திருமணமான கையோடு எல்லா பெண்களையும் போல பல்வேறு கனவுகளுடன் மகிழ்ச்சியாத் தன் வாழ்க்கையை நகர்த்தப் புகுந்தவீட்டில் அடியை எடுத்து வைத்தாள் கலா. பெற்றோர்களின் கட்டாயத்தாலும் ஏழ்மையின் காரணத்தாலும் தனக்குப் பிடிக்காத; வயதில் மூத்தவரை நிர்ப்பந்தத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டு மெல்ல தன் வாழ்க்கையை நடத்தத் தொடங்கினாள் கலா. ஆரம்பம் முதலே கசப்பான வாழ்வினை தொடங்கிய அவளுக்குக் கடைசிவரை அது கசப்பாகவே நீண்டது.
ஆமை போல் நாட்கள் மெல்ல நகர்ந்தது, கலாவின் கணவனின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. பிறகுதான் தெரிந்தது ஒரு புற்றுநோயாளிக்குத்தான் வாக்கப்பட்டுள்ளோம் என்று. தனது இயலாமை மற்றும் வறுமையின் காரணமாகத்தான் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி ஒவ்வொரு நாளும் மனம் வெதும்பினாள். சமூக திருப்திக்காக இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள். கலாவின் கணவர் திடீரென ஒருநாள் கடுமையான நோய்த்தாக்கத்தினால் அவதிப்பட்டு வலி தாங்காமல் உயிரிழந்தார். இருபத்தி மூன்று வயதைக் கடப்பதற்குள் விதவைக் கோலம் பூண்ட கலாவின் நிலையைக் கண்ட அவளது தாய் மரகதமும் மன அழுத்தத்தால் ஓரிரு மாதங்களில் கலாவை விட்டுப் பிரிந்தார்.
தனது மாமனார் மாமியாரின் கடுமையான அரவணைப்பில் வளர்ந்துவந்த கலா காட்டிற்குச் சென்று சுள்ளி விறகைப் பொறுக்கியும் கடைகளுக்குப் பூக்களைக் கட்டிக் கொடுத்தும் தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தாள். தன் இரு பிள்ளைகளையும் கரைசேர்க்க வழி அறியாது துடித்துக் கொண்டு இருந்தாள். ஒரு காலத்தின் அவ்வூரின் முன்சீப்பாக இருந்த கலாவின் மாமனார் ஆறுமுகம் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கலாவை அண்டை வீட்டாருடன் தவறாக இணைத்துப் பேசி சண்டைபோட்டுக் கொண்டே இருந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவளது பொறுப்பற்ற மாமியாரும் தன் பங்கிற்குக் கணவனுடன் இணைந்து கலாவை நோகடித்துக் கொண்டே இருந்தாள். என்ன செய்யக் கணவனையும் தாயையும் இழந்து ஆதரவின்றி தவித்த கலாவின் வாழ்க்கை இப்படியே கிடுக்குப்பிடியாகச் சென்று கொண்டிருக்க மற்றொரு புறம் தன் கணவனின் சகோதரர்கள் இவளது சொத்துக்களை அபகரித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பத் திட்டம் போடுகின்றனர்.
இதனை அறிந்த கலாவின் மாமனார் தன் இளைய குமாரர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக அவர்களைக் கண்டிக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரின் இருமகன்களும் ஒருகட்டத்தில் தனது தந்தையான ஆறுமுகத்தை ஊரின் பொது முற்றத்தில் வைத்துத் தாக்கிவிடுகின்றனர். ஊர் மக்கள் முன் பெரிதும் அவமானம் அடைந்த ஆறுமுகம் அந்த மனவருத்திலேயே சிறிது நாளில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். கணவர் இறந்த சோகத்திலிருந்து மீளாத கலாவின் மாமியாரும் அடுத்த மாதத்திலேயே இறந்துவிடுகிறார். தன் இருபிள்ளைகளுடன் இந்த சமுதாயத்தில் கலா நிர்க்கதி ஆக்கப்படுகிறாள். முன்னமே ஏற்பட்ட சொத்து தகறாரில் இவளது உறவினர்களும் இவளை ஏற்க மறுக்கின்றனர். பிறந்தது முதல் தன் வாழ்வின் கடைசிக் காலம் வரை மகிழ்ச்சி என்றால் என்னவென்றே அறியாதவள் இவள். தன் வாழ்வின் அனைத்து சுகதுக்கங்களையும் 25 வயதிற்குள் உணர்ந்தவள் இவள். இருப்பினும் தன்னம்பிக்கை எனும் கைத்தடியுடன் தன் இரு பிள்ளைகளுக்காக நடைப்பிணமாக வாழ்வை மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தாள் தினமும் அரை வயிற்றுக் கஞ்சியோடு கரை சேராது தத்தளிக்கும் கப்பலைப் போல்..,
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர். த. தினேஷ்
தமிழ் உதவிப் பேராசிரியர்
வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திண்டல், ஈரோடு