ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
பண்டைய கால மக்கள் அகத்திலும் புறத்திலும் சிறந்து விளங்கினார்கள். அகம் மட்டுமே மனிதனை வாழ வைத்துவிட முடியாது. மனிதன் புறம் சார்ந்த சமூகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். புறச்செய்திகளிலும் புறம் சார்ந்த நூல்களிலும்தான் அன்றைய தமிழின மக்கள் வாழ்ந்த வாழ்வியலை அறிய முடிகிறது. அம்மக்கள் பயன்படுத்திய பேசிய எழுதிய பார்த்த தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட என எதையும் அறிய ஏதுவாகிறது. தெய்வங்கள், வீரமறவனின் குடிப்பெருமை, பாராட்டுதலும் பரிசும், கூத்துக்கலைகள், பாதீடு, ஒற்று, பெண் மறுத்தல், போர்க்கருவிகள், உழவும் வாணிபமும், அறக்கோட்பாடு, ஆற்றுப்படுத்துதல், கணிவன், பேய்கள், பூக்கள், விலங்குகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இடங்கள், கையறுநிலைகள் போன்றவைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. இவ்வாய்வானது முழுவதும் ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.
போர் நடைபெற்ற அக்காலத்தில் மக்களின் நிலை என்ன? அம்மக்கள் வாழ்வதற்கான அணுகுமுறைகளையும், நாட்டிற்காகச் சண்டையிட்டுக் கொள்ளும் வீரமறவர்களுக்குள்ளும் மனம் (அன்பு) இருக்கிறது என்பதையும், அவர்களும் முறையான வாழ்க்கையினை வாழக்கற்றுக் கொண்டவர்கள்தான் என்பதையும் முன்வைக்க முயல்கிறது இவ்வாய்வு.
முன்னுரை
காடுகளில் மனிதன் நாடோடியாக வாழ்ந்து வந்தவன் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நாகரிக வாழ்க்கையை அடைகின்றான். தன்னுடைய சமூகத்தை நாகரிகமாகவும் பண்பாட்டுடனும் நற்ஒழுக்கத்துடனும் நிலை நிறுத்த அவனுக்கு பல யுகங்கள் தேவைப்பட்டிருக்கும். அவ்வாறு பண்பட்ட சமூகம்தான் சங்ககால சமுதாயம். அன்றைய மக்கள் எண்ணம், செயல், வாழும் முறைகள் என தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள். சங்ககாலம் பொற்காலம் என்றும் சங்க இலக்கியங்கள் பொற்இலக்கியங்கள் என்றும் அழைக்கலாம். அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களில் அன்றைய மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் போது அகத்தையும் (காதலும்) புறத்தையும் (வீரமும்) முன்நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியப்பாடல்கள் பெரும்பாலும் அகப்பாடல்கள் மூலம் அக கருத்துக்களே நிரம்பி வழிகின்றன. ஆங்காங்கே புறநூல்கள் கொஞ்சமாய் வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. தலைவன் தலைவியிடம் காதலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவர்களின் வாழ்க்கை புறச்செய்திகளால்தான் சூழ்ந்து கிடக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். புறப்பொருளில்தான் அம்மனிதனின் வாழ்வியலை வெளிக்கொணர முடியும். அதனாலயே புற இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலை மூலம் பண்டைய மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம் பெறுகிறது.
தெய்வங்கள்
மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கையே தெய்வங்கள்தான். தெங்வங்கள் இல்லையென்றால் இந்நேரத்தின் மனிதர்கள் காட்டாறு போல தறிகெட்டுப் போயிருப்பார்கள். மனிதனின் எண்ணத்தில் கடவுள் பயம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை வாழ்க்கை என்ற ஒரு நேர்கோட்டில் செல்ல வைத்திருக்கிறது. தெய்வங்கள் மூலமாகவே தங்களுடைய பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டான். புறப்பொருள் வெண்பாமாலையில், கொற்றவை, முருகன், சிவபெருமான், திருமால் ஆகிய கடவுள்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளன.
‘‘ஒளியின்நீங்கா விறல்படையோள்
அளியின்நீங்கா அருள்உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:18)
அன்னை வழிப்பட்ட தமிழ்ச்சமுதாயத்திற்கு முதற்கடவுளாக விளங்குபவள் கொற்றவை தெய்வமாகும். இத்தெய்வம் வீரம் செறிந்தவளாகவும் பிறருக்கு அச்சத்தை தரக்கூடியவளாகவும் உடையவள். மேலும் பேய்க்கூட்டத்தைப் படையாகவும் கொண்டுள்ளாள் என்கிறது புறப்பொருள் வெண்மாலை. படை வீரர்கள் கொற்றவையின் அருளினைப் பாராட்டி மகிழ்கின்றனர். தங்களுடைய வெற்றிக்காரணமான கொற்றவைத் தெய்வத்தை மறவர்கள் வணங்குகின்றனர்.
‘‘சூழும்நேமியான் சோஎறிந்த
வீழாச்சீர் விறல்மிகுத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.9:36)
கருணை குணம் கொண்டவன். உலகத்தைக் காக்கும் தொழிலினைச் செய்பவன் திருமால். போர் மறவர்கள் வெற்றிப்பெற்றதால் அவ்வெற்றிக்கு காரணமான திருமாலை கந்தழி என்னும் துறை மூலம் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். மேலும் வெற்றிப்பெற்ற தன்னுடைய அரசனை திருமாலுக்கு நிகராக நினைத்து போற்றுகிறார்கள்.
போர்மறவர்கள் சிவப்பெருமானைப் பூக்கொண்டு வணங்குதலும், முருகக்கடவுளைப் பூச்சொறிந்து வணங்குதலும் செய்கின்றனர். முருகன் வள்ளி இருவரையும் ஒன்றாய் சேர்த்து வணங்கியுள்ளனர். தங்களுடைய அரசன் வணங்கும் தெய்வத்தை மறவர்கள் உயர்த்தி பாடி மகிழ்கின்றார்கள்.
