Friday, January 16, 2026

Makizhilvitthu Makizhilnthiruppom|Dr.J.Jesi

 Abstract                    

The creature can live on the ground only if it is associated with each other.  Each of the creatures is looking for a situation and set up a habitat accordingly.  Not only lives, but all the fifties are dependent on. Water, land, air, air polluting is only because man is only looking for self -interest.  That is why the toxins are mixed in the resulting products. Our ancestors planted trees in the fields. When small birds sit in trees, they use small insects that are harmful to crops. The diet of the food chain is also excellent.


“மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்”
 

      (நிலம்-பூமி, விசும்பு-ஆகாயம், வளி-காற்று, தீ-நெருப்பு, நீர்-தண்ணீர்) மண்ணை நிறைந்து வைத்திருக்கும் நிலமும், நிலத்தை ஏந்துகின்ற ஆகாயமும், ஆகாயத்தை வருடும் காற்றும், காற்றினால் மேலெழும் நெருப்பும், நெருப்பை அணைக்கும் நீர் என இயற்கையின் தன்மையை


மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு வைதரு வளியும்

வளி தரைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம் 2,16)

அறிவியலோடு எடுத்தியம்பியுள்ள புறநானூற்றுப்பாடல் சிறப்பிற்குரியது.


தனித்து வாழ இயலாது
 

       ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே நிலத்தில் உயிரினம் வாழ முடியும்.  உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கேற்ற சூழ்நிலையை தேடி, அதற்கு தகுந்தாற்போல வாழ்விடத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றன.  உயிர்கள் மட்டுமல்லாது ஐம்பூதங்கள் அனைத்தும் சார்ந்து இயங்கக் கூடியதாகவே உள்ளன.


      இதில் மனிதன் மட்டும் சுய நலத்தை தேடியதால் தான் நீர், நிலம், ஆகாயம், காற்று மாசடைகின்றன.அதனாலேயே விளைப்பொருட்களிலும் நச்சு கலக்கின்றன.  விவசாயம் தமிழகத்தில் முதன்மை ஆதாரம். விவசாயம் செய்யும் பகுதிகளை வயக்காடு என்பர்.  ஏனெனில் வயலும், ஆங்காங்கே சிறு காடுகளும் இருக்கும்.  இப்பொழுது காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வெறும் வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
         

          நம் முன்னோர்கள் வயல்வரப்புகளில் மரங்களை  நட்டு வைத்திருந்தனர். சிறு பறவைகள் மரங்களில் அமர வரும்போது பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும்  சிறு பூச்சிகளை தனக்கு உணவாக பயன்படுத்தி கொள்ளும்.  இதனால் பயிர்கள் சேதமின்றி, தானியங்கள் நல்ல விளைச்சல் கிடைத்தன.
 தற்போது மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் பறவைகள் தங்குவதற்கு ஆன சூழ்நிலை இல்லை.  இதனால் பயிர்களை சேதப்படுத்தும் புழுக்கள் மட்டுமின்றி, பல வகையான பூச்சிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்கின்றன.  இதற்கு தீர்வாக (செயற்கை) இரசாயன மருந்து தெளித்து வருகின்றனர்.   இதனால் மண்வளம் கேள்வி குறியாகின்றது.
          இன்றைய சூழல் மாசுபாட்டினால் நன்மை தரும் புழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக மண்புழு இனம் அழிந்து வருகின்றது.  மண்ணிற்குள் நண்டு, எலி, தேள், பூரான் ஆகியவை ஏற்படுத்தும் வளையின் வழியாக தண்ணீர் உள் இறங்கும்.  நுண்ணுயிர் பெருகும்.
         

       ஒரு கைப்பிடி மண்ணில் பல லட்சத்திற்கு மேல் நுண்ணுயிர்கள் இருக்கின்றன.  இந்த நுண்ணுயிர்கள் இருக்கும் மண்ணில்தான் மண்புழு இருக்கும். மண்புழு எப்போதும் மண் சுரங்கம் தோண்டி கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் மண் சுரங்கமும், மண்புழுக்களினால் மண்வளம் மேம்பட்டு சிறப்பாக  இருந்துள்ளன.  உணவுச் சங்கிலி முறையிலுள்ள உயிரினங்களின் உணவு முறையும் சிறந்தோங்கிய நிலையில் இருந்துள்ளன.

