சென்னை மாநகரின் பரபரப்பான வாழ்க்கைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவள் வேல்மதி, அடுக்குமாடிக் குடியிருப்பின் பத்தாவது மாடியில், காலைநேர சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் கண்ணாடிச் சாளரங்களுக்குப் பின்னே அவளது உலகம் சுழன்றது. ஆனாலும், அவளது கிராமத்து வேர்கள் அவ்வளவு எளிதில் அறுபட்டு விடவில்லை. அவள் கிராமத்தை விட்டு வந்தாலும், கிராமத்தின் உயிர் அவளைவிட்டு நீங்கவில்லை.
ஒவ்வொரு மாதமும் தவறாமல், கிராமத்தில் இருந்து ஒரு பெரிய மூட்டை சென்னைக்கு வரும். அது வெறும் மூட்டை அல்ல, அன்பு, உழைப்பு, மற்றும் தலைமுறை கடந்த பாரம்பரியத்தின் பெட்டகம். வேல்மதியின் ஆச்சி, அம்மா, மாமியார் என மூன்று தலைமுறைப் பெண்கள், தங்களது கையால் விளைவித்த காய்கறிகள், நெல் வயலில் விளைந்த புது அரிசி, வீட்டிலேயே அரைத்த தானிய மாவுகள், பருப்பு வகைகள், வீட்டுத் தோட்டத்துக் கீரைகள், பாட்டி போட்ட வற்றல், மாமியார் தட்டிய வடகம் என அனைத்தையும் கவனமாகப் பொட்டலம் கட்டி அனுப்புவார்கள்.
மாமியார், “அந்த நகரத்துல டீ.வி-ல பாத்து, உடனே கிடைக்கிற நூடுல்ஸ், பர்கர்னு குழந்தைகள் விரும்புறாங்க. ஆனா, அதெல்லாம் உடம்புக்குக் கெடுதல். நம்ம தாத்தா, பாட்டி காலத்துல இருந்து சமைக்கிற பாராம்பரிய உணவு முறையிலதான் ஆரோக்கியம் இருக்கு. இட்லி, தோசை, கூழ், கஞ்சி, இந்த கீரைன்னு நம்ம வீட்டு உணவுகள் ஒவ்வொன்னும் உடம்புக்கு நல்லது. வெளியில கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டா சீக்கிரம் நோய் வரும். நம்ம பாரம்பரிய உணவுதான் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். இதெல்லாம் நகரத்துல கிடைக்காதுடி, பார்த்துப் பத்திரமா வச்சுக்கோ. கொஞ்சம் அக்கம் பக்கத்துலயும் கொடு,” என்று அக்கறையுடன் அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்.
“ஊரில் விளைஞ்சது, பேத்திக்கு மட்டும் இல்ல, அவளோட சுத்தி இருக்குறவங்களுக்கும் கொடுக்கணும்,” என்று ஆச்சி சொல்ல, அம்மா அதை ஆசையுடன் அனுப்பி வைப்பார். இந்த மூட்டையில் வரும் பொருட்களை வெறும் உணவுப் பொருட்களாக வேல்மதி ஒருபோதும் கருதியதில்லை. அவை அவளுடைய வேர்கள், அவளது குடும்பத்தின் வரலாறு, தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்த அன்பு.
வேல்மதிக்கு இந்தப் பொருட்கள் வந்தடைந்ததும், ஒருவித மகிழ்ச்சி மனதில் பரவும். முதல் வேலையாக, தனது பக்கத்து வீட்டு ஐயங்கார் குடும்பத்திற்குப் பச்சரிசியும், வடகமும் எடுத்துச் செல்வாள். எதிர்த்த வீட்டு ஜெயலட்சுமி அக்காவுக்கு கீரைக்கட்டுகளைக் கொடுப்பாள். “அக்கா, எங்க கிராமத்துல இருந்து வந்தது. ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும்,” என்று சொல்ல, ஜெயலட்சுமி அக்கா மனம் உருகிப் போவாள். “வேல்மதி, உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பாக்குறது கஷ்டம்டி. எல்லாம் சுயநலம் பாக்குற காலம்,” என்று புகழ, வேல்மதி வெட்கத்துடன் சிரிப்பாள்.
