JAPAN NAATU SIRUKATHAIKAGAL – KULANTHAIKALUKKANA NEETHIGAL|Dr.N.PARAMASIVAM

ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள்- குழந்தைகளுக்கான நீதிகள்

Abstract


        Storytelling has long been a fundamental aspect of classical literature, serving as a powerful medium to impart discipline, moral values, respect for humanity, and the significance of hard work. It is not limited to the educated but also serves as a guiding tool for those with limited knowledge. By narrating stories to children, we can effectively instil essential virtues and ethical principles that shape human life. This research explores key moral values such as the importance of work, respect for nature, and the consequences of arrogance, as depicted in Japan Naatu Siru Kadhaigal (Short Stories from Japan). Through an analysis of these narratives, this study highlights how storytelling remains a timeless and impactful means of moral education.

ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள்- குழந்தைகளுக்கான நீதிகள்

ஆய்வுச்சுருக்கம்

       காலம் காலமாகச் செவிவழியாகக் கடத்தப்படும் இலக்கியமே கதை இலக்கியம். இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது அறத்தை, அன்பை, பிறருக்குக் கொடுக்கப்படும் மரியாதையை, உழைப்பின் மேன்மையை என வாழ்வியலில் உள்ள அனைத்து அறங்களையும் கதை வடிவில் படைத்துக் கற்றவர், கல்லாதவர் என அனைவருக்குமான இலக்கியமாக,பொது இலக்கியமாகக் கதைகள் அமைந்துள்ளன.
‘அனைவருக்குமான’ என்ற பொதுத்தளத்தில் கதைகள் இயங்கினாலும் வரும்காலத்தை இயக்கும் குழந்தைகளுக்கு அறத்தை வலியுறுத்தும் பொழுதுதான் கதைகள் முழுமை பெறுகின்றன. அவ்வகையில் ஆய்வுக்குக் களமாய் உள்ள “ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் – குழந்தைகளுக்கான  நீதிகள்” என்னும் தலைப்பின்கீழ் ‘வேலையே தெய்வம்’,’இயற்கையை மதித்தல்’,’தான் என்ற அகம்பாவம்’ என்னும் பொருண்மையில் இவ்வாய்வு அமைகின்றன.


முகவுரை

      அன்றிலிருந்து இன்று வரை மனிதன் நாடோடியாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறான்.  அன்று வயிறும் வயிற்றை நிரப்புவதற்கான உணவுமே முதன்மையாக இருந்தன.  அதனாலேயே வேட்டைச் சமூகமாக இருந்து வந்தது.  இன்றும் அதே நிலைதான்.  ஆனால் அதில் சிறு மாற்றம். என்னவெனில் உணவே முக்கியமென்றாலும் அதைப் பெறுவதற்கான வளர்ச்சி அதுவும் அறிவு வளர்ச்சி என்ற நிலையை எட்டியபின் பணம் என்பது இங்கு அனைவருக்குமான பொதுத்தேவையாக மாறிவிட்டது.  எனவே இடம் விட்டு இடம்தேடி ஓடிய கால்கள் பணம் ஈட்ட, இன்று இருந்த இடத்திலேயே அமர்ந்து அறிவால் ஈட்டுகின்றனர்.  இப்படி ஒளிபடைத்த கண், உழைத்த உடல், சப்தமிட்டு ஒரு செய்தியை தன் இனக்குழுக்களுக்கு அறிவித்த வாய், வாசனை அறிந்தே அது விலங்கா? விலங்கின் எச்சமா? என உணர்ந்த மூக்கு எனும் ஐம்பொறிகள் ஒரு கட்டத்தில் இயல்பான நுண்ணறிவால் தன் நுண் உணர்வை இழந்து இன்று சற்று மங்கியுள்ளன.