‘‘வயங்கியபுகழ் வானவனைப்
பயன்கருதிப் பழிச்சினர் பணிந்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.9:40)
உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்கும் பொருட்டு பழிச்சினர் பணிதல் என்னும் துறையாக அமைகின்றது. போர்மறவர்கள் இவ்வுலகப் பேறுகளைக் கருதி இறைவனை வாழ்த்தி வணங்குகின்றனர். தெய்வப்பெண்கள் ஆண்தெய்வங்களை விரும்புவது போல மானிடப்பெண்களும் கடவுளை விரும்பியள்ளனர். பண்டையக் காலக்கட்டத்தில் ஆண்களும் பெண்களும் இறைவனை வழிப்பட்டு வந்துள்ளனர். போருக்குச் செல்லும் முன் இறைவனை வழிபடுதலும் வெற்றிப்பெற்ற பின்பு மகிழ்ச்சியில் இறைவனைப் போற்றித்துதித்தலும் உண்டு.
குடிப்பெருமை
உலகம் தோன்றியபோதே வீரத்தின் அறிகுறியாய் வாளோடு தோன்றிய குடி மறவனின் குடி. தமிழ் இனத்தவரே முதல் குடியாவர். புறப்பொருள் வெண்பாமாலையில் குடிநிலை என்னும் துறையில் கரந்தை மறவர்கள் தம்முடைய தொன்றுதொட்ட குடிப்பெருமையினைப் பறைச்சாற்றுகிறார்கள்.
‘‘மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டுபிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.2:13)
காஞ்சி மறவர்கள் போரின்கண் தமது மறப்பெருமைகளை பெருங்காஞ்சி என்னும் துறையின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். போரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போரிட்ட மறவனின் ஆண்மைத்திறத்தினைப் போற்றியது.
‘‘தொல்மரபின் வாட்குடியின்
முன்னோனது நிலைகிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.3:10)
மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்து பாடுதலை முதுமொழிக்காஞ்சி கூறுகிறது. தொன்று தொட்டு வாளை ஏந்தி போர்ச்செய்கின்றவர்கள் மறவர் குடியே. அக்குடிக்கண் பிறந்த முன்னொனது தந்தையின் பேராற்றலைப் புகழ்ந்து பாடுவதாகும். மரபு மாறாமல் துடி கொட்டுபனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்து கூறுகிறது துடிநிலை என்னும் துறை. வேதம் உணர்ந்த பார்ப்பண குடியை மேம்பட எடுத்துரைத்தது பார்ப்பன வாகை ஆகும்.
‘‘செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்புஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:16)
இப்பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்பவன் அரசன். அவன் போர்க்களத்தில் பகைவரை வருத்துகின்ற சிவந்த நெடிய வேலினை ஏந்தியவன் ஆவான். அம்மன்னனின் இயல்புகளை மிகுத்து அரச முல்லை என்ற துறையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசனின் நற்பண்புகளையும் எடுத்துக் கூறுவதாகவும் அமைகின்றது. பகைவரை பெறாத போதும் மிகுந்த சினம் கொண்டது மறக்குடி ஆகும். அக்குடி மென்மேலும் உயர்கின்ற ஆண்மைத்தன்மையினையும் ஒழுக்கத்தினையும் ஏறாண்முல்லை என்னும் துறையில் சொல்லப்பட்டுள்ளது.
நடுவுநிலைமையையுடைய சான்றோர்களின் குடிப்பெருமையைக் கூறுகிறது. ஒரு வீரமறவன் போரில் இறந்துபட்டான். அப்போது அந்த மறவனின் வீரத்தைப் பார்த்த நட்பு மறவர்களும் பகை மறவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றி அவனுடைய உடலைப் பார்த்து அம்மறவனின் குடியைப் புகழ்ந்து பேசுகின்றனர் என்னும் செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் நாகரிகமாகவும் பண்பாடு கொண்டவராகவும் அக்கால மக்கள் விளங்கியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
பாராட்டும் பரிசும்
மறவர்களின் வீரச்செயலுக்கு பாராட்டும் பரிசும் அக்காலத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட பாராட்டுச் செயல்களை மறவர்களும் விரும்பினார்கள். பகைவென்ற மறவனை அரசன் பாராட்டிப் பரசளித்தலை பேராண் வஞ்சி என்னும் துறை கூறுகிறது.
‘‘மறவேந்தனில் சிறப்புஎய்திய
விறல்வேலோர் நிலைஉரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.3:8)
வெற்றிக்காக விழுப்புண்ணை ஏற்ற மறவர்களுக்கு அரசன் முத்துமாலைகளைப் பரிசாகத் தந்து சிறப்பித்துக் கூறுவதனால் மாராய வஞ்சி எனப்பட்டது. அரசனால் சிறப்பிக்கப்பெற்றதனால் அம்மறவர் வெற்றி பொருந்திய வேலினைக் கொண்டவராக இருப்பார். எதிர் நிற்கும் பகை வேந்தர்களுக்கும் படை வீரர்களுக்கும் முன்சென்ற மறவன் ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறுகிறது நெடுமொழி வஞ்சி என்னும் துறையாகும். இந்தத் துறையானது தற்புகழ்ச்சி ஆயினும் அவனுடைய வீரச்செயலைப் பிறருக்கு காட்டுவதில் அவன் தயங்கவில்லை. அதன் மூலம் பகைநாட்டு மறவர்களின் மனதளவில் நிலைக்குலைய செய்துள்ளான்.
