கனவு|சிறுகதை|ம.அநிஷா நிலோஃபர்

கனவு-சிறுகதை-அநிஷா நிலோஃபர்
      நிலாக்குட்டி என்பது நிலாவின் அப்பா, நிலாவை அழைக்கும் செல்லப்பெயர். நிலா என்ற பெயருக்கு ஏற்றார் போல் வட்ட வடிவ முகம். அழகு, அறிவு என அனைத்தும் நிறைந்தவள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். படிப்பிலும் படு சுட்டி. பள்ளிக்கூடத்தில் எல்லா பாடங்களிலும்  முதல்  மதிப்பெண் எடுப்பாள். பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசும் பெற்றுவிடுவாள். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்தமைக்கான பரிசளிப்பு விழாவில் பரிசளிக்க கல்லூரி பேராசிரியரான அவளது தந்தையை சிறப்பு விருந்தினராக பள்ளியில் இருந்து அழைப்பர்.
               
முதல் மதிப்பெண் எடுத்தமைக்காக பரிசு பெறுபவர் நிலா. அப்பரிசினை வழங்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் அவளது தந்தை. தந்தையின் கையினால் பரிசு பெறுவது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
               
அவள் நன்றாகப் படிப்பதை நினைத்து அவளது அப்பாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தன் கையினால் தம் மகளுக்கு பரிசளிப்பதை எண்ணி பெருமைபடுவார். தன் மகளான நிலாவை( நிலாக்குட்டியை ) மருத்துவர் ஆக ஆக்கி பார்க்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. தன் உடன் பணிபுரியும் அனைத்து நண்பர்களிடமும் என் மகள் டாக்டர் ஆகிவிடுவாள் என்றே கூறுவார். அவள் வீட்டிற்கு வரும் அவளது அப்பாவின் நண்பர்களும்  டாக்டர் அம்மா… என்றே அழைப்பார்கள்.

                நிலாவுக்கும் அவள் அப்பாவின் கனவே அவளது விருப்பமாகவும் இருந்தது. அதற்காக அவளும் மிகக்கடுமையாக உழைத்தாள். அவள் அப்பாவின் கனவை நிறைவேற்ற எப்போதும் படித்துக்கொண்டே இருப்பாள்.
               
அவள் எப்போது தூங்கச் செல்கிறாள் எப்போது எழுகிறாள் என்று வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. ஏனென்றால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்ற பின்பும் படித்துக் கொண்ருப்பாள். வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பே எழுந்து படித்துக் கொண்டிருப்பாள்.
               
அவளுக்கு படிப்பதைத் தவிர வேறு எதிலும் கவனம் கிடையாது. வீட்டில் உள்ள அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் தொலைக்காட்சி பக்கம் திரும்பக் கூட மாட்டாள். மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முழு மூச்சாகப் படித்துக் கொண்டிருந்தாள்.
               
ஒரு முறை ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்து விட்டது. வீட்டில் அப்பா  திட்டுவார்களே என்று பயந்துக் கொண்டே சென்றாள். ஆனால் வீட்டில் நடந்ததோ வேறு.  அப்பாவிடம் மதிப்பெண்களைக் காட்டினாள். அவள் அப்பாவோ அவளை எதுவுமே திட்டவில்லை. மாறாக உன் அப்பா கல்லூரிப் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் உனக்கு பெருமையாக இருக்கிறதல்லவா… அதைப் போலத் தான் எனக்கும் என் மகள் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறுவாள் டாக்டர் ஆகிவிடுவாள் என்று சொல்வதில் தான் பெருமை இருக்கிறது  என்று சொன்னார்.

                இவ்வார்த்தைகளை கேட்டவுடன் நிலாவுக்கு கன்னத்தில் சுளீர் என்று அறைந்தது போல் இருந்தது . கன்னத்தில் அறைந்திருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது போலும்… அந்த வார்த்தைகள் அவ்வளவு வலித்தது அவளுக்கு … இன்னும் முனைப்பாக படிக்கத் தொடங்கினாள்.
               
