Medical Perspectives in Sangam Literature|Dr.Nalini.V

Abstract
         
        The people of the Sangam age led an ethical and refined life in close harmony with nature. Evidence from Sangam literature and other classical Tamil texts reveals their advanced knowledge in various disciplines, including geography, astronomy, and medicine. The ancient Tamils maintained an intimate relationship with the natural environment throughout all stages of life, utilizing a wide range of plants, trees, and creepers for sustenance and healing. These elements of nature were richly embedded in literary works through similes, metaphors, and symbolic expressions, reflecting their ecological consciousness.
Medical knowledge during the Sangam period was systematically classified into physical and mental health. Treatments for physical ailments included natural herbal remedies, music-based therapy, and surgical practices. Health preservation was based on the principle that food itself functions as medicine, while stress and fatigue were managed through relaxation techniques, as indicated in literary sources. Mental well-being was addressed through the use of soothing and compassionate speech, which was regarded as a therapeutic practice. Additionally, ailments were categorized into pain, disease, and suffering, with appropriate treatments prescribed for each category. Physicians were referred to as Noyaaligal, while women medical practitioners were known as Maruththuvachchi. The Sangam people possessed a profound understanding of the medicinal properties of plants and employed them both as dietary components and as therapeutic agents. This holistic approach to health was guided by the enduring principle that “food is medicine and medicine is food.” The present study examines and elucidates these medical concepts and practices of the Sangam age, highlighting their scientific insight and relevance.


“சங்க இலக்கியத்தில் மருத்துவச் சிந்தனைகள்”

முன்னுரை            
      சங்க கால மக்கள் இயற்கையோடு இயைந்து உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்கள் புவியியல், வானியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதை சங்க இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் உலகுக்கு உணர்த்துகின்றன. தமிழர்கள் தங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து மரங்கள், செடி, கொடிகள் போன்ற தாவர வகைகளைப் பயன்படுத்தினர். இதையே இலக்கியங்களில் உவமைகளாகவும், உருவகங்களாகவும், குறியீடுகளாகவும் காட்டியுள்ளனர். பண்டைத் தமிழர்கள் மருத்துவத்தை ஆரோக்கிய மருத்துவம், மனநோய் எனப் பிரித்து வாழ்ந்தனர். உடல் ஆரோக்கியத்திற்கான  மருந்தை இயற்கை மருத்துவம், இசை மருத்துவம், அறுவை மருத்துவம் என வகைப்படுத்தி, உணவையே மருந்தாக வைத்து ஆரோக்கியத்தைப் பேணி, தளர்வு போன்ற முறைகளால் மன அழுத்தத்தை நீக்கி வந்ததை இலக்கியங்கள் மூலம் அறியலாம். மன ஆரோக்கியத்திற்கான மருந்தாக, இனிமையான சொற்களை பயன்படுத்தியும் வந்துள்ளனர். மேலும், நோய்களை வலி, நோய், துன்பம் என வகைப்படுத்தி, அவற்றுக்கான மருந்துகளை பரிந்துரைத்தனர். நம் முன்னோர்கள் மருத்துவர்களை “நோயாளிகள்” என்றும் மருத்துவப் பெண்களை “மருத்துவர் மற்றும் மருத்துவச்சி” என்றும் அழைத்தனர். மேலும், சங்க கால மக்கள் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்து உணவாகவும் மருந்தாகவும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற உயர்ந்த கொள்கையுடனும் பயன்படுத்தியதை  விளக்கிக்  காட்டும் ஆய்வாக இவ்வாய்வு அமைகின்றது