ஒருமுறை, சங்க இலக்கியத்தில் படித்த ஒரு பாடல் வேல்மதி நினைவுக்கு வந்தது. பெரும் பரிசு பெற்று வந்த ஒரு புலவன், தன் மனைவியிடம், “பெரிய புகழுடன் பெரும் பரிசுகளைப் பெற்று வந்திருக்கிறேன். இவை அனைத்தும் நமக்கே சொந்தமல்ல. இதை நமக்கு அளித்த மன்னன், நம் சுற்றத்தாருக்கும் இதைப் பங்கிட்டளிக்கவே அளித்திருக்கிறான். எனவே, பசித்தவர்களுக்கும், நம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடுப்போம்,” என்று கூறியது போல, வேல்மதிக்குத் தனது கிராமத்து உறவுகளின் அன்பளிப்புகளும் தோன்றின. இது தனக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் அல்ல; தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு பெரும் கருணை என்பதை உணர்ந்திருந்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவள் கணவரின் அலுவலக நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வீட்டிற்கு வர அவர்களை நல்லமுறையில் உபசரித்து, அவர்கள் புறப்படுகிற சமயத்தில், “எங்க மாமியார் கிராமத்துல இருந்து வற்றல், ஊறுகாய் அனுப்பியிருக்காக. கொஞ்சம் தர்றேன், எல்லாரும் சாப்பிடுங்க,” என்றவாறு அவற்றை எடுத்து வர சமையலறை சென்றபோது, நண்பர் ஆச்சரியத்துடன் “இந்த நகர வாழ்க்கையில இதெல்லாம் எப்படிங்க? எவ்வளவு பெரிய மனசுங்க உங்க மனைவிக்கு?” என வினவு,
“இந்தக் குணம் இவளுக்குப் புதுசா வரல. இவங்க பரம்பரை வழக்கமே அப்படித்தான். இவங்க பாட்டி, அம்மா, மாமியார்… அதான் எங்க அம்மா.. எல்லாரும் இப்படித்தான். அவங்க கிட்ட இருந்துதான் இந்தக் குணம் அவளுக்கு வந்திருக்கு” என்று சிரித்தவாறே பதிலளித்தார் வேல்மதியின் கணவன். அதற்குள் தான் எடுத்துவந்த பொருட்களை நண்பரின் மனைவியிடம் வேல்மதி கொடுக்க, “வாரத்தில் ஒருநாள்தான் விடுமுறை. அதில் ஏகப்பட்ட வேலை இருக்கும். அதற்கிடையில் எங்களையும் முகங்கோணாமல் உபரித்து, இதுவேறேயா” என அவற்றை மனமகிழ்வுடன் வாங்கியவாறே கேட்க, மெல்லிய புன்னகையுடன், “உணவுபரிமாறுதல் என்பது வெறும் பசியைப் போக்குறது மட்டுமில்ல. அது அன்பை, உறவைப் பகிரும் ஒரு சாதனம்.” என்று தன்னடக்கத்துடன் சொன்னாள்.
இந்தமுறையும் வேல்மதி, தனது கிராமத்து வீட்டுப் பெரியவர்கள் கொடுத்தனுப்பிய கீரைக்கட்டுக்களிலிருந்து ஒரு பகுதியைத் தனது அலுவலக நண்பர்களுக்கும், காய்கறிகளில் ஒரு பகுதியைத் தனது வீட்டுப் பணியாளருக்கும் கொடுத்தாள். அந்த மாலையில், அவளது மனம் நிறைந்திருந்தது.
