“பழங்குடி மக்களின் உணவு முறைகள்”
Abstract
Aboriginal people have been living in a landscape for a long time. They live their lives with their own customs, language, and land with their own practices, flags, wood, and animals. They have separate arts for themselves and the principles of God, religion, and the world. They have separate methods in individual life, relationship systems, and smooth life. They are not getting much from contemporary people, lack a money-based economy, and have not accepted any new products that have been developed by contemporary industry. Since these people live in conjunction with nature, the food system of these people was natural. This article makes this article about the Tamil tribes of Malayali, Paliyar, Patar, Cholakar, and the people.
முன்னுரை
பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாக ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும் உறவு முறைகளிலும் சுமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள் வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள். இம்மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற காரணத்தினால் இம்மக்களின் உணவு முறையும் இயற்கையானதாகவே இருந்தது. இக்கட்டுரையானது தமிழகப் பழங்குடிகளான மலையாளி, பளியர், படகர், சோளகர், குறவர் மக்களான உணவு முறைகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.
உணவு – விளக்கம்
உணவு என்பதில் ‘உண்’ என்பதே அடிச்சொல்லாக அமைகிறது. அடிச்சொல்லை ஆதாரமாகக் கொண்டு உயிரினங்கள் உண்ணப்படும் அனைத்துமே உணவு எனக் கருதலாம். உயிரினங்கள் உண்ணப்படும் உணவானது காலத்திற்கு ஏற்ப உணவாகவும் , மருந்தாகவும் பயன்படுகிறது.
உணவின் இன்றியமையாமை
உணவு ஒரு சமுகத்தின் ஒழுக்கத்தை நிர்ணயிக்கும் பண்பாக அமைகின்றது. மழை இல்லாமல் இரண்டாண்டுகள் சென்றால் ஏற்படும் பஞ்சத்தினால் கொள்ளை, கொலை போன்ற சமூகச் சீர்கேடுகள் நடக்கின்றன. எனவே உணவு என்பது சமூகத்தின் பண்பாட்டோடு தொடர்புடையதாக உள்ளது. பண்பாட்டுப் பிழை ஏற்படுவதால் பசியை நோய் என்று பழந்தமிழர் குறித்துள்ளனர். இதனாலேயே புறநானூறு பண்ணன் வள்ளலை “பசிப்பிணி மருத்துவன் எனக் குறித்துள்ளது. உணவின் பிண்டமாகிய உடம்பு உயிரைச் சுமந்து கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சே. நமச்சிவாயம் கூறுகின்றார் மேலும்,
’ உண்டிகொடுத்தோ ருயிர் கொடுத்தாரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்’ (புறம்; 18:19:20)
என்று குடபுலவியனாரும்,
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே (மணி.11:95-96)
என்று சாத்தனாரும் உணவு கொடுத்துப் பசியை நீக்குதல் நலம் எனக் குறித்துள்ளனர்.
பழங்குடி மக்களின் உணவு முறைகள்
பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப உணவுமுறைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் காட்டில் கிடைக்கும் பழங்களையும் காய்களையும் ஆரம்பகாலத்தில் உண்டு வாழ்ந்தனர். அடுத்து வேட்டைமூலமும் வேளாண்மை மூலமும் தங்களுக்கு வேண்டிய உணவுகளைப் பெற்றனர். மலையாளிப் பழங்குடி மக்கள் பலா, அன்னாசி, வாழை, கொய்யா, களி, கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை ஆகியவற்றையும் உண்கின்றனர். வீட்டின் முன்பு வளரும் காய், கீரை, வகைகள் மற்றும் ஏதேனும் பயறு வகைகளையும் கேழ்வரகு உணவோடு சேர்த்துக் கொள்கின்றனர். கேழ்வரகின் இரும்புசத்து இவர்களின் திடகாத்திர உடலமைப்பிற்கும் கடின உழைப்புக்கும் உறுதுணையாக உள்ளது. பன்றி, மான், கரடி போன்றவற்றையும் வேட்டையாடி உணவுக்காகப் பயன்படுத்துகினறனர்1 என்று கு.சின்னப்பபாரதி கூறுகின்றார்.
