நெஞ்சு பொறுக்குதிலையே | சிறுகதை |முனைவர் க.லெனின்

நெஞ்சு-பொறுக்குதில்லையே

“நெஞ்சு பொறுக்குதிலையே!”

         தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை அங்கிருக்கும் மற்ற மக்களும் கண்டுகொள்வதாகவும் இல்லை. அந்தக் கும்பலில் ஒரு பையனும் பொண்ணும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். பையனுக்கு இருபது வயசு இருக்கலாம். பொண்ணுக்குப் பதினாலு வயது இருக்கலாம்.

     “டே… வாங்கடா… இங்க கல்யாணம் ஒன்னு நடக்குது” என்று அங்கிருந்த சிறுவன் ஒருவன் கத்தினான். அடுத்தவினாடி அத்தனை சிறுவர்களும் வேப்பமரத்தடியில் இருந்தார்கள். மாப்பிள்ளை வெறும் மஞ்சள் கயிற்றை எடுத்து அப்பெண்ணின் கழுத்தில் கட்டினான். கூடியிருந்தவர்கள் வெறுங்கையைத் தட்டினார்கள். சிலர் சாப்பாட்டுத் தகரத்தட்டை குச்சியால் தட்டி சத்தத்தை எழுப்பினார்கள். சிறுவர்கள் அனைவரும் ஓ.. வென்று கத்தினார்கள். அவர்களின் கல்யாணம் அவ்வளவே.  சிறுவர்களும் அவரவர் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

காலம் கடந்து இன்றைக்கு,

       சித்திரை மாசமன்னாலே போதும் இவர்கள் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. கூட்டங்கூட்டமாய் வந்து விடுவார்கள். தண்ணீர் எங்கு இருக்கிறதோ அங்கேயே தங்கி விடுவார்கள். இவர்களுக்கென்று ஊர் கிடையாது. நிரந்தர இடம் கிடையாது. தனக்கென சொந்தபந்தமும் கிடையாது. பொதுவா மக்கள் இவங்களை நாடோடிகள்ன்னு கூப்பிடுவாங்க. ஒருசிலபேர் பிச்சை எடுத்துச் சாப்பிடுறதால பிச்சைக்காரங்கன்னும் சொல்லுவாங்க.

       உடம்புல முடி அதிகமா இருக்கும். குளிக்க மாட்டாங்க. ஆம்பிளைங்க சட்டை போட மாட்டாங்க. பொம்பளைங்க மேல ஒரு உடுப்பு. கீழ ஒரு உடுப்பு அவ்வளவுதான். வாய் கொடுத்தம்மன்னா மீள முடியாது. கிட்டக்க போனா குப்புன்னு வாடை அடிக்கும்.

      அந்த ஊருக்குப் பிச்சைக்கார கூட்டங்களோடு பாஞ்சாலையும் தன் மகனோடு வந்திருந்தாள். பாஞ்சாலைக்கு என்ன தெரியும். கூட இருக்கிறவங்க எங்க போனாலும் அவளும் பின்னாலே போயிடுவா.. வேற என்ன பன்றது. ஆலமரத்தடியில் அவரவர்களும் ஒவ்வொரு இடமாய் பிடித்தார்கள். பாஞ்சாலையும் தனக்கென ஒர் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். தன்னுடைய மூட்டைக்குள் வைத்திருந்த பெரிய  துணிக்கற்றை எடுத்தாள். நான்கு மூலைகளிலும் கால்கள் ஊன்றி மூங்கிலை வளைத்து அதன்மேல் துணியைப்போட்டு மூடினாள். துணிவீடு ஒன்றை உருவாக்கிவிட்டிருந்தாள் பாஞ்சாலை. அதற்குள்  மற்றவர்களும் ஆளுக்கொரு துணி வீட்டினைக் கட்டிக்கொண்டார்கள். எப்பொழுதும் அதற்கான பொருட்களை அவர்கள் தங்களுடனே எடுத்துச் செல்வார்கள். வந்த நேரம் சாயங்காலம் ஆனதால் தற்போது இருட்டியிருந்தது. மகனை அழைத்துக்கொண்டு துணிக்கூண்டுக்குள் போய்ப்படுத்துக்கொண்டாள்.  நிலவு நடு வானத்தைத் தொட்டிருந்தது. அங்கு காற்று குளிர்ந்து மென்மையாய் வீசியது. எந்தச்சத்தமும் இல்லாமல் அந்த இரவு அமைதியாயிருந்தது.

