தாயே! தமிழே! என்தங்கமே!
கட்டிக்கரும்பே; என்கருப்பட்டி வெல்லமே!
அளவில்லா செல்வமே! என் அன்புமகளே!
உனை கட்டியணைக்க என்
இரு கைகள் போதுமோடி!
மலடி எனும் பெயர்மறைய வந்தவளே!
உன் மலர்முகம் பார்தலவோ
என் நாள்பொழுது விடியுதடி!
தாரகையாய் வலம் வந்தபோது
தரணியிலே நான் அடையா பெருமிதத்தை
தாய்மையால் – உன்னால் அடைந்தேனடி!
உள்ளிருந்து பிஞ்சுவிரலால் நீ
போட்ட வண்ணக் கோலமெல்லாம்
இன்றும் மறையாமல் இருக்குதடி
என் அடிவயிற்றில் – கீறல்சின்னங்களாய்!
நினைக்குபோதெல்லாம் சில்உடம்பு சிலிர்க்குதடி!
உன் வண்ணவிரல் செய்தந்த வருடல்களை!
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவளை
பட்டுப்போல் மெல்ல நடக்கவைத்தாய்!
தாய்மையோடு மென்மையையும் கற்றுத்தந்தாய்!
ஊனை விற்று, உயிரை விற்று
நான் பெற்ற உதிரத்தின் தோற்றமடி நீ!
ஒருவேளை உணவு உள்ளிருந்திவிட்டால்
அன்று அது உலக அதிசயமே!
உணவு மறந்து, உறக்கம் துறந்து
வாந்தியிலும், மயக்கத்திலும் நான்பட்ட
வருத்தமெல்லாம் நொடிபொழுதில் மறைந்ததடி!
உன் மலர்முகம் கண்டவுடன்!
உன் ஒற்றைவரி புன்னகையால்
என் ரணங்கள் பலநூறு கரைந்ததடி!
காற்றில் நீ கைவீசி நடக்கையிலே
கர்வம் பல கொண்டேனடி!
உன் எச்சில் அமுதுண்டு
என் உள்நா இனிக்குதடி!
உன் பிஞ்சு பாதங்களால்
என் புதியபாதை பிறந்ததடி!
எனை மகளாய் ஈன்றவள் என் தாயானால்
எனை தாயாய் ஈன்ற நீயும் என் தாயே!
என் அன்பு மகளே!! நீயும் என் தாயே!!!
கவிக்கிறுக்கல்களுடன்
முனைவர் சசிரேகா ராஜா
திருச்சி,
p.sasirekha18@gmail.com
தாய்மை உணர்வு. மிக அருமை