மேலும் மலையாளி இனமக்கள் முற்காலத்தில் கிழங்கு, தேன், கனி, முதலியவற்றை உணவாக உண்டு வந்துள்ளனர். பின்பு தானியங்களைப் பயிரிட்டு தானிய உணவினை உட்கொள்ள ஆரம்பித்தனர். வரகு கஞ்சியினை இம்மக்கள் முக்கிய உணவாக உட்கொண்டனர். மேலும் திணை, வரகு, பனிவரகு, கம்பு போன்ற தானிய வகைகளையும் மொச்சை, பருப்பு, வகைகளான அவரை, மொச்சை, கருமொச்சை, செம்மொச்சை ஆகியவற்றையும் தங்களுடைய அன்றாட உணவில் பயன்படுத்துகின்றனர். கீரை வகைகளையும் காய்கறி வகைகளையும் பயன்படுத்துகின்றனர். அவ்வபோது சிறிய பறவை வகைகளையும் காட்டுப்பன்றி, காட்டுக்கோழி, உடும்பு, முள்ளம் பன்றி கறியினை இம்மக்கள் முக்கிய உணவாக உட்கொள்வதோடு விருந்து உபசரணைக்கும் பயன்படுத்துகின்றனர். மேலும் கோதம்பு முதலிய பலவகை உணவு தானியங்களையும் உணவுப்பொருட்களாக உட்கொள்கின்றனர். இவ்வாறு உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டதற்கு சமவெளிப் பகுதிமக்களுடன் கொண்ட தொடர்பே முக்கியக் காரணம் எனலாம். மலையாளி இனமக்கள் தங்கள் மரபு வழி உணவை மட்டுமல்ல மரபு சார்பண்பாட்டையும் இழந்துள்ளனர்2 என்று அ. நடராஜன் கூறுகின்றார். மேலும் இம்மக்கள் உடும்பு, காட்டுப்பன்றி, மான், புனுகுபூனை, முயல், முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, காட்டுப்பறவைகளை வேட்டையாடி காட்டில் இருக்கும் கடும்பாறையின் மேல் போட்டு இயற்கை முறையில் கடும்வெயில் சூட்டில் வேகவைத்து உண்டு வாழ்ந்தனர்.
இது சமைத்தலின் ஆரம்ப நிலையாகும். சமைத்தலின் அடுத்த படிநிலையாக பாறை குழிகளின் வேட்டை விலங்கின் மாமிசத்தை இட்டு சுற்றிலும் தீயிட்டு சுட்டுத் திண்ணும் உணவுமுறை உருவானது எனலாம் இதனை விளக்கும் விதமாக புறநானூறு,
”முயல் சுட்ட ஆயினும் தருகுவோம்” – புறம். 319-8
பளியர் இனப் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு வகைகள், தேன், பலா, பச்சைக் கடலை போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர். பன்றி, மான், முயல், காட்டுக்கோழி போன்றவற்றை வேட்டையாடியும் உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். மேலும் காட்டுப்பழங்கள், ஈச்சம்பழம், தேன் ஆகியவற்றுடன் மான், பன்றி போன்றவற்றையும் வேட்டையாடி உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர்3. படகர் இனப்பழங்குடி மக்கள் பாலும் நெய்யும் கலந்த பொங்கலை உண்டதாகக் குறஞ்சித்தேன் புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலும் வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பொங்கலை மணக்க மணக்கத் தையல் இலையில் (மினிகே இலைகள்) முதியவலானப் பாட்டி ரங்கனுக்குப் படைத்தாள்4 என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் படகரின மக்களின் உணவு முறையை அறிந்து கொள்ளலாம். மேலும் இம்மக்கள் தங்கள் காடுகளில் கடுமையாக உழைத்து அதன் மூலம் கிடைத்தவற்றையே உணவாகக் கொண்டனர். சாமை, ராகி, கோதுமை, கஞ்சே இவற்றைக் களியாகச் செய்து உண்கின்றனர். இவர்கள் ஒரே வகை உணவை இரு வேளைகளிலும் உண்பர். உழைக்கும் நேரங்களில் தேநீர் அல்லது காப்பி, கோதுமை, மாவினால் செய்யப்பட்ட உணவு முதலியவற்றை உண்கின்றனர் என்று க. பார்வதி கூறுகின்றார்5. படகர் இன மக்கள் இன்றைய சூழலில் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர் என்றும் அறியமுடிகிறது. சோளகர் பழங்குடி மக்கள் ராகியை விளைவித்து அத்துடன் சில காய்கறிகளையும் சேர்த்து உண்டனர். சமீப காலமாக அரிசி இவர்களின் முக்கிய உணவாக மாறி வருகின்றது. இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பீன்ஸ், அவரை, ஆகியவற்றையும் சேகரிக்கும் தேன் போன்றவற்றையும் சேர்த்து உண்கின்றனர்6 என்று ச. பாலமுருகன் தனது புதினத்தில் கூறுகின்றார். குறவர் இனப் பழங்குடி மக்கள் புறா, முயல், காட்டுப்பூனை, பன்றி, வெள்ளை எலி, கீரிப்பிள்ளை, கொக்கு, அணில் போன்றவற்றை வேட்டையாடி, உணவாக உட்கொண்டனர். குறிப்பாக பாண்டியக் கண்ணன். “அணிலை பிடித்து, அல்லது உறித்து உப்பு தடவி சுட்டு கள்ளுடன் சேர்த்து சாப்பிடுவது” போன்றவற்றை குறவர் பழங்குடி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்7 என்று கூறுகிறார்.
