சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய இந்திய தேசத்தில் மட்டுமே மயில் காணப்பட்டது. உலகில் வேறு எங்கும் இப்பறவை இல்லை என்றே கூறலாம். மயிலின் அழகினைச் கண்டு அலெக்சாண்டர் சுமார் 200 மயில்களைக் கிரேக்க நாட்டுக்கு எடுத்துச் சென்றார். அதன் பிறகே, மயிலினம் ஆப்பிரிக்கா ஐரோப்பா, கிழக்காசியா போன்ற நாடுகளிலும் பெருகி வளர்ந்தது. உலகத்துக்கே மயிலினத்தைக் கொடுத்த பெருமை இந்தியாவைச் சாரும். 1963-ம் ஆண்டு மார் மாதம் முதல் மயில் இந்தியாவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தைப் பெற்றது. நம் நாட்டில் பறவைகளைப் பற்றிப் பேச்சு எழும்போதெல்லாம் மயிலின் பெயரே முதலில் இருக்கலாயிற்று மயிலைப் பிடிப்பதும் கொல்வதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.
மயிலின் சிறப்பு
மழை பெய்யும் காலங்களில் மயில், தோகை விரித்து ஆடும். மழையை வரவேற்கும் வகையில் மகிழ்ந்து நடனமாடும். மேலும், மயிலின் நடனம் மழை வருவதை அறிவிக்கும் அறிகுறியாகும். பறவை இனங்களுக்கு ஒரு காவலாளி போலப் பணியாற்றுகிறது. காட்டிற்கு பறவைகளை தொலைவில் வரும்போதே அறியும் திறன் மயிலுக்கு உண்டு. மயிலின் அகவலைக் கேட்டதும், வேட்டையாட யாரேனும் வந்தாலும் அல்லது வேட்டை மிருகங்கள் வந்தாலும் அதனை வெகு மற்ற சிறு விலங்குகளும் பறவைகளும் எச்சரிக்கையடைந்து, மறைவிடங்களில் பதுங்கிக் கொள்ளும். இவ்வாறு மயில் பாதுகாப்புப் பணியைச் செய்கிறது.
மயிலின் இறகைக்கொண்டு விசிறி செய்யலாம். அந்தக் காலத்தில் அரசர்களின் இருபுறமும் இரண்டு பேர், மயிலிறகினால் செய்த பெரிய விசிறியைக் கொண்டு வீசுவார்கள். நன்றாகக் காற்று வரும். கிருஷ்ணர் தலையில் மயிலிறகு வைத்து அலங்கரித்திருப்பார். அதற்கு ‘பீலி’ என்று பெயர். பூசைப்பொருட்களுடன் மயிலிறகை வைப்பதும் வழக்கத்தில் இருந்தது.
மயிலும் தெய்வமும்
மயில், சரஸ்வதி தேவியின் வாகனம். சரஸ்வதி தேவி கல்வியை அருள்பவள். அவளுடைய வாகனமாகிய மயிலின் இறகைப் புத்தகத்தில் வைத்தால் கல்வி வளரும் என்ற வழக்கம் மக்களிடையே நம்பிக்கையாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சரஸ்வதி தேவிக்கு மட்டுமில்லாமல், முருகனுக்கும் மயில்தான் வாகனம். அதனால்தான் முருகனை மயில்வாகனன் என்று போற்றுகிறார்கள். இதைத்தவிர மயிலுக்கு வேறு பல சிறப்புகளும் உண்டு.
மிகப் பழைமையான காலத்திலிருந்தே மயிலைப் பல விதங்களில் சிறப்பித்திருக்கிறார்கள். சிலருடைய கொடிகளில் மயில் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது ‘ஸ்கந்தகுப்தன்’ என்ற அரசன் போர்க்களத்தில் வெற்றியடைந்த வீரர்களுக்கு மயிலின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கங்களை அறிவித்ததை அறியமுடிகிறது. ஷாஜஹான் என்ற அரசன் தங்க மயிலாசனத்தில் அமர்ந்திருந்தான். தங்க மயிலாசனத்தில் வைரங்களும் ரத்தினங்களும் இன்னும் பல விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பெற்றிருந்தன. அவை அழகான மயில் உருவில் இருப்பதைக் காணலாம். இந்த மயிலாசனம் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.
மயில் அழகான பறவை மட்டுமில்லாமல் கலை நயமும் கொண்டது. ‘மயில் நடனம்’ என்றொரு நடனமே இதற்கு புகழ். மயில் பலவிதத்திலும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. சிறு பூச்சிகள். புழுக்களைத் தின்கிறது. பாம்புகளைக் கொன்றுவிடும் தன்மை மயிலுக்கு உண்டு. அதனால்தான் மயில் இருக்கும் இடங்களில் பாம்பு வருவதில்லை. மயில் இருக்கும் இடங்கள் பசுமையான வளமான பூமியாக இருக்கும். ஏறத்தாழ மூவாயிரம் வகையான பறவைகள் நம் தேசத்தில் இருக்கின்றன. ஆனால் மயிலைப் போன்ற அழகான பறவை எங்கும் காண இயலாது. மயிலாப்பூர், மயிலாடுதுறை என்ற ஊர்களும் மயிலின் சிறப்பை உணர்த்துகிறது.
அகராதியில் மயிலின் சிறப்பு
‘மெய்யப்பன் தமிழ் அகராதி’ மயிலுக்கு, பறவை வகை, செடி வகை, சிறுமர வகை, இருக்கை வகை என்று விளக்கம் தருகிறது. ‘வரலாற்றுமுறை தமிழ் இலக்கியப் பேரகராதியில் மயில் குறிஞ்சி நிலக்கருப்பொருளான பறவை என்கிறது. ‘திவாகர நிகண்டு குமரன் ஊர்தி மயிலும் யானையும் என்று கூறுகிறது.
அபிதான சிந்தாமணி
ஒரு மயில் ஒரு அழகான பறவை. இது உஷ்ணமான நாடுகளின் காடுகளில் உள்ளது. இது பசுமை கொண்டையுண்டு. இதன் அழகு கோழியின் அழகு போலிருக்கும். கழுத்து நீண்டும் இறக்கைகள் மஞ்சள், நீலம் பொன்னிறங் கலந்த சிறகுகளையுடையது. இதன் தலை சிறியது. உச்சியில் குறுகியுமிருக்கும். இதற்கு நான்கு விரல்கள் பெற்ற நீண்ட கால்கள் உண்டு. வால் பல கண்கள் போன்ற புள்ளிகளைப் பெற்று மிக நீண்டிருக்கும். இது குளிர்ந்த மேகத்தைக் கண்டும், தன் பெட்டையைக் கண்டுகளித்த காலத்தும், சிறகை வட்டமாக விரித்துக் களிப்புடன் ஆடுதலைப் பார்க்க அழகாக இருக்கும். பெண் பறவைகளுக்கு நீண்ட வாலும் கொண்டையுமில்லை. இது புழு, பூச்சிகளைத் தின்னும், பாம்பையும் கொத்திக் கொல்லும் இவ்வினத்தில் வெள்ளை மயிலும் உண்டு.
