இறந்தேன் வாளால் வெட்டுண்டே!| கவிஞர் அர. செல்வமணி

இறந்தேன் வாளால் வெட்டுண்டே! அர. செல்வமணி
📜 நீண்டு வளர்ந்த நெடும்பனைநான்
               
நிலையாய் நின்றேன் ஓரிடத்தில்

கண்டேன் என்றன் நிழல்தனிலே
               
கானில் வாழும் புள்பலவே

கொண்டேன் மகிழ்வே அதனாலே
               
கொடுத்தேன் இடமும் அவைகட்கே

உண்டே என்றன் பெயருடனே
               
உலவும் வண்ணப் புள்ளிரண்டே

 
📜 பண்டை மாந்தர் வாழ்வினிலே
               
பலவும் எழுதச் சுவடிதந்தேன்

கண்டார் தமிழர் மாநிலத்தின்
               
கனிந்த மரமாய் எனைக்கொண்டார்

உண்டார் என்றன் கள்தன்னை
               
ஊக்கம் மிகவும் பெற்றிடவே

கண்ட தில்லை கேடதனால்
               
கருத்தாய்த் தற்சார் பளித்தேனே

 
📜 பனையென் நுங்கை விஞ்சிடுமோ
               
பகட்டாய் இனிக்கும் பனிக்குழைவே

பனையென் வெல்லம், கற்கண்டைப்
               
பாரில் கரும்பும் வென்றிடுமோ

பனையென் கிழங்கும் பழங்களுமே
               
பசிக்கு விருந்தாய்க் கிடைத்திடுமே

பனையென் நுங்கை உண்டபின்னே
               
பலவும் மிஞ்சும் கால்நடைக்கே

 
📜 பனையென் நாரால் பலபொருள்கள்
               
படைத்தார் எளியோர் பட்டறிவால்

பனையென் தும்பும் பயனாகும்
               
பலவும் சொன்னால் மிகவிரியும்

பனைநான் சூழல் கெடுக்காமல்
               
பாழும் நெகிழிப் பயன்குறைப்பேன்

பனைநான் நீரைச் சுரண்டாமல்
               
பல்லாண் டுயிர்ப்பேன் வான்மழைக்கே
 
📜 வனைவார் என்றன் ஓலைகளை
               
வாழக் கூரை வேய்வதற்கே

வேனில் வெம்மை தணிப்பதற்கே
               
விரும்பும் நுங்கும் பதநீரும்

இன்னும் பலநான் கொடுத்தாலும்
               
ஏனோ மாந்தர் எனைமதியார்

இன்றோ அவர்கள் கையாலே
               
இறந்தேன் வாளால் வெட்டுண்டே!

 
இரண்டு பறவைகள்: பனங்காடை, பனை உழவாரன்.

பனிக் குழைவு: ice cream.
கவிதையின் ஆசிரியர்
அர. செல்வமணி
அஞ்சற்பெட்டி எண் : 21,
பாசக்குட்டைப் புதூர்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்: 638401.

 

Leave a Reply