அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ததும்ப வீற்றிருந்தனர். அனேகமாக அப்புகைப்படம் குழந்தையின் முதலாம் பிறந்தநாளன்று எடுத்திருக்கிறார்கள். அடுத்தப் புகைப்படம் கோவிந்தன் வெண்மதி மகன் முத்து மகள் ஜானகியுடன் குடும்பப் புகைப்படமாக அந்தச் சுவற்றினை அலங்கரித்திருந்தார்கள். அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே மாட்டியிருந்தது. வெண்மதி தன்னுடைய மகன் மகளோடு மட்டும் இருக்கும் புகைப்படம் அது. விளக்கொளியில் அப்புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடியின் பிம்பம் அக்கூரை கொட்டகையின் நடு ஆரமாய் விளங்கும் மூங்கிலில் பட்டுத் தெறித்தது.
வெண்மதி குடும்பப்பெண். மாநிறம் கொண்ட பூங்கொடியாள். வெண்மதியின் முகத்தில் கருணையே எஞ்சி நிற்கும். அவள் முகத்தைப் பார்க்கும் எவராயினும் தலையசைத்து விழி பார்வையில் மனதைப் பறிகொடுத்தே ஆகவேண்டும். வெண்மை குணம் கொண்ட கற்புக்கரசி. பருத்திக்காட்டில் களை எடுத்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் வடிகின்ற வேர்வையை முந்தானையால் அவ்வவ்போது துடைத்துக் கொள்கிறாள். மாலை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் அவளைச் சுட்டது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்றே ஆகவேண்டும். கூலிப்பணம்தான் வெண்மதியின் குடுபத்திற்கு சோறு போடுகிறது. உடம்போ மனமோ எவ்வளவு துன்பப்பட்டாலும் வேலைக்கு ஓடிவிடுவாள். வேலையில்லாத நேரத்தில் அவள் மனம் மிகவும் வருத்தமடையும். இன்றையப் பொழுதின் கூலி போயிடுச்சே என நொந்துக்கொள்ளுவாள். வீட்டு வேலைகளையும் துய்மையாக வைத்திருப்பதிலும் ரொம்ப கவனம் கொளளுவாள். களை எடுக்க ஒவ்வொரு முறையும் மண்ணில் களைக்கொத்தினைக் கொத்தும்போதும் அழகிய பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டாள். பருத்திக் காட்டில் மனம் சிந்தையில் ஆழ்ந்து போனாள்.
“ஏலே… மதி! உம் மொவ அழுதுட்டு ஓடீயாறா… பாருடி” என்றாள் பருத்தில் காட்டில் வேலை செய்யும் கிழவி ஒருத்தி. தலை நிமிர்ந்து பார்த்த மதி கொஞ்சம் பதறித்தான் போனாள். வேகமாய் மகள் ஓடிவரும் திசையை நோக்கி நடந்தாள்.
“ஜானகி என்னாச்சுடி… ஸ்கூல்க்கு போயிட்டு உன்னையும் அண்ணனையும் வீட்டுலதான இருக்கச் சொன்னேன். இங்க ஏ ஓடியாற..” – என்றாள் மதி.
அழுது கொண்டிருந்த ஜானகி, “அம்மா… அண்ணாக்கு வயித்து வலி. அழுவுறான்” என்று தத்தித்தத்தி சொன்னாள். மதிக்கு மனசு என்னவோ செய்தது. திரும்பி நின்று வேலை செய்பவர்களைப் பார்த்தாள். வேலை செய்பவர்கள் அனைவரும் மதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மதியின் உள்ளம் அனைவருக்கும் புரிந்தது. “மதி.. நீ வீட்டுக்குப் போயி மகனை கவனி. நாங்க உன்னோடதையும் சேர்த்துக் களை வெட்டிடுறோம்” என்றார்கள். வெண்மதி வீட்டை நோக்கி ஓடினாள்.