இந்து தேசத்து நடிக்கும் பறவை இது. உயர்ந்த கோழி போன்ற உருவுடையது. கழுத்து நீளமானது. ஆணுக்கு உச்சியில் கொண்டையும், தோகை மிக நீண்டும் பசுமை கலந்து பொன்னிறமாய் கண்கள் பெற்றிருக்கும், இதன் முதுகு வெண்மை, கருமை, செம்மை கலந்தது. இதன் பேடுகளுக்குத் தோகைகளில்லை. இது இரு சந்திகளிலும் தோகை விரித்தாடும். மயில் விருதுசேனன் கொடியாகவும் இருந்துள்ளது என்பதை அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது.
இலக்கியத்தில் மயில்
மயிலைக் கேகயம், கேதாரம், மஞ்ஞை, கலாபம், மயூரம் போன்ற பல்வேறு பெயர்களில் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றுள் பெரும்பான்மையாகப் பயன்படுத்துவது ‘மயில்’ மட்டுமே. மற்ற பெயர்களெல்லாம் இலக்கிய வடிவில் மட்டுமே தன் தடத்தை ஆங்காங்கே பதிவுசெய்துள்ளன.
எட்டுத்தொகையில் மயில்
சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில் மயில் பற்றிய தகவல்கள் சாலக்கிடைக்கின்றன. பெரும்பாலும் இயற்கை வர்ணனைகளில், பெண்களின் அழகுக்கு மட்டுமே மயிலைப் பயன்படுத்தியிருப்பதைக் கீழ்க்காணும் பாடல்களின் மூலம் தெளிவாகக் காணலாம்.
நற்றிணை
வேங்கை வீஉகும் ஓங்குமலைக்காட்சி
மயில் அறிபு அறியா மன்னோ (நற்.13-8)
என்ற பாடல் அடிகள் உயர்ந்த மலையில் உள்ள கூட்டில் இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி கிளிகள் தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்லும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றன. மேலும்,
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (நற். 11.5)
என்ற வரியில் மயிலின் அடி போன்ற இலையையும் கடுமையான கதிராக அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய நொச்சி என்று மயிலை நொச்சி மரத்துக்கு ஒப்பிட்டுள்ளனர்.
விசும்பு ஆடுமயில் கடுப்ப (நற். 222-4)
என்ற அடியில் ஆகாயத்தில் பறக்கும் மயிலைத் தலைவிக்கு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளனர்.
இமையில் மடக்கணம் போல (நற்.248-8)
என்ற பாடலடி மேகக்கூட்டம் இடிமுழக்கத்துடன் மழை பொழிவதைப் பார்த்து மயில் ஆரவாரிப்பதைக் கூறுகிறது.
ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல் வர (நற்.262-2)
என்ற வரி நிலத்தில் கருங்காக்கணத்தின் கண் போன்று மலரும் கரிய மலர் வாடைக்காற்று வீசுவதால் ஆடுகின்ற மயிலின் தோகை அசைவது போலத்தோன்றுவதைக் குறிப்பிடுகின்றது.
கலிமயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலிமென் கூந்தல் நம்வயினானே (நற்.265-8)
என்ற பாடல் வரிகள் மயிலின் தோகையைப் போல மெல்லிய கூந்தலை உடையவள் தலைவி என்று மயில் தோகையானது தலைவியின் கூந்தலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
மயில் ஓரன்ன சாயல் (நற்.301-4)
எனும் அடி, தலைவி மயிலைப் போன்ற சாயலை உடையவள் என்று கூறுகிறது.
மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும் (நற். 305-2)
என்பதற்கு மயிலின் அடியை ஒத்தது நொச்சி மரம் என்று பொருள் தரப்படுகின்றது. மேற்சுட்டிய நற்றிணைப்பாடல்களின் மூலம் தலைவியின் அழகு நொச்சி மரம், தலைவியின் கூந்தல் போன்றவற்றிற்கு மயிலை உவமையாகப் புலவர்கள் கூறியுள்ளது புலப்படுகிறது.
குறுந்தொகையில் மயில்
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் (குறுந். 2-3)
என்ற வரிகளில் தலைவன் தலைவியின் அழகை மயிலோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவதைக் காணலாம்.
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (குறுந்.138.3)
‘மயிலின் கால் விரல் போன்ற பிரிவுள்ள இலைகளை உடைய
நீல மணிபோன்ற பூங்கொத்துக்கள் உள்ள நொச்சி மரம்’ என்னும் கருத்தை மேற்கண்ட பாடல் அடி தருகின்றது. மேலும்,
மென்மயில் எருத்தின் தோன்றும்
புன்புல வைப்பிற் கானத்தானே (குறுந். 183-6)
எனும் வரிகளில் காயாமரத்தை மயிலின் கழுத்தோடு ஒப்பிட்டுள்ளார் புலவர்.
கலிமயில் கலாவத்தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே (குறுந். 225-6)
என்ற பாடல் அடிகளில் தோகையை விரித்தாடும் மயில் போன்ற சாயலை உடைய தலைவியின் கூந்தல் தலைவனுக்கு மட்டுமே உரிமையானது என்று கூறப்படுகின்றது.
ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை (குறுந். 264-3)
எனும் அடிகளில், ‘தோகை அசையும்படி நடந்து ஆடுகின்ற மயில்கள் அகவும் மலைநாடனுடன் நாம் கொண்ட நட்பு பசலை படர்ந்தாலும் அப்பசலை நீண்ட நேரம் இருக்காது என்பதை உணர்த்துகிறது’ எனும் கருத்து குறிஞ்சி நிலத்தின் மயில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சியைப் புலப்படுகின்றது.
ஐங்குறுநூறு காட்டும் மயில்
அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்
பூக்கஞல் ஊரன் சூள்இவண் (ஐங்.8.3-4)
என்ற பாடல் வரிகள் பூக்கள் நிரம்பிய மாமரத்தின் மீது அழகான மயில்கள் வாழும் ஊரினை உடைய தலைவனின் சூளுரை மெய்யாகட்டும். அதாவது மாஞ்சோலைக்கு மயில் அணி செய்தது போல தலைவன் இல்லறத்திற்கு தலைவி அணியாகட்டும்.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் (ஐங்.291-1)
மயில்கள் ஆலப் பெருந்தேன் (ஐங்.292-1)
இவற்றுள் மயில்கள் இருக்கும் மலைநாட்டுத் தலைவனின் சிறப்பு கூறப்படுகிறது. மேலும் ஐங்குறுநூற்றில் மயில்கள் பற்றிய செய்தி அதிகம் இடம்பெறுவதால் மஞ்ஞைப்பத்து என்ற பெயரிலே இப்பதிகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிற்றுப்பத்துச் சுட்டும் மயில்
பழனக்காவிற் பசுமயிலாலும் (பதி. 8-9)
எனும் அடி, பெண்கள் மருத மரத்தில் ஏறிநின்று நெற்கதிர்களைக் கொய்ய வரும் பறவைகளை ஓட்டுவதற்காக விளிக்குரலெடுத்து இசைப்பார்கள். அதைக்கேட்டுப் பொழில்களில் இருக்கும் பசுமை நிறமுடைய மயில்கள் ஆடுவதைச் சுட்டுகின்றது.
பரிபாடலில் மயில்
திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன் (பரி.5-60)
என்னும் பாடல் வரியில் இந்திரன் அழகுடைய மயிலை சேவலாக்கி முருகனுக்குக் கொடுத்த செய்தியைக் காண முடிகின்றது.
மலைய இனங்கலங்க மலைய மயிலகவ (பரி. 6-4)
என்ற வரி மழைபெய்வதால் மயில்கள் ஆடுவதைச் சுட்டுகிறது.
