Greatness of Raama Naamaa in Kamba Ramaayanaa|Dr.G.Mangaiyarkkarasi

Greatness of Raama Naamaa in Kamba RamaayanaaDr.G.Mangaiyarkkarasi
Abstract        
          We can worship God in any form as we desire. There is no hard and fast rule to worship the Almighty in a specific causeway. It is not only the simplest way of worship, but it also enables an act of repetition  of the holy name of God in our mind, no matter wherever we are. ‘Rama’ is the main sacred mantra. Kambar says that it is the root and source mantra for the entire Universe, since it is chanted by every living being in this World. He also says that whoever recites that mantra will experience the whole concept with a unique blessing that gives him the complete self.  All souls which are desirous of attaining the eternal and permanent wealth of salvation recite the holy name of Lord Rama. Recitation of the God’s name is nothing but a continuous chanting of Lord’s Divine name with our mind prevailing in itself.  It is quite simple. By chanting the two letter word Rama, that word Rama itself will always bestow all blessings and wealth in this very birth. And along with this name of Rama, immoral behavior and evil deeds will be destroyed and may disappear forever. Even our Birth and death will cease to exist. Those who recite the Rama story without forgetting the same will also reap the benefits from the delicious food, fertile land, and healthy cattle given on  Alms or Charity. Kambar has mentioned in his Ramayana that they will also benefit from other alms that are mentioned in the religious literary scriptures. Noble Saint Vashishtar quotes that if any one  keeps on rendering the name of Rama, he can visualize that very word Rama will eradicate the hazardous happenings in his life.  Hanuman, Sambhati, Lakshmana, Vali, Dasharatha, Sage Sarabangamunivar, Shabari, Jadayu, Sita, Swayamprabha, and Prahlada were freed from the miseries of their life and attained an enlightened happiness by chanting the Name of Rama only. Therefore, let us also chant the Divine Name of God in order to gain all prosperities  in our life.

Key words: Almighty the Lord, Appellation or Name, Hazards, Sage Sarabangamunivar, Shabari, Jadayu, Sita, Suyam Prabha


“கம்பராமாயணத்தில் ராம நாமத்தின் பெருமை”

ஆய்வுச்சுருக்கம்
     இறைவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். இப்படித்தான் வழிபடவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அவ்வாறு வழிபடுவதில் மிக எளிமையானது மட்டுமல்ல எந்த இடத்தில் இருந்த போதிலும் இறைவனின் திருப்பெயரை மனத்தில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வதே நாமசெபமாகும். ‘ராம’ என்பது தலைமையான மந்திரம். உலகத்தவர் அனைவராலும் செபிக்கப்படும் ஆதலால் உலகெல்லாம் மூலமந்திரம் என்கிறார் கம்பர். அம்மந்திரத்தைச் செபித்தவர் முழுவதையும் அனுபவிப்பர் என்பதை முற்றும் தம்மையேத் தமர்க்கு நல்கும் தனிப்பெரும்பதம் என்கிறார். என்றும் அழியாது நிலையான மோட்சமாகிய செல்வத்தையும் விரும்பும் ஆத்மாக்கள் யாவும் இராமபிரானுடைய திருநாமத்தை ஓதுகின்றன.  நாமஜெபம் என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ச்சியாகச் சொல்லுதலாகும். இது மிகவும் எளிமையானது.ராம என்னும் இரண்டு எழுத்துக்களைச் சொல்வதனால், அந்த இராமன் இப் பிறவியிலேயே எப்போதும் எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருள்வான். அத்துடன் இராம என்பவர்களுக்குத் தீச்செயலும் தீவினையும் அழிந்து மறையும். பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்துவிடும்.நிலைத்து நிற்கும் இராமகாதையை மறவாமல் பாராயணம் செய்பவர்கள் அன்னதானம்,சிறந்த பூதானம்,கோதானம் ஆகிய தானங்களின் பயனும், அறநூல்கள் கூறும் வேறுதானங்களின் பயனும் அடைவார்கள் என்று கம்பர் தம் இராமாயணத்தில் காப்பிலேயேக் கூறியுள்ளார். வசிட்டர் கூறுவதாவது இராமன் பெயரைச் சொன்னால் வாழ்வில் ஏற்படும் இடர்களைக்களையும் என்கிறார். அனுமன், சம்பாதி, இலட்சுமணன், வாலி, தசரதன், சரபங்கமுனிவர், சபரி, சடாயு,   சீதை, சுயம்பிரபை, பிரகலாதன் ஆகியோர் இராமநாமத்தைக் கூறியதால் வாழ்வின் துன்பங்களைக் களைந்து இன்பம் பெற்றனர். எனவே நாமும் இறைவனின் நாமத்தை சொல்லி வாழ்வில் ஈடேறுவோம்.

