முனைவர் மு.வரதராசனாரின் மொழியியல் பற்று|முனைவர் இரா.செல்வஜோதி

முனைவர் மு.வரதராசனாரின் மொழியியல் பற்று| முனைவர் இரா.செல்வஜோதி
     ம்மில் பலர் முனைவர் மு.வரதராசனார் அவர்களை ஒரு படைப்பிலக்கியவாதியாக, திறனாய்வாளராக, விரிவுரைஞராகப் பார்த்து வருகிறோம். இவையனைத்துக்கும் அப்பால் அவர் ஓர் மொழியியலாளர் என்ற செய்தியைப் பலர் அறிந்திருப்பதில்லை. முனைவர் மு.வரதராசனார் அவர்கள் மொத்தம் பதிநான்கு மொழியியல் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். மொழிநூல், மொழியின் கதை, எழுத்தின் கதை, சொல்லின் கதை, மொழி வரலாறு, மொழியியற் கட்டுரைகள் ஆகிய மொழியியல் நூல்களும் மொழியியல் துறையைச் சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றையும் மேலும் தமிழ் இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார்.
         
       மேற்கண்ட அவர் படைப்புகளின்வழி மட்டும் அவர் ஒரு மொழியியலாளர் என்று கூறுவதைவிட அவர் படைப்புகளில் வெளிப்பட்டுள்ள மொழியியல் சிந்தனைகளும் அவர் ஓர் மொழியியலாளர் என்று நமக்குப் பறைச்சாற்றுக்கின்றது. மொழியியல் துறை பல பிரிவுகள் கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்றான சமுதாய மொழியியலை மட்டும் எடுத்துக் கொண்டு அவர் கூறவந்த சில கருத்துகளை இங்குப் பார்க்கலாம். சமுதாய மொழியில் என்பதை ஆங்கிலத்தில் sociolinguistics என்று கூறுவார்கள். இந்தச் சமுதாய மொழியியலில் உட்பிரிவுதான் இனமொழியியல் (ethnolinguistics). ஓர் இனக்குழுவின் மொழியைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும் தற்காக்காப்பதற்கும்  மொழித் திட்டமிடல் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. குறிப்பாகப் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தற்காப்பதற்கு அவர்கள் சார்ந்த சமுதாய நிலையில்  மொழித் திட்டமிடல் மிக அவசியம்.  எது எப்படி இருப்பினும் சொந்த நாட்டிலே தமிழ்மொழி ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் தொடர்புமொழியாகவும் இருக்கும் நிலையில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைத் தற்காப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை மிகவும் தெளிவாக மு.வ அவர்கள் தம் படைப்பில் வெளிக்கொணர்ந்துள்ளார். இனமொழியிலின் நிலைத்தன்மை சார்ந்த கோட்பாட்டினை Giles  என்பவர் 1972இல் முதன் முதலாக நிறுவுகிறார். அதாவது ஒரு மொழி தொடர்ந்து நிலைபெற வேண்டுமாயின்,   மொழி அந்தஸ்து, நிறுவனங்களின் ஆதரவு, மக்கள் தொகை (பேசுவோர் எண்ணிக்கை) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று பிரிவுகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை Giles தனது கோட்பாட்டில் வழங்கியுள்ளார். இவர் வழங்கிய இந்தப் பரிந்துரைகளை 1953ஆம் ஆண்டிலேயே முனைவர் மு.வரதராசன் அவர்கள் தம்முடைய படைப்பில் பதிவுசெய்துள்ள திறமானது அவரின் எதிர்காலவியல் சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
         
            முனைவர் மு.வரதராசன் அவர்கள் பல இலக்கியப் படைப்புகளை வழங்கியிருந்தாலும் கடித இலக்கியம் சற்று மாறுபட்ட நடையைக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவர் எழுதிய தம்பிக்கு என்ற கடித இலக்கியம் சாதாரண இலக்கியப் படைப்பாக மட்டும் அல்லாது பொருள்பொதிந்த ஒரு மொழியியல் ஆவணமாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தம்பிக்கு அவர் எழுதும் கடிதம் வாயிலாக அவர் தமிழ் மொழியின் நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் தற்காப்பதற்கும் Giles  அவர்களால் அவருக்குப் பிந்தைய காலத்தில் முன்மொழியப்பட்ட கோட்பாட்டு கூறுகளோடு ஒப்புநோக்கத்தக்கதாக அமைகிறது.  இந்தக் கடிதத்தில் மு.வ அவர்கள் மொழியைத் தற்காப்பதற்கு இரண்டு நிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். முதலாவதாக பொது நிலை (macro) அடுத்து நுண்ணிய நிலை (micro). தமிழ் மொழி நிலைத்திருக்க வேண்டுமாயின் பொதுநிலையில் மூன்று செய்திகளைப் பரிந்துரைக்கிறார். முதலாவதாக, இன ஒற்றுமை மேலோங்க வேண்டும். அதாவது தமிழ்மொழி தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாகப் பார்க்கிறார். அதே வேளை தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கும்போது அவர்களின்  தாய்மொழி காக்கப்படும் என்று கூறுகிறார். இரண்டாவதாக தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் (தமிழகச் சூழலில்). அவர் கூறவருவதாவது, சட்டமன்றம் முதல் நீதிமன்றம் வரை தமிழ்மொழி, பயன்பாட்டு மொழியாக  இருக்க வேண்டும் என்கிறார். இந்நிலையைதான் மொழியியல் அறிஞர்கள் ‘மொழி அந்தஸ்தாகப்’ பார்க்கின்றனர். மூன்றாவதாக தமிழ்மொழி கல்விமொழியாக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது மொழிப் பாடங்கள் தவிர்த்து எல்லா பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இவ்வாறு கல்வி மொழியாகத் தமிழ் மொழி இருந்தால் பல தலைமுறைகள் கடந்து செல்லும் வாய்ப்பு அமைகிறது. இல்லையேல் ஒவ்வொரு தலைமுறையும் கடந்து செல்லும்போது  மொழி, கட்டம் கட்டமாக அழியும் நிலை ஏற்படும் என்பதனையும் மறைமுகமாக அறிவுறுத்துகின்றார்.
         
       அடுத்து நுண்மை நிலையில் பார்க்கும்போது மு.வ அவர்கள் மூன்று பரிந்துரைகளை முன்வைகின்றார். முதலாவதாக, வணிகத்தில் தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும். கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு ஆகியவற்றில் தமிழ்மொழியைப் பயன்படுத்தக் கோருகிறார். அவ்வாறு இருப்பின் வணிகத்தில் இருவழிதொடர்பு தமிழிலேயே அமையும். இதன்வழி விற்போர் வாங்குவோர் தமிழ்மொழியைப் பயன்படுத்துவர். தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்கும். அடுத்து, அன்றாட வாழ்வில் தொடர்பாடலுக்குத் தமிழ்மொழியைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார். எப்போது ஒரு மொழி பயன்பாட்டு மொழியிலருந்து விலகி விடுகிறதோ அந்த மொழி மிக விரைவில் அழிவை எதிர்நோக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. தமிழர்களிடத்தில் தமிழில் பேசுங்கள் தமிழ் அல்லாதவர்களிடம் பிற மொழியில் பேசுங்கள் என்று கூறவருவதிலிருந்து தமிழ் ழொயின் பயன்பாட்டை மீண்டும் மீண்டும் கூறி அதன் ஆணி வேரை ஆழப் பற்றிக்கொள்ளும் வழிமுறையை நமக்கு காட்டுகின்றார். மூன்றாவதாக, மொழிப்பற்று ஆகும். மொழியின் நிலைத்தன்மைக்கு மொழிப்பற்று (language loyalty) அவசியம்.  மொழிப்பற்றோடு வாழும் சமுதாயம் அவர்கள் தாய்மொழியைக் கட்டாயம் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வார்கள்; கொண்டுச் செல்ல இயலும்.
         
        இவையனைத்தையும் கடந்து முனைவர் மு.வ. அவர்கள் சிறந்த மொழியியல் அறிஞர் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்றா அமைவது பிறமொழிகளின் மீதான அவரின் பார்வை. அதாவது மொழியியலின் மிக முக்கியன  ஒரு கோட்பாடு யாதெனில் உலகில் பேசப்படும் எந்த மொழியாக இருந்தாலும், அதாவது வளர்ந்த மொழியாக இருக்கலாம், வளரும் மொழியாக இருக்கலாம், பேச்சு மொழியாக இருக்கலாம், வட்டார மொழியாக இருக்கலாம். இப்படி எந்த நிலையில் இருந்தாலும் அந்த மொழியை மதிக்க வேண்டும். இக்கருத்தினை தம்பிக்கு என்ற கடிதத்தில் “உன் மொழியைப் போற்றுவதற்காகப் பிறர் மொழியைத் தூற்றாதே” என்று கூறியிருப்பது சாலப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.          
         ஆக மொத்தத்தில், கடிதம் என்ற ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் மொழியியல் சார்ந்த மிக அரிய கருத்துகளைத் தனக்கே உரிய பாணியில் முனைவர் மு.வரதராசனார் எழுதிய தம்பிக்கு எனும் நூலானது அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்றும் காலத்திற்கு ஒத்த நூலாக நமது கைகளில் தவழ்வது போற்றுதலுக்குரியது; தமிழுக்கு அவர் அளித்த கொடை பாராட்டுதற்குரியது. 

Iniyavaikatral_Article_Published

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.செல்வஜோதி

இணைப்பேராசிரியர், மொழியியல் துறை,

மலாயா பல்கலைக்கழகம், மலேசியா

இனியவை கற்றல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here