கல்விப் புலத்திலிருந்து ஒரு கவிதைத் துடிப்பு : முனைவர் வீ.பூமிநாதனின் ‘ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து.
முன்னுரை
தமிழக இலக்கியக் கல்விப் புலத்தில், இலக்கியப் படைப்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெரிதும் இலக்கியத்தின் நுட்பங்களை உள்வாங்கி, அதனை எளியமுறையில், மாணவர்களின் மனம் கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லும் வலிமை பெற்றவர்களாகவே இருக்கின்றனர். ஒருவகையில் இவ்விரிவுரைகள் என்பவை திறனாய்வுரைகளாகவும் வருவித்துக்கொள்ளும் வல்லமை உடையவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. அவ்வகையில் எவ்வாறு பண்டைய இலக்கிய, இலக்கய உரையாசிரியர்கள், திறனாய்வாளர்களாக வரவுவைக்கப்பட வேண்டுமோ, அதேபோல, தமிழ் இலக்கியக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் திறனாய்வாளர்களாக வரவு வைக்கப்படின் அது தவறாகாது.
இலக்கியத்தை விவரித்துரைக்கும் ஆசிரியர்களிடையே இலக்கியப் படைப்பாளிகள் முகிழ்ப்பது அரிதினும் அரிதான செயல்பாடுகளாகவே இருக்கின்றது. ஏனெனில், இலக்கியம் என்பது அனுபவங்களை அகவயமாக நோக்கி, அதனைக் கொண்டு செரித்து, அதன் சாராம்சத்தை உள்வாங்கி, அதிலிருந்து படைப்பு நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதனை வெளிப்பாட்டு மொழிக்கு மடைமாற்றம் செய்து, மொழியின் துணைகொண்டு வெளிப்படுத்தும் மிகப்பெரிய செயல்பாடாகிறது. அச்செயல்பாட்டுக்கான அவகாசம் அன்றாடம் இலக்கியங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அமைவது பெரிதும் இல்லை எனலாம்.
தமிழ்க் கல்விப் புலத்தில் படைப்பு மனத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது பெரும் சவால். முனைவர் வீ.பூமிநாதன், ஒரு கவிதைப் படைப்பாளியாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தனித்துவமாகக் கருதத் தக்கது. முனைவர் வீ.பூமிநாதனின் ‘ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு’ என்ற கவிதைத் தொகுப்பு, தற்காலக் கவிதைப் படைப்புத் துறையில் புதிய நோக்குகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை வகைதொகைப்படுத்திப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொகுப்பின் தலைப்பு
முனைவர் வீ.பூமிநாதன் தனது கவிதை வெளியெங்கும் மனிதாயப் பண்புகளின் சிக்கல்களையும் அதன் வெளிப்பாடுகளில் ஏற்படும் முரண்களையும் அவை உள்வாங்கப்படுவதில் ஏற்படும் பண்பு மாற்றங்களையும் நுட்பமாகப் பேசுகின்றார். தமிழ் இலக்கியக் கல்விப் புலத்தில் தொடர்ந்து இயங்கும் ஓர் ஆசிரியரே கவிதைப் படைப்பாளியாக இருப்பதால், அவர் தமிழின் நீண்ட நெடிய மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கிறார். குறிப்பாக தமிழ்ச் சமூகம், தாய்வழிச் சமூகமாக இருந்தது என்ற வரலாற்று நிலையில் அவர் அழுத்தமான பிடிப்பும் தொடர்பும் கொண்டிருக்கிறார். இச் சமூகம், மனிதப் பெருவெளி ஒரு முதாயிலிருந்து கிளைத்தது என்பது அவருடைய கவிதை வெளிப்படுத்தும் நம்பிக்கையாகும். எனவே கவிஞர், மனிதர்களின் தொப்புள்கொடியைப் பற்றிக் கொண்டு, காலவெளியின் பின்னோக்கிச் செல்லும்போது, அவரால் ஓர் ‘ஆதித்தாய்’ கண்டடையப்படுகிறாள்.
ஆதித்தாய் என்பது கவிஞரால் முன்வைக்கப்படும் கனதிமிக்க குறியீடு. இது தாய்வழிச் சமூகத்தின் அழுத்தமான வெளிப்பாடு. தாய்வெளிச் சமூகத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள், அசைவியக்கங்கள் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூகத்தால் வீழ்த்தப்பட்ட வலிமிகுந்த வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இக்குறியீடு.