‘‘மைந்துஉயர மறம்கடந்தான்
பைந்தலைச் சிறப்புஉரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.4:9)
பகைவரின் வலிமையைக் கெடுத்துத் தம் வலிமை வெளிப்படும்படியாகப் போர்த்தொழில் செய்தவன் காஞ்சி மறவன். வீரமறவன் போர்க்களத்தில் பகைவரால் தலை வெட்டப்பட்டு இறந்தான். அம்மறவனின் தலையைக் கொண்டு வந்த மற்றொரு மறவனுக்கு அரசன் பெரும்பொருள் கொடுத்துச் சிறப்பு செய்கின்றான். மேலும் இறந்த மறவனின் புகழைப் பராட்டியும் அவனை நினைத்து மனம் வருந்தி இருத்தலும் உண்டு.
பகைவரின் உயிரை உண்ண மேகம் போல விரைந்து பாய்ந்து வரும் குதிரையின் மாண்பினையும் குதிரைப்படை வீரர்களின் மறமாண்பினையும் எடுத்துக்கூறுவது குதிரை மறம் என்னும் துறையாகும். மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது எயிற்போர் என்னும் துறையாகும். மன்னனின் பிறந்தநாளன்று வலிய யானைகளையும் சிவந்த பொன்னையும் பரிசாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் விருப்பமுடன் மகிழ்ந்திருந்தனர். இந்நிகழ்வினை நாள் மங்களம் என்னும் துறை எடுத்துரைக்கிறது. மன்னர்கள் தன்னுடைய நாட்டிற்காக உயிரை விட்ட மறவர்களுக்கு பரிசினைக் கொடுத்துப் பாதுக்காத்துக் கொண்டான்.
பங்கிட்டுக்கொடுத்தல் (பாதீடு)
பண்டையக்கால சமூகத்தில் தான் கொண்டு வந்த பொருளினை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தான் உழைத்த பொருளே ஆனாலும் கவர்ந்து கொண்டு வந்த பொருளே ஆனாலும் ஊர்ப்பொதுவில் வைத்து அவற்றினை பெரியோர்கள் முன்னிலையில் பங்கிட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வினைப் புறப்பொருள் வெண்பாமாலை பாதீடு என்கிறது.
‘‘கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவர்அவர் வினைவயின் அறிந்துஈந் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:12)
பகைவர்களைத் தங்களுடைய கொல்லுகின்ற அம்பினை விட்டு கொன்றுவிட்டு அவர்களுடைய ஆநிரைகளைக் கவர்ந்து வந்தனர் வெட்சி மறவர்கள். அவ்வாறு கைப்பற்றி வந்த ஆநிரைகளை அவரவர் தகுதிகேற்பப் படைதலைவன் பகிர்ந்து அளித்துள்ளான் என்கிற பாதீடு என்ற துறை. பகைவரைத் தம் படையினரால் வெற்றி கொண்டவன் வஞ்சி வேந்தன். அவன் தம் மறவர்களால் பகைவர்கள் மேலும்மேலும் அழிவுற வேண்டுமென நினைத்தான். அதற்காகத் தம் மறவர்களை பாணர்கள் புகழவும் வீரமுரசு ஆராவாரிக்கவும் புகழ்ந்தான். அரிவாள் போன்று வளைந்த கோடுகளை உடைய புலியை ஒத்தவர்களான வீர மறவர்கள் உரிய வரிசை முறையில் அழைத்து அவர்களுக்கு வேண்டுமளவிற்கு பெருஞ்சோற்றுத் திரளை நிறையக் கொடுத்தான் என்கிறது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாகும்.
தேன் மிகுந்து நறுமணம் வீசும் கள்ளினைக் காஞ்சி வேந்தன் தன்னுடைய வீரர்களுக்கு வயிறு நிரம்ப கள்ளினை ஊற்றிக்கொடுத்தான். மேலும் பகை நாட்டு வீரர்களுக்கும் ஊருக்கு வெளியே கள் கிடைக்கப்பெற்றது என்கிறது கட்காஞ்சி என்னும் துறை. தனக்கு கிடைத்ததைத் தான்மட்டும் உண்டு அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுத்து அவனையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளான் என்பதை அறியமுடிகிறது.
கூத்துக்கலைகள்
நாள் முழுவதும் வேலை என்று இருந்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வில் மனமகிழ்ச்சியை எதிர்ப்பார்த்தான். அதனால் இசையொடு ஆடியும் பாடியும் தன்னை மகிழ்ச்சியாக்கிக் கொண்டான். பகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்த செல்லும் போது பற்பல இசைக்கருவிகளை முழங்கியும் ஆராவாரித்தும் செல்லுவார்களாம். அவ்வாறு இசைக்கப்பட்ட இசைக்கருவிகளில் முதன்மையாக வைக்கப்பட்டது துடி என்னும் கருவியாகும். போருக்குச் செல்லும் படையினருக்கு ஊக்கம் தருவதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘‘தொடுகழல் மறவர் தொல்குடி மரபில்
படுகண் இமிழ்துடிப் பண்புஉரைத் தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:17)
என்று துடிநிலை என்னும் துறை விளக்குகிறது. அடுத்ததாக கிணை என்னும் தோற்கருவியைக் குறிப்பிடுகிறார்கள். கிணை – தடாரிப்பறை. வேளாண் புகழை எடுத்துரைப்பது. கிணை என்னும் இசைக்கருவியை இசைத்ததற்காக மன்னனிடமிருந்து கைநிறையப் பொருட்களைப் பெற்றுக்கொண்டான் என்கிறது கிணைநிலை என்னும் துறையாகும்.
‘‘வால்இழையோர் வினைமுடிய
வேலனொடு வெறிஆடின்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:19)
வெண்மையான அழகிய அணிகலன்களை அணிந்தவர்கள் மறக்குடி மகளிர்கள். அப்பெண்கள் தம் கணவர்கள் மேற்கொண்ட தொழில் நன்றாக முடிய வேண்டும் என எண்ணினார்கள். அதற்காகக் வேலனோடு கூடி வள்ளி என்கிற கூத்தினை ஆடினார்கள். இவ்வாட்டத்தினை வெறியாட்டு என்பர். ஒரு வீரமறவன் போர்க்களத்தில் இறந்துபட்டான். அவனைச் சூழ்ந்து வலிமை பொருந்திய தோளினை உடைய தும்பை மறவர்கள் மகிழ்ச்சி களிப்புடன் வாளேந்தி ஆடியதை ஒள்வாள் அமலை கூறுகிறது. மறவர்கள் சூழ வெற்றிப் பெற்றவனைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். அரசனின் தேர்க்கு முன்பும் பின்பும் வெற்றியை நுகர்ந்து குரவைக் கூத்தினை ஆடி மகிந்தனர். அதேபோல் பேய் மகளிரும் தேருக்கு முன்பும் பின்பும் ஆடுகின்றார்களாம்.
‘‘பூண்முலையார் மனம்உருக
வேல்முருகற்கு வெறிஆடின்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:37)
மகளிர்கள் முருகனுக்காக வள்ளிக்கூத்தினை ஆடி மகிழ்நதனர். வள்ளிக்கூத்து என்பதற்கு வெறிக்கூத்து என்று அழைப்பர். இறைவன்பால் விருப்பம் கொண்டு ஆடுகின்ற ஆட்டம் சிறந்த பயனைக் கொடுக்கும். அதனால் மனதை மகிழ்ச்சியான நிலைக்கு கொண்ட வர இவ்வாறான ஆட்டங்கும் கூத்துகளும் மனிதனுக்கு தேவைப்பட்டது எனலாம்.
நற்சொல் கேட்டல்
நல்ல சொற்கள் ஒரு மனிதனை வாழவைக்கும். மனதை நிறைவடையச் செய்யும். நம்முடைய பயணம் விஷேச நாட்களின் போதும் நல்ல சொற்களும் வார்த்தைகளும் மனம் மகிழ்ந்து இன்னும் உத்தியோகமாக வேலை செய்ய தூண்டும். விரிச்சி என்கிற துறையில்,
‘‘வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு
ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:2)
தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை அறியும் பொருட்டுச் சொல்லை ஆராய்தலே ஆகும். வெட்சி மறவர்கள் ஒன்று கூடி ஓரிடத்தில் கூடினார்கள். தாம் விரும்பிய அச்செயலானது இனிதாக நிறைவேறவேண்டும் என்று எண்ணினார்கள். அதற்காக இருள் வருகின்ற மாலைப் பொழுதில் நற்சொல்லினைக் கேட்டு ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள். அதன் பிறகுதான் செல்லும் இடத்திற்குச் செல்வார்கள். ஒருசில நேரங்களில் தீய நிமித்தங்களும் நடைபெறுவதுண்டு. ஆனாலும் மறவர்கள் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம். அம்மறவர்கள் மனவலிமையைக் கொண்டு வெற்றியும் அடைந்துள்ளார்கள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
ஒற்று அறிதல்
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதனால் பகையரசனின் பலம் அறிந்து கொள்ளாமல் போருக்குச் சென்றால் தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும். அதனால் பகை நாட்டின் சூழலை நன்கு அறிந்து கொள்ளும் தன்மை நன்மை பயன்தக்கது. அதனால் அக்காலத்தில் சூழலை அறிந்து வருவதற்கென்றே வீரர்களை நியமித்திருந்தனர். இவர்களை ஒற்றர்கள் என்று அழைப்பார்கள்.
‘‘பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து
ஒற்றுஆ ராய்ந்த வகைஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:4)
ஒற்றர்கள் பகை நாட்டின் அவர்கள் அறியாதவாறு அம்மக்களுக்குள்ளே சென்று தங்குவர். அம்மக்கள் அறியா வண்ணம் ஆநிரைகள் இருக்கின்ற இடம், ஆநிரைகளின் எண்ணிக்கை, அவற்றினைக் காக்கின்ற வில் மறவர்களின் அளவு ஆகியவற்றை ஆராய்ந்து வருவார்கள் என்கிறது வேய் என்னும் துறையாகும். இதுமட்டுமன்று மன்னர்களின் அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து வருதலும் உண்டு. பரிசுகள் ஒற்றர்களுக்கு பிற மறவரைக் காட்டிலும் மிகுதியாகக் கொடுக்கப்பட்டது. இது ஒற்றர்களுக்குச் சிறப்பு செய்வதினால் இது புலனெறி சிறப்பு என்றாயிற்று. ஒற்றர்களின் பணி மிகவும் கடுமையானது. பகையரசனிடம் மாட்டிக்கொண்டால் ஒற்றரை துன்புறுத்தி கொன்று விடுவார்கள். ஆனாலும் தம் நாட்டை காப்பாற்றுவதற்காக மறவர்கள் ஒற்றர் வேலையை செய்து வந்துள்ளனர்.
அன்பு
போர் சண்டை என இருந்து வந்த காலக்கட்டத்தில் அன்பும் இருந்திருக்கிறது. மறவன் ஒருவன் தம்மால் கவர்ந்து வரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் காட்டு வழியே ஓட்டிச் சென்றான்.
‘‘அருஞ்சுரத்தும் அகன்கானத்தும்
வருந்தாமல் நிரைஉய்த்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:9)
காட்டு வழிகளில் செல்லும் போது நிழழும் தண்ணீரும் உணவும் கிடைக்கபெறும். இந்நிகழ்வினை சுரத்துய்த்தல் என்னும் துறை உரைக்கிறது.
போர்க்கருவி
போர்களில் சண்டையிடுவதற்காக நிறையப் போர்க்கருவிகளை மறவர்கள் வைத்திருந்தனர். மறவர்களின் இடையில் எப்பொழுதும் ஆயுதம் இருக்கப்பெற்றிருக்கும்.
‘‘வென்றி யோடு புகழ்விளைக் கும்எனத்
தொன்று வந்த தோல் மிகுத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.6:11)
உழிஞையரசன் தனது கிடுகுப்படையைப் பாராட்டியது. இதனை தோல் உழிஞை என்னும் துறையைாகும். தோல் என்பது கிடுகு என்னும் ஒருவகைப் போர்கருவியாகும். வட்டவடிவில் அமைந்து கண்ணாடி நிரைத்ததால் ஒளிரும் தன்மை கொண்டது கிடுகுப்படை. அதன் துணைக்கொண்ட தன்னிடம் பணியாத அரணினைக் கைப்பற்றுவது எளிது என்பதும் அதன் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்பதுதான்.
உழவர்கள்
உழவர்கள் வாழ வேண்டும். விவசாயம் பெருக வேண்டும். நம் நாட்டின் வளத்தை பெருக்கி மூன்று வேளையும் வயிறு நிரம்ப உண்ண வேண்டும். கிணைநிலை என்னும் துறையில்,
‘‘தண்பணை வயல்உழவனைத்
தெண்கிணைவன் திருந்துபுகழ்கிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:30)
குளிர்ச்சி பொருந்திய தன்மை கொன்டது நன்செய் நிலம். நிலத்தை உழுது மக்களுக்கு பயன் விளைப்போர் உழவர்கள் ஆவார்கள். அவர்கள் இவ்வுலகத்தில் மேலான புகழினை உடையவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட உழவர்களை வாழ்கவென்று கிணைப்பறையை அடித்து வாழ்த்தி வறுமை நீங்க வேண்டுமென உரக்கக் கூறுதல். நெல் அறுவடை முடிந்ததும் உழவர்கள் தம் குடிகளுக்கு தக்கவாறு நெல்லினைக் கொடுப்பார்கள். அது அவர்களின் ஆண்டு முழுவதும் உணவு பஞ்சமின்றி வாழ வழிவகைச் செய்யும்.
கண்டார்க்கு அச்சத்தைத் தருவதாய் விளங்குவது படை. அதனை வரப்பாகக் கொண்டு விளங்குவது போர் செய்வதற்குரிய களம். அக்களமே நெடிய வயல். சிவந்த நிறத்தால் ஒளிர்கின்ற வேலே கோலாகும். பசிய நிறமுடைய கண்களையும் பெருத்த கால்களையும் உடைய யானை எருதாகும். அவ்வயலின் வெம்மையாகிய சினவே விதையாகும். புகழே பயன் மிகுந்த விளபொருளாகும். பகை வென்ற அரசனே உழவன் ஆவான். போர்க்களத்தை விவசாய நிலமாக்கி உழவனை அரசனுக்கு உருகவம் செய்துள்ளார் ஐயனாரிதனார். மேலோர் சொல்வழி நின்று உலகத்தார் பயன் கொள்ளும் வகையில் உணவு கொடுக்கும் உழவனை மிகுத்துக் கூறுவதாக வேளாண்வாகை என்னும் துறை கூறுகிறது. அரணை அழித்து கழுதை பூட்டி வரகை விதைப்பது பற்றி உழுது வித்திடுதல் கூறுகிறது. உழவனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுகிறது பகட்டு முல்லை என்னும் துறை.
‘‘செறுதொழிலின் சேண்நீங்கியான்
அறுதொழிலும் எடுத்துரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:9)
அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர்கள் தம் மேம்பாட்டைக் கூறுவது வாணிக வாகை ஆகும்.
அறுவகைத் தொழில்கள்
♣ நிலத்தை உழுது அதன் பயனாகிய விளைப்பொருட்களைக் கைக்கொள்ளுதல்
♣ ஆராவாரிக்கின்ற ஆநிரைகளைப் பாதுகாத்தல்
♣ குற்றமற்ற பொருட்களை விற்றல்
♣ கற்பதற்கு உரியவற்றை முற்றும் கற்றல்
♣ முத்தீயைப் போற்றி வணங்குதல்
♣ தம்பொருளை சீர்தூக்கிப் பாராமல் பிறருக்கு வழங்குதல்
என இவ்வாறு தன்மைகளை உடையவர்கள் வணிகர்கள் என்கின்றார் ஐயனாரிதனார்.
பெண்மறுத்தல்
வலிமை மிக்க மன்னன் பகை மன்னன் பெற்ற பெண்ணை திருமணம் செய்ய கருதி பெண் கேட்பான். பெண் கொடுக்காவிட்டால் அம்மன்னன் மீது படை எடுத்துச் சென்று தாக்குதலும், பெண் தரும் வரை காத்திருத்தலும் அக்காலத்தில் நடைபெறுவதொன்று. மன்னனின் மகவை சான்றோர்களும் ஊர் மக்களும் மிக்க புகழ்துரைக்கின்றனர்.
‘‘வெம்முரணான் மகள்வேண்ட
அம்மதிலோன் மறுத்துரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.5:8)
கொடிய பகையினை உடையவன் உழிஞை அரசன். அவன் நொச்சி வேந்தனின் மகளைத் தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் நொச்சி அரசனோ தன் மகளை தர மறுக்கிறான். இதனால் இது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாகும். பகை மன்னனுக்கு பெண் கொடுக்காமல் போர்ச்செய்தலை விரும்பியதால் மகட்பாற் காஞ்சி எனும் துறையாம். மற்றொரு மன்னன் மாற்றரசனின் மகளைத் திருமணம் செய்தே தீருவேன் என்று மதில் புறத்திலே தங்கியிருந்தானாம். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் புறச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அறம் செய்வித்தல்
இருக்கின்றவன் இல்லாதவனுக்கு உதவ வேண்டும். கிணற்றில் தண்ணீர் இறைக்க இறைக்க எவ்வாறு தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்குமோ அதுபோல செல்வமும் கொடுக்க கொடுக்க நிறைந்து கொண்டே செல்லும்.
‘‘புகழோடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்புஎன எடுத்துரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:11)
ஒருவர்க்குப் புகழும் பெருமையும் உண்டாகும். அவ்வொருவர் தன்னுடைய புகழையும் பெருமையையும் பிறரோடு ஒப்பிடுவர். அதன் காரணமாகப் பிறர் யாரும் தனக்கு நிகரில்லை என எண்ணி மகிழ்ந்து பிறரை எள்ளி நகையாடவும் செய்வர். அவ்வாறு எவரையும் இகழ்தலை தவிர்க்க வேணடும் என பொருந வாகை கூறுகிறது. துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது தாபத வாகை ஆகும். அரசர்களுக்குள் மாறுபாடு தோன்றும் போது அம்மாறுபாட்டினைத் தவிர்த்து நன்மை செய்வதற்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் சந்துசெய்வித்தலைச் செய்வார்கள் என்று பார்ப்பண முல்லை கூறுகிறது. விண்ணை தீண்டுமாறு உயர்ந்து நிற்பது மலை. நல்லியல்பால் உயர்ந்து நிற்பவர் சான்றோர்கள். அறம் பயிற்றுவிக்கின்ற அச்சான்றோர்களின் மேன்மையைக் கூறுவது சால்பு முல்லை என்னும் துறையாகும்.
‘‘வையகத்து விழைவுஅறுத்து
மெய்யாய பொருள் நயந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:31)
உலகின்கண் பல பொருட்கள் உள்ளன. அவற்றின் பொய்யான பொருள் மீது பற்றுக் கொள்ளுதலை விட வேண்டும். மெய்யான பொருளாகிய இறைவன் மீது பற்று வைக்க வேண்டும் என பொருளோடு புகறல் துறை கூறுகிறது. மீண்டும் பிறவிச் சுழற்சியில் உழலாமல் உலகப் பற்றை விட்டு அருளாகிய நன்னெறியினைப் பற்றுதலை அருளோடு நீங்கல் துறை விளக்கம் தருகிறது.
♣ அறம், பொருள், இன்பத்தை உறுதிப்பொருளாக முன்னோர்கள் மொழியப்பட்ட அறத்தை கூறுதல் – முதுமொழிக்காஞ்சி
♣ கண்ணுக்குப் புலனாகும் அனைத்துப் பொருள்களும் நிலைபெறாமல் அழியும் எனக் கூறுவது – பெருங்காஞ்சி
♣ மெய்ப்பொருளினை உணர்த்துவது – பொருள்மொழிக்காஞ்சி
♣ வீட்டுலகத்தின் இயல்பினை எடுத்துரைப்பது – புலவர் ஏத்தும் புத்தேள் நாடு
♣ உணர்தற்கு உரிய பொருளை உணர்த்துவது – முதுகாஞ்சி
பழமையான நூல்கள் கூறுகின்ற நெறியினை அடிப்படையாக வைத்து பிற உயிர்களிடத்து அருளுடைமையே அறம் என்று கூறப்படுகிறது.
ஆற்றுப்படுத்துதல்
ஓர் அரசனிடம் பரிசினைப் பெற்றான் ஒரு பாணன். தான் பெற்ற பரிசினை தன்னைப் போல் உள்ள மற்றொரு பாணனிடம் இன்ன மன்னனிடம் சென்று இன்னப் பரிசினைப் பெற்றுக்கொள்க எனக் கூறுவது. ஆற்றுப்படுத்துவது – வழிப்படுத்துவது.
‘‘சேண்ஓங்கிய வரைஅதரில்
பாணனை ஆற்றுப்படுத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:24)
இந்நிகழ்வானது வறுமையை புலப்படுத்தியிருப்பினும் தனக்கு கிடைத்தது மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நற்பண்பு அக்கால மக்களிடம் இருந்து வந்துள்ளது. இதேபோல் புலவர், கூத்தர், விறலி, பொருநர் ஆகியோரையும் ஆற்றுப்படுத்தப்படுகிறது.
கணியன்
காலம்தொட்டு வருகின்ற அறிவால் சிறந்து நிற்பவன் கணிவன். அவர்கள் உலக நடப்புகளைத் துணிந்து கூறும் தன்மை கொண்டவர்களாகச் சுட்டப்பட்டுள்ளனர்.
‘‘துணிபுஉணரும் தொல்கேள்விக்
கணிவனது புகழ்கிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:19)
காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பித்துக் கூறுவது கணிவன் முல்லை. அவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். வாழ்வின் பின்னால் நடப்பவையை முன்கூட்டியே சொல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.
அறிவுரைக்கூறல் (ஓம்புடை)
அறத்தினை ஆராய்ந்து ஆட்சி புரிபவன் செங்கோல் அரசன். அவனுக்கு மறமும் பிறழ்ச்சியும் இல்லாத நல்லுரைகளை உணரும்படியாகச் சான்றோர்கள் கூறுவர்.
‘‘மறந்திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி
அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:29)
ஓர் அரசனுக்கு அறிவுரை கூறுவது செவியறிவுறூஉ என்னும் துறையாகும். உலகை ஆளும் அரசனே தவறு செய்து இருப்பினும் அவர்களுக்கு சான்றோர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். சான்றோர்கள் வழங்கிய அறிவுரைகளையும் அரசர்கள் கேட்டிருக்கிருக்கிறார்கள்.
பூ மரம்
புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலில் பூக்களும் மரங்களும் சுட்டப்பட்டுள்ளன. போர் மறவர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய பூக்களைச் சூடி போருக்குச் சென்றிருக்கிறார்கள்.
♣ காயாம் பூவினைப் புகழ்ந்து கூறுவது – பூவைநிலை (தற்காலத்தில் காசாம்பூ வழங்கப்படுகிறது)
♣ சிவன் சூடிய உழிஞை பூவினைப் புகழ்ந்து கூறுவது – முற்றுழிஞை
♣ முருகன் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது – காந்தள்
♣ சேரர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – போந்தை
♣ சோழர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – ஆர்
♣ பாண்டியர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – வேம்பு
♣ உன்னம் என்னும் மரத்தின் நிலையினைக் கூறுவது – உன்னநிலை
போர்க்களத்தில் தன்னுடைய நாட்டுக்காகப் போரிடுகின்ற மறவர்கள் பூவைச் சூடுதலும் தோல்வியினால் வாடுதலும் உண்டு.
விலங்குகள்
புறப்பொருளில் ஒருசில விலங்குகளின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலங்களில் யானைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப்பற்றுவது யானை கைகோள் என்கிறது.
‘‘எறிபடையான் இகல்அமருள்
செறிபடைமான் திறம்கிளந்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.7:3)
தும்பை அரசனுடைய இளம் களிறு மிகுந்த வீரத்தைக் கொண்டது. அந்த யானையானது சினந்து வந்தது பற்றி கூறியது யானைமறம் என்பதாம். வீரமறவன் ஒருவன் யானையின் மீது வேலினை எரிகின்றான். யானையை வீழ்த்திய அவனின் வீரத்தை இவ்வுலகம் கண்டு வியக்கிறது.
கழுதையைப் பூட்டி ஏர் உழுது வரகை விதைத்துள்ளார்கள். தும்பை அரசனடைய கதிரைகளின் திறத்தை மிகுத்துச் சொல்லுவது குதிரைமறம் என்னும் துறையாகும். எங்கள் அரசன் நாங்கள் மகிழும் பொருட்டு எங்களுடைய வீட்டின் முன் ஆட்டின் மீது ஏறி விளையாடுதலை ஏழக நிலை கூறுகிறது. உழவனை எருதோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறது பகட்டு முல்லை எனும் துறையாகும். விலங்குகள் மக்களின் வாழ்க்கைக்கு எந்தளவிற்கு உதவியாகவும் பிரிக்க முடியாதவையாகவும் இருந்து வந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.
புறப்பொருளில் இடங்கள்
மக்கள் வாழும் இடங்கள், புழங்குகின்ற இடங்கள், போர் நடைபெறும் இடங்கள் என ஒருசில இடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
♣ காவற்காடு, அகழி – உழிஞை மறவர்கள் நொச்சியாரின் காவற்காட்டைக் கடந்து அகழியை அடைகின்றனர்.
♣ மதில் – செங்கற்களால் கட்டப்பட்டதும் நொச்சியாரின் நீண்ட மதிலாகும். உழிஞை மறவர்கள் மதிலை விட்டு அகலாமல் நின்றனர்.
♣ பாசறை – பகைவர் நாடு தன்கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருந்து போர் செய்தல்.
♣ விழல் (குடிசை) – பசும்புல் தொகுதியால் வேயப்பட்ட குடிசை.
நடுகல்
♣ இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லினைத் தேர்ந்தெடுத்தல் – கற்காண்டல்
♣ தேர்ந்தெடுத்த கல்லை பல சடங்குகள் செய்வது – கற்கோள் நிலை
♣ நடுகல்லை நீரில் போட்டு வைத்தல், நடுதற்குரிய இடத்தில் சேர்த்தல் – கல்நீர்ப்படுத்தல்
♣ வீரமறவரின் நினைவாகக் கல்லை நடுதல் – கல் நடுதல்
♣ நட்ட கல்லினை வாழ்த்துவது – கல்முறை பழிச்சல்
♣ கோயிலை எழுப்பி நடுகல்லை எடுத்துச் செல்வது – இற்கொண்டு புகுதல்
இவ்வாறாக அக்கால மக்கள் தங்களின் பழக்கவழக்கத்தினை சிறப்புறச் செய்து வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
பயன்படுத்தப்பட்ட பொருட்கள்
பண்டைய கால மக்கள் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தமை, வீடுகளில் பயன்படுத்தி வந்தமையும் குறிக்கப்பட்டுள்ளன.
♣ ஏணி – மதிலை தாண்டிச்செல்ல ஏணியைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
♣ முரசு – மாற்றரசனின் முரசொலியைக் கேட்டு மிகுந்த சினம் கொண்டான் மன்னன். வெற்றிக்காகவும் முரசினை ஒலித்து ஆராவாரம் செய்துள்ளார்கள்.
♣ வாள் – வேந்தனின் வாளை புனித நீராட்டுவது. வாளினைப் போர்க்களத்திற்கு எடுத்துச் செல்லுதல். அரசனின் வெற்றி வேளினைச் சிறப்பித்துக் கூறுவது.
♣ கழல் – போர்மேற் செல்லுவோர் வீரக்கழல் அணிந்து செல்வார்கள். அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.
♣ செங்கொல் – வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது. செங்கொல் மன்னனை உழவனாக உருவகம் செய்தல்.
♣ குடை – காஞ்சியரசன் தன் குடையைப் போர்க்களத்திற்குச் செல்ல விடுவது. அரசனின் வெற்றிக்குடையைச் சிறப்பித்துக் கூறுவது.
♣ தேர் – தும்பை அரசனின் தேர் வலிமையைக் கூறுவது.
♣ விளக்கு – அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுதல்.
♣ அரியணை – அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.
மேற்கண்ட பொருட்களை அன்றைய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளதை புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலின் வாயிலாக அறியலாம்.
கையறுநிலை
போர்களில் அரசன் முதற்கொண்டு மறவர்கள், யானைகள், குதிரைகள் என இறந்து போகின்றனர். இவர்களுடைய உறவினர்கள் இறந்து போனவர்களின் துக்கத்தைத் தாளாமல் மனம் வருந்தி நிற்பர். அத்தகையச் சூழலைத்தான் கையறுநிலை விளக்குகிறது.
‘‘வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.2:9)
தன்னுடைய தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து கையறுநிலையாய் நிற்கின்றானாம். அதேபோல் பகை நாட்டிற்காக இறந்து போன மறவர்களை நினைத்தும் வருந்தும் உன்னத போக்கு நம்மக்களிடையே இருந்து வந்துள்ளது. இறந்துபட்டவர்களுக்காக இறுதிக்கடன்களைச் செய்தலும் சொல்லப்பட்டுள்ளது. போரில் அரசன் கொல்லப்பட்டவுடன் அதை மனம் தாங்காது மறவன் ஒருவன் தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொள்ளும் பேரன்பு அக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது.
‘‘காதற் கணவனொடு கனைஎரி மூழ்கும்
மாதர் மெல்லியல் மலிபுஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.4:19)
கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுகிறாள். அதனால் போரில் இறந்துபட்ட கணவனுடன், கணவனை அழித்த கருவியால் தானும் குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதன் தொடக்கமே பின்னால் உருவாகி பெண்களுக்கு அச்சுருத்தலாக இருந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பதை இங்கு சுட்டிக்காட்டலாம். போர்க்களத்தில் இறந்துபட்ட கணவனை விண்ணுலகப் பெண்கள் தழுவும் முன்னர் அவனுடைய மனைவி தழுவி நிற்கின்றாள் என்பதை சிருங்காரம் என்னும் துறை விளக்குகிறது. விழுப்புண் பட்டு இறந்த கணவனைக் கண்ட அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறாள். தன்னுடைய கணவன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமை படுகின்றாள்.
♣ முதுபாலை – பாலை நிலத்தில் தன்னுடன் வந்த கணவன் இறந்ததால் தலைவி வருந்ததல்.
♣ சுரநடை – காட்டில் மனைவியை இழந்த கணவன் வருந்தவது.
♣ தபுதார நிலை – மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.
♣ தாபத நிலை – கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பினை மேற்கொள்வது.
♣ தலைப்பெயல் நிலை – குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்ததைக் கூறுவது.
♣ பூசல் மயக்கு – போரில் இறந்த சிறுவயது மறவனின் சுற்றந்தார் அழுது ஆராவாராம் செய்வது. மன்னன் இறந்ததற்கு வருந்துதலும் ஆகும்.
♣ மாலை நிலை – கணவனை இழந்ததால் உயிர்விடக் கருதிய மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.
♣ மூதானந்தம் – இறந்த கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட தலைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது. ( உடன்கட்டை இதனால்தான் உண்டாகியிருக்கும்)
♣ ஆனந்த பையுள் – போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மிகவும் வருந்துவது. இறந்தோரது புகழினை அன்பின் காரமாக எடுத்துரைப்பது.
வருத்தமடைதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஒருவரின் மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாகவே கையறுநிலை உண்டாகிறது. அதனால் கணவன் இறந்தவுடன் மனைவி அன்பின் காரணமாகவே உயிர் விடுகிறாள். ஆனால் அதற்கு பின்னால் வந்த மக்கள் உயிர்விட விரும்பாத பெண்களையும் இவ்வாறாகச் செய்ய சொல்லி வற்புறுத்தி இருப்பார்கள். இதன் காரணமாகவே உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்திருக்கலாம்.
பேய்கள்
‘‘செருவேலோன் திறம்நோக்கிப்
பிரிவின்றிப் பேய்ஓம்பின்று’’ (பு.வெ.மாலை.கொளு.4:13)
புண்பட்டு இறந்த மறவனை பேய்கள் காவல் காத்து நின்றனவாம். புண்பட்ட மறவனை சுற்றி நின்று பேய்கள் அச்சுருத்தலையும், வீர மறவனின் புண்ணை பேய் தீண்டி மகிழ்ச்சி அடைவதும், சில பேய்கள் விழுப்புண்ணை தீண்ட ஆஞ்சுவதுமாய் இருப்பதும் சுட்டப்பட்டுள்ளன.
முடிவுரை
பண்டையகால மக்களின் புறச்செய்திகளைப் புறப்பொருள் வெண்மாலை இலக்கண நூலில் இருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. போர்ச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூலாக இருப்பினும் அன்றைய மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். போரின் காரணமாக மறவர்களும் விலங்கினங்களும் உயிர் விட்டுள்ளனர். அதனால் மறவர்களின் மனைவிமார்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஆண்கள் அதிகம் இறந்துபட்டதால் அக்காலத்தில் பெண்கள் அதிகம் இருந்து வந்துள்ளனர். அதனால்தான் ஆண்கள் குறைவு என்ற போதில் ஒரு ஆணுக்குப் பல மனைவிமார்கள் என்ற கட்டமைப்பு வந்துள்ளதை பார்க்க முடியும். இதற்கு முழுக் காரணமாக மன்னர்களின் பேராசையே காரணமாக இருக்க முடியும். சங்க இலக்கியத்தில் புறச்செய்திகளைக் குறைவாகத் தந்ததிலிருந்து அவ்வவ்போதுதான் போர் நடந்திருக்கக்கூடும். அவ்வாறு நடந்திருக்கும் போர்களில் உண்மைத்தன்மையும் நியதியையும் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.
iniyavaikatral@gmail.com