        இதற்குத் தொழில் வளர்ச்சியும் அதனோடு இணைந்த பாதுகாப்பும் என்ற காரணங்களால் எச்சரிக்கை என்னும் உணர்வு, குறிப்பாக விலங்குகளால் அச்சுறுத்தல் இல்லை என்ற உணர்வால் அதன் பயன்பாடு குறைந்துள்ளதை அறிவோம். ஆனால் காது எனும் உறுப்பை எடுத்துக் கொள்ளின் “செவிச்செல்வம’’ “கேட்டல்  இனிது” எனும் இலக்கிய வரிகள் ஐம்புலன்களுள் காதுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. காரணம், காதுகளின் வழியேதான் உலக உயிர்களின் இயல்புகளை நம் முன்னோர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.  தான் கண்டு, உற்று, உணர்ந்த செய்திகளை அனுபவ வெளிப்பாடாக, சொற்களின் பிறப்பிடமான வாய் கூறினும் அதனை உள்வாங்கி தன் கற்பனைத்திறன், அறிவாற்றல், அறிவின் வழியில் செயல்படல் என்ற மூன்று நிகழ்வை ஒருங்கே இணைக்கும் மையப்புள்ளியாகக் காதுகள் செயல்படுகின்றன.  அதனால்தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் வளரும் குழந்தைப் பருவத்தில் இருந்து நமக்குக் கதைகள் கூறித் தன் கற்பனைத் திறத்தை வளர்த்துக் கொண்டதுடன் நிறைவேறா ஆசைகள், நிறைவேற்றத் துடிக்கும் லட்சியங்கள், வாழ்ந்த வாழ நினைக்கின்ற நிகழ்வுக் கதைகள், தனக்கான உலகம் மற்றும் தன்னைச் சுற்றி உலகம் எவ்வாறு சுழல வேண்டும் என எண்ணிலடங்கா வண்ணங்களை எண்ணிலடங்காகக் கதைகளால் கூறி கேட்போரின் உணர்வுகளை ஆட்கொள்வதுடன் கேட்போரையும் அவர்கள் அறியாமல் அவர்களுக்கான கற்பனைகளைத் தூண்டுகின்றனர். 
         

        ஆக, கதை கூறலும் கேட்டலும் என்பது நம் நாட்டிற்கு மட்டுமல்ல.  மொழிபேசும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.  இக்கதைகளின் ஊடாக பொழுதுபோக்கின் கூறுகளை மட்டுமல்ல ஒவ்வொரு நிலத்திலும் வாழும் சூழல்சார் அறிவினையும் அவ்வறிவினால் அவர்களின் மேம்பட்ட சிந்தனைகளையும் அறிவதற்குக் கதைகள் துணை புரியும்.  அவ்வகையில் ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் குறித்து இனிக் காணலாம். 


வேலையே தெய்வம்
         

        சின்டோ, பௌத்தம் ஆகிய மதங்களை ஜப்பானியர்கள் பின்பற்றி வரினும் அவர்கள் தாம் மேற்கொள்ளும் பணிகளையே தெய்வமாகக் கருதிவருகின்றனர்.  அதைத்தான் அவர்களுடைய மதங்களும் மதகுருமார்களும் வலியுறுத்தியுள்ளனர்.  இதை அடிப்படையாகக் கொண்டே “வெட்டி வேலை’ என்னும் சிறுகதையில் ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஜங் என்னும் விறகுவெட்டி நாள்தோறும் தன் கடமையைச் செய்ய, ஒருநாள் அவ்வழியாக வந்த ஒரு முனிவர் இறைவனை நினையாது அவர் குறித்துப் பாடாது வேலை மட்டுமே செய்தால் அடுத்த பிறவியில் புழுவாகப் பிறப்பாய் என்கிறார். 
          இதைக்கேட்டுத் திடுக்கிட்ட அவன் தன் தொழில், குடும்பத்தை மறந்து இறைவனின் புகழ்பாடித் திரிகிறான்.  ஒருநாள் தன் தாகம் தீர்க்க குளத்து நீரைக் குடிக்க முயல்கையில் தெளிந்த நீரில் தன் உருவத்தைக் காண்கிறான்.  அதில் தன் மெலிந்த உருவத்தைக் கண்டு இறையை விட உழைப்பே உடலை உறுதி செய்யும் என உணர்ந்து தன் இல்லம் திரும்புகிறான்.  இல்லத்தில் யாரும் இல்லாததைக் கண்டு அங்கிருந்த பெண்மணியிடம் வெறும் பிரார்த்தனை வேண்டாம். அது உடல், குடும்பம் என அனைத்தையும் அழிக்கும். 