கருச்சொற்கள்:
இறைவன், நாமம், இடர் களையும், சரபங்கமுனிவர், சபரி, சடாயு,   சீதை, சுயம்பிரபை.

முன்னுரை
        இறைவனை விட இறைவனின் நாமத்திற்கு சிறப்பு அதிகம். இறைவன் பல்லாயிரம் பெயர்களைக் கொண்டவன். அந்த இறைவனின் நாமத்தைத் தொடர்ந்து எப்போதும் நாம் உச்சரிப்பதன் மூலம், ஆன்மீக முன்னேற்றம், மன அமைதி மட்டுமல்லாமல், இறைவனின் அருளையும் பெறலாம். நாமஜெபம் என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ச்சியாகச் சொல்லுதலாகும். இது மிகவும் எளிமையானது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யக்கூடியவை ஆகும். நாரதர், சுகப்பிரமம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதி காலத்தில் இறைவனின்  நாமத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்தார்கள். ஆயிரம் நாமங்களால் துதிக்கப்படும் பரம்பொருளை அவரவர்க்கு விருப்பமான நாமத்தைச் சொல்லிஅழைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இராமநாமத்தின் பெருமைகளைப் பல இடங்களில் கம்பர் பேசுகிறார்.கம்பராமாயணத்தில் கம்பர் கூறும் இராமநாமத்தின் பெருமைகளை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

இராமநாமத்தின் பெருமைகள்
      கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் காப்பும் கம்பன் புகழும் என்ற தலைப்பில் ராம எனும் இரண்டு எழுத்துக்களைச் சொல்வதானால், அந்த இராமன் இப்பிறவியிலேயே எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருள்வான். அத்துடன் ராம என்பவருக்கு தீச் செயலும், தீவினையும் அழிந்து மறையும். பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்துவிடும்.     

“நன்மையும், செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுதினால்”  (காப்பும் கம்பன் புகழும் 13)
இறக்கும் காலத்தில் ராம என்று சொல்பவர்கள் யாராயிருந்தாலும் தேவலோகத்தை அடைவார்கள் என்பது உறுதி. எனவே குற்றமற்ற இராமாயணம் எனும் பெரும் கதையைக் கேட்பவர்கள் வைகுந்தம் அடைவார்கள் என்பதைத் தனியே எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ.

1.வசிட்டர்
        இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணியபோது வசிட்டர், இராமனது அருமை பெருமைகளைக் கூறுகிறார். இராம எனச் சொல்ல பேரிடர் யாவும் நீங்கும் என்கிறார்.

” வாரம் என் இனிப் பகர்வது? வைகலும் அனையான்
போரினால் வரும் உடையூறு பெயர்கின்ற பயத்தால்
வீர, நின்குல மைந்தனை, வேதியர் முதலோர்
யாரும், யாம் செய்த நல்அறப் பயன் என இருப்பார்”      (அயோத்தியாக்காண்டம்- மந்திரப்படலம் 38)
2.அனுமன்
     கடல் தாவு படலத்தில் சீதை இருக்கும் இடம் எது என்பதைத் தேடிச் சென்ற அனுமனுக்குக் கடலில் மைந்நாக மலை, சுரசை ஆகியோர்களால் இடர்பாடு ஏற்பட்டது. அங்காரதாரையால் ஏற்பட்ட கடுமையான துன்பங்கள் இடையே ஏற்படுகின்றன. கெடுதல் இல்லாத அறத்தை நினைக்காத தெளிவில்லாத அரக்கர்கள் செய்கின்ற தீமைகள் அனைத்தும் தீரவும், அவற்றைக் கடந்து உய்யவும் ஏற்ற வழி இங்கு உள்ளது இராமன் என்ற சொல்ல எல்லாத் துன்பங்களும் நீங்கும். அதைத் தவிர வேறு வழி இல்லை என்று நினைத்து அனுமன், இராம நாமத்தை உச்சரிப்பதையே உறுதியாகக் கொண்டான்.

“ஊறுகடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா
தேறல்இல் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை எங்கு உள்ளது இராமா என எல்லாம்
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான்”  (கடல் தாவு படலம் 88)
    இந்திரசித் பிரம்மாத்திரம் ஏவ, இலட்சுமணன் உள்ளிட்ட அனைத்து வானர வீரர்களும் உணர்வு இழந்தனர். உணர்விலர். அந்த நிலையிலும் அனுமன் உதட்டில் ராம நாமமே இருந்தது.

3.சம்பாதி
         இவர் கருடனின்  தம்பியான அருணனின் மகன். சடாயுவின் அண்ணன். சம்பாதியும், சடாயுவும் சிறு வயதில் தாம் பெற்ற அபாரசக்தியை அனுபவித்துக் கொண்டு ஒருநாள் ஆகாயத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சடாயுவைக் கொளுத்தி விடும் போலிருந்தது. சம்பாதி தனது சிறகுகளை விரித்து சடாயுவைக் காப்பாற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்று .சம்பாதி பறக்கமுடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பறக்கமுடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். சூரியனின் வெப்பத்தினால் கருகி தீய்ந்து போன சிறகுகள் சம்பாதியின் மேனியிலேயே மீண்டும் வளர, வானர வீரர்கள் ராம நாமத்தை ஓதுகின்றனர். சீதையைத் தேடி வந்த வானர வீரர்கள் ராம நாமத்தைப் பாடப் பாட சம்பாதியின் சிறகு கண் முன் வளர்ந்தது.

“எல்லீரும் அவ் ராம நாமமே
சொல்லீர் சொல்ல எனக்கோர் சோர் விலா
நல்லீரப் பயன் நண்ணும் நல்ல சொல்
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர்”  (சம்பாதிப்படலம் 986)
         
     தரையில் விழுந்த என்னைக் கண்ட சூரியன் மிக்க கருணை கொண்டு சனகனின் மகளான சீதை, இராமனை விட்டுப் பிரிவதால் அவளைத் தேடும் பொருட்டாக அங்கே வரும் வானர வீரர்கள் உன்னைக் கண்டு, இராமன் பெயரை மனதில் எண்ணி உச்சரிக்கும்போது, முன் போலவே சிறகுகளைப் பெற்று பறந்து செல்வாய் என்று உரைத்தான் என்பதை சம்பாதி வானர வீரர்களிடம் கூறினான்.

4.இலட்சுமணன்
       இந்திரசித் வதைப் படலத்தில் திவ்ய அஸ்திரங்களை நீ உபயோகிக்கக்கூடாது என்று இராமன் கூறியபடியினால் இலட்சுமணன், இந்திரசித்தின்மேல் அம்பைவிடும் போது, இராமன் என்னும் நல்லறமூர்த்தி வேதங்களால் மட்டுமே ஆராய்ந்து அறியத்தக்க வேதங்களைக் கற்றவர்களாலே வணங்கத்தக்க பரம்பொருள் என்பது உண்மையானால் பிறை போலும் வளைந்த பற்களையுடைய இவனைக் கொல்க எனச் சொல்லி, இலட்சுமணன் தன் வலிமை முழுவதும் காட்டி, லில்லின் நாணை இழுத்து வளைத்து ஒரு பிறைச்சந்திரன் போன்ற அம்பினைச் செலுத்தினான். அதனால் இந்திரசித் தலையை வெட்டி வீழ்த்தியது.
 
“மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற்பால
இறையவன் இராமன் என்னும் நல் அறமூர்த்தி என்னின்
பிறை எயிற்று இவனைக் கோறி என்று ஒரு பிறை வாய் வாளி
நிறைஉற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான்” (இந்திரசித் வதைப் படலம் 3107)
5.வாலி
        வாலி மேல் இராமன் செலுத்திய அம்பு தாக்கியது. யார் தன் மேல் அம்பினை இட்டது என்று தெரிந்து கொள்ள வாலி போராடினான். மூன்று உலகங்களுக்கும் முக்கிய மந்திரமாக உள்ளதும், தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தம்மையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவதும், இப்பிறவியிலேயும் இனி வரும் ஏழு பிறவி என்னும் நோய் வராது, நான் தனியே தடுக்க வல்ல உயர்ந்த மருந்து போன்றதுமான இராம என்ற சிறப்பு பொருந்திய பெயரைத் தன் கண்களால் அந்த அம்பிலே வாலி கண்டான்.

“மும்பை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்”  (வாலிவதைப்படலம் 305)
6.விசுவாமித்திரர்
      குலமுறை கிளத்துப் படலத்தில்  விசுவாமித்திரர், இராமன் குறித்து ஜனகரிடம் கூறும் போது, உலகில் பரவிய பாவங்கள் செய்த கொடுமையான தீய செயல்களாலும், அரிதான எல்லையற்ற வேதங்கள் விளங்கும் தர்மங்கள் செய்த அறச்செயல்களாலும், சிவந்த கோவைப் பழம் போன்ற வாயை உடைய கௌசல்யா தேவி பெரிய தோள்வளைகளை அணிந்த கைகளையும் ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவத்தையும், கருங்கடல் போன்ற நிறத்தையும் உடைய இந்த இராமனை ஈன்றெடுத்தாள் என்று கூறுகிறார்.                          
 
“இருங்கடகக் கரதலத்து இவ் எழுத அரியதிருமேனிக்
கருங் கடலச் செங்கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்”  (குலமுறை கிளத்துப் படலம் 605)         
கார்முகப் படலத்தில் இராமன் வில்லை முறித்த செய்தியை சீதையினுடைய தோழி நீலமாலை கண்டு வந்து சீதையிடம் கூறுகிறாள். இவன் மராமரங்கள் என்று சொல்லத்தக்க தோள்களை உடையவன். பாம்பணையில் துயிலும் பரந்தாமனோ என்று ஐயுறச் செய்யும் ஆற்றலை உடையவன். அவன் பெயர் இராமன். அவன் தன் தம்பியோடும், போற்றுதலுக்குரிய விசுவா மித்திரனோடும் நம் நகருக்கு வந்துள்ளான் என்று கூறினாள்.

7.தசரதன்         
        தைல மாட்டுப் படலத்தில் தசரதன் மீண்டும் தனது தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து இராமன் தூரத்தே இருக்கின்றானா? அண்மையில் இருக்கின்றானா? என்று கேட்டான். சுமந்திரன், இலட்சுமணனும் மிதிலைத் திருமகளான சீதையும் உடன் வர இராமன் மூங்கில்கள் ஓங்கிய காட்டுக்குள் சென்றான் என்று கூறினார். அவ்வாறு கூறிய போதே தசரதன் உயிர் நீத்தான்.   
 
“வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்” (தைலமாட்டுப் படலம் 583)
8.சரவங்க முனிவர்
          இவர் இராமனின் திருவருளால் மானிடப்பிறவி நீங்கி வீடுபேறு எய்தினார். ’சரபங்கன்’ என்ற பெயர் ’மன்மதன் எய்தும் காமபானங்களைத் தோல்வியுறச் செய்தவன்’ என்று பொருள் கொண்டது. மேலும் ’காமம்,வெகுளி, மயக்கம் ஆகியவற்றையும் ஒழித்தவன்’ என்றும் இதனால் உணர்த்தப்பெறும். இராமனின் பெயரை உணர்ந்து உள்ளத்தில் நினைப்பவர்கள் அடையும் பேறு மிகவும் உயர்ந்தது எனில், அப்பெயரை ஒலித்து உருஏற்றுபவர்கள் அடைகின்ற பேறு அதனினும் உயர்ந்தது. இராமனையே நேரில் கண்டு போற்றியவர்கள் அடையும் பேற்றைச் சொல்லுதல் எளிதோ. எல்லா அண்டங்களையும், அவற்றில் உள்ள நிலையியல்-இயக்கியல் ஆகிய பொருட்கள் அனைத்தையும், அறிவினால் அறிய முடியாத முறையில் உண்டு தனது வயிற்றில் அடக்கியவனான இராமனது ஆயிரம் திருநாமங்களில் ஒரு நாமத்தை அறிபவர் அடைகின்ற பேறு, அண்டத்திற்கும் எட்டாத அளவு பெரியது ஆகும். அவ்வாறானால், உடலைவிட்டு உயிர்ப் பிரியும் நேரத்தில் அந்தப் பரம்பொருளை நேரில் கண்டவர் அடையும் பதவி இவ்வளவு சிறப்புடையது என்று எண்ணிப் பார்ப்பதற்கு எளியதோ அன்று.
 