விறல் வெய்யோ னூர்மயில் வேனிழனோக்கி (பரி. 8-67)
மணியும் கயிறு மயிலுங் குடாரியும் (பரி. 8-100)
என்ற பாடல் வரிகள் வெற்றியையே விரும்பும் முருகப்பெருமானின் ஊர்ந்து செல்லும் வாகனமாகிய மயிலையும் முருகப்பெருமானை வழிபடுவோர் மணி, கயிறு, மயில், கோடரி, யானை ஊர்தி போன்றவற்றைக் கொண்டு சென்று வழிபடுவதையும் குறிப்பிடுகின்றன.
மண்சீர் மயிலிய லவர் (பரி. 9-56)
ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோடால (பரி. 9-41)
இவ்வரிகள் மயில் போர் செய்வதையும், வள்ளியை மயிலோடு ஒப்பிடுவதையும் உணர்த்துகின்றன.
சிகை மயிலாய்த் தோகை விரித்தாடுநரும் (பரி. 9-64)
எனும் இவ்வரி மகளிர் மயில்களாக மாறித் தோகை விரித்து ஆடுவதைக் கூறுகிறது.
மாமயிலன்னார் மறையிற் புணர்மைந்தர் (பரி. 11-41)
என்ற பாடல் வரி சிறந்த மயில் போன்ற மகளிர் என்று குறிப்பிடுகிறது. மேலும்,
மணி மருணன்னீர்ச்சினை மடமயில் அகவ (பரி. 15-40)
என்னும் பாடல் வரியில் மயில் அகவுவது தாளவொலி, முழவொலி போல் இருப்பதைக் காணலாம்.
வெண்சுடர் வேல்வேள் விரைமயின் மேல் ஞாயிறுநின் (பரி. 18-26)
இவ்வரி முருகன் வேகமாகச் செல்லக்கூடிய மயிலின் மேல் ஏறி வருவதைச் சுட்டுகிறது. இதனால் மயில் வேகமாகச் செல்லக்கூடிய பறவை என்பதும் தெளிவாகிறது. மேலும்,
மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை (பரி. 19-7)
மடமயிலோரும் அனைவரோடு நின் (பரி. 19-21)
எனும் வரிகள், ஆடுகின்ற அழகிய மயில்போன்று இருக்கின்ற வள்ளியை முருகன் மணம் செய்து கொள்வதைச் சுட்டுகின்றன. மேலும், பாண்டியன் மடமயில் மனையவரோடும் மடப்பமுடை மயில் போன்ற சாயலையுடைய தன் மனைமாரோடும் வலம் வருவதையும் சுட்டுகின்றன.
மந்துற்றாய் வெஞ்சொன் மடமயிற் சாயலை (பரி. 20-69)
என்ற பாடல் வரி பரத்தை தான் செய்த பாவம் தீர்தல் பொருட்டு மடப்பமுடைய மயில் போன்ற மென்மையையுடைய தலைவியை வணங்க வேண்டும் என எண்ணியதைக் குறிப்பிடுகிறது.
அகநானூறு காட்டும் மயில்
எம்வெங் காமம் இயைவது ஆயின்
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித்
தோகைக் காவின் துளுநாடன்ன (அகம். 15)
என்ற பாடல், தலைவியானவள், தோழிகளும் நானும் வருந்த நன்னனின் பாழி என்றும் கட்டுக்காவல் மிக்க இடத்தைக் கடந்து தந்தையையும் மறந்து பெரிய மனையையும் துறந்து தலைவனுடன் புறப்பட்டுச் சென்றாள். அவள் சென்ற காட்டுவழியானது, இருப்பைப் பூவை தின்ற வாயுடன் நிலம் புழுதி பறக்க விரைந்து சென்று கொன்றைப் பழத்தைக் கோதும் வலிமையான கைகளையுடைய கரடிக் கூட்டம் திரியும்வழி. அச்சம் பொருந்திய வழியில் செல்லு என் மகளுக்கு உண்மையே பேசும் கோசர் வாழும், பாகற்காயைத் தின்னும் தோகை மயில்கள் நிரம்ப உள்ள, பொருளின்றி வாழ்வோரைப் பாதுகாக்கும் பண்புடைய துளுநாட்டு மக்களை போல அங்கு உள்ள ஊர்களின் மக்கள் அறிந்தவர்களாக இருக்கட்டும் எனும் கருத்தைத் தருகின்றது. மேலும்,
மடமயில் அன்ன என் நடைமெலி பேதை
தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக்கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சே (அகம். 63-15)
என்ற பாடல் அச்சம் தரும் காட்டினைக் கடந்து சென்றவள் கன்றுகளைக் காணாமல் இரு பசுக்களை வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க விரைந்த நடையை உடைய வெட்சி வீரர் ஆரவாரிக்கும் சிற்றூரில் இரவில் முதுமைப் பெண்டிர் வாழும் குடிசையில் தங்கிய மயில் போன்ற அடிக்கப்பெறும் பறையின் ஒலியைக் கேட்டுத் தூங்காது அழுவாளோ என்று நினைத்து ஏங்கும் என்மகள் அவன் தோளில் அணைந்து வேட்டையாடுவோர் காளைகளைக் காப்பாற்றும் போது என் நெஞ்சினை எண்ணி வருந்துகிறேன் என்பதில் மயிலின் மென்மைத் தன்மையைப் பெண்ணுக்கு உவமைப்படுத்தியது புலனாகிறது.
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடு பதுக்கை ஆள்உகு பறந்தலை (அகம். 67-10)
என்னும் பாடல் தோழி! தலைவன் பொருள் தேடச் சென்ற வழியின் கொடுமை எத்தகையது என்பதைக் கேள். வானம்பாடிப் பறவை பாடியும் மேகம் மழை பெய்யாது போனதால் மரங்கள் இலைகள் உதிர்ந்து பொலிவிழந்தன. கற்குவியல்களும் நெல்லி மரங்களும் உடைய இடங்களில் வெட்சியார் கொண்டு சென்ற ஆநிரைகளை மீட்டுச் சென்று நடத்திய போரில் இறந்த கரந்தை இரவுப் பொழுதில் கையில் வில்லும் அம்புமாய் இடுக்கிய பார்வையுடன், கரந்தை வீரர்கள் வீரர்களுக்கு அவர்களின் பெயர்கள் எழுதி நடப்பெற்ற நடுகற்களுக்கு மயில்தோகை சுட்டியிருப்பதை
அறியலாம்.
மந்தி நல்அவை மருள்வன நோக்க
கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில் (அகம். 32-8,9)
பூத்த பூக்களில் உள்ள தேனை உண்ணும் வண்டுகளின் இனிமையான ஓசை யாழ்போல்
கேட்டது.இவ்வாறு பல இசைகளைக் கேட்ட குரங்குகள் பார்வையாளர்களை வியப்புடன் பார்த்தன. காட்டில் மயில்கள் அவைக்களத்தில் ஆடும் மகளிரைப்போன்று ஆடிய செய்தி இங்கும் பதிவாகியுள்ளது.
நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை
நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து
துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்
வருதும், யாம் எனத் தோற்றிய (அகம். 25-10-14)
கார்ப்பருவம் வந்துவிட்டது. மலைச்சாரலில் ஈன்ற பெண் யானையின் பசியைப் போக்க ஆண் யானை மூங்கிலின் முளையைக் கொண்டு வந்து உண்ணச் செய்யும் திறையன் என்பவனது வேங்கட மலையில் அன்று பூத்த வேங்கை மரப் பூக்களின் பூந்தாது படிந்த புல்லிகளுடன் கூடிய மயில் குருந்தமரக் கிளையில் இருந்து குளிர்ச்சி பொருந்திய கார்காலம் வந்து விட்டதால் தலைவர் உறுதியாக வருவார். இங்கு மயில் காலத்தை அறிந்து வெளிப்படுத்தக்கூடிய பறவையாக சங்ககாலத்தில் இருந்ததை அறியமுடிகின்றது.
அருஞ்சுரம் இறந்தனள் என்ப – பெருஞ்சீர்
அன்னி குறுக்கைப் பறத்தலை திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்இணர்ப் புன்னை போலக்
கடுநவைப் படீஇயர் மாதோ களிமயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும் (அகம். 145-10-15)
என்ற பாடல் வரிகளில் மயிலை வீட்டில் வளர்த்த செய்தி புலப்படுத்துகிறது.
களிமயிற் கலாவத் தன்ன தோளே (அகம். 152-14)
எனும் வரி தித்தன் வெளியன் என்பவனது நண்பன் நன்னன் ஏழில் என்னும் மலையின் பக்கமலையாகிய பாழி என்ற இடத்திலுள்ள மயிலின் தோகையைப் போன்றது தலைவியின் வளைந்த சுருண்ட கூந்தல் என்று இப்பாடல் சுட்டுகிறது.
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி (அகம். 158-5)
இவ்வரி, ஒரு பெண் மலையிலிருந்து இறங்கும் மயில்போலத் தளர்ந்து நடந்து பரணில் இருந்து இறங்கி வரக்கண்டேன் என்று தோழி செவிலியிடம் கூறுவதாய் இப்பாடல் அமைந்துள்ளது.
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் வென்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி மாற்றோர் (அகம். 177-10-4)
என்ற பாடல், மலைச்சாரலில் சுரபுன்னைமரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றின் கிளைகள் வாட கிடந்ததால் பாறைகள் சுடும். அங்கு நிறைந்த கர்ப்பத்தோடு உள்ள பெண் மயில் நீர் கிடைக்காமல் இக்கோடைக்காலத்தில் வெயில் தணிந்துவிட்ட மாலை நேரத்திலும் பகல் முழுவதும் வெயிலில் அயிரி என்னும் ஆற்றங்கரையில் ஊதப்படும் ஊது கொம்பு போலக் கூவுவதைக் காட்டுகின்றது.
ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி (அகம்.281-4)
எனும் அடி, தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்ததைக் கூறும்பொழுது மோரிய மரபினர் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வரும்போது வடுகரைத் துணையாகக் கொண்டனர். அந்த வடுகர் வளைந்து நடக்கும் நடையை உடைய மயில், தன் சிறகினின்று உதிர்த்த தோகையைத் தம் வில்லில் சுற்றியிருப்பர். அதனால் அது பல கண்களைத் திறந்து பார்ப்பதுபோல் தோன்றி வெற்றி இலக்கை அடையும். வடுகர் மயிலிறகினை வில்லில் பொருத்தியிருந்த செய்தியை இங்குக் காணமுடிகிறது.
மயிலினம் பயிலும் கானம் (அகம். 3474-6)
தலைவன் தலைவியின் பசலையைப் போக்க நீ உதவுக என்று பாகனிடம் கூறுகிறான். அதாவது கூர்மையான பற்களையும் ஒளிபொருந்திய நெற்றியினையும் உடைய மகளிரது ஒழுங்குபட்ட தோளி என்னும் விளையாட்டைப் போன்று மயிலினங்கள் கூடி ஆடி இயங்கும் மரங்கள் அடர்ந்த காட்டு வழியில் நீ விரைந்து செல்க என்று இப்பாடல் உணர்த்துகிறது.
இனமயில் அகவும் கார்கொள் வியன் புனத்து (அகம். 334-1)
கார்காலத்தில் மயில் கூட்டங்கள் அகவிக் கொண்டிருக்கும் தன்மையை இப்பாடல் குறிப்பிடுகிறது.
ஆடுமயில் முன்னது ஆக, கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி (அகம். 352-4)
பெரிய பலாப்பழத்தினை ஆண் குரங்கு கையில் வைத்திருக்கும். அருவிகள் ஒலிக்கும் கற்பாறையில் ஆடும் மயில் தன் முன்னே நிற்க, கூத்தர் விழாக் கொண்டாடும் முதுமை வாய்ந்த ஊரில் விறலியின் பின் நின்று முழவை இயக்குபவன் என்று இப்பாடல் மூலம் மயிலின் சிறப்பை அறியலாம்.
காமர் பீலி ஆய்மயில் தோகை (அகம். 358-2)
நீல மணிபோன்ற நிறம் கொண்ட கழுத்தினையும் பீலிகள் நிறைந்த தோகையினையும் உடைய மயில்கள் இனிய குரல் கொண்டு தாளத்திற்கேற்ப ஆடும் தன்மை கொண்டவை.
மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன் (அகம். 368-7)
குன்றின் பக்கத்தில் நீண்ட அடியை உடைய மரங்களில் இளைய மயிலின் உச்சியின் மேல் உள்ள குடுமி போல் தோன்றும் மலைநாட்டை உடைய தலைவன். இங்கு, மயிலின் குடுமியை மலைக்கு ஒப்பிட்டுக் கூறுவதை அறியமுடிகிறது.
கிள்ளையும் தீம்பால் உண்ணா மயில் இயல் (அகம். 369-4)
காமர் பீலி ஆய்மயில் தோகை (அகம். 378-5)
எனும் வரிகள், மலைவாழ் ஆடுகளின் கொம்புடைய இளைய கடாக்களின் ஒலியை கேட்டு மயில்கள் அஞ்சி ஓடும் என்றும், ஆடும் களத்தில் ஒலிக்கும் கொம்பு போன்று அம்மயில்கள் ஒலித்து அருகிலுள்ள மூங்கிலின் பகுதியில் தங்கியிருக்கும் என்றும் மயில் பற்றிய செய்திகளைச் சுட்டுகின்றன. மேலும்,
தன் ஓான்ன ஆயமும், மயில் இயல்
என் ஓரன்ன தாயரும் (அகம். 385-1)
ஆடுமயில் பீலியின் பொங்க (அகம். 385-14)
இதில், மயில் போன்ற சாயலை உடைய என் மகள் மயிற்சாந்து பூசி எல்லாச் சிறப்புகளையும் செய்து திருமணம் நடக்கச் செல்லாதவளாய் தலைவனுடன் சென்றாள் என்கிறாள் செவிலி.
நனவுறு கட்சியின் நல்மயில் ஆல் (அகம். 392-17)
தினைப்பயிரை மேய்ந்த யானைக்கூட்டம் நிலைகெட்டு ஓடும்படி பரணில் இருந்து கானவ வீசிய கவண் கல்லின் கடுமையான ஓசை எங்கும் ஒலித்தது. அதைக் கேட்டு அழகிய மயிலும் இடியோசை என எண்ணியது. இவ்வாறாகச் சங்க இலக்கியங்கள் காட்டும் மயில் தலைவியி அழகு, நொச்சிமரம், முல்லைக்கொடி போன்ற வர்ணனைகளாகவும் உவமைகளாகவும் பெரும்
பாலான இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில பாடல்கள் மட்டும் மயில்கள் போர் செய்வதற்கும் அதன் தோகையைப் போ செல்லும் வில்லில் பொருந்தியதையும் சுட்டுகிறது. அழகுகளில் ராணியாகப் போற்றப்படும். அழகோடு மயிலானது பெண்களின் ஒப்பிடப்பட்டுள்ளமையும் போர்க் கருவியா இருந்துள்ளமையும் தெளிவாகிறது.