          நாம் மேற்கொள்ளும் வேலையை முழுமனதுடன் செய்தால் இறையருள் கிடைக்கும் எனக் கூற அங்கிருந்த பெண் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறாள் எனக் கதை முடியும். எனவேதான் ஜப்பானியர்கள் வேலைப்பளுவால் சோர்வு சூழும்போதெல்லாம், இரண்டாம் உலகப் போரில் இறந்து போன தன் தம்பியைச் சுமந்த ஜப்பானியச் சிறுவனின் புகைப்படத்தை அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் ஜோ ஓ டோனல் என்பவர் வெளியிட அதை இன்றளவும் ஒவ்வொரு முறையும் காணுகிற ஜப்பானியர்கள் அப்புகைப்படத்தை வலிமையின் அடையாளமாகக் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகக் கதை என்பது வெறும் கதை அல்ல. அது உணர்வு சார்ந்தது.  எனவே, தான் மேற்கொள்ளும் செயலை, பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நமக்குச் சொல்லும் நீதியாகும்.  எனவே ‘சிறுகதை என்பது எளிமை சான்ற படைப்பாக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவான பயனை மட்டும் கொடுக்க முயல்கிறது’ என்பர்( 1 )


பணமா? நற்காரியமா?
         

        ‘இரண்டும் ஒன்றுதான்’ எனும் கதையில் ஒரு வயதான பெரியவரிடம் ஒரு கூஜா இருந்தது. அதில் நீரூற்றினால் குறையாத சூட்டுடன் இருந்தது.  ஒருநாள் அதில்  துளைவிழ அதைப் பெட்டியில் போட்டு விடுகிறார்.  அட்டைப் பெட்டியில் இருந்த அது தானூகிப் பறவையாய் மாறியது.  பின்னர் காலையில் பழைய கூஜாவாக உருமாற்றம் அடைந்தது.  இதைக் கண்ட அப்பெரியவர் இது நம்முடன் இருந்தால் குழப்பமே மிஞ்சும் என்று வேறொரு வியாபாரியிடம் விற்று புதிய கூஜா வாங்கிக் கொள்கிறார்.  அதை வாங்கிய வியாபாரி தன் இல்லம் கொண்டு செல்கிறார்.  அது மீண்டும் தானூகிப் பறவையாகிறது.  அதைக் கண்ட வியாபாரி உன்னை வைத்து நான் என்ன செய்வது எனக் கேட்க, என்னை வைத்து கூஜாவாகவும் பறவையாகவும் மாற்றிக் காட்டுகிறேன் என மக்களிடத்தில் கூறி வித்தை செய்து பிழைத்துக் கொள் எனக் கூறுகிறது. 

         அவ்வாறே வியாபாரியும் வித்தை செய்து பெரும் பணக்காரன் ஆகிறான்.  நன்றி மறவாத வியாபாரி இதை விற்ற பெரியவரைக் கண்டுபிடித்து தான் சம்பாதித்த பத்தில் ஒரு தொகையை அவரிடம் கொடுக்கிறான்.  அந்த முதியவரோ அந்தப் பழைய கூஜாவும் நீ தரும் பணமும் எனக்கு ஒன்று தான்.  இந்த இரண்டையும் பெற்றுக் கொண்டால் எனக்குக் குழப்பமும் துன்பமும் ஏற்படும் எனக் கூறி அதை மறுத்து விடுகிறார்.  இறுதியாக, அவனிடம் நீ எனக்குக் கொடுக்கும் பணத்தை மக்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்து என்கிறார்.  ஸ்டெவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகளாக கருவால் வந்த கதை, குணச்சித்திரத்தால் வந்த கதை, உணர்ச்சிப் பதிவால் வந்த கதை. மேற்கண்டவை குணச்சித்திரத்தால் வந்த கதை ஆகும் (2).
         

