Natrinaiyil Uvamaikal|Dr.C.Ramamirtham

Abstract 
        
       The oldest Tamil literature is Sangam literature. There are two major divisions in this Sangam literature, namely Ettuthokaya and Patuppattu.   Natrinai is a book based on content. Natrinai is a testament to the fact that man lived a life in harmony with nature. The hidden metaphors found in Natrinai can be seen here.

திறவுச்சொற்கள் : உள்ளுறை , பிரிவு துயரில் தலைவியின் நிலை, தோழியிடம் தலைவிச் சொல்லியது 

“நற்றிணையில் உவமைகள்”

முன்னுரை
                        
     தமிழ் இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது சங்க இலக்கியம் ஆகும். இந்த சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. நற்றிணை அகப்பொருள் சார்ந்த நூலாகும். மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தான் என்பதற்கு நற்றிணை ஒரு சான்றாக அமைகின்றது. நற்றிணையில் காணப்படும் உள்ளுறை உவமைகளை இங்கு  காணலாம்.

உள்ளுறை 
              
     உள்ளுறை என்றால் ஆழமான பொருளைக் குறிக்கும். ஒன்றை விளக்குவதற்கு வேறு பொருள் ஒன்றை உள்ளடக்கமாக அமைப்பது உள்ளுறை எனப்படும். இதனை,

“உள்ளுறுத்து இதனோடு ஒத்து பொருள் முடிகென
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமை “ (தொல். அகம்:46)
         
         என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். தான் கூற வந்ததைக் கூறாமல், வேறொன்றைக் கூறி அதன் வாயிலாகத் தான் கருதிய பொருளை பெற வைப்பது என்பது பொருள் ஆகும்.
 
பிரிவு துயரில் தலைவியின் நிலை
            
      கழற்றி யானையின் பிரிவுக்கு ஆற்றாத பிடி தன் கன்றைத் தழுவியப்படியே செயலற்று வாடி நிற்கும் நாட்டினை உடைய தலைவன், தான் பிரிந்ததால் தலைவிக்கு வரும் நோயைப் பற்றி அறியாதவனாய் நீண்ட நாட்கள் பிரிந்து வரைந்து கொள்ளாமல் அருளற்றவனாய் இருக்கின்றான். தலைவனின் பிரிவு கொடுமையால் நலன் இழந்த தலைவி, பிடியானை தன் கன்றைக் காத்துப் பேணும் பண்பாய் இருந்தது போல, தன் துயரைப் பிறர் அறியாதபடி காத்துப் பேணி நின்றாள்.  துயரைப் பேணி நின்ற செயலை பிடி யானையின் செயலோடு ஒப்பிட்டு சொல்லப்பட்ட செய்தி சிறப்பானதாக அமைகின்றது. இதனை,

“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி 
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, இது என் யான் அது
அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து 
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே? “(நற்:47)
 
     நற்றிணை பாடல் மூலம் அறியலாம். சிறப்பான இவ்வுள்ளுறை உவமை வேறு வகையிலும் வெளிப்படும். அதாவது,
 
“பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி   
முன்னை மரபொடு கூறுங்காலைத் துணிவொடு வரூஉம்
துணிவினோர் கொளி னே“ (தொல். உவமை யியல்:23)
          
       உவமை வேறு. உவமிக்கப்படும் பொருள் வேறு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு இருத்தலே’ பிரிதொடு படாது ‘ எனப்படும். நுட்பமாக அறிந்தவரே உணர்ந்தவர் என்பதால் துணிவொடு என்றார். உதாரணமாக,

“ முறிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் 
புறனழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல்  
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃதறிந்தனள் 
அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை 
வேறு பல் நாட்டிற் கால்தர வந்த 
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன எம் 
இளநலம் இற்கடை ஒழயச் 
சேறும் வாழியோ முதிர்கம் யாமே “(நற்:29)
               