“அண்டமும் அகிலமும் அறிவுஅரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ”  (சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 115)

  இராமனைக் காண்பதற்காகவே காத்திருந்ததாகவும், கண்டதால் தாம் கடைத்தேரிவிட்டதாகவும் தன்இருவினைகளும் அழிந்து போனதால் இனி உலகில் செய்யத்தக்க செயல் எதுவும் தனக்கு இல்லை என்கிறார். இவர் இராமன் அனுமதியுடன், அவர் கண்முன்னே தன் மனைவியுடன் தீக்குளித்து மனிதப்பிறவி, கடந்து இறைவனின் திருவடியை அடைந்தார். இராமநாபத்தை செபித்துக் கொண்டே தன் இன்உயிர் நீத்தார் என்று கம்பராமாயணம் கூறுகிறது.

9.சபரி
        சபரி பிறப்பு நீங்கு படலத்தில் மதங்க முனிவரது சீடர் சபரி இறைவனை நினைத்து மேற்கொண்ட தவத்தால் அவளுக்கு நற்பயன் கிட்டியது. சீதையைத் தேடி வரும் வழியில் இராம இலட்சுமணர்கள் சபரியைக் கண்டனர். அப்போது சபரி, ’என் தந்தையே, சிவனும், பிரம்மனும் தேவர்கள் யாவரும் இந்திரனும் இங்கு வந்து, என்னை மகிழ்ச்சியுடன் பார்த்து உனது மாசற்ற தவத்துக்கு முடிவாக நீ சித்தி பெரும் காலம் நெருங்கிவிட்டது. இராமன் இங்கே வருவதை எதிர்பார்த்திருந்து, வரும்போது அவனுக்கு உரிய உபசாரங்களை விரும்பி செய்து, பிறகு என் உலகத்துக்கு வருக என்று கூறிச் சென்றார்கள்’. என் தந்தையே நீ இங்கு வரப்போகிறாய் எனும் செய்தி என் மனதில் பெருந்த மகிழ்ச்சியுடன் உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால் இன்று தான் என் தவம் பலித்தது என்று சபரி கூறினாள்.  இராமன் அறிய தவத்துக்குரிய அவளை அன்போடு பார்த்து, தாயே வழிநடையால் உண்டான எங்களது வருத்தத்தை உன் உபசரிப்பால் தீர்த்து விட்டாய், நீ வாழ்வாயாக என்று கூறினார். சபரி மெய் வருத்தி செய்து பெற்ற தவத்தின் பயனாலே, தனது உடம்பை விட்டு நீங்கி, அந்த ஒப்பற்றதான மோட்ச உலகத்தை அடைந்தாள். அதைக் கண்ட இராம இலட்சுமணர் அளவிட்டு கூறமுடியாத வியப்படைந்து தன் அழகிய திருவடிகளில் கட்டிய வீர கழல்கள் ஒலிக்கும்படி சபரி கூறிய வழியில் சென்றனர்.

“பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து தான் அத் தனிமையின் வீடு சார்ந்தாள்” (சபரி பிறப்பு நீங்கு படலம் 1190)
      இராமனையே நினைத்து எப்போதும் அவன் பெயரையே மந்திரமாகச் சொல்லிக்கொண்டிருந்ததால் சபரிக்கு மோட்சம் கிடைத்தது (10). ஜடாயு உயிர் நீத்த படலத்தில் வேதங்களும் பார்ப்பதற்கு அரியனவாகி அவற்றுக்கு எட்டாமல் அப்பால் நின்றபடியே மறைந்து போகின்ற மாவீரனாகிய திருமாலின் அவதாரமான இராமனுடைய திருவடிகளை ஜடாயு தன் கண்களால் தரிசித்தான். தரிசித்தபடியே பெரிய வடிவங்களைக் கொண்ட ஐம்பெரும் பூதங்களும் அழிந்து போகின்ற ஊழியின் முடிவு காலத்திலும் அழியாமல் நிலைக்கும் உலகமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்தான். சடாயு, இராமனைப் பார்த்தபடியே தன் உயிர்நீத்தான்.

11.சீதை
         காட்சிப் படலத்தில் சீதை பிறந்ததால் குடிப் பிறப்பு என்பதும், பெண்மை என்பதும் பிறர் தம்மை விரும்பும்படி தவம் செய்து உயர்ந்தன. இவற்றைப் போலவே நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து உயர்ந்தது. சீதை இங்கே தன் கணவனான இராமனையே நினைத்துத் தவம் செய்கின்ற முறைகளை எல்லாம் தன் செந்தாமரை கண்களால் பார்ப்பதற்கு இராமன் தவம் செய்யவில்லையே என்று அனுமன் மனதிற்குள் நினைத்தான்.

“பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம்
நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றிலன் அவன் கமலக்கண்களே” (காட்சிப் படலம் 401)
        உரு காட்டுப் படலத்தில் இராவணன் மிரட்டியதால் வருந்திய சீதை தன்னுயிரை விட, குருக்கத்தி மரத்தில் தூக்கிட்டு உயிர்விட எத்தனித்த போது, அனுமன் தேவர்களின் தலைவனான இராமன் அனுப்பிய தூதன் நான் என்று கைதொழுதவாறு சீதையை வணங்கினான். அப்போது சீதை, வந்தவன் அரக்கனோ என்ற ஐயத்தில் அவன் அரக்கனானாலும் ஆகட்டும். தேவனானாலும் ஆகட்டும் அல்லது குரங்கினத்தின் தலைவன் ஆனாலும் ஆகட்டும். இவனால் ஏற்பட போவது கொடுமையானாலும் ஆகட்டும். நன்மையானாலும் ஆகட்டும். இங்கே என் எதிரில் வந்து, என் தலைவனான இராமனின் திருப்பெயரை உரைத்து உணர்வை உருகச் செய்து, பிரிய இருந்த என் உயிரை மீட்டுத் தந்தான் இதைவிட ஒருவன் செய்யத்தக்க உதவி உண்டோ என்று நினைத்தாள். (இராமன் கொடுத்தனுப்பிய கணையாழியை) அனுமன், சீதையிடம் தருக மீண்டும் பல வகையான அடையாளங்களை, வேறு சொற்களைச் சொல்ல வேண்டியதில்லை, என் பெயர் பொறித்ததும், சிறந்த வேலைபாடு உடையதுமான மோதிரத்தை நேரே அவளிடம் காட்டு என்று கூறி தன் மோதிரத்தை என்னிடம் கொடுத்தான் என்பதை சொன்ன அனுமன் தன் நீண்ட கைகளால் ஒரு ஒப்பற்ற மோதிரத்தை எடுத்து காட்டினான்.(இராமனின் பெயர் பொறித்த மோதிரம்)
திருவடி தொழுத படலத்தில் சீதை குறித்து அனுமன், இராமனிடம் கூறும்போது, சீதையின் கண்களிலும் நீ நீங்காமல் எப்போதும் இருக்கிறாய். அவளது கருத்தில் இருக்கின்றாய். இவளது வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு சொல்லிலும் இருக்கின்றாய். அவளது இரண்டு கொங்கைகளின் சுவடுகள் மீது பெருமையும் கொடுமையும் பெற்ற மன்மதன் ஒழியாமல் எய்த மலர் அம்புகள் துளைத்ததால் ஏற்பட்ட ஆறாத புண்களிலும் நீ இருக்கின்றாய். எனவே சீதை நின்னைப் பிரிந்திருக்கிறாள் என்பது பொருந்துமா? பொருந்தாது என்று கூறினார்.
 