        பணத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கண்ட கதையைப் போலவே ‘யாருகிட்ட’ எனும் கதையும் அமைந்துள்ளது. க்யோடோ எனும் ஊரில் மியாட்சுகோ என்ற ஏழையும் அதே ஊரில் சானுகி எனும் பணக்காரனும் வாழ்ந்து வருகின்றனர்.  சானூகியிடம் மியாட்சுகோ கடன் வாங்கி முறையாக வட்டியும் செலுத்தி வருகிறான்.  ஒருநாள் தான் கொடுத்த தொகையை மியாட்டிடம் கேட்க அவன் பணம் தரமுடியாத சூழலை விளக்குகிறான்.  அதனை ஏற்காத சானூகி நீ இறந்தாலும் உன் ஆவியிடமிருந்தாவது பெற்றுக் கொள்வேன். உனை விடமாட்டேன் என்கிறான். 
         

        மனம் வெறுத்த மியாட்சுகோ  மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  இதை அறிந்த காவலர் பிரேத பரிசோதனை முற்பட அன்றைய நாள் விடுமுறை என்பதால் அந்த மரத்திலேயே விடப்படுகிறான்.  நாளைதானே சடலம் எடுப்போம் என நினைத்த காவலர் மது அருந்திக் காவல் காக்க. அவ்வழியாக வந்த சானூகி தன்னால்தான் அவன் இறந்தான் என நினைத்து அவனைக் கண்டு பயந்து ஓடுகிறான்.  போதையில் இருந்த காவலர்கள் இறந்தவனின் ஆவிதான் ஓடுகிறது என நினைத்து அந்தச் சானூகியைப் பிடித்து மியாட்சுகோ இறந்த பக்கத்து மரக்கிளையில் சுருக்கிட்டுக் கொல்கின்றனர் எனக் கதை நிறைவடைகின்றது.  ‘இரண்டும் ஒன்றுதான்’ எனும் கதையும் ‘யாருகிட்ட’ எனும் கதையும் மையப் பொருண்மையில் பணம் தான் என்றாலும் இரண்டிலும் இமயம் அளவு வேறுபட்டுள்ளது. 
முதல் கதையில் மதியை மயக்கச் செய்யும் பொருளை வைத்து இருப்பதும் தவறு.  அதனால் எண்ணற்ற செல்வங்ளைப் பெறுதலும் தவறு. காரணம் உழைப்பில்லாச் செல்வம் சோம்பேறியாக்கும். உழைப்பில்லா வருமானம் தீது என்பதுடன் அவற்றைத் தனக்காகப் பயன்படுத்தாது மக்களுக்காகப் பயன்படுத்துவதே சாலப் பொறுத்தமாகும் என்கின்றது கதை.  இரண்டாம் கதையில் தான் கொடுத்த பணமட்டுமல்லாது அதோடு வட்டியையும் பெறத்துடித்தால் அதனை அனுபவிக்க இப்புவியில் இருக்காது இறப்போம் எனப் பணத்தின் இயல்பை விவரித்துள்ளது.  அதுமட்டுமின்றி பேராசைக்காரனோடும் எதையும் வியாபார நோக்கோடு பார்ப்பவனோடும் மது அருந்துபவனோடும் இணக்கம் வைத்தால் புகழும் உயிரும் அழியும் எனும் நீதியை குழந்தைகளுக்கு உணர்த்துகிறார் அரு.வி.சிவபாரதி.


