முன்னுரை
பண்டைத் தமிழ் நாகரீகத்தினையும், சிறந்த சிந்தனையின் ஊற்றாகவும் விளங்குவது சங்க இலக்கியங்களே. அத்தகைய சங்க இலக்கியங்களை மூன்றாகப் பகுத்தனர் நம் முன்னோர்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,பதினெண்கீழ்கணக்கு. இவற்றில் முன்னிரண்டும் சங்க காலத்தது, மற்றொன்று சங்கம் மருவிய காலத்தது.
‘கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
முன் தோன்றியது நம் மூத்தத் தமிழ்குடி’
என்னும் கூற்றிலிருந்து நம் தமிழ் மொழியானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும். பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் சாதி மத பேதமின்றி வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளம், அவர்கள் அகம் புறம் என்று பிரித்துக் கொண்டு ஆங்காங்கே குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அதன் பின் தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களை ஐந்திணைகளாகப் பகுத்துக் கொண்டு வாழ்ந்தனர். திணை என்றால் எழுக்கம் என்பது பொருள். அதற்கேற்ப சங்கத் தமிழர்கள் புறவொழுக்கத்தோடு அக வொழுக்கத்தையும் கடைபிடித்து ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு மாறாமல் வாழ்ந்து வந்தனர். அத்தகைய அறவொழுக்கத்தினைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நற்றிணையில் அறம்:
தலைவி தலைவனிடத்து குறையே கண்டாலும், அக்குறையை வெளிப்படையாகக் கூறாமல் நயமாக தோழியிடம் கூறுகிறாள்.
“பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை: நினக்கு யான்
உயிர் பகுத்தனன் மாண்பினன் ஆகலின்”1
குறிஞ்சித் திணையில் தோழிக்கு தலைவி அறத்தோடு நிற்றல்; என்னும் துறையில் அமைந்துள்ளது இப்பாடல். பாங்கியற் கூட்டத்தில் தலைமகளின் குறையைத் தீர்ப்பதற்கு தோழி முற்படுகின்றாள். ஆதனால் அவள் தலைவியிடம் ‘நின் மேனி வாடிற்று: நெற்றி ஒளி குன்றிற்று ஆனால் அவற்றின் காரணத்தை நீ உரைக்கவில்லை. ஆயினும் நான் அறிவேன் என்கிறாள். ஆதற்குத் தலைவி அதற்காக நீ வருத்தப்படாதே தினைப்புனத்தில் தலைவன் என் முதுகை அணைத்தான் அதனால் அவ்வாறு இருக்கிறேன் என்று தோழியிடம் நயமாகக் கூறி தன் ஒழுக்கம் குன்றாதவாறு அறத்தோடு றிற்கின்றாள்.
தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்றாலும் தலைவியின் மேல் கொண்ட காதலால் தலைவியிடம் சேர நினைக்கின்றான். அப்பொழுது தலைவி ஏற்றுக் கொள்ள மாட்டாளோ என்று பயந்து விருந்தினனை வீட்டிற்கு அழைத்து வருகின்றான்.
“தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண் தொறும் யாத்த கான் தகு நல் இல்,
கொடுங்குழைப் பெய்த செழுஞசெய் பேழை
சிறுதாழ் குழை பெய்த மெல் விரல் சேப்ப”2
தன் கைகள் சிவக்க தலைவி அட்டில் சமைக்கிறாள். தலைவன் விருந்தொடு வருகின்றான். தலைவன் மீது இருக்கும் கோபத்தை விருந்தினர் முன் காட்டக் கூடாது என்பதற்காக தலைவி தன் அழகிய முல்லை போன்ற எயிறு காட்டி சிரிக்கின்றாள். தன் குடும்பத்தில் நடப்பது பிறருக்கு தெரியக் கூடாது என்பதற்காக தலைவி அவ்வாறு நடந்து கொள்கின்றாள்.