அன்று மாலை, பள்ளி சென்று திரும்பிய வேல் மதியின் பிள்ளைகள், கௌசிக்கும் நரேனும், அம்மாவைப் பார்த்து கேள்விக் கேட்க ஆரம்பித்தனர். ”அம்மா, இத்தனை நிறைய காய்கறி, தானியங்கள் எல்லாம் நமக்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியது தானே, ஏன் எல்லாருக்கும் கொடுக்கிறீங்க?” என்று நரேன் கேட்டான். அவன் கையில், அவன் அப்பத்தா அனுப்பியிருந்த எள்ளுருண்டை இருந்தது. கௌசிக்கும் அவன் ஆச்சி அனுப்பியிருந்த மரப் பொம்மையைக் குலுக்கியவாறே,, “ஆமாம்மா, நம்ம வீட்லயே நாலு பேரு இருக்கும்போது, எதுக்கு நாம அடுத்தவங்களுக்குக் கொடுக்கணும்? மிச்சம் இருந்தா கொஞ்ச நாளைக்கு வைத்து சாப்பிடலாமில்லையா?” என்றான். அவர்கள் பார்வையில், பகிர்ந்து கொடுப்பது என்பது வீணாக்குவது போலத் தோன்றியது. வேல்மதி புன்னகைத்தாள்.
“கண்ணா, நல்ல கேள்வி கேட்டீங்க. நாம எதுக்காக அடுத்தவங்களுக்குக் கொடுக்கிறோம் தெரியுமா? இது வெறும் உணவுப் பொருட்களைக் கொடுக்கிறது இல்லை. இது அன்பைக் கொடுக்கிறது. இன்னைக்கு நீங்க எள்ளுருண்டை சாப்பிடுறீங்க, பொம்மையோட விளையாடுறீங்க. ஆனா, ஒரு காலத்துல எங்களுக்கு இதெல்லாம் கிடைக்கிறது கஷ்டம். அப்போ, ஒரு வீட்டுல எதாவது விளைஞ்சா, அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துதான் வாழ்ந்தாங்க.”
அவள் தொடர்ந்தாள், “உங்க பாட்டிகள், கொள்ளுப்பாட்டி எல்லாரும் இப்படித்தான் வாழ்ந்தாங்க. அவங்ககிட்ட எதாவது ஒண்ணுன்னா, அதைத் தனக்கு மட்டும் வச்சுக்க மாட்டாங்க. அக்கம் பக்கத்துல, உறவினர்கள்னு எல்லாருக்கும் கொடுப்பாங்க. இங்க பாருங்க, கிராமத்துல விளையிற இந்தக் காய்கறிகளை எப்படி விளைவிக்கிறாங்க தெரியுமா? வற்றல், வடகம் எல்லாவற்றையும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்றாங்க தெரியுமா? அதை நாம அனுபவிக்கிற மாதிரி, அடுத்தவங்களும் அனுபவிக்கணும்னு நினைக்கிறதுதான் மனிதாபிமானம்.”
“நம்ம ஆச்சி எப்பவுமே சொல்வாங்க, ‘பசியோட இருக்கிறவங்களுக்கு ஒரு கைப்பிடி சோறு கொடுத்தா, அது நூறு மடங்கு புண்ணியத்தைத் தரும்’னு. அதுமட்டுமில்ல, இப்படிப் பகிர்ந்து கொடுக்கும்போதுதான், நமக்கும் அடுத்தவங்களுக்கும் இடையில ஒரு பாசம் உருவாகும். கஷ்டம்னா உடனே ஓடி வருவாங்க. இது வெறும் பொருள் இல்லை, உறவு. நீங்க பாருங்க, பக்கத்து வீட்டு ஆன்டி நமக்கு எவ்வளவு உதவிகள் செய்றாங்க? நம்ம கஷ்டத்துல வந்து நிற்கிறாங்க. அதுக்குக் காரணம், நாம அவங்களுக்கு அன்புடன் சிலவற்றைக் கொடுக்கிறோம். அவர்களும் நமக்கு ஏதாவது தருகிறார்கள். இந்தச் சின்னச் சின்னப் பகிர்வுகள் தான் பெரிய பெரிய உறவுகளை உருவாக்கும்.”