புறநானூறு காட்டும் மயில்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என (புறம். 56:7-8)
இப்பாடலில் பிணி என்பது மயிலை குறிக்கின்ற சொல்லாகும். மன்னனைப் புகழ்ந்து பாடும் இடத்து கடவுளும் நீயே காவலனும் நீயே என்று கூறி அழகிய மயிலைக் கொடியாக உடைய குன்றாத வெற்றி வேலேந்திய மயிலேறும் முருகவேளும் என்று கூறப்படுகிறது.
பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும் (புறம். 116:10)
பாரி இறந்த துயர் பொறுக்காது பூமலர் விரிந்த புதுமலர்ச் சோலையில் மயில் எழுந்து ஆடியது என்பதைப் புலவர் மேற்கண்ட வரியில் கூறுகிறார். மேலும்,
மென்மயில் புனிற்றுப்பெடை கடுப்ப நீடி (புறம். 120: 6)
எனும் வரியால் மெல்லிய மயிலினது ஈன்றணிய பெட்டை போல ஒங்கி, பாரி என்ற செய்தி பெறப்படுகின்றது.
மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளி (புறம். 142: 1)
மேலணிந்திருந்த போர்வையை எடுத்து, அந்த மயிலுக்குப் போர்த்தி அருளிய பேகனின் சிறப்பு எனும் அடியில், மென்மைச் சாயலுடைய மயில் குளிரால் வருந்தும் என்று எண்ணித் தன் சுட்டப்படுகின்றது.
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன (புறம். 146: 8)
எனும் அடியில், அணிமணி புனைந்த பேகனின் மனையாள், தோகை மயில் விரித்தது போன்று கூந்தல் வாசப் புகை மணம் பெறவும், குளிர்ந்த மணம் தரும் மாலை சூடி மகிழவும், உனது தேர் உன் மனைவியை விரைந்து சென்று காணுமாக என்று பேகனிடம் அரிசில்கிழார் உரைக்கிறார்.
இல்வழங்கு மடமயில் பிணிக்கும் (புறம். 252: 4)
எனும் அடி, ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் அழகு மயில் போன்ற இளம் பெண்களைக் கவர்பவன் என்பது குறித்துக் கூறுகின்றது. இங்கு மயில் என்பது பெண்களைக் குறிக்கின்றது. மேலும்,
அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து (புறம். 264:3)
அழகிய மயில் தோகையும் அணிவித்துப் பெயரும் எழுதி கல்லும் நட்டுவிட்டனரே! போரில் மன்னன் இறந்ததை அறியாமல் பாணர் கூட்டம் பரிசில் பெற வருவதற்கு இனிமேல் வழியுண்டோ என்று உரைக்கிறார்.
மயில் அம்சாயல் மாஅயோளொடு (புறம். 318: 23)
உணவாக்கப் பறித்து வந்த கீரை வாடி வதங்க, காட்டிலிருந்து வெட்டி வரப்பட்ட விறகுக் கட்டைகள் பற்ற வைக்கப்படாமல் உலர, மயில் போன்ற சாயலுடைய அழகிய மனைவியோடு கூடிவாழும், பெருந்தகையாளன் ஊர் அவன் போரில் துன்பத்துக்காளானானென்றால் பசியால் வாடி வருந்தும் எனும் செய்தி மேற்கண்ட பாடலடியின் தொடர்ச்சியாக வருவதை அறியமுடிகிறது.
கலித்தொகையில் மயில்
கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற
தொல்நலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க (பாலை. 27)
என்ற பாடல் அதோ! மயில் பார்! அழகிய தோகை விரித்தாடும் மயில் ஆடுகிறது. அது என்னைப் பார்த்து உன் மேனி வண்ணம் எங்கே? வனப்பு எங்கே? என்று கேட்டு இகழ்வது போலிருக்கிறது என்று தலைவன் பிரிவால் வாடும் தலைவி தோழியிடம் புலம்புவதாக அமைந்துள்ளது.
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
உருவது போலும் என் நெஞ்சு எள்ளித்
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில் கையில் (பாலை. 33)
என்ற பாடல் வரி மயில் தோகை விரித்து ஆடுவதைக் குறிப்பிடுகிறது.
நெடுமிசைச்சூழும் மயில் ஆலும் சீர (பாலை. 36)
எனும் பாடல் வரியில் இளவேனில் காலத்தில் வெண் கடம்ப மரத்தில் ஒரு மயில் அமர்ந்திருக்கிறது. அது தன் அழகிய தோகையை விரித்து ஆடுகிறது. ஆடும் மயிலைக் காண்கிறாள் ஒரு பெண். அவளுக்கு மயில் ஆடுவது மகளிர் ஆடுவது போல் தோற்றமளிப்பதை உணர்த்துகிறது.
மெல்ல இயலும் மயிலும் அன்று
சொல்லத் தளரும், கிளியும் அன்று (குறி. 55)
என்ற பாடல்வரியில் மகளிரின் நடைக்கு மயிலை ஒப்பிட்டுக் கூறியுள்ளதை அறியமுடிகிறது.
ஆய்தூவி அனம் என, அணிமயிற் பெடை என
தூது உண் அம்புறவு என துதைந்த நின் எழில் நலம் (குறி. 56)
அன்ன நடை மயில் போன்ற சாயல் என்று பெண்ணுக்கு மயில் அழகை ஒப்பிட்ட
கூறியுள்ளனர்.
மாவென்ற மடநோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி (குறி. 57)
இந்தப் பாடல்வரியும் மயில் அழகோடு தலைவியை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளது.
மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழ
பயில் இதழ் மலர் உண்கண் (முல். 108)
வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது என
தலையுற முன் அடிப் பணிவான் போலவும் (நெய்.128)
எழில் அஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே (நெய்.137)
மேற்கண்ட பாடல்களின் வாயிலாக மயில் பெண்களின் அழகை வர்ணிக்கவும், அ உணர்த்துவதைக் காணலாம். கலித்தொகைப் பாடல்கள் பெண்களின் அழகோடு மட்டு இழந்த நிலையில் தோகை உதிர்ந்த மயில் போல என் அழகும் இழந்துவிட்டது என்பதை ஒப்புமைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை அறியலாம். கோலக் கலாபம் விரித்தாடும் நீல மயிலின் தோற்றத்தை நடமாடும் விறலியர்க்கு உவமைய கூறுவர் பண்டைப் புலவர்கள்.
பத்துப்பாட்டில் மயிலின் சிறப்பு
திருமுருகாற்றுப்படை
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத்தண்கதளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை, 205)
முருகப் பெருமானானவன் மயிலை ஊர்தியாகக் கொண்டவன், நெடிய உருவம் படைத்தவன், சிவந்த ஆடையை உடையவன், தொடி என்னும் அணியைத் தோளில் அணிந்தவன் இப்படிப் மகளிருக்கு முதற்கை கொடுத்து, மலைகள் தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.