குறுந்தொகையில் அறம்
குறுகிய அடிகளை உடையதாயினும் வாழ்க்கைக்குத் தேவையான செறிந்தக் கருத்துக்களை தருவதனால் சங்க இலக்கியத்தில் குநற்தொகையை ‘நல்ல குறுந்தொகை’ என்று கூறினர் சங்கத் தமிழர். குறிஞ்சி நிலத்தில் வாழும் குரங்குகள் கூட பிரிவினைத் தாங்காது அப்படிப்பட்ட இரவுப் பொழுதில் தலைவன் தலைவியை சந்திக்க நினைப்பது தவறு என தோழித் தலைவிக்கு மறுப்பு தெரிவிப்பதிலிருந்து அவர்களின் ஒழுக்கம் இங்கு புலப்படுகிறது.
“கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து – உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடுநாள்
வாரல்: வழியோ! வருந்தும் யாமே!”3
இருளில் தாவுதலையுடைய ஆண் குரங்கு, சாவினை அடைந்ததாக,கணவன் இல்லாமல் வருந்தும் கைம்மை வாழ்வினை பொறாது, தன் கணவனால் விரும்பப்பட்ட பெண் குரங்கு, தன் தொழிலை இனிக் கற்க வேண்டாத தன்னுடையக் குட்டிகளை சுற்றத்தாரிடம் அடைக்கலப்படுத்தி, உயர்நத மலைப்பக்கத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும். வுpலங்குகள் கூட அறத்தொடு நிற்கும் நாட்டுக்குத் தலைவனே இரவுக்குறியில் தலைவியை சந்திப்பது தவறல்லவா? ஏன்று தலைவனிடம் மறுத்துக் கூறுகிறாள்.
தன் தாய் வீட்டில் பாலும் சோறும் உண்டத் தலைவி, தன் கணவன் வீட்டில் நடந்து கொள்ளும் விதம் நம் தமிழர் பண்பாட்டின் உயர்வினை விளக்கிக்அ காட்டுகிறது.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகைக் கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒன்னுதல் முகனே”4
தலைவி இல்லறம் நிகழ்த்தும் சிறப்பினை நேரில் கண்டறிந்து வந்த செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவியின் அடிசில் ஆக்கும் திறமும் தலைவனின் அன்போடு இயைந்த பாராட்டு மொழிகளும் அப்புகழ் மொழிகளால் தலைவி செருக்கு கொள்ளாது அகத்தே மகிழும் அரிய பண்பு செவிலியால் கண்டறியப்பட்டது தெற்றென விளங்கும்.
ஐங்குநூற்றில் அறம்:
தலைவன் தலைவியை மணந்து கொள்வேன் என்று உறுதி கூறி தலைவன் பொருள் தேட செல்வதும், தோழி தாயிடம் வந்து அறத்தொடு நிற்றலும் ‘அஞ்சாதே’ தலைவன் திரும்புவான் இது உறுதி என தோழி தாயிடம் உரைக்கின்றாள்
“அன்னை, வாழி! வேண்டு அன்னை!புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்கு அமைந்ததனால் தானே;
துனக்கு அமைந்தன்று, இவன் மாமைக் கவினே”5
தலைவியின் கற்புக்கு எவ்வித பங்கமும் நேரவில்லை. தலைவன் தலைவியை கைவிடான் இனி தலைவனுக்கே உரியது என எடுத்துக் கூறுகிறாள்.
வினையின் காரணமாக நீங்கிச் செல்லும் தலைவன் தான் வருவதாக கூறிச் சென்ற கார்ப்பருவம் வருவதற்கு முன்னதாக வந்தமையை,
“ஆர் குரல் எழிலி அழி துளி சிதறிக்
கார் தொடங்கின்றால், காமர் புறவே;
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழ் இருங்கூந்தல்! வம்மதி விரைந்தே”6
கார் பருவத்தில் சொல்லச் சென்றான் தலைவன். ஆனால் அதன் வரவுக்கு முன்னரே வந்தான். தன் காதலியோடு புறவிற்குச் சென்றான்; அப்பொழுது கார்பருவம் வந்தது; அது கண்டு மகிழ்ந்து, தான் முன்னரே வந்தமைத் தோன்றக் காதலியிடம் இவ்வாறு கூறினான். தலைவன் சொன்ன சொல் தவறாமல் நடந்து கொண்ட முறை இப்பாடலின் வழி அறியப்படுகிறது.