வீட்டு வாசலில் வயிற்றைப் பிடித்தப்படி சுருண்டு படுத்திருந்தான் முத்து. மகனை அந்த நிலையில் பார்த்தவுடன் ஓடிப்போய் மகனை அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நீர்வீழ்ச்சியாய் விழுந்தது. தன்னுடைய வயிற்றில் முதலில் பூத்த பூவல்லவா! முதலில் நின்ற உதிரத்தில் உருவான கருவல்லவா! அதுதான் துடித்துப்போய்விட்டாள். அக்கிராமத்தில் உள்ள மருத்துவச்சியிடம் கூட்டிட்டு போய் காட்டுகிறாள். முத்துவின் அடிவயிற்றில் தொட்டுப்பார்த்தாள். சூடு ஆறப்பட்ட நல்லெண்ணையைக் கொஞ்சம் எடுத்து வயிற்றில் தடவி நீவி விடுகிறாள். வெந்தையத் தண்ணீயை முத்துவுக்கு ஊட்டிவிடுகிறாள்.
“ஒன்னுமில்ல வெண்மதி சூடுதான். நல்லெண்ணையைத் தடவி வெந்தையத் தண்ணியக் கொடுத்திருக்கென் கொஞ்ச நேரத்துல வலி கொறஞ்சு சரியாயிடும். வீட்டுக்கு கூட்டிட்டு போயி மோரு இல்லன்னா இளநீரு ஏதாவது கொடுத்து தூங்க வையிடி” என்றாள் மருத்துவச்சி.
வரும் வழியில் பால்கார வீட்டில் காசுக்கு மோரை வாங்கினாள் மதி. வீட்டுக்கு வந்தவுடன் மோரில் தேவையான அளவு உப்பைக் கலந்துகொடுத்து மகன் முத்துவை பாய் விரித்து படுக்கவைத்தாள். மாலை மயங்கி இரவை நெருங்கிகொண்டிருந்தது. வீட்டு வேலைகளைக் கவனிக்க மும்பரமானாள். அரிசையைக் களைந்து ஊறவைத்தாள். காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைத்தாள். விறகை வைத்து அடுப்பினைப் பற்ற வைத்தாள். உலைக்கு பாத்திரத்தை எடுக்க குடிசையின் மூலைப்பகுதிக்குச் சென்றாள். அடுக்கி வைக்கப்பட்டிருந்தப் பாத்திரத்தில் சோறு வடிக்கும் பாத்திரம் காணாமல் போயிருந்தது. சிந்தித்தவளாய் வெளியே வந்து பாத்திரங்கள் கழுவும் இடத்திலே பார்த்தாள். அங்கேயும் அப்பாத்திரம் இல்லை. அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இது தன்னுடைய கணவனுடைய வேலைதான். கணவன் கோவிந்தனைச் சமாளிப்பது என்பது வெண்மதிக்கு ஒவ்வொரு நாளும் போர்க்களத்தில் விட்ட அம்பாய் நெஞ்சில் குத்தியது. அம்பை பிடிங்கி இரத்தத்தைத் துடைத்து காயத்திற்கு மருந்து போடவேண்டும். அம்பு விட்டவனை எதிர்த்து நின்று போரிடவும் அவனின் நெஞ்சை பிளக்கவும் எங்கள் பாரம்பரியம் பெண்களுக்குச் சொல்லித்தரவில்லையே. அந்த அளவிற்கு கோவிந்தனைக் குடிப்பழக்கம் ஆட்டிப்படைத்தது. விற்றுவிற்று குடித்ததன் விளைவாக இன்று குடிசை வீட்டில் இருக்கிறான். வெண்மதியோ ஆனமட்டும் திருத்த முயற்சி செய்தாள். கோவிந்தனின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. நாலு நாள் வேலைக்கு செல்வான். அந்தக்காசை வைத்துக்கொண்டு ஒருமாதமாய் குடிப்பான். இதுல சூதாட்டம் வேற. வெண்மதிக்கு எல்லாம் பழகிப்போனது. ஆனால் இன்று உலைப்பாத்திரம் இல்லாதது அவளை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.
