Abstract
Vagai refers to a concept in Tamil literature, distinct from other tinai like Vetchi which are associated with war. Vagai signifies the quality of excelling and standing superior in a field compared to others due to one’s prowess. It involves comparing with many and proclaiming someone as superior to all, often tied to victory in battle, hence categorized as Vagai tinai. Later texts differentiate between natural victory (Mullai) and comparative victory (Vagai). Vagai isn’t bound to a specific geographical landscape; it occurs across lands and lineages tied to time, akin to Palai which pertains to separation driven by fame. Among those undertaking actions, distinguishing based on capability and creating a state of renown is Vagai. Ilampooranar notes Vagai is external (puram) relative to Palai.
In ancient times, monarchies prevailed; kings engaged in wars to showcase valor. Beyond demonstrating strength via battles, they sought to bring neighboring lands under control driven by ambition and to manifest their heroic prowess, as evident through literature. Singing the fame of victorious kings is what constitutes Vagai. Literature often focuses on kings’ heroic excellence. This article discusses royal Vagai (Arasa Vagai), drawing upon accounts in Purananuru regarding kings’ battles revealing not just bravery but generosity, humanity, and culture. It explores how people behaved under kings and how a nation’s pride turned into history through royal deeds – such insights are discussed in this article.
புறநானூற்றில் அரச வாகைச் செய்திகள்
ஆய்வுச் சுருக்கம்
தமிழின் புகழ் மகுடம் புறநானூறு. தமிழர் வாழ்வின் வரலாறு வீரத்திறன் பற்றி விளக்கும் இலக்கியம். வீரமும் கொடையும் இரண்டு கண்களாக வாழ்ந்து வந்த ஈர மனமுடைய தமிழா்களின் இறவாப் புகழ் பேசும் எழுத்து ஓவியம் புறநானூறு ஆகும். புறநானூறு நானூறுப் பாடல்களைக் கொண்டது. பண்டைய இலக்கியத்தில் அமைந்துள்ள சங்க இலக்கிய நுல்களான, எட்டுததொகை பத்துப்பாட்டு என்பனவற்றில் எட்டுத்தொகை நூலில் அமைந்துள்ள, புறநானூற்றில் பயின்றுவரும் வாகைத் திணைப் பற்றியச் செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.
முன்னுரை
பழந்தமிழர் கூறும் வாழ்வியல் ஒரு நாணயத்தின் இருப் பக்கத்தைப் போல அகம், புறம் என்பதாகும். அகம் என்பது பிறருக்கு விளக்க முடியாததுமாய் தாமே உணர்ந்து கொள்ளும் வகையில் உள்ளவை. புறம் என்பது பிறருக்கு எடுத்துக் கூற முடிந்த உலக நெறியாகும் தனி மனிதம் மற்றும் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் வீரம், கல்வி, கொடை ஆகியவற்றை உணர்த்துகிறது இந்த மூன்றும் முக்கோணம் போன்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக பண்டைய தமிழரின் வாழ்வியலாக இருந்துள்ளது. அவற்றை சங்க நூல்கள் கூறுவது சான்றாகும் மன்னனின் வெற்றி, முரசின் வெற்றி பார்ப்பனர் வணிகர் உழவர் என சூழலில் வாகை நிலை ஏற்படுகின்றன. வீரத்தில் சிறந்த அரசன் கல்வி அறிவு பெற்றவனாகவும், கொடை வழங்குபவனாகவும் இருந்துள்ளான். இவற்றின் பயனாக அவன் புகழ் என்பதை அடைகிறான் . வீரத்தின் விளைபொருள் வெற்றி. வெற்றி என்றாலே வாகை . வெற்றியின் அடையாளச் சின்னமாகவும் தும்பை போரின் மறவர்கள் பெரும் வெற்றி அரசனின் ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் துறையாகவும் வாகைத்திணை உள்ளது. அந்த வகையில் அரச வாகைப் பற்றி புறநானூறு வழிக் காண்போம்.