அகம் கூறும் அறம்
பொருள் தேடச் சென்றத் தலைமகன் இடையில் தலைவி நினைவு வர தன் நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறான் .
“அகல்வாய் வானம் மால் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகி புன்கண் மாலை,
அந்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானை கதுவாய் வள் உகிர்”7
காட்டு யானையானது பாலை வழியில் உள்ள நடுகல்லை ஆள் என நினைத்த உதைத்தமையால் வளவிய பெருநகம் சிதைவுற்று பனை நுங்கின் தோடு போல முறிந்து வீழும்; அருளிலாக் கொடுமையுடைய ஆரலைக் கள்வர் கொள்ளைக் கொள்வதற்குப் பதுங்கிக் கிடக்கும் இடத்தே காட்டின் கொடுமையால் வருவார் போவார் இன்மையால் தம் வறுமையை நீக்குவாரைக் காணமாட்டாத இடமான கொடிய சுரவழி அம்மாலைக் காலத்தே நின்று தலைவியை நினைத்துத் தலைவன் வருந்துகின்றான்.
குடும்ப வாழ்க்கையில் மட்டுமன்றி, அரசியலிலும் மக்களைப் பேணிக்காப்பதிலும் தமிழர்க்கு நிகர் தமிழர்தான் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. அதில் புறநானூறு பண்டைத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு பண்பாட்டுக் களஞ்சியம், இலக்கியக் கருவூலம் இதனுள் தமிழகத்தின கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திய புரவலர்கள் புலவர்களை போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புகளும், மன்னர் தம் மானப் பண்பு பற்றிய அரிய குறிப்புகளும் போர்த் திணவுற்று அறமுறைப் பிறழாது போர் புரிந்து, மார்பில் வேலேற்ற மைந்துடை காளையரின் வீரப் பெருமைகளும், மூவேந்தரின் குடிமை முதலான சால்புகளும், களச்சாவுற்ற தம் மைந்தரின் உடல் கண்டு பெருமிதமெய்திய தாயரின் மறக்குணங்கள் பிறவும் புறநானூற்றில் மிக அழகுற எடுத்துரைக்ப் பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் போருக்குச் செல்லும் அரசர்களு; அறத்தோடு நடந்துகொள்ளும் முறைமை இங்கு குறிப்பிடத் தக்கது.
“ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும், பேணி, பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் பொல் புதல்வர் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சோமின் என”8
இப்பாடலில் ‘அறத்தின் நெறியின்படி பெருவழுதியின் இயல்பினை கூறுகிறார்.
முடிவுரை
இவ்வாறாக சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் மக்களின் வாழ்க்கையை தெற்றென விளக்கும் கருத்துக் கவூலங்களாக விளங்குகின்றன. ‘ஓரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் எட்டுத்தொகையில் அகம் புறம் இவை இரண்டிலும் திணை பிரித்து அதற்கேற்ப மக்கள் வாழ்ந்தனர். அகத்திணை அன்பின் ஐந்திணையில் மனையியல் வாழ்க்கைப் பற்றியும், புறத்திணையை பன்னிரெண்டாகப் பிரித்து அரசியல் வாழ்க்கையையும் விளக்கி மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்னும் அறச்சிந்தனைணைத் தூண்டுவதாக அமைந்தள்ளது போற்றுதற்குரியது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் பு.எழிலரசி
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை
செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஓசூர் – 635 126
சிறப்பான கட்டுரை
[…] எட்டுத்தொகையில் அறம் […]