      “அம்மா பசிக்கு… அம்மா பசிக்கு…” என்று மகன் அமுதன் அழுதது பாஞ்சாலைக்குக் கேட்டது. தூக்கத்தில் இருந்தவாறே தன்னுடைய ஜாக்கெட்டை அவிழ்த்து ஒருபக்க மார்பினை அமுதனின் வாயில் வைத்தாள். அமுதனும் மார்பு காம்பை சுவைத்தபடியே தூங்கிப்போனான்.

        “எத்தனை நாளுக்குத்தான் இப்படி அமுதனை ஏமாற்ற முடியும். குழந்தையில பசிக்கிதுன்னு அழுதபோது பால் கொடுத்தேன். பாலு வத்திப்போச்சு. சோறு ஒழுங்கா சாப்பிட்டாதானே பாலும் சுரக்கும். சோத்துக்கு எங்க போறது. வேலை செஞ்சு பொழைக்கலாம்முன்னு வேலை கேட்டு போனா.. என்னைய மேலும்கீழும் பார்த்துச், “சோப்பு வாங்கி தரன். குளிச்சிட்டு பிரஷா வான்னு” கூப்பிடுறான். அப்படி வாழ்றதுக்கு நான் பிச்சையே எடுக்கலாம்ன்னு மனசு சொல்லிச்சு. அப்புறம் எப்படி? குழந்தை பசின்னு கேட்டா உடனே மார்போடு அணைச்சிக்குவேன். என் இரத்தத்தைதான் உணவா கொடுக்கிறன். உடம்புல இருக்கிற உப்ப சப்பிகிட்டே அவனும் தூங்கிடுவான். ஏன்னா என் பொறப்பு அப்படி?” அமுதனுக்குப் பால் கொடுத்துக்கொண்டே விட்டத்தை அண்ணாந்து பார்த்தாள். மீண்டும் மனதால் யோசிக்க ஆரம்பித்தாள்.

          நான் எப்படி பொறந்தன். எப்படி வளந்தன்னே எனக்கு ஞாபகம் இல்லை. ஏதோ எப்படியோ வளந்தேன். ஒருநாள் வேப்பமரத்தடியில எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆச்சி. அது கல்யாணமின்னு கூட எனக்கு தெரியாது. ஆனா ஏதோ எனக்குன்னு ஒருதுணை இருக்கிறதா அவரை நினைச்சிக்கிட்டேன். பிச்சை எடுத்து வாழற பொழப்ப விட்டுட்டு அவருகூட வேலைக்கு போயி சம்பாரிச்சு நல்லா வாழனுமுன்னு நினைச்சேன். இத அவருகிட்ட எத்தனையோ தரவா சொல்லியும் இருக்கேன். அவரும் நேரம் வரட்டும் பாத்துக்கலாம் என்பார். நான் அப்ப ஆறு மாசம். ஒருநாள் காலையில அவரோட துணியை மட்டும் எடுத்து வைச்சிட்டுருந்தார்.

“என்னங்க… ஏதாவது வேலையா” என்றேன்

“ஆமாம் பாஞ்சாலை! வேலதான். போயிட்டு இருட்டருதுக்குள்ள வந்துடுறேன்”

       பாஞ்சாலையின் நெற்றியிலும் வயிற்றிலும் முத்தம் கொடுத்துக் கிளம்பியவன்தான் இன்று அமுதனுக்கு ஆறுவயசு ஆகுது. இன்னும் வரவே இல்லை. போனவன் போனவன்தான். நான் ஒரு கிறுக்கிமவ.  இருட்டருதுக்குள்ள வந்திடுவேன்னு சொன்னா… அப்புறம் எதுக்கு வேட்டின்னு கேட்க தோணல. பாஞ்சாலையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது. தூக்கம் வராமல் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

       அமுதனுக்கு விவரம் தெரிஞ்சா நான் என்ன பன்றது. என் மகன இந்த நாற வாழ்க்கையை வாழ வைக்ககூடாது என்று நினைத்தாள். பாஞ்சாலை எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.