சமையல் செய்து ஜானகிக்குக் கஞ்சி சோற்றினை ஊற்றிவிட்டாள். முத்து வயிற்று வலி என்று மோர் மட்டும் போதும் என தூங்கிவிட்டான். பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள். தன்னுடையப் பிள்ளைகளை நினைத்து எப்போதும் பெருமை கொள்வாள். ஆறு வயதில் முத்துவும் நான்கு வயதில் ஜானகியும் வளர்ந்து நன்றாகப் படித்து செல்வசெழிப்பில் இருக்க வேண்டும் என எந்நேரமும் இறைவனை வேண்டிக்கொள்வாள். குடிசையின் கதவுகள் திறக்கப்பட்டு கோவிந்தன் தள்ளாடும் போதையில் உள்ளே வந்தான். வெண்மதி முன்னே சென்று தாங்கிப்பிடித்தாள். மதுவின் வாடை வயிற்றை குழற்றியது. அவனை அமரவைத்து சோற்றைப் பரிமாறினாள். வெண்மதிக்கு கணவன் மீது கடுங்கோபம் இருப்பினும் அந்நேரத்தில் காண்பிக்க விரும்பவில்லை.
“புள்ளைங்க.. சாப்டாங்களா மதி” – கோவிந்தன்
“முத்துவுக்கு உடம்பு சரியில்லை. வயித்துவலி ரொம்ப துடிச்சிப்போயிட்டான். மருத்துவச்சிக்கிட்ட கூட்டிட்டு போன, இப்ப பரவாயில்ல. மோரு மட்டும் குடிச்சிட்டு தூங்கிட்டான்” என்றாள் வெண்மதி
“என்ன பையன் சாப்பிடலையா?” என்று தன் தட்டில் இருந்த சோற்றை ஒரு பிடி எடுத்து தூங்கிக்கொண்டிருக்கிற மகனுக்கு ஊட்டிவிட்டான். முத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததால் அவன் உதடுகளில் பட்டு சோறு கீழே விழுந்தது. வெண்மதி கணவனைத் தடுத்துச் சரியாகச் சாப்பிட வைத்தாள். குடிசையின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
அதிகாலையில் சீக்கிரமாய் எழுந்து கொண்டாள். சமையல் முடித்து வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் போதை தெளிந்து எழுந்தான் கோவிந்தன். மதி…மதி.. என்று வெண்மதியை நெருங்கியவனுக்கு, அவள் கையில் இருந்த கரண்டியைக் கோவிந்தன் மீது எறிந்தாள். உடம்பை வளைத்துக் கரண்டியிடமிருந்து தப்பித்துக்கொண்டான் கோவிந்தன்.
“யோ.. வீட்டுல வைச்சிருந்த உலைப்பாத்திரத்தை எடுத்துட்டு போயி வித்து குடிச்சிருக்கியே.. இது நல்லாவா இருக்கு” கோவிந்தன் தலை தொங்கப்போட்டு அமைதியாய் நின்றான். “ரெண்டு புள்ளைங்க இருக்கு. அதுங்க முகத்தப் பாருய்யா.. இப்படியே நீ பண்ணிட்டு இருந்தின்னா இந்தப் புள்ளையங்களோட எதிர்காலம் என்னா ஆவுறது. அத கொஞ்சமாவுது நினைச்சிப் பாக்கிறியா..” கொஞ்ச நேரம் கோபத்தில் கத்தி முடித்தாள் வெண்மதி. சிறிது நேரத்திற்குப் பிறகு “என்னை மன்னிச்சிடு மதி” என்றான் கோவிந்தன். அப்படி என்ன மந்திரமோ தந்திரமோ… உடனே வெண்மதி உதட்டில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். கணவன் மீது பாசம் அதிகம். அவன் மீது மிகுந்த அக்கறை உடையவள். தன் முந்தானையில் இருந்து ரூபாய் முப்பதை எடுத்து கோவிந்தனிடம் கொடுத்து ரேஷன் கடையில அரிசி வாங்கிட்டு வா என்றாள். “குடிச்சிட்டு வந்துராத… வீட்டுல கொஞ்சம் கூட அரிசி இல்ல. புள்ளையங்க ஸ்கூல் போகட்டும். நீ ரேஷனுக்குப் போயிட்டு அரிசி வாங்கிட்டு வந்து வீட்டுல வச்சிட்டு அப்புறமா போ..” என்று சொல்லிவிட்டு வேலைக்காக வயக்காட்டிற்கு ஓடினாள்.