ஒரு மனிதனின் இதயத் துடிப்பை இடதுபக்க மார்பின் வழியாகவே உணருவது என்பது வழமை. ஆனால், ஆதித்தாயின் முதுகில் இந்தத் துடிப்பை உணருவதாகக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு பேசுகிறது. அதிலும் அந்தத் துடிப்பு என்பது முதுகைத் தாண்டி ஒலி எழுப்புகிறது என்ற தொனிப்பொருளில் ‘கேட்கும் துடிப்பு’ என்கிறார் கவிஞர். எனவே ஆதித்தாயின் இதயத் துடிப்பு என்பது இயல்புக்கு மாறான துடிப்பு என்பது இதன்வழியாகப் பெறப்படுகிறது. எனில், எதன் பொருட்டு ஆதித்தாயின் இதயம் இயல்புக்கு மாறாக, அதிக ஒலி எழுப்பியபடி – பதற்றமுற்றபடி – ஒலிக்கிறது என்ற வினாவெழுகிறது.
இச்சமூகத்தில் – எல்லாம் இயல்பாக இருந்த, மனிதனை நேசித்த, அன்புக்கு முதன்மை இருந்த, தாய்வழிச் சமூகம் வீழ்த்தப்பட்டதன் வலியால் ஏற்படும் துடிப்பு இது என்பதாக இத்தொகுப்பின் கவிதைகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். எனவே இத்தலைப்பு, தொகுப்பில் உள்ள கவிதைகளின் வரலாற்று, பண்பாட்டு, உளவியல் பின்புலத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறது எனலாம்.
தொகுப்பில் மனதைப் பிடித்து நிறுத்துகிற… மறுபடியும் வாசித்து இரசிக்கத் தூண்டுகிற… சில வரிகளில் முன்னும் பின்னுமாய் மீண்டும் ஊர்ந்து திரிய வைக்கிற… திகைப்படைய வைக்கிற… குழப்பமடைய வைக்கிற… தெளிவுக்காக மீண்டும் வாசிக்கத் தூண்டுகிற பல வரிகள் கிடக்கின்றன.
தலைப்புகள் இல்லாக் கவிதைகள்
கவிதைக்கான தலைப்புகள் என்பவை முகவரி அட்டைகளைப் போன்றவை. அவை ஒருவகையில் கவிதைக்கான திறவுகோல்களாகவும் வாசல்களாகவும் அமைகின்றன. ஆனால் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைத் தொகுப்பில் எக்கவிதைக்கும் தலைப்பு இடப்படவில்லை. கவிதை வாசகனோடு உரையாடுவதற்கு முகப்புரை தேவையில்லை என்பது கவிஞர் வீ.பூமிநாதனின் கருத்தாக இருக்கலாம். கவிதையே வாசகனோடு நேரடியாக உறவாடும்போது, தலைப்புகள், ‘இடைமறிச்சான்’களாக எதற்கு என்று அவர் கருதியிருக்கக்கூடும். தலைப்புகள் அற்ற இக்கவிதைகள் வாசகனோடு நேரடியாகப் பேசத் தொடங்குகின்றன.
மாற்றம் ஒன்றே மாறாதது
இப்பிரபஞ்சத்தில் நிலையானது என்று எதுவும் இல்லை; எல்லாம் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது என்பது இயங்கியல் . இயற்கையின் இயக்க இயலில் சிலவற்றிற்குப் பொருள் கற்பிப்பதுதான் மனித வாழ்க்கை. வளைந்து கொடுப்பதும் நிமிர்ந்து நிற்பதும் எவற்றின் அடையாளங்கள்? வளைதல் என்பது பணிதலையும், நிமிர்தல் என்பது செருக்குறுதலையும் குறிக்கும் குறியீடு. இக்குறியீடுகளின் பின் தொக்கிநிற்கும் சமூதாய எள்ளல் நோக்கையும் பொதுப்புத்தி சார் தன்மையையும் கவிஞர் வீ.பூமிநாதன் வினாவெழுப்பி, அதனை மறுத்துரைக்கிறார்.
“வளைவதால் வாழை
கோழை அல்ல
நிமிர்வதால் பனை
செருக்கல்ல
வளைதல் நிமிர்தல்
வேறு வேறு அல்ல
காலத்தால்
பனியும் உருகும்
நீரும் இறுகும்” (ப.80)
வாசிப்பாளனைப் பிடித்து நிறுத்தி, அவனைக் குறித்து வைத்துக்கொள் என்று இக்கவிதை வாசகனோடு பேசத் தொடங்குகிறது. இந்தக் கவிதைகளைப் போல, நேரடியாகத் தொனிப்பொருளை வாசகனுக்குக் கடத்த நினைக்கும் கவிதைகள், சிறப்பாகவே வந்துள்ளன.
