்கள் காலத்தில் உச்சத்தை தொட்ட நகைக்கு முலாம் பூசும் தொழில்நுட்பம் பண்டைய நகரமான டாக்ஸிலாவில் கண்டுபிடிக்கப்பட்டது.


பரிசம் போடுதல்
         

      பரியம் ( மூங்கிலால் பின்னப்பட்ட வட்ட வடிவிலான தாம்பூலம்) பரிசத்தில்  வைத்து பெண்ணுக்கு கொடுக்கப்படும் பொன்னாலான அணிகலன்களின் பரிசுத்தொகுப்பு. சிலப்பதிகாரத்தில் பரிசம் என்பது ஆணின் பெற்றோர்கள் மணப்பெண்ணுக்கு வழங்கும் பொன்னாலான அணிகலன்களின் சீர்வரிசை. புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு அளிக்கும் நம்பிக்கை. பொதுவாக மனிதர்களின் பயன்பாட்டில் இருந்த தங்கம் பெண்ணுக்கு அணிகலன்களாக கொடுக்கப்பட்டது.
 

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்” (குறுந்தொகை – 21)


        பொன்னாற் செய்த அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களை பற்றி ஓதலாந்தையார் கூறியுள்ளனர்.


சங்க இலக்கியத்தில் தங்கம்
         

பொன் வேய்ந்த சோழன்” -பரந்தகச்சோழன். பொன்னையே கூரையாக வேய்ந்ததால் பொன்வேய்ந்த சோழன் என்ற பெருமைக்குரியவர்.
 

மும் முன்னா வீழ்ந்த முடிகள் உதித்தமாப்

பொன் உரைக்கல் போன்ற குழம்பு” (முத்தொள்ளாயிரம் 99 )
                  

       மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடி இருந்த முடி சிதறி கிடந்தது. மாறனின் குதிரை அந்தப்  பொன் முடிகளைக் காலால் இடறியது. அதனால் அந்த குழம்புகள் பொன்னை உரைத்து பார்க்கும் கட்டடக் கல் போல காணப்பட்டது.

விறகொப் மாக்கள் பொன்பெற் றன்னதோர்”  (புறநானூறு)
         

     விறகுக்குச் சென்றவர் பொன்  பெற்று வந்தார் என்று கோவூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை புகழ்ந்து பாடியுள்ளார்.
 

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார் கோதையைக்”     (முத்தொள்ளாயிரம் )
         

   தேர்ந்தெடுத்த ஆபரணங்களையும் தங்க நகைகளையும் மார்பில் அசைந்தாடுகின்ற மாலையையும் அணிந்த சேரன் கோதை என்று சேரன் பொன்னாலான ஆபரணங்களை அணிந்துள்ளார் என்று கூறுகிறது.


“பொன்னணி யானைத்  தொன் முதிர் வேளீர்” (புறநானூறு )
         

     யானைக்கும் பொன் அணிவிக்கப்பட்டுள்ளது என்பதை பொன்னணிந்த யானை என்று மாங்குடி கிழார் கூறியுள்ளார்.


அந்தணர் ஆவோடு பொன் பெற்றார்” (முத்தொள்ளாயிரம் )
         

     இளங்கிலைவேல் கிள்ளியிடமிருந்து, அந்தணர்கள், பசுமாடு மற்றும் பொன் பரிசீல்களை பெற்றுச் சென்றன.   பொன் இழைகளில் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன என்பதைப்
“பொன்புனை உடுக்கை போன்” என்று பரிபாடலில் கூறியுள்ளார்.