உணவு முறைகள்
         

       கோழியின் உணவு குப்பையிலுள்ள புழுக்கள். கொக்கு, வாத்துகளின் உணவு மீன்களும் மீன்முட்டைகளும்.  பயிர்கள், விலங்கு மற்றும் தாவரங்களின் மட்கிய   கழிவுகனை  உள்வாங்கி வளர்ந்தன.  மாட்டின் சாணியைக் கோழி கொத்தித் தின்றன, கோழி எச்சத்தை மண்புழு உண்பதற்கு முன்பாக நுண்ணுயிர்கள் பல உண்ணும்.
 மண்புழுவின் எச்சத்தைப் பயிர்கள் தின்னும்.  பயிர்களின் விளைச்சலை மனிதர்கள், விலங்குகள் உண்டு வாழ்வதை உணவு வளையம் அல்லது உணவு சங்கிலி என்று கூறுவர்.  இதில் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மனித இனம் வாழத் தடுமாறும் என நம்மாழ்வாரின் கூற்று சிந்தனைக்குரியது.


        பொதுவாக மண்ணில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வேறொரு உயிர்களை சார்ந்தே வாழ்கின்றன.   ஓரறிவு புல்பூண்டு முதல் ஆறறிவு மனிதன் வரை  இயற்கையோடு இணைந்து சார்ந்து வாழும் வாழ்க்கையே சிறப்பானது.  எந்திரங்களை சார்ந்து எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதை மனித இனம் புரிந்து கொண்டால் மனித வாழ்வு சிறப்படைய முடியும்.


காட்டு விலங்குகளின் உணவு

       விலங்குகளின் வாழ்வின் முக்கிய ஆதாரமாக யானை இருந்துள்ளது.   யானையின் செயல்பாடுகளாக மரக்கிளையை ஒடித்தல் பற்றி சங்க இலக்கியங்களில் பரவலாக பாடல்கள் பாடப் பெற்றுள்ளது. காடுகளில் யானைகள் பெரிய படர்ந்த மரங்களின் கைக்கெட்டும் மரக்கிளைகளை ஒடித்துப் போடுவதும், முறித்துப்போடுவதும் உண்டு.  மூங்கில் காடுகளுக்குள் நுழைந்து மூங்கில் கிளைகளை யானைகள் முறித்து தான் உண்பதுமுண்டு.  ஆனால் இவ்வாறு செய்வது நமக்கு பாதிப்பாக இருந்தாலும் அதில் பல உயிரினங்களின் வாழ்வதாரம் அடங்கியுள்ளன.


    யானை இப்படி செய்யும்போது கீழே விழும் ஒடிந்த கிளையின் இலைதழைகளை உண்பதற்கு மான்கள், கரடி, காட்டுப்பன்றி, முயல், காட்டு எருது ஆகியன காத்திருப்பதையும் மற்ற உயிரினங்கள் உணவாக்கி கொள்வதையும் அறிய முடிகின்றது. மேலும் அடர்ந்திருந்த படர் இலைகளை யானைகள் முறிப்பதால் சூரிய ஒளி அடர்ந்த காட்டிற்குள் புகுந்து வளர்ச்சியை உண்டாக்கும.  மற்ற உயிர்களுக்கு இரையாக கிடைக்கின்றது. இந்நிகழ்வானது, தாவர உண்ணி அதிகரிக்கும்போது அவை ஊன்உண்ணிகளுக்கு போதுமான உணவாகின்றது.


