முன்னுரை
உலகத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது உணவு, உடை, இருப்பிடமாகும். அவரவர் வாழ்விடங்களில் கிடைக்கப்பெற்ற உணவுகளையே உண்டு வாழக்கையினை நடத்தினர். பிறகு பண்பாடு மூலம் அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. சங்க தமிழர்களுக்குக் காட்டில் வாழும் விலங்குகளும், கடல்வாழ் உயிரினங்களும் மிகவும் முக்கியமான உணவாக இருந்தன. அதன் பின் இயற்கையாகக் காய்களும், உழவர்களால் விளைவிக்கப்பட்ட செந்நெல், வெண்ணெல், மலைநெல், வரகு போன்றவையும் இது தவிர பிற சிறுதானியங்களும், கிழங்கு வகைகளும் உணவாகப் பயன்படுத்தி இருப்பதை இவ்வாய்வு கட்டுரை வெளிப்படுத்த முயலுகின்றது.
உணவு வகைகள்
சோற்றை வல்சி, சொன்றி, மிதவை, அடிசில், புன்கம், விதவை, துழவை, கூழ், என்ற பல பெயர்களில் உணவுப் பொருள்களையும், சமையல் முறைகளையும் குறிக்கும் பெயராகும். உணவுகள் உழுந்து, அவரை, பருப்பு சேர்த்த கலவையான உணவும், நெய், புளி, சோறு கலந்த உணவும், முல்லை நில மக்கள் செம்மறியாட்டின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட தயிரை உலையாகவைத்து, வரகு அரிசியை சேர்த்து அதோடு ஈசல் சேர்த்த உணவுகளும் மக்களிடம் பயன்பாட்டில் இருந்துள்ளது. புளி, தயிர் கலந்த சோற்றுடன் மாமிசத்தை, கலசிகம் உண்டுள்ளதை,
“படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பிஞ்
வழுக்குறிணம் பாணரொடு, ஒராங்கு” (புறம்,326:9-10)
இப்பாடலின் மூலம் அறியவருகிறது. மோருக்கு அளவான புளியம்பழம் சேர்த்தும், தினைமாவையும் கொழியலரிசினையும், கள்களை சேர்த்தும், பழந்சோற்றையும் கட்குடிகளுக்கு மயக்கதருவனாவாக இருந்துள்ளது. பாரிநாட்டில் மூங்கில்நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் போன்றவை இயற்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதை,
“உழவர் உழாபலேயே நான்கு பயன்உடைத்தே
ஒன்றே, சிறியிலைவெதிரின், நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின்வழம் ஊழ்கிகும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிகிழங்கு வீழ்க்கும்மே” (புறம், 109:3-6)
எனும் பாடலில் கொண்டு அறியலாம். மேலும், தமிழர் உணவுவகைகளைப் பின்வருமாறு காண்போம்.
கறி வகைகள்
குழம்பு, பொரிக்கறிகள், இறைச்சியால் செய்யப்பட்ட கறிவகைகள், புளியுடன் மீன்கறி, தயிர், கொம்மட்டி உணவு, மாதுளையின் மசிய காயொடு மிளகு பொடி கருவேப்பிலை, அளாவிப் பசு வெண்னையும் சேர்த்து உணவாக அந்தணர்கள் பயன்படுத்தியுள்ளனர். கீரையுண்ணுதலைப் “பாசபத மிசைதல்” என்பார்கள். நண்டு பீர்க்கங்காய், வெள்ளரிக்காயால் செய்த கூட்டும் சோறும். மழைக்கால பருவத்தில் விளையும் வேளைக்கீரை, குப்பைக்கீரை, சிறிய இலைகளையுடைய இலைக்கறிகள் சேர்த்த கறிவகைள் உணவுகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
கிழங்குகள்
கிழங்குவகைளான, வள்ளிக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, கூவைக்கிழங்கு, மற்றும் பலாபழக்கொட்டையும் போன்றவையும் பிற கிழங்குகளும் பயன்படுத்தியுள்ளார்கள்.
ஊறுகாய்
உணவிற்கு துணையாக ஊறுகாயை வைப்பது சங்க கால மக்கள் பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தணர்கள் “மாவடு” என்ற பெயரில் பயன்படுத்தினர். குறிப்பாக, மாங்காய் ஊறுகாய், மாங்காயுடன் புளியம்பழம் சேர்த்தும் ஊருகாய் தாயரித்துள்ளார்கள். “கூட்டு நுகரும் இயல்பினை மாங்காய் நறுங்காடி கூட்டுவோம்” (109:23) என வரும் கலித்தொகை பாடல் மூலம் அறியலாகிறது.
மாமிச உணவு
தமிழ் மக்களிடையே விலங்குகள், பறவைகள், மீன், நத்தை, நீர்வாழ் உயிரினங்கள் முக்கியமான உணவாகும். ஆடு, கடமான், மான், முயல், உடும்பு, எலி, கோழி, போன்றவற்றை வேகவைத்தோ, தீயில் சுட்டோ, நெய்யில் இட்டோ பொரித்தே மாமிசத்தை உண்டுள்ளார்கள். நெயில் பொரித்த இறைச்சியை வறை, வாட்டு, செதுக்கண், குறை எனும் பெயர்களில் வழங்கியுள்ளனர். பச்சை மீனைச் சுட்டு காயவைத்து உப்பு கண்டம் போட்டும், இயற்கையாக எழும் தீயில் புகை நாற்றம் இல்லாத வகையில் வதக்கி, அவற்றின் மேலுள்ள மயிரையும், தோலையும் நீக்கி விட்டு இறைச்சியை உண்டுவாழ்ந்துள்ளனர். ஆண்பன்றிக்கு நெல்லை இடித்த உணவைக் கொடுத்து பெண் பன்றிகளுடன் கூடப் புணராமல் தவிர்த்து விலநாள் குழியிலே நிறுத்தி வளர்த்து, பின் வேண்டிய நேரத்தில் உணவாகப்பயன்படுத்தியுள்ளார்கள். இறைச்சியை மேற்சொன்னபடியல்;லாமல் பச்சை இறைச்சியையும் உண்பதும் மக்களிடம் வழக்கத்தில் இருந்துள்ளதை,
“……………….. தீம் ந்தாரம்
நிறுத்தஆயம் தலைச் சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிறி
புல்புக்கனனே, புல் கணற் காளை
ஒருமுறை உண்ணி அளவை, பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுபவன்” (புறம், 258:2-8)
எனும் பாடலில், வீரர்கள் வேற்றுநாட்டிற்கு சென்று ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் போது போர் முனைக்கு செல்லும் வேகத்தில் பச்சை ஊனைத்தின்று கள்ளை அருத்திவிட்டு கையை வில்லிலே துடைத்துக் கொண்டு சென்றுள்ளனர். எனவே அவசரகாலத்தில் பச்சை உணவை உட்கொண்டுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சிக்குப் பூநாற்றம் உடைய புகையையூட்டி சமைத்த ஊனும் உண்ணப்பட்டது. பச்சூன் என்பது எவ்வகை மாற்றமும் செய்யப்படாத பச்சை இறைச்சி என்பதை,
“பச்சூன் பெய்த கவல்பினி பைந்தோல் கோல்வல்
பாண் மகனே” (பெரும்,283-284)
எனும் அடிகளின் மூலம் பச்சை இறைச்சியையே குறிப்பிடுகிறது.
கள் வகைகள்
ஊனோடும் விருப்பமாக உட்கொண்ட மற்றொன்று கள்ளே. என்பதை,
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்புவும்” (புறம்,113)
எனும் பாடலில், இவ்விரண்டின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றது. பானையில் இருந்து இறக்கும் கள்ளும், தேனும் அரிசிதிணை முதலிய தானியங்களிலிருந்து வடிக்கப்பட்ட கள் அக்காலத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பனைஅரும்புகளிலிருந்தும், தேனை பக்குவபடுத்தியும், இல்லத்திலிருந்தும் கள்ளினை தோப்பி என்னும் பெயரரல் வழக்கத்தில் இருந்தது. கள்ளை பன்னாடையில் வடிக்கட்டி சாடியிலும், மூங்கில் குழாயிலும் இட்டு பக்குவப்படுத்தி உண்டனர். நாட்பட்ட பழங்கள் மிக்க போதையைக் கொடுப்பதற்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளதை,
“அரவு வெகுண்டன்ன தேறல்” (புறம்,376:14)
“பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண்,237)
“பாப்புக் சுடுப்பன்ன தொப்பி” (அகம்,348:7)
“தேற்கடுப்பன்ன நாட்பவ தேறல்” (புறம்,392:16)
என வரும் பாடல்களின் மூலம் அறியலாம்.
“கள்ளை மகிழ்தால் மரபின் மட்டு” (புறம்,390:16)
என்ற பாடலில் கள் மகிழ்ச்சியைக் கொடுப்பது பானமாகப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு மரபு என்பதையும் அறிய முடிகிறது. கமுகம் பூவின் பாளையைக் கள் வைக்கும் குப்பிற்க்கு ஒப்பிட்டு கூறுதலின, பச்சை நிறமான குப்பிகள் கள் வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கள்ளின் நாற்றத்தை மாற்றப் பூவும் கட்குடியும் காலத்து கட்குடிக்கும் காலத்தில் இடை இடையே கட்டியும், இஞ்சியையும் பயன்படுத்தியுள்ளார்கள். களிப்பு மிகுதியால் கள்ளுண்டவர் உடல் ஆடுவதைப் போல கட்குடம் கள்ளின் முதிர்ச்சியால் அசைவதும் உண்டாம்.