திடீரென்று கௌசிக் “அம்மா, போன மாசம் நான் காய்ச்சல் என்று ஸ்கூலில் இருந்து சீக்கிரம் வந்தப்போ, பக்கத்து வீட்டு ஆன்டி வந்து எனக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாங்க இல்லையா? அதுக்கு நாம கொடுத்த காய்கறிகள் தான் காரணமா?” என்று கேட்டாள். வேல்மதி புன்னகைத்தாள். “அதுமட்டுமே காரணம் இல்லை கண்ணா. அன்புடன் ஒன்றைப் பகிர்ந்து கொடுக்கும்போது, அது பல மடங்கு பெருகித் திரும்பி வரும். இது ஒரு மாயசக்தி மாதிரி. நம்ம முன்னோர்கள் இதைத்தான் புரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நீங்க இந்த நகரத்துல இருந்தாலும், இந்தக் கிராமத்து மனசு நமக்குள்ள இருக்கணும். கிராமத்திலிருந்து வரும் இந்த உணவுகள் மட்டும் இல்லை, நம்மிடம் இருக்கும் எதையுமே, நம்மால் முடிந்த உதவிகளை கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்ய வேண்டும். அது ஒரு நல்ல பழக்கம்.”
நரேனும் கௌசிக்கும் அம்மாவின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டனர். அவர்கள் கண்களில் ஒரு புதிய புரிதல் தோன்றியது. அம்மாவின் மனம் அவர்களுக்குப் புரிந்தது. நரேன் மெதுவாகச் சொன்னான், “அப்போ, நாங்களும் இனிமே எங்களுக்குக் கிடைச்ச எதையும் தனியா வச்சுக்காம, மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும் இல்லையா? தின்பண்டங்கள், பொம்மைகள் எல்லாமே?” என்று கேட்டான்.
கௌசிக் தலையாட்டினான் “ஆமாம்மா, நாங்களும் உங்கள மாதிரி, பாட்டிகள் மாதிரி, அடுத்தவங்களுக்குக் கொடுத்து வாழணும். எங்ககிட்ட இருக்கிறதை மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும். இந்த அன்பு மாயத்தை நாங்களும் கத்துக்கணும். கிராமத்துல இருந்து வர்ற பொருட்கள் மட்டுமில்ல, எங்ககிட்ட இருக்குற எந்த விஷயமா இருந்தாலும் கஷ்டப்படுறவங்களுக்கு உதவ நாங்க தயாரா இருப்போம்.”
வேல்மதிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவளது கண்கள் கலங்கின. ஐந்தாவது தலைமுறைக்கும் இந்த மரபு தொடரும் என்ற நம்பிக்கை, இன்று அவளது பிள்ளைகள் வாயிலாகவே உறுதிப்படுத்தப்பட்டது. வெறும் உணவுப் பொருட்களைப் பகிர்வது மட்டுமல்ல, அன்பையும் உறவுகளையும் பகிரும் இந்த அரிய பாடத்தையும், ஆரோக்கியமான பாரம்பரிய வாழ்க்கை முறையையும், கஷ்டப்படும்போது உதவி செய்யும் மனப்பான்மையையும், தனது பிள்ளைகள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள முடிவெடுத்தது அவளுக்குப் பெருமையாய் இருந்தது.
கிராமத்தின் மண் வாசனையும், உறவுகளின் பாசமும், சங்க இலக்கியத்தின் பகிர்வு மனப்பான்மையும், தன் வாழ்க்கைப் போராட்ட அனுபவமும், பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவமும் வேல்மதியின் வாழ்க்கையை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன. இந்த வாழ்க்கை நெறி, மரபுச் சங்கிலி தனது பிள்ளைகள் மூலம் அடுத்தத் தலைமுறைக்கும் தொடரும் என்ற உறுதியுடன், வேல்மதி படுக்கையறையின் ஐன்னல் வழியே சென்னையின் இரவு விளக்குகளைப் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனாள்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 44.