ரேஷன் கடை செல்லும் வழியில் வேப்பமர நிழலில் பிள்ளையார் கோவில் இருந்தது. சிலைக்கு முன் பகுதியில் பாகவதர் ஒருவர் ஒருசில பேருக்கு மகாபாரதக்கதையைக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது பீஸ்மரின் பிறப்பை பாடலடியோடு பாடினார். சிலைக்கும் மரத்துக்கும் பின் பகுதியில் சில ஆண்கள் ரம்மி சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். கோவிந்தன் ரேஷன் கடைக்குச் சென்று அரிசியை வாங்கி வைத்துவிட்டு இந்தப் புள்ளையார் கோயிலுக்கு வந்துவிட வேண்டும் என்று வேகமாக நடக்க ஆரமித்தான்.
அப்போது புள்ளையார் கோயிலிலிருந்து, “ஏ கோவிந்தா… எங்கடா போற” என்றது ஒரு குரல்.
“அரிசி வாங்க ரேஷனுக்குப் போறன்”
“இப்பதான் நானும் சக்கரை வாங்கலாமுன்னு போயிட்டு வந்தன். இதோ பாரு மஞ்சப்பை. கடையில ஒரேக்கூட்டம். அதுதான் திரும்பி வந்துட்டேன். கொஞ்ச நேரத்திற்குப் பின்னால போனா கூட்டம் குறைஞ்சிரும்” என்றான். அவன் பேச்சைக் கேட்டு, அப்புறமா வாங்கிக்கலாம் என்று அரசமரத்தடியில் உட்காந்தான் கோவிந்தன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கோவிந்தனும் அவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட ஆரமித்தான். ரேஷனுக்காக வைத்திருந்த முப்பது ரூபாயை பந்தையக்கட்டணமாக வைத்து ஆடினான். முதல் சுற்று ஆட்டத்தில் முப்பதுக்கு அறுபதாகக் கிடைத்து வெற்றி கிட்டியது. ஆசை யாரை விட்டது. பாகவதரின் மகாபாரதக்கதை இப்போது சூதாட்டப்படலத்தில் சகுனியின் பகடைக்காய்களைப் பற்றிக் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்தச் சுற்றில் தான் வைத்திருந்த அறுபது ரூபாயையும் விட்டுவிட்டான் கோவிந்தன். திருதிருவென்று முழித்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான். கருத்த உடலில் முறுக்கிய மீசையோடு எதிரில் உட்காந்திருக்கும் அழகேசனின் பார்வை கோவிந்தன் மேல் பட்டது.
“என்ன கோவிந்தா? காசு இல்லன்னா கிளம்பிட்டே இரு..” என்றான் அழகேசன். கோவிந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அரிசி வாங்க வெண்மதி கொடுத்த பணம் மொத்தமும் போச்சு.
“அழகேசண்ணே கடனா முப்பது ரூபாய் கொடுங்கண்ணா சாயுங்காலத்துக்குள்ள கொடுத்திடுறேன்” என்றான் கோவிந்தன்.