“கண்ணிலும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ? வாயின்       
எண்ணிலும் உளை நீ கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது       
அண்ணல் வெங்காமன் எய்த மலர் அம்பு தொளைத்த ஆறாப்                 
புண்ணினும் உளை நீ நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ“ (திருவடி தொழுத படலம் 1276)
         
          காட்சிப்படலம் அரக்கியர்களிடையே சீதையினுடைய துயரநிலை எவ்வாறு இருந்தது என்றால், சீதை, இராமனை நினைத்து அவன் இருக்கும் திசையை நோக்கித் தொழுதல், கீழே விழுதல், விழுந்த பின் எழுதல், வாய்விட்டு விம்மல், உடம்பு மிக்க வெப்பமுடையதால் அஞ்சுதல், ஏங்குதல், தளறுதல், நடுங்குதல், துன்பமுற்ற பெருமூச்சு விடுதல் கண்ணீர் சொரிதல் ஆகிய இவற்றை செய்வதைத் தவிர வேறு எதைச் செய்வதையும் அறியாதவளானாள்.

12.சுயம்பிரபை
       பிலம்புக்கு நீங்கு படலத்தில் சுயம்பிரபை, அனுமனிடம் பேசும்போது  இந்நகரிலேயே நீ தங்குக, நகரத்தைக் காக்கும் வேலை உன்னுடையதாகும் என்று இந்திரன் சாபம் விட்டதால், உடனே நான் அவனைத் தொழுது என் துன்பம் நீங்கும் நாள் எப்போது என்று வினவினேன். இங்ஙனம் நாம் வினவுமுன் இந்திரன் பெருவன்மை கொண்ட இராமனால் அனுப்ப பெறும் வானவர்கள் இங்கு வந்தால், அப்போது உன் துன்பம் நீங்கும் என்று கூறி தன் நகரத்துக்குச் சென்றான். அன்றிலிருந்து இராமன் அனுப்பும் வானரவீரர்கள் எப்போது வருவர். என் சாபம் எப்போது தீரும் என்று எண்ணியபடியே இராமநாமத்தை உச்சரித்தபடியே இருந்தாள்.

13.பரதன் -இராம நாமம்
         பரத்வாஜர், இராமனிடம் பரதனது இயல்பினைக் கூறுகிறார். விழிகள் நீர் சொரிய, தென்திசை நோக்கியே இருக்கின்றான். நந்தியம்பதிலிருந்து இராம நாமம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்கிறார்.

“இந்தியங் களைந்து இருங்கனி  காய் நுகர்ந்து இவுளிப்
பந்தி வந்த புற்பாயலான் பழம் பதி புகாது
நந்தியம்பதி இருந்தனன் பரதன் நின் நாமம்
அந்தியும் பகலும் அதனினும் மறப்பிலனாகி”  (மீட்சிப்படலம் 4065)
         
           என்று கூறுகிறார். மீட்சிப் படலத்தில் இராமன் கூறிச் சென்ற 14 ஆண்டுகள் கடந்தும் இராமன் வராததால், பரதன் தீக்குளித்து இறக்க முடிவு செய்தான். சத்ருக்கணனிடம் தீயை வளர்க்கக் கூறினான். அந்த நேரத்தில் தீயினை அணுகி தான் தீயில் விழுவதைக் குறித்துக் கூக்குரல் எழுப்பி மிக்குப் பொருந்திய பேரொலி செய்கின்ற மக்களோடு அந்தத் தீயின் எதிரில் நின்று கொண்டு அந்தத் தீயினை பூசை செய்கின்ற இராமனிடத்தில் பக்தியுள்ள பரதனிடம், அனுமன் வந்து சேர்ந்தான். அனுமன், பரதனைப் பார்த்து தலைவனான இராமன் வந்து விட்டான். மேலோன் வந்து விட்டான். மெய்மைக்கு உடல் போன்று ஆதாரமாகியுள்ள நின் உயிரைப் போக்கிக் கொள்வாயானால், அந்த இராமன் உயிர்த் தாங்கி வாழ்வானோ என்று கூறி அந்தப் பெருங்கூட்டத்தில் உள்ளே புகுந்து தன் கையால் அத்தீயைப் பிசைந்து கரியாய் ஆகுமாறு செய்தார்.