யவனர்களின் மது
யவனர்கள் தங்கள் நாட்டிலிருந்து பக்கல் வழியாகக் கொண்டு வந்த மது வகைகள் பழந்தமிழர்கள் மிகவும் விரும்பி உண்டனர். செல்வர் மனைகளில் இளம் பெண்கள் இதனைப் பொற்கலத்தில் ஊற்றி ஆடவரை உண்பித்தனர் என்பதை (புறநானூறு,24:32-34,56:18-21), (மதுரைக்காஞ்சி,779-78) இப்பாடல்கள் மூலம் மதுக்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிகிறது.
அந்தணர்களும் ஊன், மது, உண்ணும் பழக்கத்தைப் பெற்றிருந்துள்ளனர் என்பதை, அந்தணர் மரபில் இருந்து புலவராகிய கபிலர் (புறம்,113) கூறியுள்ளார்.
இனிப்புவகைகள்
இனிப்பு உணவுகள் பண்டைய தமிழ்மக்கள் ஊன், கள்ளையும் முதன்மையான உணவாகவும், அதன் பிறகு அனைவரும் இனிப்பையே அதிகமாக விரும்பி உண்டுள்ளனர். பருப்புடன் வெல்லம் கலந்த பொங்கலும், வெல்லப்பாகுடன் மாவைக் கலந்து அப்பமும், வரகில் பால் கலந்த உணவும் கரும்பஞ்சாற்றுப் பாகுடன் பால், நெல், அவலை சேர்த்து இனிப்பு உணவும், தேன், பால் சேர்ந்த இனிய இனிப்பு வகையாக மக்களிடையே வழக்கத்தில் இருந்திருக்கின்றன. பலாப்பழம், இளநீர், வாழை, பனைநுங்கு, இனிய பழங்ளையும் இனிப்பு உணவாகவும் மற்றும் பிற பழங்களையும் உணவாக பயன்படுத்தியுள்ளதை,
“தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
வீழ்இல் தாழைக் குலவித் தீம்நீர்
கவைமுலை இரும் பிடிக்கவுள் மருபு ஏய்க்கும்
மிரள் அரைப் பெண்ணை நு{ற்கொடு, பிளவும்
தீம்பால் தாரம் முனையின்” (பெரும்,356:36)
என்னும் பாடல் மூலம் இனிய பழங்களையும் “பிறவும் தீம்பல் தாரம்” எனக் குறிப்பிட்டுள்ளதை கொண்டு அறியமுடிகிறது. கரிகாலன் பொருநர்களுக்கு ஊனையும், கள்ளையுமே முதன்மையான உணவாக கொடுத்தனர். பிறகு அவற்றில் அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் பலகாரங்களும், சோறும் வழங்கப்பட்டதை,
“ஊனும் ஊணும் மனையின் இனிதுஎன
பாலின் பெய்தவுமு;, பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து, மெல்லியது பருகி
விருந்துறுத்த, ஆற்றி இருந்த னமாக” (புறம்,381:1-4)
என்பதை இப்பாடல் வாயிலாக இனிப்புவகையான உணவுகளையும் மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளமையை அறிந்துக் கொள்ள முடிகிறது.
முடிவுரை
சங்கத் தமிழர்கள் வாழ்விடங்களில் கிடைக்கப் பெற்ற இயற்கையான உணவுகளையும், காட்டு விலங்குகளையும், நீர்வாழ் உயிரினங்களையும், தினைவகைகளையும், பழங்களையும் உண்டு வாழ்க்கையினை வாழந்திருக்கின்றனர். பிறகு உழவர்கள் உழவின் மூலம் நெல்வகைகளை விளைவித்து அறுவடை செய்து களத்தில் அடித்து பிறருக்கு கொடுத்தும் அங்கு வருபவர்களுக்கு உணவுகளையும் கொடுத்து அறங்களையும் செய்துள்ளனர். மேலும், ஆண்பன்றியை, பெண்பன்றிகளுடன் புணர்ச்சியில் இருந்து முற்றிலுமாக தடுத்து தனியாக வளர்த்து உணவுகளை சேமித்து தேவையான போது பயன்படுத்தயிருக்கின்றன.
கிழக்குகள், தென், கீரை போன்ற இயற்கையான உணவுகள் இக்காலத்தில் சிறந்த உணவாகவும் இந்நாளில் சைவ உணவாகவும் பின்பற்றப்படுகிறது. நாடிவரும் பாணர்களுக்கு ஊன், சோறு, கள் போன்றவுணவுகள் கொடுக்கப்பட்டு பின்னர் வெறுக்கப்பட்டதின் காரணமாக இனிப்புவகை உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கநூல்களை உற்று நோக்கும் போது தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளதையும், உணவு பழங்கள் வழக்கங்களை அறிந்துக் கொள்ள முடிகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ர. அரவிந்த்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர். கல்லூரி,
ஓசூர் – 635 001.
இ-மெயில்: omarivuom.999@gmail.com
ர. அரவிந்த் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்க…