பொருநராற்றுப்படை
பெடைமயில் உருவின், பொருந்தகு பாடினி (பொருந. 47)
உச்சி வேளையில் நடத்தலைத் தவிர்த்தலால் பெடைமயில் அருகு நின்ற மயில் போலும் சாயலையுடைய கல்விப் பெருமைமிக்க பாடினி.
மடக்கண்ண மயில் ஆல (பொருந. 190)
குறிஞ்சி நிலப் பறவையாகிய மயில் மருத நிலத்துக் காஞ்சி மரத்திலும், மருத மரத்திலும் இருந்தது என்பார்கள்.
சிறுபாணாற்றுப்படை
மயில், மயிற் குளிக்கும் சாயல், சாஅய் (சிறு. 16)
அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன் விறலியரை வர்ணிக்கும் பொழுது அவளின் கருங்கூந்தலைக் கண்டு மழைமேகம் என நினைத்துக் களி கொண்ட மயில்கள் பலவும் கூடி நீலமணி போலுங் கண்ணினையுடைய தோகைகளை விரித்து ஆடுவதைப் போன்று ‘இவர் மென்சாயற்கு ஒவ்வேம்’ என்று நாணி மறைதற்குக் காரணமாகிய கட்புலனாகிய மென்மை உடையவள் விறலியாவாள்.
கருநனைக் கணமயில் அவிழவும் (சிறு.165)
விறலியும் இரவலனும் முல்லை நிலத்தைச் சார்ந்த வேலூரினை அடைவர். அங்கே அவர்களைப் பவழம் கோத்தாற் போன்று பூத்திருக்கும் கருநிறக் காயாவின் அரும்பு, மயிலின் கழுத்துப் போன்று மலர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி (சிறு.265)
நல்லியக்கோடனது மலையின் புகழினை விளக்கும் முகமாக மென்தோளும் துகில் அணிந்த அல்குலும், ஆடிய சாயலும் உடைய மகளிர் அகிற்புகை ஊட்டுதற்பொருட்டு விரித்த கூந்தலைப் போன்று, மயில் தன் தோகையை விரித்து ஆடுதற்குக் காரணமான கருமேகங்கள் வெண்மேகமாகிய
மஞ்சின் இடையே தவிழ்கின்ற மலை.
மதுரைக்காஞ்சி
மயிலகவு மலிபொங்கர் (மது.கா.333)
மயில்கள் ஆரவாரிக்கும் பொழில் பகுதியாகும்.
மயிலிய லோரும் மடமொழி யோரும் (மது. கா. 418)
மயிலின் தன்மையை உடையோரும் மடப்பத்தையுடைய மொழியினை உடையோர்.
நன்மா மயிலின் மென்மெல இயலிக் (மது. கா. 608)
நன்றாகிய பெருமையையுடைய மயில்போல மெத்தென மெத்தென நடந்து சென்ற முதற்சூல் கொண்ட பெண்கள்.
அன்னங் கரைய அணிமயில் அகவப் (மது. கா. 675)
வண்டாழங் குருகினுடைய சேவல்களின் விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரியா பேடைகளை அழைப்ப அதேபோல் அழகிய மயில்கள் பேடைகளை அழைப்ப.
மயிலோ ரன்ன சாயல் மாவின் (மது. கா. 706)
மயிலோடு ஒரு தன்மைத்தாகிய மென்மையினையுடைய பெண் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.
நெடுநல்வாடை
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை (நெடு. 99)
அரண்மனையின் தோற்றத்தை விளக்கும் பொருட்டு அங்கே அயலிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும்.
பட்டினப்பாலை
மயிலியல் மானோக்கிற் (பட்டினப்பாலை, 149)
பட்டினப்பாலை தெருக்களில் மயிலின் இயலினையும் மான் போன்ற பார்வையினையும் உடைய மகளிர் இருந்தனர் என்பதாகும்.
கடையெழு வள்ளல்களுள் பேகன்
மயில் உடுத்துமா? போர்த்துமா என்று அறியாமல் அது மழைமேகங்கண்டு ஆடுவதைப் பார்த்து குளிருக்கு நடுங்குவதாகக் கருதி மனம் நடுங்கினான் மன்னன் பேகன். தான் நடுங்கிக் கொண்டே மயில் நடுக்கம் தீர்ப்பதற்குத் தன் போர்வையை வழங்கினான். பேகனுக்குத் தமிழ் இலக்கியத்தில் அழியா வாழ்வளித்துத் தந்தது மயில்.
மயில் ஆட்டத்தில் மனம் பறிகொடுத்த பாவலர் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குறிஞ்சிக் கபிலர். களித்தாடும் மயிலைக் கண்டார் தம் எண்ணத்திரையில் வண்ண ஓவியமாகத் தீட்டினார். அதனைச் சொல் ஓவியமாக்கித் தமிழ் உலகுக்குத் தந்தார். அகம் 82-வது பாடலில் மயில் பற்றிய சிறப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அற இலக்கியத்தில் மயில்
பழமொழி நானூறு
முன்னை உடையது காவாது இகழ்ந்து இருந்து பி
ன்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் இன்இயற்கைப்
பைத்து அகன்ற அல்குலாய் – அஃதால் அவ்வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு (பழ. நா.325)
இனிய இயல்பையும் அகன்ற அல்குலையும் உடைய பெண்ணே! செல்வம் திரண்டு இருந்தபோது அதனைக் காப்பாற்றாமல் அழிய விட்டுவிட்டுப் பின்னர் மீண்டும் செல்வம் சேர்க்க முயலுவது மயிலின் தலைமேல் வெண்ணெயை வைத்து அது வெயிலில் உருகி மயிலின் கண்களை மறைத்துவிடும்போது மயிலைப் பிடித்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.
துயிலும் பொழுதே தொடு ஊன் மேற்கொண்டு
வெயிலில் வரிபோழ்தின் வெளிப்பட்டார் ஆகி
அயில் போலும் கண்ணாய்! – அடைந்தாள் போல் காட்டி
மயில் போலும் கள்வர் உடைத்து (பழ. நா.353)
வேல் போன்ற கூரிய கண்ணை உடையவளே, மக்கள் அனைவரும் உறங்கும் நள்ளிரவில் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே உள்ளவற்றைத் திருடிச் சென்றுவிடும் கள்வர், சற்றே ஓய்வு கொண்டு பகலில் நல்லவர் போல் வெளிப்படுவர், நான்கு பேருடன் கூடிப் பழகுவர். பாம்பைப் பற்றி விழுங்கி நல்லவர்போல் நடிக்கும் மயில் போன்ற கள்வர் இத்தகையோரை உடையது இந்நாடு. மயில் போன்ற கள்வர் என்ற அழகிய உவமைத் தொடர் அக்கால நிலைமையைக் காட்டுகிறது.
திருக்குறள்
“பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” (குறள். 475)
மயில்பீலி இலேசாக இருக்கும் என்று கருதி மிகுதியாக ஒரு வண்டியில் ஏற்றிச் சென்றால் அவ்வண்டியின் அச்சாணி முறிந்துவிடும். அதேபோன்று தன் வலிமையினை உணராது பெரிய செயல்களைச் செய்ய நினைப்பவனும் வெற்றிபெறாது வீழ்ந்துவிடுவான் என்பது இக்குறளின் பொருள். அதாவது ஒருவனுடைய வன்மையை வெற்றிபெறச் செய்வதற்கு மயிலின் தோகை இங்கு உவமிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் மயிலின் தோகை பஞ்சுபோல இலேசாக இருப்பதும் இவற்றினூடாகக் காணலாம்.