வாகை : சொல் விளக்கம்
வாகைத் திணை பாலை எனும் அகத்திணைக்குப் புறனாகும். ஒரு செயலில் ஈடுப்பட்டவா்களில் ஒருவா் மற்றொருவரை விட சிறந்தவராக இருந்தால் அவா்களைப் பாடுவது வாகையாகும். இவ்வகையில் போர் வெற்றியும் அடங்கும். வாகை என்ற சொல் மரம் என்றப் பொருளையும் தரும். போர்க்களத்தில் தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு வெற்றிப் பெற்றோரின் சிறப்பைப் புகழ்வது வாகைத் திணை ஆகும். திணையும் துறையுமாக இவை முப்பதாக விரித்துரைக்கும் தொல்காப்பியர்,
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை
பாகுபட மிகுதிபடுத்த லென்ப (புறத்திணையியல் 9)
என இலக்கணம்கூறுகிறார்.
புறப்பொருள் வெண்பா மாலை சுட்டும் வாகை மரபுகள்
வாகைத்திணை 33 பகுதிகளை உடையது அவற்றுள் முதல் திணைவிளக்கமாகும். எஞ்சியவை துறைகளை விளக்குவன வாகைத் திணையும் அதன் துறைகளும் (1+32 =33) சீர்சால் வாகை வாகை அரவம்! அரச வாகை’ முரச வாகை’ மறக்கள வழியொடு களவேள் விய்யே முன்தேர்க் குரவை” பின்தேர்க் குரலை’ பார்ப்பன வாகை” வாணிக வாகை வேளாண் வாகை பொருந வாகை” அறிவன் வாகைதாபத வாகை கூதிர்ப் பாசறை” வாடைப் பாசறை அரச முல்லை பார்ப்பன முல்லை” அவைய முல்லை” கணிவன் முல்லை மூதின்முல்லை ஏறாண் முல்லை” வல்லாண் முல்லை காவல் முல்லை பேராண் முல்லை” மறமுல் லையே குடைமுல் லையொடு கண்படை நிலையே அனிப்பலி என்றா சால்பு முல்லை கிணைநிலை” ஏனைப் பொருளொடு புகறல் அருளொடு நீங்கள் உளப்படத் தொகைஇ மூன்று தலையிட்ட மூஈர் ஐந்தும் வான்தோய் வாகைத் திணையது வகையே. எனப் புறப்பொருள் வெண்பா மாலை (சூத்திரம் 154) வாகைத்திணைகளின் துறைகளைக் கூறுகிறது.
புறநானூற்றில் வாகை
புறநானூற்றில் அரசவாகை பாடல்கள் 19, 20, 21, 22, 23, 25, 26, 31, 37, 42, 43, 44, 51, 52, 53, 54, 61, 66, 76, 77, 78, 79, 81, 82, 93, 94, 98, 99, 100, 104, 125, 167, 168, 174. (35 பாக்கள்) இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் கருதி 14 பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன.
அரசவாகை
அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும். ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன. ”
இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய” (புறம் 19 )
இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் நடைப்பெற்றப் போரில் பகைவா்களை வெற்றிக் கொண்ட வேலையுடைய செழியனே! போர்க் களத்தில் பகை அரசா்களின் வீரா்களைக் கொல்லும் கூற்றுவன் நீ ஒருவனே? என்பதிலிருந்தும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரம் புலப்படுகிறது.
”இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
கவையளந் தறியினு மளத்தற் கரியை” (புறம் 20 )
பெரிய கடலின் ஆழத்தையும் , அகலமான இவ்வுலகத்துப் பரப்பையும், வானத்தில் காற்று செல்லும் திசை மற்றும் வடிவமில்லா நிலைபெற்ற ஆகாயம் என்று சொல்லப்படுபவற்றை அளந்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும், உனது அறிவும், அன்பு கொண்ட ஈர நெஞ்சமும், பரந்துபட்ட உனது கண்ணோட்டமும் இவ்வளவுதான் என்று வரையறை செய்து அளக்க முடியாத அரியவன் நீ! ஆதலால் உனது ஆட்சிக் குடையின் நிழலில் வாழ்வோர் சோறு சமைக்கும் நெருப்பின் வெம்மையும், செஞ்ஞாயிற்றின் வெம்மையும் அல்லாது வேறு வெப்பத்தை அறியவில்லை. அழகிய வானவில்லையன்றி பகைவரது கொலை வில்லை அறியார். கலப்பையை அன்றி வேறு படைக்கலமும் அறியார். போர்த்திறன் அறிந்த வீரர்களோடு சென்று பகைவர் அழிய, அந்த பகைவர் தேசத்து மண்ணை எடுத்துக் கொள்ளும் பெருமையுடைய தலைவனே! இத்தகைய குணம் உடையவனாதலால், உன் நாட்டில் நிலைபெற்ற மக்களெல்லாம் அவர்கள் உன் மேல் கொண்ட அன்பினால் உனக்கு ஏதும் தீங்கு வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள் என்று சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் வீரத்தை, குறுங்கோழியூர்கிழார் எனும் புலவர் பாடியுள்ளார்.
”புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய” (புறம் 21)
என்றப் பாடலில் உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை உடைய கானப்பேரை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி வீரத்தை ஐயூர் மூலங்கிழார் எனும் புலவா் பாடியுள்ளார்.
”தூங்குகையா னோங்குநடைய
தேன் சிதைந்த வரைபோல….” (புறம் 22)
இப்பாடலில் ஆரவாரிக்கும் கடல் போன்ற பகைவா் அஞ்சுகின்ற மிகுந்த படையை உடையவனே! உன்னிடத்துத் தோற்றுப் போன அரசா்கள் தந்த நிறைப் பொருட்களை உனதுச் சுற்றத்தாருக்குக் கொடுத்த வெற்றித் தலைவனே! யானையினது பார்வைக் கொண்டவனே நீ வாழ்க! உன்னைப் புகழ்ந்துப் பாடும் புலவா்களுக்கு அளவில்லாது கொடுக்கும் வள்ளல் தன்மைக் கொண்டவனே! எங்கள் அரசர் மாந்தரஞ் சேரலிரும் பொறையின் நாடு தேவலோகத்தைப் போன்றது என்றும் பிறர் சொல்லக் கேட்டு வந்து இனிமையாக கண்குளிர உன்னைக் கண்டேன் பெருமானே! உனது நாட்டின் வளம் குறையாதபடி நீ ஆட்சி செய்வாயாக! என்று குறுங்கோழியூர் கிழார், சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் வீரத்தைப் புகழ்ந்து அவனது நாடு செழிப்புடன் விளங்க வேண்டும் என்கிறார்.
”வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்….” (புறம் 23)
இப்பாடலில் கல்லாடனார் பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனது,வயிரம் பாய்ந்த கட்டுக் கம்பத்தையுடைய கூடத்தில் நிற்பதை வெறுத்த யானைகள் பகைவா்களது நீர்நிலைகளை கலங்கச் செய்யும். மணம் வீசும் கடம்ப மாலையை அணிந்த உனது மறவர்களும், அழிக்கப்பட்ட நிலங்களையும், ஒவ்வொரு ஊர்களிலும் காவல் மரங்கள் வெட்டி காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும். இல்லங்களில் விருந்தோம்பல் செய்யும் சோறிடும் தீயை அணைத்துக் கெடுத்தும், பெரும்படையுடன் தலையாலங்கானத்தில் போரில் எதிர் நின்று கொன்ற காலன் போன்ற வலிமை உடையவனும் ஆகிய பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனே! உன்னைப் பார்க்க, வேளைச் செடியின் வெண்மையான பூக்களைத் தின்கின்ற ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாலைநிலக் காட்டு வழியே உன் செயல்களைக் கண்டவனாக வருகின்றேன்.
”மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
———————————
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்ட காலை,….” (புறம் 25)
இப்பாடலில் கல்லாடனார் நெடுஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தலையாலங்கானப் போர்க்களத்தில் திங்களும் ஞாயிறும் மறைவது போல, சோழன், சேரன் ஆகிய இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது அவர்களது மனைவிமார் கைமைக் கோலத்தில் மார்பில் அடித்துக் கொள்ளாவண்ணமும், கூந்தல் களையாவண்ணமும் பார்த்துக்கொள்க. பகைவர்களைக் கொல்ல வேண்டாம் போர் வேண்டாம் என்று வலியுறுத்தி இருப்பதைக் காண முடிகின்றது.
”நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய வெஃகேந்தி…..”(புறம் 26)
மாங்குடி மருதனார்,. உன்னை எதிர்த்த பகை அரசா்களைின் முரசுகளைக் கைப்பற்றினாய். அவா்களது கிரீடம் அணிந்த தலையை அடுப்பாகவும், குருதியை அடுப்பை எரிக்கும் உலையில் பெய்து, தோள்களைத் துடுப்பாக்கி சமைக்கப்பட்ட உணவால் போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போர் புரியும் செழியனே! தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு, நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினையுடைய வேந்தே! அவர்கள் உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும், அவர்களும் சொர்கத்தில் வாழ்பவர்கள் ஆவார்கள் என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் ஆட்சி சிறப்பைப் புகழ்ந்துப் பாடுகின்றார்.
”சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
—————————-
பாசறை அல்லது நீ ஒல்லாயே…“ (பறம் 31)
சோழன் நலங்கிள்ளியின் படைவீரா்கள் வடக்கு திசையில் வந்துவிடுவார்களோ என்று எண்ணி வடபுலத்து அரசர்கள் தூங்காமல் கிடந்தனர் என்கிறார் புலவர் கோவூர் கிழார்.அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர் என்று சோழன் நலங்கிள்ளியினது வீரத்தை கோவூர்கிழார் பாடுகிறார்.
”நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
———————————
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!…”(புறம் 37)
மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண்பாற் புலவா் கிள்ளிவளவனின் வீரத்தைப் பாடுகின்றரா். புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த சிபிச் சக்கரவா்த்தியின் வழியில் தோன்றியவனே!, சினமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், ஆழமான அகழியில் உள்ள முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும். அந்த அகழிக்கு அருகே மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் உள்ள யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன். அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.
”ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
———————————
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே….”“(புறம் 42)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார். இடைவிடாத கொடையும், போருமாகவே இருக்கும் தலைவனே! உன் யானையோ மலை போல் உள்ளது. உன் படையோ கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர்.இது குற்றமற்ற செயல் அன்று. இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக!. போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போல நாட்டில் செங்கோலாட்சி புரிவாயாக!. புன்செய் நில நாட்டின்மீது (பாண்டிய நாட்டின்மீது) போர் தொடுக்க வேண்டாம். உன் நாடு வளமான நாடு. இதன் மடைநீரில் அரித்து நீ கொள்ளும் வாளை, உழும்போது புரளும் ஆமை, கரும்பில் தொடுத்திருக்கும் தேன், துறையில் மகளிர் பறித்த குவளை ஆகியவற்றைப் புன்செய் நில மக்களுக்கு விருந்தாகத் தருபவர்கள் உன் நாட்டு மக்கள். அந்த நாட்டின்மீது நீ போர் தொடுக்கிறாய்.மலையிலிருந்து நிலத்தில் பாயும் ஆறு போலப் புலவர்கள் உன்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின் மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றுப் போர்த் தொழிலை விடுமாறுக் கேட்கின்றார்.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
———————— வரையா ஈகை உரவோன் மருக!” (புறம் 51 )