இருண்மையும் கவிதையும்
கவிஞர் வீ.பூமிநாதனின் பெரும்பாலான கவிதைகள், மெல்லிய இருண்மையை பூசிக் கொண்டுள்ளன. இருண்மையும் ஓர் அழகே என்பதுதான் கவிதை பற்றிய ஆழமான புரிதல். அப்படியான ஓர் அழகியல் தன்மை வீ.பூமிநாதனின் தொகுப்பில் உள்ள இருண்மைக் கவிதைகளில் தொக்கி நிற்பதை உணர முடிகிறது. கவிதையின் போக்கில், கவிஞரின் கைத்திறனில் வந்து விழும் இருண்மைக்கும், மொழியைக் கையாளுவதில் உள்ள சிக்கல்களால் வரும் கூடார்த்தத்திற்கும் வேறுபாடு உண்டு. இத்தொகுப்பில் அப்படிச் சில கூடார்த்தக் கவிதைகளையும் நான் அடையாளம் காணமுடிகிறது . இக்கவிதைகள் என்னவோ உள்ளே இருப்பதைப் போன்ற பாவனைகளைக்காட்ட உதவுமேயன்றி, வாசகனுக்கு அனுபவத்தைக் கடத்தத் துணை நிற்காது என்பதும் தொடர் வாசிப்புத் தந்த அனுபவம் ஆகும்.. எனவே எப்போதும் இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய வாசகனுக்குமான தொடர்பாடல் ( Communication ) அவசியமானது. அவ்வாறு தொடர்பாடல் செய்வதில் வஞ்சகம் செய்ய வேண்டுமென்று கருதாத இலக்கியப் படைப்புகளில் வெளிப்படும் வெளிப்படைத் தன்மையும் எளிமையும் பேரழகைக் கொண்டு வந்து சேர்க்கிறது எனலாம்.
காட்சிச் சித்தரிப்பும் கவிதை வலுவும்
கவிதைகளில் காட்சிகளைச் சித்தரிக்கிறபோது, குறைந்த சொற்களில் மேலான அனுபவத்தைக் கடத்தும் வல்லமை உங்களிடம் இருக்கிறது என்பதற்கான பல சான்றுகள் இக்கவிதைத் தொகுப்பில் உள்ளன. வாசகன், இலக்கியப் படைப்பில் வெளிப்படும் காட்சிச் சித்தரிப்பை வாசிக்கிறபோது, தானே அவற்றைக் காணும் அனுபவத்தைப் பெறுகிறான். இலக்கியப் பனுவலுக்கும் வாசகனுக்குமிடையில் ஸ்தூலமாக நின்கும் படைப்பாளி மறைந்துபோகும் பேரனுபவத்தை இக்காட்சிப் படிமங்கள் வழங்குவது உண்டு. இன்னும் சொல்லப்போனால், மொழி என்ற ஒன்றும் மறைந்து அனுபவம் என்ற முழுப்பொருளை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் தன்மையையும் ஒரு படைப்பாளி உருவாக்கிவிட முடியும் என்பதற்கு முனைவர் வீ.பூமிநாதனின் பல கவிதைகள் சான்று பகர்கின்றன.
“ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு“ என்னும் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள், இவ்வாறான காட்சி அனுபவத்தை வாசிப்பாளனுக்குக் கடத்துவதில் சிறப்புப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக,
“ஓடிக் கொண்டிருக்கும்
எனது பாதத்தை
ஒரு நொடி
தாமதாக்குகிறது
தனது முட்டையைத்
தனது வாயிலேயே
கவ்விக்கொண்டு,
ஊர்ந்து செல்லும்
பாம்பு ஒன்று” (ப.13)
இக்கவிதை, குறைந்த சொற்களில் ஒரு காட்சிப் படிமத்தை வாசிப்பாளனுள் எழுப்புகிறது.இக்காட்சி அனுபவம் ஏற்படுத்திய பேரதிர்ச்சியில் வாசகனைச் சில நிமிடங்கள் உறைந்துபோக வைக்கும். காட்சிப் படிமங்களாகவே மனதில் தங்கிவிடும் பல சொற்பதங்கள் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைகளில் கிடக்கின்றன.