பக்தி இலக்கியம் சுட்டும் மயில்
பக்தி இலக்கியத்தில் திருஞானசம்பந்தர் பதிகத்தில் பாண்டியனின் வெப்புநோயைத் தீர்க்க சமணர்கள் அவன் உடலை மயிற்பீலியால் தடவிய செய்தி புலப்படுகிறது. இதன் வாயிலாக மயில் தோகை குளிர்ச்சி பொருந்தி நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டிருப்பதை இங்குக் காண முடிகிறது.
காப்பியத்தில் மயில்
கயிலை நன் மலையிறை மகனை நின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளிர் (சிலம்பு: குன். குரவை. 15: 6-7)
என்ற பாடல் வரியில் மயில் பற்றிய செய்தி பெண்களோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளதைக் முடிகிறது.
இராமாயணம்
மயிலின் குஞ்சுகளுள் தலைக்குஞ்சே தனிப் பேரழகினது என்றும், தலைமைக்குரியது என்றும். கூறுவர். ஆதலால் மூத்தவர்க்கு அரசுரிமையுடைய முடிமன்னர் குலம் மயின்முறைக்குலம் ‘மயின்முறைக்குலத்துரிமையை மாற்றாதே’ என்று தயரதன் அவளிடம் மண்டியிட்டுக் கிடந்தது. எனப்பெற்றது. அக்குலத்து வந்தவன் கேகயன் ஆனான். அவன் மகள் கைகேயி ஆனா இராமகாதைச் செய்தி குறிப்பிடுவதிலிருந்து மயிலின் சிறப்பு புலப்படுகிறது.
சிற்றிலக்கியத்தில் மயில்
திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சியில்
காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்
குலாத்தியும் மாடப் புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய்
என்ற பாடல் வரிகளில் பலவகையான பறவையின் வருகையுடன் மயிலின் சிறப்பையும் குறிப்பிட்டிருப்பது சிங்கன் கூற்று வழிக் காணமுடிகிறது.
இக்கால இலக்கியத்தில் மயில்
பாரதியார் கவிதையில் மயில்
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு
நன்மையி லேயுடல் வன்மையிலே – செல்வப்
பன்மையிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திரு மாதர்தங் கற்பின்
புகழினி லேயுயர் நாடு – இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு
பாரதியார், பாரதநாடு என்ற கவிதையில் பொன்மயிலை மாதர்களின் கற்பிற்கு இணையாக வைத்துப் பேசுகிறார் என்பதை அறியமுடிகிறது.
பாரதிதாசன் கவிதையில் மயில்
அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயிலிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடுகின்றாய் அழகிய மயிலே!
உனது தோகை புனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
ஆடுகின்றாய், அலகின் நுனியில்
வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல் உன் தனிச் சொத்து! எஸபாஷ் கரகோஷ்ம்!
ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள் ஆயிரம் ஆயிரம்
அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆன உன் மெல்லுடல் ‘ஆடல்’உன் உயிர் இ
வைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது ‘என் நினைவு’ என்னும் உலகில்
மீண்டேன் உனக்கோர் விசயம் சொல்வேன்
நீயும் பெண்களும் ‘நிகர்’ என்கின்றார்.
பாரதிதாசன் தன்னுடைய கவிதைத் தொகுப்பில் மயிலின் தன்மை பற்றி விரிவாக விவரித்துக் கூறியுள்ளார். மயிலின் தோற்றம், நடை, பார்வை, மெல்லுடல், ஆடல், சாயல், தோகை முதலியவற்றை எல்லாம் வர்ணித்து அதனை அவரின் நினைவில் வைத்து இறுதியாக மயிலானது பெண்களுக்கு நிகர் என்று எடுத்துக் கூறியுள்ளார். மேலும்,
‘பதுக்க முடியாப்
பவுன் முத்திரை நீ
ஒதுக்க முடியா
ஓவியத் திரை நீ
நட்டுவம் இன்றி
நடத்தும் கலை நீ
கொட்டு முழக்கின்றிக்
குதிக்கும் சிலை நீ!
அழகு நடன
அரும்பத வுரை நீ
மெழுகுப் பச்சையின்
மின் அனல் நுரை நீ
உயிராய்க் கிடைத்த
ஒளிப்புதை யல் நீ!
அயராது மகிழ்வேன்
ஆடுக மயில் நீ!
என்ற இப்பாடலில் மயில் கவிஞரின் பார்வைக்கும் பாட்டுக்கும் விருந்தாய்ச் சிறந்தது. அழகிய அதன் தோகையைக் கண்டு வியந்து மகிழ்கிறார். அழகிய சொல் வீச்சில் வியத்தகு மயில் காட்சி பியைப் படம் பிடித்துள்ளார் கவிஞர். மயிலின் காட்சி பதுக்கமுடியாத பவுன்முத்திரையாகவும், ஒதுக்க முடியாத ஓவியத் திரையாகவும், நட்டுவம் இன்றி நடத்தும் கலையாகவும், கொட்டு முழக்கின்றிக் குதிக்கும் சிலையாகவும், நீலத்தோகையின் நேர் துறைமுகமாகவும், அழகுநடன அரும்பத உரையாகவும், மழைக்காலத்தின் மருமகப்பிள்ளையாகவும், உயிராய்க் கிடைத்த ஒளிப் புதையலாகவும் காட்சியளித்து மகிழ்ச்சியைத் தருகிறது.
இக்காலக்கட்டங்களில் மயில்
ஆஸ்திரேலியாவின் மயில்’ எனப்படும் யாழ்ப் பறவையின் அன்பு வாழ்க்கையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இனப்பெருக்கக் காலத்தில் ஆண்பறவை ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக்கொண்டு அதை வரையறுத்துக் கொள்கிறது. ஒரு பறவை மற்றொரு நீளமான அழகிய தோகையையும், இனிய குரலையும் பெற்றிருக்கும். ஆண் மயில் முறையாகக் பறவையின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்லாது என்பதையும் இங்கு பதிவு செய்யலாம். ஆண்பறவை மண்ணைத் தோண்டி எடுத்து இலைகளையும் கொண்டு உயரமாக மேடை ஒன்று அமைத்து அதில் காலையிலும் மாலையிலும் இனிய குரல் எழுப்பிப்பாடும். தனது கூரிய நீண்ட நகங்களால் ஏறிநின்று கொண்டு அழகுத் தோகையை விரித்து பெண்ணைக் கவர்வதற்காக ஒயிலாக ஆடும் தன்மை, மயிலின் அன்பு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றது.
உளவியலில் மயில்
‘யெங்’எனும் விலங்கியல் அறிஞர் ஆண் மயிலில் காணப்படும் நீண்ட அழகிய இறகுகள் பாலினப் பண்பாக அமைந்து பெண்ணைக் கவருவதற்காகவே அமைந்துள்ளது என்கிறார். மயிலின் ஆட்டம் கவர்ச்சிமிக்கது. அவ்வாட்டமே கூத்துக்கலைக்கு வித்து ஆகியது. மயில் அழகாக ஆடி மகிழ்ந்த இடம் அதன் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. மயிலாடுதுறை, மயிலாடும்பாறை, மயிலம், மயிலாப்பூர் என்பவையே அவை.