       அந்த ஊறு பாஞ்சாலைக்குப் புதுசு. இதற்குமுன் அங்கு வந்ததாக நினைவில்லை அவளுக்கு. மற்ற பெண்களோடு குளத்திற்குத் தண்ணீர் எடுக்க அவளும் சென்றிருந்தாள். வெயில் காலமாக இருந்தாலும் பச்சை பசேல் வயலும். தண்ணீரும் இருந்தது. அவுங்க ஆளுங்களுக்கு எப்படி தெரியுமோ தெரியாது. எப்படியாவது தண்ணீர் இருக்கக்கூடிய இடத்தைக் கண்டுபிடித்து வந்து விடுவார்கள். ஊரும் வளமாகவே காணப்பட்டது.

       ஆலமரநிழலில் ஒருபக்கம். அங்கே ஒருத்தர் சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவருபேரு பிச்சை. அந்தக்கூட்டத்தில் வயசானவர். விவரமானவரும் கூட. காலையிலேயே அவருக்கு முன்னால் ஐந்தாறு சிறுவர்கள். அச்சிறுவர்களில் அமுதனும் ஒருவன். பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

              “பசங்களா… நான் சொலறத கவனமா கேளுங்க?”

              “சரிங்க தாத்தா.. சொல்லுங்க” என்றார்கள் அனைத்துச் சிறுவர்களும்.

       பிச்சை எடுக்க போகும்போது நேரம் அறிஞ்சு போகனும். அப்பதான் சோறு போடுவாங்க. காலையிலகாட்டியும் வீட்டு முன்னால போயி நின்னாக்க… வீட்டுக்காரங்க திட்டுவாங்க.. நம்மள பாத்தவுடனையே வெரட்டுவாங்க. அதனால காலையில வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும், அவுங்க மீதியை கீழ கொட்டிடலாமுன்னு நினைப்பாங்கள்ள அந்தச்சமயத்துல போயி பிச்சை எடுக்கனும். கண்டிப்பா அப்ப நமக்கு சோறு போடுவாங்க.. மதியானம் போகக்கூடாது. ஏன்னா? அந்த நேரத்துலதான் அவுங்க தூங்கிட்டு இருப்பாங்க. நாம தொந்தரவு பண்ணக்கூடாது. அப்படி பண்ணா அடுத்தவாட்டி போகும்போது திட்டி அனுப்பிடுவாங்க.

       இரவு நேரத்திலையும் ஒன்பது மணிக்கு மேல பிச்சை எடுக்க போகனும். அப்பத்தான் அவுங்கயெல்லாம் சாப்பிட்டு பாத்திரத்த கழுவும்போது நாம போனா பிச்சை போடுவாங்க.

              “அது எப்படி தாத்தா சரியா போறது?” என்றான் ஒரு சிறுவன்

       அது முடியாதுதான். ஆனா ஒரு வீட்டுல இல்லாட்டியும் இன்னொரு வீட்டுல கண்டிப்பா நான் சொன்ன மாதிரிதான் நடக்கும். ஆனா ஒன்னா சேர்ந்து போககூடாது. தனித்தனியே போனாதான் பாவமா பாத்துச் சோறு போடுவாங்க. சரி… இங்க நாலு தெருதான் இருக்கு. பிரிஞ்சு போயி சோறு வாங்கியாங்க என்றார் பிச்சை.

              “தாத்தா நாங்க கேட்டா சோறு போடுவாங்களா” என்றான் மற்றொரு சிறுவன். “அப்படின்னா வயித்துக் காஞ்சி செத்துப்போங்கடா” கோபமானார் பிச்சை.