மருத்துவம் படிக்க எந்த கல்லூரியில் சேர்க்கலாம் .. எவ்வாறு போய் வருவாள்.. வண்டி வாங்கிக் கொடுக்கலாமா.. என்றும் எதேனும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் கூட அங்கு பணிபுரியும் டாக்டர்கள் வருவதையும் போவதையும் பார்த்து இன்னும் 5 வருடங்களில் நம் மகளும் இது போல் டாக்டர் ஆகிவிடுவாள். இதே போல் வெள்ளை கோட்டு போட்டு வருவாள்… என நிலாவினை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது பற்றியே நிலாவின் அம்மாவிடம் அவளது அப்பா பேசிக் கொண்டு இருப்பார்.
               
பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு ஆரம்பம் ஆனது. அப்பாவின் கனவை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டது  என்று நிலாவும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதச் சென்றாள். தேர்வு எழுதச் செல்வதற்கும் அவள் அப்பாவே அழைத்துக் கொண்டு செல்வார். அங்கேயே தேர்வு முடியும் வரை காத்திருந்து பின்பு வீட்டிற்கு அழைத்து வருவார். தோழிகளுடன் சேர்ந்து  நானே வீட்டிற்கு வந்து விடுகிறேன் என்று நிலா கூறினாலும் கேட்காமல் அவரே அழைத்துக் கொண்டு வருவார்.
               
தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் நிறைவடைந்தன. அடுத்தத் தேர்வு வேதியியல். வேதியியல் தேர்விற்காக முழுவீச்சில் படித்துக் கொண்டிருந்தாள் நிலா. அவள் வீட்டு தொலைபேசி மணி அடித்தது. தொலைப் பேசியை எடுத்துப் பேச உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலாவின் அப்பா மாரடைப்பால் இறந்து விட்டதாகவும் இப்பொழுது வீட்டிற்கு கொண்டு வருகிறோம் என்று எதிர் முனையில் வந்த செய்தி , நிலாவின் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. நிலா கதறி துடித்தாள். அப்பா என்னை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தாரே… இப்பொது நான் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லையே… என்று புலம்பினாள். நாளை வேதியியல் தேர்வு. இன்று அப்பா உயிரற்ற நிலையில் வீட்டில்…
               
நாளை வேதியியல் பரீட்சை ஆச்சே… உன் அப்பாவின் கனவே நீ மருத்துவர் ஆக வேண்டும் என்பதாச்சே… இப்போது என்ன செய்யப் போகிறாய்… எப்படி பரீட்சைக்கு செல்லப் போகிறாய்… என்று தலையில் அடித்துக் கொண்டு அழுது புலம்புகிறார் நிலாவின் அம்மா. வீட்டிற்கு வந்த உறவினர்களோ இந்த நேரத்தில் எப்படி பரீட்சை எல்லாம் எழுதப் போவாள்… அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றனர். குடும்பமே நிலை குலைந்து விட்டது. அப்பாவின் ஆசை, அப்பாவின் கனவு, என்னுடைய இலட்சியம் எல்லாம் என்ன ஆவது… செய்வதறியாது திகைத்து நின்றாள் நிலா… சுனாமி வந்தது போல் நிலாவின்  வாழ்க்கையை புரட்டி போட்டது. நிலாவின் அப்பா கண்ட மருத்துவக் கனவு அவளது அப்பாவோடு காற்றில் கரைந்தது… நிலாவின் இலட்சியம் அவளது அப்பாவோடு மண்ணில் புதைந்தது…

                                                                                                                               
சிறுகதையின் ஆசிரியர்
             ம.அநிஷா நிலோஃபர்
 
   கண்காணிப்பாளர்
    
இராணி மேரி கல்லூரி
  
சென்னை 4

 

Leave a Reply