      யானைகள் மரக்கிளைகளை முறித்து போட்டும் புதர்களை மிதித்துப் போட்டும் சில இடங்களைப் புல்வெளிகளாக மாற்றுகின்றன.  இதனால் பல உயிரினங்களுக்கு வாழிடமாக மாறுகின்றன. காடுகளில் இறந்துபோகும் உயிரினங்களின் சடலங்களை பிணந்தின்னி கழுகு, நரி, கழுதைப்புலி மற்றும் பூச்சிகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகும் மறுசுழற்சி ஏற்படுகின்றது.
          பொதுவாக பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் செயல்பாடுகளால் மற்றொரு உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில  நேரங்களில் பிற உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில நேரங்களில் பிற உயிரினத்தால் தீங்கு நிகழும்போது அவ்வுயிரினத்தையே அழிக்க எண்ணுவது தவறானது.  அவ்வாறு செய்வதன் விளைவாக பெரும் பாதிப்புக்குள்ளாவது மனித இனமேயாகும்.


காடு வளர்ப்பின் பயன்

🌴இயற்கையான நல்ல காற்றை சுவாசிக்க முடியும்


🌴பிராண சக்தி அதிகரிக்கச் செய்யும்


🌴நோய்கள் நீங்கும்


🌴நலமாய் வாழ வழிவகுக்கும்

🌴வெப்பநிலை குறையும்


🌴மழை பொழியும்


🌴நிலத்தடி நீர்மட்டம் உயரும்


🌴பல்லுயிர் வாழும் இடமாகி, விலங்கு பறவைகள் சரணாலயங்களாகும்.


        என்ற உயர்ந்த சிந்தனையோடு  காடுகள் வளர்ப்போம்.  காடுகளை வளர்த்து காற்றையும், மழையையும் உணவையும், தந்து மனிதர்களை வாழவைக்கும்  பிற உயிர்களையும் பாதுகாப்போம்.


பறவைகளின் முக்கியத்துவம்

     இயற்கைச்சூழலைப் பாதுகாப்பதிலும், வேளாண் தொழிலுக்கும் உற்றத்தோழனாக இருப்பதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.   பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.  இப்பூமியானது  உலகளாவிய பறவை இனங்களைக் கொண்டு, பல்லுயிர்த் தன்மையை காத்து வருகின்றது.  மனிதனின் வாழ்வின் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றி பறவை இனங்கள் வாழ்வது மிக முக்கியம்.
         

        பறவைகள் எளிதில் இடம் பெயரக் கூடியவை.  சதுப்புநிலங்கள், பெரும்பாலும் பறவைகள் வாழ்வதற்குரிய சூழலைத் தருகின்றன.  வானிலையை முன்கூட்டியே அறியும் ஆற்றலுடையது.  தாங்கள் செல்லும் வழியில் அபாயம் இல்லை எனத் தெரிந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளும்.  பகலில் சூரியன் திசையைக் கொண்டும், இரவில் நட்சத்திரங்களை அடையாளமாக கொண்டும், பூமியின் காந்த அலைகள், மற்றும் தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளை வைத்து பாதையை அமைத்துக் கொள்ளும் தன்மையுள்ளது.
         

     பறவைகள் இனப்பெருக்கமும், இடம் பெயர்தல் இல்லையெனில், பூமியில் தாவரங்கள் பொய்த்து போய்விடும்.  தாவரங்கள் நன்கு வளர்வதற்கு முதல் ஆதராமே பூச்சிகளும், பட்சி இனங்களுமே.


கற்பிக்கும் பறவையினங்கள்
         

      பல வண்ண பறவைகளைக் காண்பது கண்களுக்கு இனிமை. பறவைகளின் குரலொலி கேட்பது காதுகளுக்கு இன்னிசை. பறவைகளின் குரலோசையை நாம் எழுப்பினால் நமது குரல் வளம் இனிமையாகும்.
          பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், அவை தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.
         

      பறவைகளோ  விலங்குகளோ அல்லது புழு பூச்சிகளோ இல்லையென்றால் மனிதர்கள் சிறப்பாக பூமியில் வாழ்வதற்கு வழியில்லை.  வேம்பு, அத்தி, அரசமரம், ஆலமரம், புளிய மரம் போன்ற பல தலைமுறைகள் தாண்டி வளரும் மரங்கள் பறவைகளின் எச்சங்களால் தானாக வளர்கின்றன.
 உழவுத்தொழிலை மனிதன் பறவைகளின் வாயிலாக கற்றுக்கொண்டான்.  பறவைகள் வயல்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழ்வதன் மூலம் பயிர்களுக்கு தீமைகள் விளைவிப்பது குறைவே.  செடிகளுக்கு இடையே மகரந்தச் சேர்க்கைக்கு  உதவும். பறவைகளின் எச்சங்கள் உரமாகின்றன.  இறந்த விலங்குளை உண்பதால் சுற்றச்சூழலைத் தூய்மையாக்குகின்றன.