       ஆளுக்கொரு தட்டை எடுத்துக்கொண்டு சிறுவர்கள் பிச்சை எடுக்கப்போனார்கள். அமுதனும் அவர்கள் கூடவே ஒட்டிக்கொண்டான். நான்கு தெருக்களிலும் பிரிந்து கொண்டார்கள். வாகை மரத்து வாசல் வீட்டின் முன் அமுதனும் கூடவே இன்னொரு பையனும் நின்றார்கள். இச்சிறுவர்களை அந்த வீட்டு சிறுவன் மாணிக்கம் வச்சக்கண்ணு வாங்காமலே பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் வீட்டிலிருந்து மாணிக்கத்தின் அம்மா வெளியே வந்தார்கள்.

              மேல் சட்டையில்லாத கிழிந்த டவுசரும் கருத்த உருவமாய் நின்றிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவன் அமைதியாய் பாவமாய் நின்றிருக்க அமுதன் மட்டும் “பிச்சை தாத்தா சோறு வாங்கியாற சொன்னாங்க. எனக்கு பசிக்கு” என்றான்.

       மாணிக்கத்தின் அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “யாருப்பா பிச்சை தாத்தா” ன்னு கேட்டாங்க.

       “அவரு பிச்சை தாத்தா.. பிச்சை தாத்தா..” என்றான் அமுதன். மாணிக்கத்தின் அம்மா என்ன நினைத்தாலோ என்னவோ மனதிலே சிரித்துக்கொண்டு உள்ளே போய் சாப்பாட்டுடன் வெளியே வந்தாள். இரண்டு தட்டுகளிலும் கொஞ்சம் சாப்பாடும் குழம்பும் ஊற்றினாள். வாகை மரத்து அடியிலே நின்று அந்த உணவை அள்ளி அள்ளி இருவரும் சாப்பிட்டார்கள். அமுதனின் உதடு, கன்னம், சட்டையில்லாத வயிறு எல்லாம் சோறாயிருந்தது. அதை அருவருப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

       காலை வெயில் ஏறிக்கொண்டிருந்தது. தண்ணீர் இறக்கி வைத்துவிட்டு கூண்டிற்குள் வந்தாள் பாஞ்சாலை. தூங்கிகொண்டிருந்த மகனை காணவில்லை. வெளியே வந்து,

“மங்கா அக்கா… என் மகன பாத்தியா…”

“அவன் பிச்சையோட நின்னுட்டு இருந்தாண்டி” என்றாள் அவள்.

       பாஞ்சாலைக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தக் கிழட்டுமூதி சின்ன பசங்கள அனுப்பி பிச்சயெடுத்துச் சாப்பிடறது. அதுக்கு ஞா மகன்ந்தா கிடைச்சானா.. கறுவிக்கொண்டே ஆலமரத்து அடுத்த மூலைக்குச் சென்றாள். பிச்சையின் முன்னாடி முன்னைப் போலவே அனைத்துச் சிறுவர்களும் நின்றிருந்தார்கள்.

              “பிச்சை தாத்தா… அமுதன் இன்னிக்கு என்னாமா பிச்சை எடுக்குறா தெரியுமா? நானே அசந்திட்டன். அனைவரும் வாய்விட்டு சிரித்துக்கொண்டனர்.

              “அமுதா… இங்க வாடா… ” பாஞ்சாலையின் குரல் வேகமாய் ஒலித்தது. அமுதனும் அம்மாவைப் பார்த்தவுடன் வேகமாய் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டான். தலையைத் தாழ்த்தி மகனைப் பார்த்தாள். வயிறு கொஞ்சமாய் மேடாயிருந்தது. பாஞ்சாலைக்கு அப்பாடா என்றிருந்தது.

              “யோ பிச்சை.. ஞா புள்ளைய கெடுக்கிறதே நீதான்யா.. நாந்தான் ஞா புள்ள கூட பேசாத பேசாதன்னு சொல்றன். அவன பிச்சையெடுக்க அனுப்பாத.. பழக்காதன்னு சொல்றன்ல்ல! அப்புறம் ஏ? சும்மா பேசிப்பேசி பிச்சையெடுக்க வைக்கிற. ஏற்கனவே ஒருத்தன ஞா தலையில கட்டி வைச்ச. அவனும் என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டான்” பாஞ்சாலையின் கோபம் வெடித்தது. பிச்சை எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். அமுதன் பிச்சை எடுப்பது பாஞ்சாலைக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நிலைகெட்ட இவர்களைப் நினைந்து நெஞ்சு பொறுக்கமுடியாமல் தவித்தாள். தான்தான் மானம் கெட்டுப்போய் பிச்சை எடுக்கிறோமே. தன்மகனும் எடுக்கனுமா என்பாள். இந்தக் கூட்டத்திலிருந்து எப்படியாவது மகனை பிரித்து வெளியேறிவிட வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்ளுவாள். தன்மகனை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு கூண்டிற்குள் சென்றாள்.