மேலும் குறவர் இன மக்கள் பண்டைய காலத்தில் கிழங்கு, தேன், கனி, விலங்குகளின் இறைச்சி போன்றவற்றை உணவாக உட்கொண்டனர். குறப்பெண்கள் கடமானின் தசையும் பன்றித் தசையும் உடும்புக் கரியையும் புளியோடு கலந்து உலை நீரில் மோரை வார்த்து மூங்கிலின் அரிசியை உலையில் இட்டு வெண்சோறு சமைத்து உண்டனர். பின் பாம்புக் கறியையும் சாப்பிட்டனர். பாம்பைப் பிடித்து அதன் தோலை உரித்து அதிலுள்ள நச்சு தன்மையை நீக்கி உண்டனர். பாம்பின் நெய் மூட்டு வலிக்குப் பயன்படுத்தி வந்தனர். இன்றைய குறவர் இன மக்கள் நெல், வரகு, கம்பு, திணை, கேழ்வரகு, கிழங்கு, சாமை முதலியவறை உண்டு வருகின்றனர். விலங்கு கறியான ஆமை, காடை, கெளதாரி, உடும்பு, வெற்கீரி, அணில், கொக்கு, உள்ளான், ஆலாவு மைனா, குட்டியான் ( குருட்டுக் கொக்கு) கோழி, கொக்கு, காட்டுக்கோழி, ஆடு, காட்டுப்பூனை, காணாங்கொத்தி, பன்றி ஆகியவற்றையும் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்8 இவ்வாறு பழங்குடி மக்கள் வாழ்விடச் சூழல் பிற மக்கள் தொடர்பு நிலை போன்றவற்றின் அடிப்படையில் உணவுமுறை அமைந்துள்ளது.
முடிவுரை
பழங்குடி மக்களின் உணவு முறையானது அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. இவர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற காரணத்தினால் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், மலைகளிலும் கிடைக்கும் காய்களையும், பழங்களையும் உண்டு வாழ்ந்தனர். அடுத்து வேட்டை மூலமும், வேளாண்மை மூலமும் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தாங்களே உற்பத்தி செய்யது பயன்படுத்தினர். இன்றையச் சூழலில் நவீன வளர்ச்சி, உலகமயமாக்கல், நகரமயமாக்கல், நகர மக்களின் தொடர்பு போன்றவற்றின் காரணமாக இம்மக்கள் பல்வேறு உணவுக்குப் மாறியுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது.
மேற்கோள் நூல்கள்
1.கு. சின்னப்பபாரதி, சங்கம், ப.66
2.அ. நடராஜன், கொல்லிமலை மலையாளிகளின் வாழ்வியல், பக், 47-48
3.கொ.மா. கோதண்டம், குறிஞ்ஞாம்பூ, ப.6
4.இராஜம்கிருஷ்ணன், குறிஞ்சித்தேன், ப.67
5.க. பார்வதி, படகர் வாழ்வியல், ப.67
6.ச. பாலமுருகன், சோளகர்தொட்டி, ப.186
7.பாண்டியக்கண்ணன், சலவான், ப.50
8.மு. சத்தியமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் பழங்குடி மக்கள் வாழ்வியல், முனைவர்பட்ட ஆய்வேடு, பக்.54-55
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. பிரபாகரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய வளனார் கல்லூரி (கலை மற்றும் அறிவியல்),
கோவூர், சென்னை – 600 128.