என் தனிமைக்கு துணையானாய்

உன் மெல்லிசையால் மகிழ்வித்தாய்

தானுண்ட மீதியால் பசியாற்றினாய்

இந்த கிளை முறிந்தாலென்ன

வேறொரு கிளை
         

       காலுண்டு கையிண்டு பிழைக்க வழியுண்டு என வழிகாட்டுவது பறவையினம்


பறவைகளுக்காகப் பயிரிடுதல்
         

      உயர்ந்த குணமுடைய பறவைக்கென சோளம், கம்பு, கேழ்வரகு என பலவகை தானியங்களை பறவைகள் உண்பதற்காகவே பயிரிடலாம்.  வானில் பறந்து செல்லும் பறவைகளே தோட்டத்திற்கு வந்து செல்.  உனக்கு பிடித்ததை உண்டு மகிழ், காலார உட்கார்ந்து கவிதை பாடிவிட்டு போ என்று கூறுவதைப் போலவும், உன் எச்சங்கள் என் பயிர்களுக்கு உரம். என் தலைமுறை வாழ நல்ல விதைகளை வித்திட்டு போ என்ற நோக்கில் பறவைகளுக்கென கொட்டாச்சியில் உணவு, தண்ணீர் என மரங்களிடையே சிறுசிறு  ஊஞ்சல் என ஏற்பாடு செய்து அதில் பறவைகள் வந்தமர்ந்து  பயன்பெறுவதைப் பார்க்கும்போது மனதிற்கு இன்பமும் உற்சாகம் கிடைக்கின்றது. இக்காட்சியானது பல மனநோய்களுக்கு மருந்தாகும்.
          பறவைகளுக்கும் பிற உயிர்களுக்கும் உணவிடுதால் மனித இனம் தழைத்தோங்கும்.  ஒவ்வொரு உயிரினங்களும் தன்னால் இயன்ற நன்மையை மனித இனத்திற்கு செய்து விட்டு செல்கின்றது.  இதனால் சூழல் மாறுபாட்டிற்கு தீர்வுகாண முடியும்.  வனங்கள் பெருகும் வாய்ப்பு உண்டாகின்றது.  நல்ல மழை பொழியும்.


விழிப்புணர்வுச் செய்திகள்

🌴இன்றைய வாழ்வில் சூழலோடு, பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பறவைகள் பாதுகாப்புக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


🌴மாசுக்கட்டுப்பாடு, நீர்சேமிப்பு, சுகாதாரம் பற்றி குழந்தைகளின் பாட நூல்களில் விழிப்புணர்வு செய்திகள் இடம்பெறுவது போன்று பறவைகள் பாதுகாப்பு பற்றிய  விழிப்புணர்வு செய்திகள் இடம் பெற வேண்டும்


🌴பறவைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு பறவைகளின் இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வாழும் நிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்த்த வேண்டும்.


🌴வலசைக்காக வந்து செல்லும் பறவைகள் அதிகமுள்ள ப குதியைக் கண்டறிந்து, அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்க வேண்டும்.


🌴வேட்டையாடுதல், நீர் நிலைகளில் எண்ணெய் கழிவுகளை ஏற்படாதிருத்தல், விளைநிலங்களில் உயரக பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாதிருத்தல் வேண்டும்.


🌴உயர்கோபுர விளக்குகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் பறவைகளை அச்சுறுத்தாத வகையில் அமைக்கப்பெற வேண்டும்

🌴பனை, வேம்பு, ஆலமரம், அரசமரம், போன்ற மரங்களை  வளர்க்க வேண்டும். இம்மரங்களில் அமரும்போது எழும்பும் ஓலிகள் நம் மனதிலுள்ள கவலைகளை மறக்கச் செய்யும்.  பறவைக் கூட்டங்களைக் காணும்போது புத்துணர்வு பெறுவோம். 