14.நமோ நாராயணாய என்ற மந்திரம்
            இரண்யன் வதைப் படலத்தில் பிரகலாதன் தன் தந்தையிடம், விரும்பியவற்றையெல்லாம் அளிப்பதும், விரும்பும் அப்பதவிகளைக் கடந்த பின்பு அழியாத பாதுகாப்புடைய வீடுப்பேற்றை அடைய செய்வதும் செம்மை நிறமுள்ள தீயிலே நெய் முதலியவற்றைச் சொறியும் ஓமத்தை உடைய வேள்வியால் சுவர்க்கம் முதலியவற்றில் செலுத்துவதும், ஒப்பும் உயர்வும் இல்லாத ஒருவனான இறைவனின் திருப்பெயரே ஆகும். அதை என்னது எனக் கூற கேட்பாயாக அது நமோ நாராயணாய என்பதாகும் என்று பிறகு அதன் தன் உரையின் சிறப்பினைக் கூறினான்.
 
“காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓமவேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய “ (இரணியன் வதைப்படலம் 171)
        பிரகலாதன் தன் தந்தையான இரணியகசிபுக்கு அறிவுரை கூறும் போது காமமும் சினமும்  முதலியனவாகக் கருதப்பட்ட தீய குணங்களையும் அவற்றின் வலிமையையும் தன்னை அடைக்கலம் அடைந்தவருக்கு விலக்கி அருளும் செயலை உடையவனான அந்தத் திருமாலின் திருப்பெயர்களின் மகிமையும், அவன் உயிர்களுக்கு வருத்தம் தராத பாதுகாத்தல் தொழிலும் எவராலும் சொல்லி முடிக்க வல்ல தன்மை உடையனவோ. ஒப்பில்லாத தன்மையுடையவனான நாராயணனை இகழ்ந்து நீ பெற்றுள்ள நல்ல, மிக்க செல்வங்களும், ஆயுளும் பெயருடன் அழிய, நிலை பெற்ற உயிரையும் இழக்கின்றாயே என்று மனம் இறங்கி அந்தப் பெருமானின் திருப்பெயரைத் துதித்து அவனை வாழ்த்தினேன் என்று விளக்கமாக இரணியனுக்கு கூறினான்.

முடிவுரை
        ராம எனும் இரண்டு எழுத்துக்களைச் சொல்வதானால், அந்த இராமன் இப்பிறவியிலேயே எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருள்வான். அத்துடன் ராம என்பவருக்கு தீச் செயலும், தீவினையும் அழிந்து மறையும். பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்துவிடும் இறக்கும் காலத்தில் ராம என்று சொல்பவர்கள் யாராயிருந்தாலும் தேவலோகத்தை அடைவார்கள் என்பது உறுதி. எனவே குற்றமற்ற இராமாயணம் எனும் பெரும் கதையைக் கேட்பவர்கள் வைகுந்தம் அடைவார்கள் என்பதைத் தனியே எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ. வசிட்டர் கூறுவதாவது இராமன் பெயரைச் சொன்னால் வாழ்வில் ஏற்படும் இடர்களைக்களையும் என்கிறார். அனுமன், சம்பாதி, இலட்சுமணன், வாலி, தசரதன், சரபங்கமுனிவர், சபரி, சடாயு,   சீதை, பரதன், சுயம்பிரபை, பிரகலாதன் ஆகியோர் இராமநாமத்தைக் கூறியதால் வாழ்வின் துன்பங்களைக் களைந்து இன்பம் பெற்றனர் என்பதைக் கம்பராமாயணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை,  
   2019.

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,    
   புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம்,   
   சென்னை,2016.

4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.

5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி  1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)
மீனம்பாக்கம், சென்னை 600061.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here