நகம் என்னும் குறியீடு
ஒரு படைப்பாளியின் இலக்கியப் படைப்பில் ஒரு குறியீடு மீள மீள முன்வைக்கப்படும்போது, அக்குறியீடு தனித்துவக் கவனத்தைக் கோருகிறது என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைகளில் ‘நகம்’ என்பது பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறது. வேறு வேறு இடங்களில், வேறு வேறு தொனிப்பொருளில் இக்குறியீடு முன்வைக்கப்படுவதைக் காணமுடிகிறது. ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது குறித்துப் பேசும் கவிஞர் வீ.பூமிநாதன், அவ்வரிசையில் ‘நகத்தை’க் குறிக்கிறார்.
‘எனது இருப்பை / நான் எப்படி / அடையாளப்படுத்துவது?
எடை, உயரம் / நகம், கூந்தலின் வளர்ச்சி,
பார்வை, சொல், / பயணம், ஈரம், / உண்மை, கல்வி
பணி, குடும்பம், / எழுத்து…’ (ப.7)
‘கழுகின் கடினமான / நகங்களை விட
வலிமையான ஒரு கோழியின் இறகுகள்’ (ப.16)
‘நம் நகங்களை நாமே உண்போம்’ (ப.26)
‘எண்ணற்ற கழுகின் / நகங்களை உண்ட’ (ப.29)
‘உலர்ந்துபோன் நகங்களைச் சுமக்கும் / வெட்டுக்கிளி’ (ப.35)
இவ்வாறு இக்கவிதைத் தொகுப்பெங்கும் நகங்கள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. இவை மிகவும் ஆழமான குறியீடாகப் பயின்றுவருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வந்தக் கவிதைகளில் அக்கவிதைகளுக்குரிய தனித்துவத்தை முன்னிறுத்திப் படைக்கப்பட்டிருப்பினும் மறைபொருளாக ஏதோ ஒன்றைக் கவிஞர் சுட்டிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதாவது நகம் என்பது வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மையுடையது. எனவே தரிக்கத் தரிக்க மீண்டும் வளரும் ‘வளமையும், எதிரியைத் தாக்க ஆயுதங்கள் அற்ற நிலையில், பெண்களுக்கு நகமே ஆயுதமாகும் தன்மையும், நாணத்தில் நகம் கடிக்கும் வெளிப்பாட்டுணர்வும், நகம் கடித்தல் என்னும் தவிப்பின் நிலையையும் குறியீடாகப் பல இடங்களில் கவிஞர் வீ.பூமிநாதன் பயன்படுத்துகிறார். இவ்வாறான தனித்துக் குறிப்பிடத்தக்க குறியீடுகள் இவரது கவிதை வெளிகளில் ஊடாடுவதைக் காணமுடிகிறது. இவற்றைக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளும் பொருள்கோள் முறையையும் வாசிப்பாளனிடன் இக்கவிதைப் பனுவல்கள் கோருவதை உணரமுடிகிறது.
முடிவுரை
தமிழ்க் கல்விப்புலங்களில் இருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகளில் , அப்படைப்பாளியின் வாசிப்பின் ஆழமும், அனுபவ வெளிப்பாடும் பொதிந்திருப்பதைப் பொதுவில் காணமுடிகிறது. பேராசிரியராகவும் தொழிற்படும் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைப் படைப்பில், தொன்மை மனத்தின் விழைவுகளும் நவீன நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணமுடிகிறது. நிலவுகிற சமூகத்தில் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பல்வேறு அம்சங்களைக் கேள்விக்குட்படுத்தும் விமர்சன நோக்கும் பூமிநாதனின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. காட்சிப் படிமங்களைச் சித்தரிப்பதில் கவிஞர் தனித்துவம் உடையவராகத் திகழ்கிறார் என்பதற்கான சான்றுகள் பல இவருடைய கவிதைத் தொகுப்பில் உள்ளன. குறியீடுகளை மிகவும் காத்திரமாகக் கையாளும் திறனையும் பூமிநாதனின் கவிதைகளில் காணமுடிகிறது. தன் கவிதைப் பரப்பில் ஒரு பொதுக்குறியீட்டைப் பல இடங்களில் பொதிந்து வைத்துப் பல்வேறு பொருள்களை வாசகனுக்குக் கடத்துவதை ஓர் இலக்கிய உத்தியாகவும் பூமிநாதன் பயன்படுத்துகிறார் என்பதையும் காணமுடிகிறது.
தோழமையுடன்,
முனைவர் கி பார்த்திபராஜா
உதவிப்பேராசிரியர் (ம) தலைவர்,
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை,
தூய நெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர்.