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான், புலவரும் மாவளத்தானும் வட்டு ஆடினர். புலவர் வட்டுக்காயை மறைத்து வைத்துப் பிழை செய்தார். வெகுண்ட மாவளத்தான் வட்டுக்காயால் புலவரை அடித்தான். புலவர் பார்ப்பனர். “உன் முன்னோர் பார்ப்பனர் நோகும்படிச் செய்யமாட்டார்கள். நோகச் செய்த நீ சோழன் மகன் இல்லை” என்றார். இச் சொல்லைக் கேட்ட மாவளத்தான் தன் செயலுக்காக நாணினான். புலவர் “நானே பிழை செய்தேன்” என்று உண்மையைக் கூறி மாவளத்தானை வாழ்த்தினார். சோழர் குடியின் பெருமையைக் கூறும் புலவர் சிபி மன்னன் வரலாற்றைக் குறிப்பிடுகிறார். அவிர்சடை முனிவர்கள் நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தவம் செய்வார்கள்.. வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு தவம் செய்வார்கள்.. இந்த முனிவர்களும் மருளும்படி புள்ளினங்களும் வாழும்படி சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட பருந்தின் பிடியிலிருந்து தப்பித் தன்னிடம் வந்த புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தானே தன்னைத் துலாக்கோலில் நிறுத்துத் தந்த மன்னன் சிபி.அவன் வழியில் வந்தவர் சோழர். பகைவரின் முரண்பாட்டை நீக்கிய தேர்வண் கிள்ளி (தேர்க்கொடையாளி நலங்கிள்ளி) தம்பி நீ. வார்கோல் கொடுமர மறவர் (அம்பு வில் வீரர்) படையின் தலைவனே! குதிரை வீரனே! உன் பிறப்பில் ஐயம் உடையேன். ஆத்திமாலை அணிந்த உன் முன்னோர் பார்ப்பார் நோகும் செயல்களைச் செய்யமாட்டார்கள். இது (என்னை வட்டுக் காயால் அடித்தது) சரியா? என்று வெறுக்கும்படி கூறினேன். அதனைக் கேட்ட நீ உனக்கு நான் செய்த பிழையைப் பொருட்படுத்தாமல், நீ பிழை செய்தது போலப் பெரிதும் நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளும் செம்மாப்பு இந்தச் சோழர் குடிக்கு எளிது என்பதைக் கண்ணாரக் காட்டியுள்ளாய். அதனால் காவிரியாறு குவித்துள்ள மேட்டுமணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்வாயாக என்று மாவளத்தானின் வழித் தோன்றல்களின் வீரத்தைப் புகழ்ந்து காமப்பல கண்ணனார் பாடியுள்ளார்.
”இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
அலமரல் யானை உரும் என முழங்கவும், ”(புறம் 52)
நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது. உணவுக் கவளம் பெறவில்லை. அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம் வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது. குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன. மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை முடிந்துகொள்கின்றனர். குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் இல்லங்களில் மக்கள் அழும் ஒலி கேட்கிறது. இப்படி இருக்கும்போது கோட்டைக்குள் நீ பாதுகாப்பாக இருத்தல் மிக மிகக் கொடுமை. நீ நெருங்க முடியாத அரிமா போன்று வலிமை மிக்கவன். நீ அறநெறியை விரும்பினால் கோட்டை உன்னுடையது என்று திறந்து விட்டுவிடுக. மற நெறியை விரும்பினால் போரிடுவதற்காகத் திறந்துவிடுக. இரண்டும் இல்லாமல் மதிலுக்குள் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடத்தல் நாணத் தக்க செயல் என்று நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியப் பாடலாகும்..
முடிவுரை
புறநானூற்றில் பொதுவாக பாடுப்பொருளாக பேசப்படுபவை அரசா்களின் கொடை, வீரம், மனிதநேயம் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாகைத் திணையின் துறைகளான முப்பத்து மூன்றில் அரச வாகை மட்டும் இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளது. அதன்மூலம் பண்டைய அரசா்களின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும் அறிந்துக்கொள்ள முடிகின்றது.
துணை நூல்கள்
1.குறுந்தொகை மூலமும் உரையும் – முனைவா் வீ.நாகராசன், நியுசெஞ்சரி புக்ஹவுஸ், சென்னை.
2.புறநானூறு – ஔவை துரைசாமிப் பிள்ளை, கௌராப் பதிப்பகம்
3.தொல்காப்பியம் – பொருளதிகாரம், முனைவா் ச. திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம், திருவையாறு.
4.புறப்பொருள் வெண்பா மாலை, முனைவா் ச. திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம், திருவையாறு.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ. ஸ்ரீகாமாட்சி
ஆய்வு மாணவர்
முதுகலை இரண்டாமாண்டுத் தமிழ்,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி, திருவாரூர்.
ஆய்வு நெறியாளர்
முனைவர் கோ.மலர்விழி
தமிழ்த்துறைத் தலைவர்
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி, திருவாரூர்.