“காசல்லாம் தரமுடியாது. வேணுமின்னா எதையாவது வைச்சு ஆடு. நீ ஜெயிச்சிட்டன்னா உன்னோட முப்பது ரூபா காசையும் கொடுத்திடுறேன். இதைவிட்டா என்னால வேற எதுவும் செய்ய முடியாது” என்றான் அழகேசன். இப்போது பாகவதர் திரௌபதையை துச்சாதணன் தலைமுடியைப் பற்றி இழுத்து வரும் காட்சியை விவரித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவன் “டே கோவிந்தா.. உன் பொண்டாட்டிய வச்சு ஆடுறா” என்றான். கோவிந்தன் மௌனம் காத்தான். அழகேசனின் கறுத்த உதட்டில் சிரிப்பு வந்துபோனது. கோவிந்தனை ஏளனமாகப் பார்த்தபடியே சீட்டை இரண்டு கைகளாலும் நன்றாகக் குலுக்கி கோவிந்தனின் முன் வைத்தான். “சம்மதம் என்றால் சீட்டை வெட்டி போடு.. இல்லையென்றால் போயிட்டே இரு” என்றான் அழகேசன். சிறிது நேர அமைதிக்குப்பின் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டான் கோவிந்தன். பாகவதர் கதையில் திரௌபதை துகிலுரியப்பட்டாள். கண்ணன் அவளைக் காப்பாற்றினான்.
ஆடிய ரம்மி ஆட்டத்தில் ஏழு ஆட்டங்களிலும் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றியடைந்தான் அழகேசன். கோவிந்தன் முழுமையாகத் தோற்று தன்னை இழந்து காணப்பட்டான். கண்கள் அழும் நிலைக்கு வந்துவிட்டன. ஓடி விடலாமா என்று தோன்றியது. நைசாக எழுந்திருக்க முயற்சி செய்தான். அதற்குள் அழகேசனின் கை கோவிந்தனின் வேட்டியை உருவியது. இப்போது கோவிந்தன் அரை நிர்வாணத்தில் இருந்தான்.
“என்னா ஓட பாக்குற… உன் பொண்டாட்டிய வைச்சு ஆடினில்ல. போயி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா” என்றான் அழகேசன். அவன் சொன்ன அந்த வினாடியே அழகேசனின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டான் கோவிந்தன்.
“ஏண்டா பொண்டாட்டியை வச்சு விளையாண்டுட்டு உனக்கெல்லாம் ரோஷம் வருதா” என்று கோவிந்தனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் அழகேசன். கோவிந்தனின் மூக்கு உடைந்து இரத்தம் வாயை நிரப்பியது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு மண்ணில் உருண்டு சண்டையிட்டுக்கொண்டனர்.
அன்னிக்குன்னு பாத்து வெயில் ரொம்ப அதிகமா அடிச்சுது. வயக்காட்டில் நெல் நாற்றை வரிசையாக நட்டுக்கொண்டிருந்தாள் வெண்மதி. வெயிலின் சூட்டை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் குனிந்து வேலை செய்யும் போது முதுகுப் பகுதி வெயில் பட்டு வெடித்துவிடுவது போன்று உணர்ந்தாள். முழங்கால் வரை சேற்றுப்பகுதியில் இருந்தது. உடம்பெல்லாம் சேறு சகதி. வியர்வையால் உடம்பே அழுகிபோனது மாதிரி உணர்வு. அந்நேரத்தில் பம்புசெட்டில் தண்ணீர் எடுத்துவிடப்பட்டு வயக்காலில் ஓடிக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த நாற்று முடிச்சை அப்படியே வைத்துவிட்டு ஓட்டமாய் ஓடி பம்புசெட்டில் தலையைக் காண்பித்தாள். ஜில்லென்ற குளிர் தண்ணீர் அவளின் புடவையை நனைத்தது. வியர்வையை நீக்கியது. உள்ளத்தில் கலந்து பரவசத்தை உண்டாக்கியது. நெஞ்சில் பட்டு அதன் ஈரத்தை உணர்ந்தாள் மதி. எப்படி இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கின்றதே என்று நினைத்துக்கொண்டாள். அவள் தலையை இன்னும் நன்றாகத் தண்ணீரில் காண்பித்தாள். அந்தக் கிழவிதான் இப்போதும் மதியை இழுத்து ஊருக்குள் கோவிந்தனும் அழகேசனும் சண்டையிட்டுக் கொள்ளும் செய்தியைக் கூறுகிறாள். நனைந்த உடல். விரித்தக் கூத்தல். அழுத கண்கள் என விரைந்து ஓடுகிறாள் கிராமத்தை நோக்கி..
கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வெண்மதி உள்ளே நுழையும் போது அழகேசனின் வலது கை கோவிந்தனின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கிறது. மற்றொரு கை கோவிந்தனின் இரண்டு கைகளையும் மடக்கி பிடித்திருக்கிறது. “உம் பொண்டாட்டிய இப்பவே அனுப்பு… உம் பொண்டாட்டிய இப்பவே அனுப்பு…” என்னும் வார்த்தையைத் தவிர அழகேசனின் வாயில் இருந்து வேற எந்தவொரு வார்த்தையும் வரவே இல்லை.
அந்தச்சொற்கள் வெண்மதியின் இதயத்தைக் கூரிய முள்ளால் கிளித்தது போன்று இருந்தது. அதே இடத்தில் அழுத கண்ணீரோடும் தலையில் அடித்துக்கொண்டும் அமர்ந்தாள். அவளின் அழுகை அழகேசனின் காதுகளில் விழுந்தன. அழகேசன் வெண்மதியைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை கோவிந்தனை விட்டுவிட்டு ஒரு கையால் மீசையைத் தடவியபடியும் மறுகையால் வேட்டியை தூக்கிப்பிடித்தபடியும் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தான். எல்லோரும் வெண்மதியின் அழுகையைப் பார்த்து கண்கலங்கினர். கோவிந்தன் தன்நிலையைக் கண்டும் வெண்மதியின் வேதனைக் கண்டும் வெட்கப்பட்டான். தன் மனைவியின் அவமானத்தை நினைத்து சாக துடித்தான்.
“ஏண்டா பொறம்போக்குப் பயலே… யாராவது பொண்டாட்டிய சூதுல வச்சி ஆடுவாங்களாடா… ஏற்கனவே வச்சி விளையாடினவங்களோட கதை உனக்கு தெரியாதாடா..” கூட்டத்தில் ஒருவர்.
“உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி புள்ளையங்க. இப்படியெல்லாம் செய்யுற நீ நாளைக்கு இவளையும் விக்கமாட்டின்னு என்னடா நிச்சயம்” – கூட்டத்தில் ஒருவர்.
“இந்தாம்மா வெண்மதி… இன்னுமா இவனை நம்புற. இவன வச்சுகிட்டு இன்னும் கொற காலத்த எப்படி ஓட்டப்போற. இவ கூட வாழுறதை விட செத்துப்போலாம்” – கூட்டத்தில் ஒருவர்.
ஒவ்வொருவராய் செல்ல கூட்டம் கலைந்தது. கோவிந்தன் கிழக்கு திசையை நோக்கி ஓடினான். நடைபிணமாய் குடிசைக்குள் வந்தாள் வெண்மதி. முத்துவும் ஜானகியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து போனது அக்குழந்தைகளுக்கு. அம்மாவின் பக்கத்தில் கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டனர். இரவு நேரமாகியும் கோவிந்தன் இன்னும் வரவேயில்லை.
மணி பதினொன்றை தாண்டியிருந்தது. வெண்மதியின் மனம் நெருப்பாய்க் கொதித்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் மகனை எழுப்பினாள். மகளை அணைத்து தூக்கிக்கொண்டாள். ஜானகி தூங்கி வழிந்தாள். அம்மாவின் தோளில் அவளின் வாய் வழியே வழிந்த எச்சில் மதியின் நெஞ்சைத் தொட்டது. அம்மா கூப்பிட்ட உடனே மகன் முத்துவும் நடக்க ஆரபித்தான். வயக்காட்டுக் கிணறு. மகளை மடியில் கிடத்தி அழுகின்றாள். தன்னுடையத் தாலியைக் கழற்றி கிணத்து மேட்டில் வைக்கின்றாள். மகன் அம்மாவையே உற்று பார்க்கின்றான். இந்த நேரத்தில் யாராவது வந்து என்னுடைய மனதை மாற்ற மாட்டார்களா என்றும் மதியின் மனம் எண்ணுகிறது. ஆனாலும், வாழப்பிடிக்கவில்லை. பிள்ளைகளையும் என் கணவர் அநாதையாக விட்டுவிடுவார். அதனால் அவர்களையும் என்னுடனே அழைத்துக்கொள்கிறேன். இறைவனை வேண்டுகிறாள். அம்மாவையும் அப்பாவையும் நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறாள். மகளை ஒருபக்கமும் மகனை ஒருபக்கமும் தூக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாள். முத்துவுக்கு ஓரளவுக்கு புரிய ஆரமித்தது. அம்மா இந்தக் கிணற்றில் குதிக்கப்போகிறாள் என்று நினைத்தான்.
“அம்மா வேண்டாம்மா… எனக்கு பயமா இருக்கு.. என்ன விட்டுடுமா.. அம்மா பயமா இருக்கும்மா…” கெஞ்சுகிறான் முத்து.
“இந்த உலகம் பொல்லாதது. உன்னை வாழவிடாது. நீ என்னுடனே வந்து விடு” என்று மனதை இரும்பாக்கிக்கொண்டாள். அடுத்த வினாடி கிணற்றுக்குள் குதித்து விட்டாள். கலைந்த கூந்தல் வானத்தை நோக்கி மேலெழும்புகின்றன. வெண்மதியே போகதே… மேலே வா.. என்பது போல் இருந்தது. முத்து மூச்சை இழுக்க முடியாமல் அம்மாவை உதைத்து வெளியே வர பார்க்கிறான். ஜானகியும் தூக்கம் கலைந்து அம்மாவை விட்டு வெளிவர முயற்சிக்கிறாள். ஆனால் வெண்மதியின் பிடியே வெற்றி பெறுகிறது. இருவரும் மூர்ச்சையான பின்பு தன்னையும் இழக்கிறாள். கிணற்றின் தண்ணிரின் மேலே ரெண்டு மூன்று கொதி வந்தவுடன் எப்போதும் போல் அமைதியானது அக்கிணறு. முழுநிலவு பௌர்ணமியின் பிம்பம் இப்போது அக்கிணற்றில் தெரிந்தது.
அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே மாட்டியிருந்தது. வெண்மதி தன்னுடைய மகன் மகளோடு மட்டும் இருக்கும் புகைப்படம் அது. விளக்கொளியில் அப்புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடியின் பிம்பம் அக்கூரை கொட்டகையின் நடு ஆரமாய் விளங்கும் மூங்கிலில் பட்டுத் தெறித்தது. அப்புகைப்படத்திற்கு கோவிந்தன் கையில் வைத்திருந்த மாலையை அணிவித்தான். ஓ… வென்று வாய்விட்டு அழுத அவனுடைய அழுகையானது எங்கும் ஒலித்தது. உடம்பு முழுவதும் மண்ணெண்னையால் ஊற்றிக் கொண்டதனால் பக்கத்தில் இருக்கும் விளக்கினைக் கோவிந்தன் தன்மேல் சாய்த்தவுடன் அனலாய் பற்றி எரிந்தது கோவிந்தனின் உடலும் அக்குடிசையும். அந்த நெருப்பின் புகையானது வானத்து மேகத்தில் கரைந்து போனது.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.