       மகனை மார்போடு அணைத்துக்கொண்டாள். மகனின் வயிறு ஓரளவிற்கு நிரம்பியிருந்தை நினைத்து சந்தோசப்பட்டாள். பாஞ்சாலையின் வயிறு இன்னும் காய்ந்துபோய்தான் இருந்தது.  கருத்த உடம்புதான் அமுதனுக்கு. அவனிடம் சட்டை இல்லை. கால்டவுசர் மட்டுந்தான் அணிந்திருந்தான். அதுவும் பின்பக்கத்தில் சின்னதா ஓட்டை வேறு. பாஞ்சலை டவுசரில் எவ்வளவு தைத்துப்பார்த்தும் ஓட்டை மட்டும் மூடியதாகத் தெரியவில்லை. இனிமேலும் தைக்கவும் முடியாது. அந்த அளவிற்கு துணி நைஞ்சு போயிருந்தது. இதைவிட்டால் இன்னொரு துணி இருக்கு. அதுவும் இப்படித்தான் இருக்கு. பாஞ்சாலை ரொம்பவும் வருத்தப்பட்டாள்.

       சிலநேரங்களில் அமுதன் நடந்து செல்லும்போது அவனுடைய பின்பக்கத்தில், “டே தபால்பெட்டி டா..” என்று பேப்பரைக் கிழித்துப் போடுவார்கள். தபால் வந்திருக்கிறதா என்று கையை உள்ளேவிட்டுப் பார்ப்பார்கள். அமுதன் அழுவான். அம்மாவிடம் வந்து திக்கிதிக்கி சொல்லுவான். பாஞ்சாலை ரொம்பவும் நொந்து கொள்ளுவாள். அமுதனுக்கு வாடாமல்லி கலர்ல பாக்கெட் வச்ச சட்டை போட்டுப் பாக்கனுமுன்னு பாஞ்சாலைக்கு ரொம்ப நாள் ஆசை.

       பாஞ்சாலை எப்போதும் பகலில் பிச்சை எடுக்க செல்ல மாட்டாள். இரவு நேரத்தில்தான் பிச்சை எடுக்கச் செல்வாள். அமுதன் குழந்தையாக இருக்கும்போது அவனையும் தூக்கிக் கொண்டுதான் செல்வாள். ஆனால் இப்போதெல்லாம் அமுதனை கூண்டிற்குள்ளே படுக்க வைத்துவிட்டுத்தான் பிச்சையெடுக்கவே வருகிறாள். பிச்சை எடுத்த உணவை இரவும் அடுத்தநாள் காலையும் வைத்துக்கொள்ளுவாள்.  வாகை மரத்து வீட்டில் பிச்சைக்காக ஏங்கி நிற்கிறாள் பாஞ்சாலை. வீட்டின் முன் சின்னசின்ன விளையாட்டு சாமான்கள் சிதறிக்கிடக்கின்றன. சிறிதுநேரத்தில் மாணிக்கத்தின் அம்மா உணவைப் போட்ட விட்டு திரும்புகிறாள்.

              “அம்மா… எனக்கு ஆறு வயசுல ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு தகுந்த மாதிரி பழைய கிழிஞ்ச சட்டை ஏதாவது இருந்தா கொடுங்கம்மா” என்றாள்.