         நுட்பமாக தலைவியின் நிலையைத் தோழி தலைவனுக்கு உரைக்கின்றாள். நீர் வளத்தோடு இருந்த பொழுது செழிப்பாக இருந்த வள்ளிக்கொடி, வறண்ட நேரத்தில் காய்ந்து போவது போல, தலைவனே நீ உடன் இருந்தபோது வளமான வள்ளிக் கொடியாக தலைவியும் நாங்களும் இருந்தோம். நீ பிரிந்த போது வாடிய வள்ளிக் கொடியாய் நானும் தலைவியும் ஆனோம். தலைவியை கள் சாடியாகவும், கள்ளைத் தலைவியது அழகுக்கும் உவமையாக சொல்லப்பட்டுள்ளது. சாடி கண்டாரை இன்புறுத்துவது தன்னை நாடி வரச் செய்வது, கள் உண்டாரைச் செருக்குறச் செய்து களிப்பது இச்செய்தி நுட்பமாக உணர்வோரே அறிய முடியும். உணர்வுடையோரை உணர வைத்த இவ்வுவமை நான்கு நிலத்தும் உளவாய் அந்நிலத்து உடனுறையும் கருப்பொருளால் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சி என்பர் தொல்காப்பியர். தலைவனைப் பிரிந்து தலைவி இருக்கும்போது தலைவியின் உடலில் பசலைபரந்து, தலைவியின் தோள் மெலிந்து காணப்பட்டது.பசலையினால் தலைவியின் அழகு குறைந்துவிடும் என்ற உளப்பாங்கை,

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலைஉணீ  இயர் வேண்டும்
திதலை அல் குல் என் மமைக் கவினே”  (குறுந்:27)
 
என்ற பாடல் விளக்குகின்றது.

தோழியிடம் தலைவிச் சொல்லியது 
                
        பொய்கையிலே வாளைமீன் பிறழவும், அதனைப் பற்றி உண்பதில் மனம் செலுத்தாது நீர்நாய் உறங்குவது போல, பரத்தையருடனே தங்கி உள்ள தலைவனுக்கு நீர் நாய்க்கு வாலை மீன் பிடிக்காமல் போனது போல, தலைவனுக்கும் ஒரு நாள் பரதையரைப் பிடிக்காமல் போய் என்னை நாடி வருவான் என்ற தலைவியின் கூற்றால் நீர் நாயுடன் ( கருப்பொருள் ) தலைவனை ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் உவமை சிறப்பு ஆகும். இதனை,

“வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுமில் ஏற்கும்  
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த  
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித் தழை 
ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ
விழவிற் செலீஇயர் வேண்டும் மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின், 
வரையா மையே அறிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்  
வரைவேய் பனையும் நற்றோள்
அளிய-தோழி- தொலையு ந பலவே “(நற்:390)
 
என்னும் நற்றிணை பாடல் மூலம் அறியலாம்.
 
முடிவுரை          
      நற்றிணை பாடல்களில் உள்ளுறை உவமைகள் அதிகமாக காணப்படுகின்றன. மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரமாக நற்றிணை பாடல்கள் அமைகின்றன.
பயன்பட்ட நூல்கள்
1.வேங்கடராமன்.எச்.(ப .ஆ ) – 1989 , நற்றிணை, உ.வே.சா.நூல் நிலையம், சென்னை .

2.இளம்பூரணனார் (உ . ஆ ) –  2005, தொல்காப்பியம் பொருளதிகாரம் ,சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.

3.சோமசுந்தரனார்,பொ.வே.(உ.ஆ) _ 1961 , குறுந்தொகை ,  கழக வெளியீடு, சென்னை .

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சி. இராமாமிர்தம்
தமிழ் உதவிப்பேராசிரியர்
மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம் – துறை
அறிவியல் மற்றும் மனிதநேயவியல் புலம்
 
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
 
இராமாபுரம், சென்னை – 89.



iniyavaikatral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here