🌴இம்மரங்களின் கனிகளை உண்ண வரும் பலவகை பறவைகளுக்கு தங்க இடமும் உணவும் கிடைக்கும்.


🌴தோட்டங்களில், வயல்வெளிகளில் வளரும் களைகளுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் செயற்கை உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.


🌴பலவகையான கனிதரும் மரங்களை வளர்க்க வேண்டும். தானிய பயிர்களை வளர்க்கும் போது பறவைளுக்கும்  உணவாகும்.


🌴பறவைகள் கூடு கட்டி வாழும் தன்மைக்கேற்ப மனித சமூகம் தங்கள் வாழ்விடங்களை அமைக்க வேண்டும். நம்மால் இயன்றவரை தொந்தரவு கொடுக்காமல் அன்பு செய்யும் பழக்கத்தையும், தண்ணீர் உணவு கொடுக்கும் வழக்கமும் வேண்டும்.


🌴தன் அன்றாட பணிகளை செய்யும்போது, பறவைகளுக்குத் தொல்லை கொடுக்கும் செயல்களைத் தவிர்க்கலாம்.


🌴காடுகளை அழிப்பதைத் தவிர்க்கலாம்.    மனிதர்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்து, பல தலைமுறைகளைக் கடந்து  வாழ்வதுபோல, விலங்குகளும்,  பறவைகளும், தாவரங்களும் பல தலைமுறைகளைக் கடந்து  வாழ  படைக்கப்பட்டவை  என்பதை உணர வேண்டும்


🌴அமாவாசை நாளில் மட்டும் காக்கைக்கு உணவிடுவதைத் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் வீட்டினருகே வரும் பறவைகளுக்கு உணவிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.


🌴முந்தைய நாட்களில் வாசலின் முற்றத்தில் அரிசி மாவில் கோலம் போடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.  அதனால் பல நுண்ணுயிர்கள் வாழும்.
பறவைகளைக் கூண்டுக்குள் வளர்ப்பதை தவிர்த்தல் நல்லது. வெட்டவெளியில் தனித்து இயங்கினால் சமூகத்திற்கு நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும்.


🌴வீட்டினருகே பெருமரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும், சிறு தானிய பயிர்களை வளர்த்தால் பறவைகளுக்கு உணவாகும்.


🌴வீட்டு மாடிகளில் சிறு வேர்களையுடைய சிறுதானிய பயிர்களை வளர்க்கலாம்.  பறவைகளுக்கென்று குடிநீர் வசதியை ஏற்படுத்தலாம்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிகள்( பிளாஸ்டிக ஒழிப்பு)
         

🌴நமது வாழ்க்கை முறையை மாற்றிப்போட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
         

🌴பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதில் கண்ணாடிப் பொருட்களோ, எவர்சில்வர் பாத்திரங்களையோ பயன்படுத்த வேண்டும்.
 

🌴துணிக்கடை, உணவகங்கள், மளிகை கடை, மாமிச விற்பனை கடைகள், வீட்டு விசேஷங்கள் பழச்சாறு மற்றும் இனிப்பகங்கள், பூக்கடைகள், தேநீர்கடைகள் போன்ற நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகளைக் குறைத்து, பேப்பர் கவர், துணிப்பைகள், பேப்பர் கப், பேப்பர் தட்டுகள், சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
         

🌴விளம்பர பேனர்களுக்கு மாற்றாக துணி, மரப்பலகை, தகரம் சுவர்கள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.