மருத்துவம்
 
        நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என நோயில்லா தன்மையை நம் முன்னோர்கள் மிகப் பெரிய செல்வமாகக் கருதினர். அவ்வாறு நோய் ஏற்பட்டால் அக்காட்டில் கிடைக்கும் மூலிகைகளையும், அந்நாட்டின் தட்பவெப்ப நிலையையும் அடிப்படையாகக் கொண்டு நோயைக் குணப்படுத்தினர். மேலும் பாமர மக்கள் தங்கள் பட்டறிவின் அடிப்படையில் நோயைக் குணப்படுத்தினர். இதை அவர்கள் நாட்டு மருத்துவம் என அழைத்தனர். இதையே இலக்கியங்களும், இலக்கணங்களும் எடுத்துரைக்கின்றன. இந்த  மருத்துவ முறைகளில் பலவகையான முறைகள் வழக்கத்தில் இருந்ததாக கருத்துக்கள் பதிவு செய்கின்றன. இப்பழங்கால மருத்துவமுறைகள் கால அடிப்படையில் நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம் எனவும் வழங்கப்பட்டுளன. இது மொகலாயர் ஆட்சிக்காலத்திற்குப் பின் வந்தது. யூனானி வைத்திய முறை மேலும் ஆங்கிலேயர் வருகைக்குப்பின் ஆங்கில வைத்தியமுறை பரவியது. மேலும் ஹோமியோபதி வைத்தியம் ஜெர்மானியரால்; உருவாக்கப்பட்டது. சித்த வைத்தியம் தமிழகத்தில் வாழ்ந்த சித்தரர்களால் உருவாக்கப்பட்ட வைத்தியமாகும். இவ்வைத்தியத்திற்கு நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்ததோடு மட்டுமல்லாமல் இலக்கியத்தில் விரவிக் காணப்படுகின்றது.

மருத்துவ முறை
     பண்டையக் காலத்தில் திராவிட மக்களாகிய தமிழர்கள் மருத்துவத்தையும் மருந்து பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்குச் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றையத் தமிழ் மருத்துவர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் மருத்துப் பல பொருள்களாகப் பயன்படுத்துகின்ற ‘சிலாசித்து’, ‘மான் காம்புபவழம்’, ‘தாளகம்’ போன்ற மருத்துவப் பொருட்கள் பரவி இருந்திருக்கிறது. பின்னாளில் மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற்கேற்ப பிரிந்து சித்த, ஆயுர்வேதம் என இரு நிலைகளில் வளர்ந்தது என்பர்.

சங்ககால மருத்துவர்கள் 
      சங்க காலத்தில் மருத்துவப் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் மருந்துப் பொருட்களின் பெயராலேயே தங்கள் பெயரைச் சூடியுள்ளனர் என்பதை கடுகு பெருந்தேவனார், போந்தைப்பசலையார், வெள்ளெருக்கிலையார், காவட்டனார் போன்ற பெயர்கள் மூலம் அறியலாம்.

கலித்தொகையில் மருத்துவக் குறிப்புகள்          
     தேள் கொட்டினால் அதற்கு மருந்து குறிப்பு கலித்தொகையில் காணப்படுகிறது. 
“கடிகொள் இருங்காப்பில் புல்லினத் தாயர்   
குடிதொறு நல்லாரை வேண்டுதி யெல்லா  
இடுதேள் மருந்தோநின் வேட்கை தொடுரத் “ (கலி 110:1-3)
         
       என்ற பாடல் வரிகள் குறிப்பிடுவதோடு, தேள் கொட்டினால் இடும் மருந்தை ‘இடுதேள் மருந்து’ என்று அழைத்ததையும் உணரமுடிகிறது. நோயைத் தீர்க்கும் மருத்துவர்கள் எவ்வளவுதான் சிறந்த முறையில் சிகிச்சை அளித்தாலும், செம்மையுடைய உடம்பிலே செலுத்தப்படும் மருந்து தான் நன்கு செயல்படும் என்பதற்கு சங்கநூலில் சான்று ஒன்று உள்ளது.   திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய   மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்ப  (பா.கலி – 16) என்ற பாடல் வரிகள் இதனை தெளிவுபடுத்துகிறன. கலித்தொகையில் பாலைகலியில் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்ட செல்ல எண்ணிய தலைவனிடம் தோழி தலைவியின் நிலையை எடுத்துரைத்த கருத்தை மீண்டும் தலைவியிடம் கூறிய இடத்தில் அழகுற மருத்துவன், மருத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. 