“தாமரைக் கவரியும் தமணிய அழைப்பையும்”
         

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் செல்வரின் அரச வீதியைக் குறிப்பிடுகையில் பொன்னால்  செய்த வெற்றிலை பெட்டியும் இருந்ததாகக் கூறியுள்ளார். பொன்னாலும் நவமணிகளாலும் ஆன அணிகலன்கள் தமிழர்களிடையே மதிப்பு மிகுந்ததாகக் காணப்பட்டுள்ளது


“ஆர்ப்படுத்த செம்பொன் பதிபடுப்பு முத்தமிழ் நூல்” (முத்தொள்ளாயிரம் )
         

      பார்- நிலம் படுப்ப- காணப்படும் செம்பொன்- தங்கம்.  பாண்டிய மண்ணைத் தோண்டினால் செம்பொன் கிடைக்கும்.  காட்டைத் தோண்டும்போது பரிமுகம் பதித்த பொன் கிடைக்குமாயின் அது நீரூற்றுள்ள இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளன.


“பொன் போலும் புதல்வர்ப் பெறாஅ தீரும்”  ( புறநானூறு-9 )

         பொன் போலும் பிள்ளைகளைப் பெறாதீரும் என் அன்புக் கடி விடுவதும் என்று பொன்னை உவமையாக பாடியுள்ளார்  நெட்டிமையார்.   பண்டமாற்று முறையில் மிளகை பெறுவதற்காக தங்கத்தை ஈடாக கொடுத்துள்ளனர்.


“ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து”  (திருக்குறள் -155)
         

      தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார். ஆனால் பொறுத்தவரைப் பொன் போல் மனதுள் வைத்து மதிப்பார் என்று பொன்னை சிறப்பித்து தெய்வப் புலவரும் கூறியுள்ளார்.


இக்காலத்தில் தங்கம்          

           தமிழ்நாட்டில்தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம். சிறுசேமிப்பின் மூலம் சிறுகச்சிறுக சேர்த்து மிகப்பெரிய தொகையாக வந்தவுடன் தங்க ஆபரணங்களையே வாங்குகின்றனர். மாதச் சம்பளத்திற்கு மற்றும் அன்றாட வேலை செய்பவர்களுக்கு சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம்.  உணவு உடை இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சேமிப்பின் மிகப்பெரிய தொகையை தங்கத்திற்காகவே சேமிக்கப்படுகின்றன.
           

        ஆபரணங்களாக அறிவிப்பதற்காக மட்டுமின்றி  உடனடி பணத்தேவை ஏற்படும்போது அடகு வைத்து அல்லது அதனை விற்று பணம் பெரும் நோக்கத்துடனும் தங்கத்தில் முதலீடு  செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அடகு வைத்தல் மற்றும் விற்று பணம் பெரும் நோக்கத்தோடு தங்க ஆபரணங்கள் வைத்திருப்பதால் களவு, கொள்ளை, நகைப் பறிப்பு போன்ற குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. தங்கத்திற்காக அதிக அளவு கொலைகள், விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் வெளியில் செல்ல தயக்கம் ஏற்படுகின்றது.


முடிவுரை
          

    வரதட்சணையாக தங்கத்தைத் தவிர்த்து கல்வியை பெண்ணுக்கு நம்பிக்கையாக அளிக்கப்பட வேண்டும். பல சவரங்கள் பெண்ணுக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்டாலும்  அது சில காலங்களிலே அழிந்து விடக்கூடும். பெண்ணுக்கு கல்வியே இறுதி வரை  ஏற்றம் தரும்.
 

பார்வை நூல்கள்:

1.குறுந்தொகை -இரா.அறவேந்தன், காவ்யா பதிப்பகம் முதல் பதிப்பு 2012


2.சிலப்பதிகாரம் – புலியூர்கேசிகன்,  சரண் பதிப்பகம் மூன்றாம் பதிப்பு 2023


3.புறநானூறு –  ஔவை. துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம்  முதற்பதிப்பு 2015


4.முத்தொள்ளாயிரம் – கிழக்கு பதிப்பகம்


5.பரிபாடல்

6.திருக்குறள்

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி.குணா.பிரியங்கா,

தமிழாசிரியர்,

கூடல் நகர், நல்லூர் சாலை,

ஓசூர்.

 

Leave a Reply