              பாஞ்சாலையையே பார்த்துக்கொண்டிருந்த அப்பெண், வீட்டினுள்ளே சென்று மாணிக்கத்தின் பழைய சட்டையும் பேண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “இது என்னோட பையனோடது. இப்ப பத்தல. சும்மாதான் வீட்டுல இருக்கு. எங்கையாவது கீழ போடலாமுன்னு வைச்சிருந்தேன். நீ உன் புள்ளைக்குப் போட்டு விடு” என்றாள் மாணிக்கத்தின் அம்மா.

       பாஞ்சாலையின் மனதில் நினைத்த மாதிரியே வாடாமல்லி கலர்ல சட்டை இருந்தது. மனம் சந்தோசப்பட்டாள். மகனுக்குப் உடனே போட்டுப்பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். அன்றைய இரவு நன்றாகச் சாப்பிட்டாள். நிம்மதியாக உறங்கினாள்.

       சித்திரை வெயில் ரொம்பவும் வெக்கையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் வேறு. ஆலமரத்தடியில் இருக்கின்றபோது வெயில்கூட அந்தளவிற்கு தெரிவதில்லை. அந்த ஊர்க்காரர்கள் இதுபோன்ற நாட்களில் இங்குதான் உட்காந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது இங்கு யாரும் வரமுடியாது. இது அவர்களுக்குள் பெரும் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரர்கள் கூட்டம் தொந்தரவு தாங்க முடியல. அந்தப்பக்கமே போக முடியல. ஒரே நாத்தம்.  ஆலமரத்துத் திடலயே நாசப்படுத்தி வச்சிருக்காங்க.  அப்பப்ப அந்த ஊரில் இந்தப் பேச்சுத்தான் அதிகமாயிருந்தது.

       ஒருநாள் சாயங்காலம். பாஞ்சாலை ஒரு ஓரமாய் துணி அலசிக்கொண்டிருந்தாள். திடிரென்று அலறல் சத்தம். ஓடிவந்து எட்டிப்பார்த்தாள். பிச்சைக்காரக்கூட்டத்தில் இரண்டொருவர் சாரயம் குடித்துவிட்டு பெரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீட்டுப்பெண்களுடன் அந்த வீட்டுப் பெண்களும் சேர்ந்து அடித்துக்கொண்டார்கள். கற்கள் மேலே பறந்தன. யார்யார் மேலேயும் போய் விழுந்தன. பாஞ்சாலையின் கூண்டில் கூட ஒருகல் வந்து விழுந்தது. “ஐயோ.. பிள்ளையாச்சே” என்று பதறி ஓடினாள். பிச்சை எவ்வளவு தடுத்துப்பார்த்தும் அவர்கள் கேட்பதாகயில்லை. கைக்கால்கள் ஆட்டம் ஆடின. கெட்ட வார்த்தைகள் படையெடுத்து வந்தன. கிராம மக்கள் எல்லாம் கடும் கோபத்தில் இருந்தார்கள்.

       ஊர்ப்பெரியவர் வந்தார். சண்டையிட்ட இருவருக்கும் கன்னத்தில் பளார் என்று ஆளுக்கொரு அறை விட்டார். கன்னத்தில் கை வைத்தபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்சநேரத்தில் அந்த இடமே காலியானது. அடித்து விரட்டப்பட்டார்கள். ஆளுக்கொரு திசையாய் ஓட்டம் பிடித்தார்கள். பாஞ்சாலையும் மகனைத் தூக்கிக்கொண்டு கண்ணுமுண்ணு தெரியாமல் ஓடினாள்.

       இரண்டு நாளைக்கு அப்புறம் அந்தக்கிராமத்தில் பிச்சைக்காரர்கள் யாருமே இல்லை. ஏரி கருவேல காட்டுக்கு நடுவே பாஞ்சாலையும் மகனும் மட்டுமே தனித்து இருந்தார்கள். இனி பிச்சக்காரக் கும்பலுடன் போகக்கூடாது. மகனுக்காக இந்த ஊரிலே வாழனும்முன்னு முடிவு பண்ணா. முதல்ல தன்னோட தோற்றத்த மாத்தனுமுன்னு நினைச்சா. ஏரி மதகுல நல்லா மூழ்கி குளிச்சி. தன்னோட அடையாளத்த அழிச்சா. சாதாரண பொம்பளைங்க மாதிரி தன்னை மாத்திகிட்டா.

       ஏரி ஓரமாவே துணி கூண்ட அமைச்சிகிட்டா பாஞ்சாலை. மகனுக்கு வாடாமல்லி சட்டையைப் போட்டு அழகு பார்த்தா. பிச்சை எடுக்க கூடாது. வேலைக்கு போகனுமுன்னு முடிவு பண்ணா. அங்க இருக்கிற பண்ணைகிட்ட வேல கேட்டுப் போனா பாஞ்சாலை.

       அமுதன் ஆலமரத்துக்கு அடியில வந்து நின்னான். அந்த இடமே மாறியிருந்தது. ஊர்மக்கள் சிலர் அங்க உங்காந்திட்டு பேசிட்டு இருந்தாங்க. ஒரு மூலையில சின்னப்பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. அங்க போயி நின்னான். அந்தப் பசங்க எல்லாம் அமுதனைப் பார்த்தாங்க.

“உன் பேரு என்னடா” என்றான் ஒரு சிறுவன்.   “அமுதன்” என்றான்.

       என்னா அமுதாவா… ஆம்பிளை பேரு வைக்கச்சொன்னா பொம்பள பேரு வச்சிருக்காங்க… கிண்டலாய் சிரித்தார்கள் அனைவரும். அக்கூட்டத்தில் மாணிக்கமும் ஒருவன்.

“டே.. மாணிக்கத்தோட சட்டையைப் போட்டிருக்காண்டா…” ஒரு சிறுவன்

“டே… மாணிக்கம் இந்தப் பிச்சைக்கார பையன் உனக்கு உறவாடா?” இன்னொருவன்

        “மாணிக்கமும் இந்த அமுதாவும் அண்ணன் தங்கச்சிடா” கேலியும் கிண்டல்களும் அதிகமாகவே இருந்தன. அமுதனுக்கு பாதி புரிந்து புரியாமலும் இருந்தது. மாணிக்கம் கொஞ்சம் பெரிய பையன் ஆதலால் கோபம் தலைக்கேறியது. கோபத்தின் எல்லைக்கே சென்றான். ஓடி வந்து எகிறி அமுதனின் நெஞ்சியிலே ஒர் ஒதை விட்டான். பதைபதைத்துக் கீழே விழுந்தான் அமுதன்.

“பிச்சைக்கார பயலே… கழுட்டுடா என் சட்டையை.. யார்ற உனக்கு கொடுத்தது. திருடிகிட்டு வந்தியாடா… பிச்சைக்கார பயலே..”

கீழே விழுந்த அமுதனின்மேல் மாணிக்கம் உட்காந்திருந்தான். அமுதனின் சட்டையையும் பேண்டையையும் கழட்டி நிர்வாணப்படுத்தியிருந்தான்.

“இவன் ஆம்புள பையன்தான்டா… மீண்டும் நக்கல்.

       அங்கே உட்காந்திருந்தவர்கள் சிறுவர்களின் சண்டையைப் பார்த்து ஓடிவருகிறார்கள். அதற்குள் அமுதன் வீட்டிற்கு நிர்வாணமாகவே ஓடுகிறான். மகன் அழுது கொண்டே நிர்வாணமாக ஓடி வருவதைக் கண்ட பாஞ்சாலைக்கு ஒரு நிமிடம் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஓடி வந்தவன் அம்மாவை இறுகக்கட்டிக்கொண்டான். தேம்பி தேம்பி அழுதான். “அடிச்சு… அடிச்சு.. ஒதச்சி.. ஒதச்சி.. தள்ளி.. கீழ.. பிச்சைக்கார பயலே” தேம்பலில் வார்த்தைகள் வரவில்லை. என்ன நடத்திருக்கும் என்று பாஞ்சாலை ஊகித்துக் கொண்டாள். மகனை மார்போடு அணைத்துக்கொண்டாள். அவனின் அழுகையை நிறுத்த அவளுக்கு வேறு ஆயுதமும் இல்லை. இந்த உலகத்தில் போராடித்தான் வெற்றியைத் தொடமுடியும் என்று நினைத்துக்கொண்டாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

Leave a Reply