பொருந்தியான்  தான் வேட்டபொருள் வயின் நினைந்தசொல் 
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய     
மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்ப  (பா.கலி – 16)
         
    அதாவது மருத்துவன் ஊட்டிய மருந்து உடம்பைக் குணப்படுத்துகிறதோ அதுபோல நான் உன் நிலை பற்றி எடுத்துரைத்திருக்கிறேன். அதனால் தலைவன் உன்னைப் பிரிந்துபொருள் ஈட்டச் செல்லமாட்டான் என தோழிக்கு உரைக்கும் இடத்தில் மருத்துவன், மருந்து பற்றிய செய்திகள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

காயம் கட்டுதல்
     புண்ணுக்கு மருந்தாகத் தேன் பயன்பட்டுள்ளது. வேம்பு இலையை வீட்டு வாயிலில் செருகி வைப்பதால் பாதிக்கப்பட்டவரை நச்சுக்கிருமிகள் அண்டாமல் காக்க முடியும் என்று அறிந்திருந்தனர். ஐயவி புகைத்துள்ளனர். போரில் புண்பட்டவர்களை பேய் அண்டாமல் காப்பதற்காக இச்செயல்பாடு என்று புறநானூற்றில் (281) பேசப்பட்டுள்ளது. உயிருக்கு உறுகண் செய்யும் நோய்க் கிருமிகளைப் பேயாக எண்ணியுள்ளனர். அதன் தாக்குதலுக்கு வேம்பு நல்ல மருந்து என்றும் கண்டுள்ளனர். இன்றும் வேம்பு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதோடு பேயை விரட்டும் தெய்வசக்தி மிக்கதாகவும் நம்பப்படுகிறது. போரில் புண்பட்ட வீரர்களுக்குப் பாசறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். காயம்பட்ட இடத்தில் பஞ்சுவைத்து கட்டிய கட்;டுடனே போர்புரிந்த வீரர்களைப் பற்றி புறநானூறு கூறுகிறது.

செருவா யுழக்கிக் குருதி யோட்டி 
கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்.  (புறம்.  353- 14,15)
         
      சங்ககாலத்தில் போர்க்காலத்தில் ஏற்படும் புண்கள் பெரிய அளவில் காணப்பட்டால் அக்காலத்திலேயயே அவ்விழுப்புண்களை இணைத்து தைக்கும் முறை இருந்துள்ளது. ஏனெனில் அப்புண்கள் இயல்பாய் ஆறாது என உணர்ந்த மருத்துவ வல்லுநர்கள் அதைத் இணைத்து தைக்கும் முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் பின்னரே மருந்து வைத்து தைத்துள்ளனர். இக்கருத்து பதிற்றுப்பத்தில் குறிப் இடம் பெற்றுள்ளது. 

மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பு (பதிற்று. 42:2-4)
         
     என்ற பாடல் அடி மீனைப் பாய்ந்து கொத்தும் சிரல் பறவையின் வேகம்போல வெண்ணிறமான நெடிய ஊசிகொண்டு தைக்கப்பட்ட வடுக்கொண்ட மார்பனாகச் சேரன் விளக்கியதைப் பதிவு செய்துள்ளது. நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து அடுத்த நொடியில் நீரை விட்டுமேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம் என அறுவை மருந்துவ முறை கருத்து வெளிப்படுகிறது. இதன்மூலம் போரில் புண்பட்ட வீரர்களுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளமையை அறிய முடிகின்றது.

அமரகத்து
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடு இன்று வடிந்த யாக்கையன்… (புறம்: 180, 3-6)
         
    தையல் இட்ட புண்ணின் உலோக நஞ்சை முறிக்கவும், வடுவைப் போக்கவும் அத்திப்பால் பயன்பட்டுள்ளதை இதனால் அறிய முடிகிறது.

ஐயவி (கிருமி நாசினி)         
     ஐயவி என்பது வெண்சிறு கடுகைக் குறிக்கும். இஃது நுண்கிருமிகள் அண்டாமல் தடுக்கும் எதிர்ப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் பிள்ளை பெற்ற போதும், போரில் வீரர்கள் புண்பட்ட போதும் ஐயவி புகைத்துள்ளனர். போரில் புண்பட்ட வீரர்களுக்குக் காப்புப் பொருளாக ஐயவி பயன்பட்டுள்ளதை,

“வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே (புறம் : 2961-3)
         
        புறநானூறு கூறுகிறது.  புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கை (40:6-8)  பிள்ளை பெற்ற மகளிர் வெண்கடுகு எண்ணை பூசி நீராடியுள்ளனர் என்பதை இதனால் அறியலாம். பதிணென் சித்தர்களும் மூலிகை மருத்துவ அகராதியில் (ப.223) ஐயவியின் மருத்துவத் தன்மையையும் அது தீர்க்கும் நோய்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.  

குறுந்தொகை
         
     குறுந்தொகைப் பாடலில், சூல்கொண்ட மகளிர் தங்களுக்கு ஏற்படும் குமட்டல் தீர புளியைச் சுவைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும்,  

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்   
என்னை இன்றியும் கழிவது கொல்லோ  ( குறுந். 238:1-2)
         
      என்ற பாடல் வரிகள் சங்ககால மக்கள் வேம்பின் பூவால் குழம்பு செய்து உண்டனர் என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. வேப்ப மரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் மிக்கவை. இதன் பயன் கருதியே பழந்தமிழர்கள் வேம்பினை சமையலில் பயன்படுத்தியுள்ளனர் என்ற செய்தி உணர்த்தப்படுகிறது. அதுமட்டுமின்றி வேம்பு கிருமி நாசினியாகவும் இருப்பதை, தீங்கனி இரவமொடு வேம்புமனை செரீஇ    என்ற புறநானூற்றுப் பாடல் வரி விளக்குகிறது.  நற்றிணை மருத்துவத் துறையில் உடம்புக்கு ஒவ்வாமை (யுடநசபைஉ) பற்றிய கருத்தும் கூறப்படுகிறது. இது பற்றிய செய்தி ஒன்றினை சங்க இலக்கிய நூலான நற்றிணையில் காணலாம். கொக்குகள் மீன்களைப் பற்றி உண்ண, அந்த மீன் நாற்றம் ஒவ்வாமல் மந்திகள் தும்முகின்றன என்பதை,

கொக்கினம் மீன்முடை நாற்றம் தாங்கள் செல்லாது
துய்த்தலை மந்தி தும்மும்  (நற்., 326)
என்ற வரிகளால் அறியலாம்.

முடிவுரை
           
      வாழ்க்கையை வளப்படுத்தவும், நெறிப்படுத்தவும் பயன்படும் சங்க இலக்கியத்தில் மருத்துவச் சிந்தனைகள் அதிகம் காணப்படுகின்றன. கலைகளுள் பயன்பாடுடையது மருத்துவக்கலை. சமுதாயத்தின் இன்றியமையாத் தேவையான மருத்துவத்தை முதன் முதலில் ஒரு தொகுப்பாகப் பாடிய பெருமை திருவள்ளுவரையே சாரும். பெருமளவிலான நோய்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் உணவுப் பழக்கங்களே. இச்சூழலில் சங்க இலக்கியங்களில் பல்வேறு மருத்துவச் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளதை இக்கட்டுரையின் வழியாக நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

பார்வை நூல்கள்
1.பரிமணம், அ.மா., (உ.ஆ), நற்றிணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை-98, முதற்பதிப்பு – 2007.

2. பரிமணம், அ.மா., (உ.ஆ), குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை-98, முதற்பதிப்பு – 2007.

3. பரிமணம், அ.மா., (உ.ஆ), கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை-98, முதற்பதிப்பு – 2007.

4. பரிமணம், அ.மா., (உ.ஆ), புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை-98, முதற்பதிப்பு – 2007.

5. பரிமணம், அ.மா., (உ.ஆ), பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை-98, முதற்பதிப்பு – 2007.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வெ. நளினி  

உதவிப்பேராசிரியர்
மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம்
துறை
அறிவியல் மற்றும் மனித நேயவியல் புலம்
எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும்  தொழில்நுட்பவியல் நிறுவனம் 
இராமபுரம் – சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here