மயிலின் ஆட்டக் கவர்ச்சி மக்களை அன்றி மற்ற உயிரினங்களையும் ஆடச்செய்தது. ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ ஆடுவதை ஔவையாரும், ‘மந்தி குதித்தாடும் மயிலாடு துறையை` ஞானசம்பந்தரும், ‘மயிலாடும் அரங்கில் மந்தி நோக்குவதைச் சாத்தனாரும் பதிவு செய்துள்ளனர். மயிலின் அழகில் அதனை தெய்வத் திருவூர்தியாக்கி முருகனை மயிலேறும் மாணிக்கமாக்கிக் கோடி கோடி அடியார்களைத் தேடித் தேடி வணங்க வைத்தது. ‘வேலும் மயிலும்
துணை’ என்ற அடைக்கலமாகவும் மாறியது.
மயிலும் உவமைக்காட்சியும்
தமது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றில் மரபுவழி தொட்டு காட்சிப்படுத்தப்பட்ட இலக்கணக் குறிப்புகள், கவிதைகள், உவமைகள் காணப்படுகிறது. இவற்றில் இயற்கையில் காணப்படும் விலங்கினங்கள், பறவைகள் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாகப் பறவைகளின் குணாதிசயங்களை ஒப்பிட்டும், உவமைப்படுத்தியும் பல படைக்கப்பட்டன. பறவைகளின் வரிசையில் மிகவும் குறிப்பிடும்படி
இலக்கியங்கள் உவமையாக இருப்பது மயிலாகும். மயிலின் குணாதிசியங்கள் மற்றும் பண்புகளைக்கொண்டு பெண்களின் பண்பு நலனுடன் வமைப்படுத்தித் தமிழ் மரபுவழி இலக்கணங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மயிலானது பண்டைய வரலாற்று நூல்களில் ஒரு உவமைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக பன்னிரு குறிப்புகளில்
“மயிலார் சாயல் மாது”
“மயிலினோர் இயல்”
என்று உருவுவமை காட்டி மகளிரை மயிலின் சாயலுக்கு ஒப்பாகவும் மற்றும் நடையை மயிலின் நடையுடன் உவமைப்படுத்தப்பட்டதற்கு சான்றாகும். மேலும், இயங்குயிர்கள் தொகுப்பில்
“நிகரில் மயிலாரிவர்”
“மயில் சாயநல்லாள்”
என்று பெண்களை ஒப்புமைப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணக் குறிப்புகளில் உவமை உருவகம், அணிகள் பகுதியில் மயிலின் இயல்புகளை எடுத்துக்கொண்டு உதாரண வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
“இரவலர்க்கீத்தலையானினும் ஈயர்” (திருமந்திரம், 2765 – 1139)
இந்த வரியின் பொருளானது பெண்களின் பாதம் மயிலின் இறகுகள் போன்று மென்மையாகக் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் வாகனமாகத் திகழும் மயில் வாகனத்தை “மயிற்பரி” என்றும் உச்சிக்குடுமி உடைய ஆண் மயிலை “சிகண்டி” என்றும் ஆன்றோர் கூறுவர்;
இதில் “தோகைவாம்பரி உகைத்தவன் (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிறுதேர் : 4:4) நூலில் ஸ்ரீ குமரகுருபர அடிகளாகும்,
தோகைமயிற்பரியானே” (திருக்குன்றக்குடிப்பதிகம்) என்று பாம்பன் சுவாமிகளும் குறிப்பர். இம்மயில் ஓங்காரத்தின் குறியீடு என்பார் அருணகிரியார்.
“ஆனதனிமந்த்ரரூபநிலைகொண்டது
ஆடுமயில் என்பது அறியேனே”
முருகனின் தலமான குன்றக்குடி திருமலையை மயிலுக்கு ஒப்பாக உயர்வுபடுத்தி, மலை ஏறும் திருப்படிகள் மயிலின் தோகையாக திருக்கோயிலின் தளம் முதுகாக பெருமானும் பெருமாட்டியரும் எழுந்தருளியுள்ள கருவறை திருக்கோபுரம் கொண்ட குடுமியாகக் கண்டு மகிழலாம். எனவே, இம்மலையானது மயில் மலை இமயூரகிரி, சிகிமலை, சிகண்டிமலை என்று பெயரிட்டு இலக்கியங்கள் மயிலை சிறப்பு செய்கின்றன.
முடிவுரை
பாரத நாட்டின் தேசியப்பறவை மயில். மிக அழகான பறவை. தோகை விரித்தாடும் இயல்பானது தோகையில் நீலக் கண்களும் தலையில் குஞ்சம் போன்ற பட்டுக் கொண்டையும் இதன் சிறப்புகளாகும். மயில் தேசியப்பறவையாதலால் அவற்றை வீட்டில் வளர்ப்பதற்கோ, கொல்லுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிச் செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனையும் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்து மயிலுக்கான முக்கியத்துவம் புலப்படுகிறது. ஆறுமுகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மயில் தேசியப்பறவையாகவும், முருகன் ஊர்தியாகவும், சரஸ்வதி விராலிமலை முருகன் கோயிலில் காணப்படுவதை மாலை மலர் இதழ் வெளியிட்டுள்ளதையும் வாகனமாகவும், விருதுசேனன் கொடியாகவும் இருந்துள்ளமை இலக்கியங்களில் பதிவாகியுள்ளதைக் ‘ காணமுடிகிறது. மேலும் ஸ்கந்த குப்தன், ஷாஜகான் போன்றவர்களால் மயிலின் சிறப்பு மிளிர்கிறது.
பிற சிறு விலங்குகளுக்குக் காவலனாகவும் பாம்பைக் கொல்லும் திறனும் மயிலுக்கு உண்டு என்பது புலனாகிறது. சங்க இலக்கியங்கள் மயிலை நொச்சி, முல்லைக்கொடி, பெண்கள், நடனமாடும் விறலியர் போன்றவற்றின் அழகுக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளன. தெய்வமான வள்ளியின் அழகை உவமிப்பதிலிருந்து மயிலின் சிறப்பு வெளிப்படுகின்றது. அழகை உவமைப்படுத்திக் கூறுவதற்கு மட்டுமே மயிலைப் பயன்படுத்திய சங்க இலக்கியங்கள் ஒரு சில இடங்களில் மயிற் போர் செய்வதற்கும், போர்க்கருவியான வில்லில் மயில் தோகையைப் பயன்படுத்தியிருப்பதையும் பதிவு செய்துள்ளன. மேற்கூறியவற்றினை நோக்கும்போது மயில் அனைத்துச் செயல்களிலும் திறன் வாய்ந்திருப்பதை அறியலாம். மேலும் எல்லாக் காடுகளிலும் பறவைகளுக்கும், விலங்கினங்களுக்கும் பாதுகாப்புச் செய்வதோடு அவை உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான நீர்த் தொட்டிகளும், பயிரினங்களும் விளைவிக்கப்படுகின்றன. இவற்றுள் மயிலிற்கு மிளகாய் மிகவும் பிடித்தமான உணவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பேரா. முதுமுனைவர் கி.முத்துச்செழியன்
Ph.D., D.Sc., FNABS., FZSI., FPBS., FIEF (Canada).,
மேனாள் துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
ஆலோசகர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஓசூர் – 635 130.
நூல் :தேசியம் கண்ட தெசியப்பறவை
பதிப்பகம் : NCBH