பள்ளிக்குழந்தைகள்
         

     பள்ளிக்குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுக்காமல், பாதிப்புகளைக் கூறி சில்வர் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுத்தனுப்ப வேண்டும்.
  விளையாட்டுப்பொருட்கள்  பனை, தென்னை,மரம், மண் ஆகியவற்றில் ஆன விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கலாம்.  மின்சாதன பொருட்களோடு அல்லது தனியாக விளையாடாமல் இயற்கையோடும், பலரோடுக் கூடி விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

கோவில்
         

    வழிபாட்டிற்கு செல்லும்போது வழிபாட்டிற்குரிய பொருட்களை துணிப்பையில் கொண்டு செல்லலாம்.  வாழை இலையிலோ, பேப்பர் கவரிலோ, பாத்திரங்களில் கொண்டு செல்ல வேண்டும்.


பயணங்கள்
         

      பேருந்து மற்றும் இரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களுக்குரிய உணவை எடுத்துச்செல்லவோ, அல்லது பெறவோ சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.  தனிநபர் தங்களுக்குரிய பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
         

சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் நம் பாவங்களில் ஒன்று

இயற்கையைப் பாதுகாப்பது புண்ணியங்களில் ஒன்று


     ஏனென்றால் நம் தலைமுகைளுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச்சூழலை உண்டாக்கி கொடுப்பது நம் கடமையென அனைவரும் உணர வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்

🌴பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வெளியேறும் நச்சுப்புகையால் ஒவ்வாமை நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்


🌴வாய்க்கால் போன்ற நீர் வழிகளை அடைப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயங்கள், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


🌴பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதித்து மரணிக்கின்றன.


🌴வேளாண் நிலங்கள் பாதிக்கின்றது


🌴கடலில் எறியப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினால் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் தடுக்கப்படுகின்றது.


🌴பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களினால் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது
         

🌴பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகக்கேடுகள், நோய்கள், நீர்நிலைகள் பாதிப்பு, காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு என நம்மைச் சார்ந்த உயிரினங்கள் (விலங்கு, பறவை, நுண்ணுயிரிகள்) அனைத்தும் பாதிக்கப் படுவதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.


மாற்று வழிகள்

🌴திரவப்பொருட்கள் வாங்க பாட்டில்களோ பாத்திரங்களோ பயன்படுத்தலாம்
எங்கு போனாலும், துணிப்பை எடுத்துச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.


🌴பிளாஸ்டிக் உறைகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்போம்.


நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வழிகள்
         

       நன்னீரில் வாழக்கூடிய கொசு இனங்களைஅழிக்க இரசாயனம் கலந்த கொசு மருந்துகள் பயன்படுத்தும்போது, நீர் வாழ் பிற உயிர்கள் அழிந்துவிடுகின்றன. நன்னீரில் உள்ள சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை முறையில் கொசுக்கள் உற்பத்தியைக் குறைக்கலாம்

மீன் வளர்ப்பு
         

      மீன்களின் முட்டை உணவு கொசுக்களின் முட்டைகள். மீன்கள் மீன் முட்டைகளை உண்பதால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை. கொசுக்களை அழிக்க அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குளம், குட்டைகளில் கம்பூசியா அஃபினிஸ் மீன் வளர்க்கப்படுகின்றது.(கு.கணேஷ் 2017 அக்18 கொசுக்களுடன் ஒரு பனிப்போர் கட்டுரை தி இந்து இதழ்)


தவளை வளர்ப்பு

     
குளிக்கும் நீர் முழுவதும் மரஞ்செடிகளுக்கு பயன்படும்.  சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதால் தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகின்றது.  துணி துவைக்க வேப்பங்கொட்டையால் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள், தவளைகள் வந்து அழுக்கை உண்ண வரும்.
  சீயக்காய், அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தலைக்குக் குளிக்கும் போது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.  பாத்திரங்கள் கழுவ சாம்பல்தூள், இலும்பைத்தூள் பயன்படுத்தும்போது சாக்கடையில் வாழும் தவளைகள் ஆயிரக்கணக்கில் உருவாகும். கொசுக்களை உண்டு வாழ்ந்தன.
           மனிதனை காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றின.  தவளைகள், கொசுக்களின் பெருக்கத்தினையும், கொசுமுட்டைகளையும், முட்டைப்புழுக்களையும், தலைப்பிரட்டைகளையும் உட்கொள்வதால் கொசுக்களின் பெருக்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம்.