இயற்கையை மதித்தல்
         

          ‘அதிசயக் கண்ணாடி’  எனும் கதையில் ஜப்பான் நாட்டு அரசர் தற்பொழுது இருக்கும் சிறிய மாளிகையைவிட்டு பெரிய மாளிகைக்குச் செல்ல நினைக்கிறார்.  ஆனால் தன் பழைய மாளிகையில் உள்ள எட்டு முகம் கொண்ட கண்ணாடியில் வாழும் சூரிய அரசி உத்தரவு தராமல் இருக்கிறாள்.  அவளை மீறி புதிய மாளிகைக்குச் சென்றால் சூரிய அரசி துன்பம் தருவாள் என நினைக்கிறார்.  அதனால் உண்டான வருத்தத்தைத் தன் மகளான இளவரசியிடம் கூற சூரிய அரசி எட்டுமுகக் கண்ணாடிக்குள் வந்த கதையைக் கூறுமாறு சொல்கிறாள்.  சூரிய அரசியின் தம்பி சோமாஹங் தீயவன். ஒருநாள் கடவுளுக்கு சூரிய அரசி உள்ளிட்டவர்கள் ஆடை நெய்து கொண்டிருக்கும் பொழுது இறந்த குதிரையின் உடலை மேற்கூரையிலிருந்து தள்ளிவிட அதனால் ஒரு நெசவாளி இறந்து விடுகிறான்.  இதைக்கண்டு பயந்து போன சூரிய இளவரசி பாறை ஒன்றில் மறைந்து கொள்கிறாள்.
 இதனால் உலகம் பனியால் உறைகிறது.  உயிர்கள் இறக்கின்றன.  இதனை உணர்ந்த சிந்தனைக் கடவுள்,’ சேவல்கள் கூவட்டும் அவள் இருக்கும் இடத்தில் எட்டுமுகக் கண்ணாடியை வையுங்கள்’ எனக் கட்டளையிட, சேவல் ஒலி கேட்டு அவள் வெளிவந்தவுடன் எட்டுமுகக் கண்ணாடி பட்டு பளபளக்கிறாள். இவளைக் கண்ட ஆற்றல் கடவுள் உடனே அவளை பாறையில் இருந்து இழுத்து உலகிற்கு ஒளிதந்து நெல்லை விளைவிக்கிறாள்.  இன்று வயதான அவள் இக்கண்ணாடியில் வாசம் செய்து நெற்கதிர்களை வாழவைக்கிறாள் என்று முடிகின்றது. இதைத்தான் பேட்சு எனும் ஆசிரியர் நினைக்கும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம் என்கிறார். 
         

         ‘மந்திரமும் கழுதையும்’ எனும் கதையில் மந்திரக் கோலை வைத்திருந்த தேவதை பூங்காவில் ஓய்வெடுக்கிறாள். மறதியில் மந்திரக் கோலை விட்டுவிட்டு வீடு வந்தடைகிறாள்.  பின்னர்தான் மந்திரக் கோலை விட்டு வந்ததை உணர்ந்து மீண்டும் பூங்காவை அடைகிறாள்.  அந்தக் கோல் காணாமையினால் பத்திரிகையில் விளம்பரம் தர பத்திரிகை ஆசிரியரை அணுகுகிறாள்.  இவள் கூறியதைக் கேட்ட ஆசிரியர் இதுபோன்ற மூடத்தனத்தை என் பத்திரிகையில் விளம்பரமாகத் தர இயலாது என மறுத்து விடுகிறார்.  வேறு வழியில்லாத தேவதை மீண்டும் பூங்காவுக்கே வர அங்கே மந்திரக்கோலை வைத்திருக்கிறாள் ஒரு சிறுமி.  அப்போது அவள் ஒரு  மாமரத்திடம் பலாப்பழம் தருமாறு வேண்டுகிறாள்.  இதைக் கண்ணுற்ற தேவதை அச்சிறுமியிடம், மாமரத்திடம் இப்படித் தவறாகக் கேட்பது இயற்கையை அவமதித்தல் ஆகும் எனக் கூறி அவளைச் சினந்து மந்திரக் கோலைப் பெற்று மாம்பழத்தை வேண்டி அச்சிறுமியிடம் கொடுத்து அனுப்புகிறாள். 
         

       ஜப்பானியர்கள் தொலைந்த ஒரு பொருள் குறித்துப் பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டும் எனும் அறிவினைக் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும் என்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றனர்.  அத்துடன் மூடத்தனத்திற்கு எதிராகவும் பத்திரிகைகள் உள்ளன என நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என இக்கதை உணர்த்துகிறது. ‘மந்திரமும் கழுதையும், அதிசயக் கண்ணாடி’ எனும் இரு சிறுகதைகளும் இயற்கையை மதித்தல் வேண்டும் எனும் அடிப்படைப் பண்பினை வலியுறுத்தியிருப்பதைக் காண முடிவதுடன் சிந்தனை, ஆற்றல் என அனைத்தையும் கடவுளாகப் படைக்கப்பட்டதையும் உணர முடிகின்றன.   

       நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமையும் சிறுகதை, ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டிய சிறுகதை, பொருந்தாத வேண்டாத வலிந்து வராத சிறுகதை, வாழ்க்கையின் பல கோணங்களை உணர்த்தும் சிறுகதை, நீதி மற்றும் அறத்தின் காரணமாக அமையும் சிறுகதை என மேற்கண்ட ஐவகை உணர்ச்சிகளுடைய சிறுகதை இலக்கியம் நெடிது வாழும் என்பார் மு.வ. 


ஆணவம் கூடாது

     புத்தமதத்தில் ‘ஜென்கதைகள்’ உலகம் முழுக்கப் புகழ் பெற்றவையாகும்.  அதுவும் ‘ஒருசொல்’ என்பது மிகவும் பிரபலமானது.  ஞானநூலையும் உலகு இயல்பையும் ஒருங்கே குறைவறக் கற்ற ஞானகுரு இறந்து போகும் தருவாயில் இருக்கும்பொழுது அவரிடம் பயிற்சி பெற்ற சீடர்கள் ஒரு சொல் கேட்பது பெருவழக்கு.  அந்த குரு வாய் திறந்து ‘ஆ. ..‘என்று காட்டி மூடிய பின்னர் என்ன தெரிந்தது எனக் கேட்பார். நல்லறிவு வாய்ந்த சீடர்கள் குருவே! நா தெரிகிறது என்பர். அவ்வளவுதான் என்பார் குரு.  இதன் உட்பொருள் யாதெனில் பல் குறிப்பிட்ட வயதில் முளைத்து ஒரு குறிப்பிட்ட வயதில் விழுந்து விடும். ஆனால் ‘நா’ என்பது நாம் இருக்கும் வரையில் அதுவும் இருக்கும்.  எனவே சொல்லைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.  நா வளைகிறது என்பதற்காக ஆணவத்தில் பேசுவது தவறு என்பது ஞானி உணர்த்தும் கருத்தாகும்.  இதை உணர்ந்தவரே ஞானநிலையை அடைந்தவர் ஆவர். 

       அவ்வாறு இல்லையெனில் அவர் அஞ்ஞானிகளே என்கிறது ஜென்.
டாங் பரம்பரையைச் சேர்ந்தவன் லீ ஜில் மன்னன். கர்வம் மிக்கவன்.  இவன் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் உரோசிமா ‘தாரோ’ என்ற அறிஞர் இருந்தார்.  தான் மட்டுமே அறிவில் சிறந்தவன் என நினைத்துக் கொண்டிருந்த லீ ஜில் ஒரு நாள் உரோசிமா தாரோவின் திறமையை உணர்ந்து அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தான்.  உம்முடன் நான் வாதப்போர் புரியவே வந்தேன். எனை யாரும் ஏமாற்ற முடியாது. உடனே வாதப்போருக்கு வருக என வம்பிழுத்தான்.  உடனே உரோசிமா உங்களோடு வாதப் போர் புரிய வேண்டுமானால் என் மந்திரப் பையை எடுத்துவரவேண்டும்.  அதைக் கொண்டே உமை வெல்வேன். எனவே, என் வீட்டிற்குச் செல்ல உம் குதிரை வேண்டும் என லீ ஜில்லின் குதிரையைப் பெற்றுக் கொண்டு பறந்து விட்டார். அதென்ன மந்திரப்பை என்ற யோசனையில் ஆழ்ந்து மதியம், மாலை, இரவு என நெடுநேரம் காத்திருந்த பின்னரே தன்குதிரையைக் கொண்டு சென்றதன் மூலம் தன்னை ஏமாற்றி முட்டாளாக்கி விட்டார் என்று உணர்ந்து தோல்வியை ஏற்று அரண்மனை திரும்பியவன் கடைசிவரை தன் வாயைத் திறக்கவில்லை.
‘கூடைநிறையப்பொய்’ எனும் சிறுகதையில் செல்வந்தன் ஒருவனுக்கு ஏழைப்பணியாளர் தான் சமைத்த கோழியையும் திராட்சை ரசத்தையும் கூடையில் வைத்துப் பரிசாகக் கொடுத்தான். உடனே அங்கிருந்த வேலைக்கார ஏழைச்சிறுவனிடம், ‘இதை என்வீட்டில் கொடு இக்கூடையில் உயிருள்ள வாத்தும் பாட்டிலில் விசமும் உள்ளன’ எனப்பொய் கூறினார். திறந்தால் பறந்து விடும் குடித்தால் இறந்து விடுவாய் என புத்திசாலித்தனமாகக் கூறுவதாக நினைத்து அச்சிறுவனை அனுப்பினார். தன் வேலையை முடித்துவிட்டு தன் இல்லம் வந்த செல்வந்தன் இரவாகியும் அச்சிறுவன் வராததைக்கண்டு அவன் வரும் பாதையின் எதிரே சென்றார். அச்சிறுவன் மரத்தடியில் உறங்குவதைப் பார்த்து கோபத்தில் உதைத்து உன்னிடம் கொடுத்த கூடை என்னவானது என வினவ, புத்திசாலிச்சிறுவன் அய்யா நீங்கள் கூறியது போல நடந்துவிட்டது. ஆர்வத்தில் நான் கூடையைத் திறந்தவுடன் வாத்து பறந்து விட்டது. என்னைத் தண்டிப்பீர்கள் எனப்பயந்து உயிர்துறக்க விசத்தைக்குடித்தேன். உயிர் பிழைத்ததை என்னால் நம்பமுடியவில்லை என்றதும் உண்மையை மறைத்ததால் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமல்லாமல் எதுவும் கேள்வி கேட்கமுடியாதபடி தன்வாயாலேயே தான் ஏமாறியதை உணர்ந்தான் செல்வந்தன்.


முடிவுரை

     கதைகள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துவனவாகவே இருக்கும். காரணம் இதன் அடிப்படைப்பண்பு அறம் என்னும் அடிநாதம் என்பதாலேயே அவ்வாறு அமைகின்றன. எனவே நாடும் மொழியும் இயற்கைச் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும் எனப் பல்வகையான கூறுகள் ஒரு கதை அமைவதற்கான காரணிகள் இருக்கின்றன.
ஜப்பானியச் சிறுகதைகளில் அறத்தை, அது கூறுகின்ற விதத்தை நுணுகி ஆராயும்பொழுது அந்நாட்டு மண்ணுக்கே உரிய தன்மையான பிரார்த்தனையை விட வேலைதான் முக்கியம் என உணர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இயற்கையை மதித்தலும், சிந்தனையையும் ஆற்றலையும் கடவுளாக்குவதும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பற்ற பொருள் காணாது போய்விடின் அதுகுறித்துப் பத்திரிகையில் செய்தி வெளியிடவேண்டும் என்ற அறிவார்ந்த பண்பை ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் உணர்த்தியுள்ளன. 


பார்வை நூல்

1.ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள் – அரு.வி.சிவபார்வதி,  ஜீவா பதிப்பகம்,  முதல் பதிப்பு – 2021.


2.இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன், ப.209.


3.மேலது, ப.217.


4.மேலது, ப.209.


5.இலக்கியத் திறன், டாக்டர் மு.வ. ப.71.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப்பேராசிரியர்

விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி

திண்டல், ஈரோடு – 638 012.

 

Leave a Reply