தட்டான்பூச்சி
         

       தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம்  கொசுக்களைத் தின்று விடும்.  இப்பொழுது தட்டான் இனமே அழிந்து விடும் சூழலில் உள்ளது. இது பறக்கும் நிலையியேயே தன் உணவை வீழ்த்தும் தன்மையுடையது.  பிற சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்வதால் கொன்றுண்ணி பூச்சி என்ற அழைக்கப்படுகின்றது.
   பொதுவாக மனிதன் பெருந்தொற்று நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ரசாயனங்கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.  இயற்கையை மீட்டெடுப்போமானால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியும்.


முடிவாக
 

நல்ல இயற்கையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டுமெனில்
  

1.பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து பிணமாவதைத் தடுப்போம்.
         

2.நீர்நிலைகளைச் சேமித்து நிம்மதி அடைவோம்.
         

3.காடுகளை வளர்த்து மனக்காயங்களைப் போக்குவோம்.


4.இயற்கையை நேசித்து இன்பமாய் வாழ்வோம்.
         

5.பறவைகளைப் பராமரித்துப் பாராளுவோம்.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஜெ.ஜெஸி,

உதவிப்பேராசிரியர்,

எம் .ஏ. எம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்,

சிறுகனூர், திருச்சி.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்http://iniyavaikatral.in
Iniyavaikatral International Tamil Studies E- Journal - தமிழியல் ஆய்வுக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சுய வரலாறு கட்டுரைகள் (உங்களைப் பற்றிய சுயசரிதம்), கவிதைகள் (புதுக்கவிதைகள் | மரபுக்கவிதைகள்), சிறுகதைகள், தொடர்கதைகள், புதினம், தமிழர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் பற்றிய தகவல்கள், மறந்துபோன - மறைந்துபோன - மறைந்து கொண்டிருக்கின்ற அனைத்தும் மீட்டுருவாக்க உதவியோடு புதுப்பித்தல், இன்றைய தேவைகள் - நாளைய தேடல்கள் பற்றிய சிந்தனைகள் எனத் தமிழியல் சார்ந்த படைப்புகள் வெளியிடப்படும்.

Latest Articles

Alaraal Arilakum Varalattruch Seithikal|Geetha T

Abstract
           Sangam literature serves as...

Keeranur Zakir Rajavin Puthinangalil Samuthaayach Sinthanaigal|M.Mohammed Rukman

Abstract
                     Among Islamic Tamil...

Death Rituals in Tamil Culture:  Traditional norms and Social Interaction (A Study Based on the Pattipalai Division of  Batticaloa)

Abstract
                  Rituals occupy a significant place...

காற்றோடு காற்றாக|ச. கார்த்திக்

🌳குழந்தையின் உரையாடல்
 எந்த புத்தகத்திலும்
 அச்சடிக்கப்படவில்லை.
 🌳காடுகள் எரிப்பதற்கே
 ஒரு மரத்தினால்
ஆன,
 தீக்குச்சி தான் தேவைப்படுகிறது.
 🌳ஒரு முறையாவது
 ரயிலில் பயணம்...

Natrinaiyil Uvamaikal|Dr.C.Ramamirtham

Abstract 
                The oldest Tamil literature...

Greatness of Raama Naamaa in Kamba Ramaayanaa|Dr.G.Mangaiyarkkarasi

Abstract
                   We can worship...

Related Articles

Keeranur Zakir Rajavin Puthinangalil Samuthaayach Sinthanaigal|M.Mohammed Rukman

Abstract
                     Among Islamic Tamil writers, Keeranur Jagirraja is a prominent creator who has established his presence in various fields...

Death Rituals in Tamil Culture:  Traditional norms and Social Interaction (A Study Based on the Pattipalai Division of  Batticaloa)

Abstract
                  Rituals occupy a significant place in Tamil cultural anthropology. Among them, death rituals hold a distinctive position in both their...

Natrinaiyil Uvamaikal|Dr.C.Ramamirtham

Abstract 
                The oldest Tamil literature is Sangam literature. There are two major divisions in this Sangam literature, namely Ettuthokaya and...

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »