வீதி அடைத்த பந்தலும், வாசலில் கட்டிய குலை வாழை மரங்களும் ஒளிரும் வண்ண விளக்குகளும்
“மன்னவா மன்னவா
மன்னாதி மன்னனல்லவா”
என்று ஒலித்துக் கொண்டிருந்த பாடல்வரிகளும் அன்றைய வி. ஏ. ஓ வீட்டு விசேஷத்தை ஊருக்கு அறிவித்துக் கொண்டிருந்தது.
அன்று மார்ச் 19,2014
வி.ஏ.ஓ வின் இளைய மகளுக்கு திருமணம். தாழையூத்து மணமகன் வீட்டில் திருமணம் முடிந்து மறுவீட்டிற்கு வரும் மணமக்களை வரவேற்கவே கிராமத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கு மணமகனுடன் வந்திறங்கினாள் வி. ஏ. ஓ வின் இளைய மகள். மணமக்களைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொள்ள பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டிருந்த உற்றார் உறவுகளும் வந்திறங்க, திருமணத்திற்குச் செல்லமுடியாத உறவுகூட்டமும் பொண்ணு மாப்பிள்ளையைப் பார்க்க கூடிவந்தன. அந்தக் கூட்டத்தில் இருந்த உசிலங்குளம் லட்சுமி மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் , “அடி ஆத்தி அன்னைக்கு மேலத்தெரு பெரியம்மா சொன்ன வாக்காட்டம்ல மாப்பிள்ளை அமைஞ்சிருக்கு” என்று மாப்பிள்ளைக்கு நெட்டெடுக்க..
“ஆத்தா அப்படி என்ன வாக்கு சொல்லிச்சு” என அவ மக கேட்க. லட்சுமியின் நினைவுகளில் காலம் பின்னோக்கி செல்கிறது
அன்று 1986 ஜூலை-6 சங்கரன்கோவில் தாலுகா…
மேல இலந்தை குளம் கிராமம்..காலை 8 மணி..
சின்ன சின்ன வண்ண குயில்… கொஞ்சி.. கொஞ்சி கூவுதம்மா….அந்த வருஷம் வெளிவந்த மௌன ராகம் தமிழ்ப் படத்தின் பிரபலமான பாட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு .. ஊர் எல்லையில் உள்ள சீலைக்காரி அம்மன் கோவில் முன்பிருந்த பந்தலில் இருந்து வந்து கொண்டிருக்க
அங்கும் இங்குமாக நடக்கும் ஊர் ஆட்கள்.. ஆணும்… பெண்ணுமாக….
“என்ன விசேஷம் கோயில்ல… பந்த போட்ருக்கு.. பாட்டு படிக்கி…”
தெருவில் எதிர்புறம் நடந்து வந்த மேல தெரு பெரியம்மா நடந்து போகும் கூட்டத்து கிட்ட கேக்க
“ஏ பெரியம்மா நம்ம வீ.ஓ பழனிசாமி பெரியப்பாவுக்குப் போன மாசம் குழந்தை பிறந்துச்சிலா… அந்தப் பிள்ளைக்குப் பேரு வைக்கிறாக.. உனக்குச் சொல்லலையா ஆத்தா….”உசிலங்குளத்து லெட்சுமி பதில் சொல்லிட்டு நடக்க….
“ஆமா அவுகளுக்கு என்னயலாம் கண்ணு தெரியுமா… னு முணு முணுத்துக் கிட்டு பெரியம்மா மெதுவா நடந்து போக..
வந்த கூட்டமெல்லாம் சீலைக்காரிக்கு ஒரு கும்புடு போட்டுட்டு கோவில் பந்தலில் வந்து உக்கார்ந்த வண்ணமா இருந்தனர்.
சிறுசுங்க பந்தல் கம்ப சுத்தி சுத்தி… ஓடி விளையாடிட்டுக் கிடக்க..
ஒரு பக்கம் சமையல் வேலை நடக்க
“எப்பா தவுசு புள்ள கிடாய் வெட்டி கறி வர நேரம் ஆவும் அதுக்குள்ள மத்த வேலை நடக்கட்டும்..” என்று ராசா பாண்டியன் குரல் கொடுக்க
“ஆங்…சரிய்யா… னு பதில் சொல்லிட்டு
சமையல் ஆளுக அவர்கள் வேலைய பார்க்கத் தொடங்கினர்.
கோவிலுக்குள் வி.ஏ.ஒ.. பழனிச்சாமி கூடவே அவர் மனைவி வசந்தா கை குழந்தையோடு நிற்க… கூடவே மூத்த புள்ளைங்க ரெண்டு பேரும் அம்மா சேலைய பிடிச்சிக்கிட்டு நிக்கிறாங்க..
ஊரு ஆட்கள் நாலு பேரு, 5 பேரா உக்கார்ந்து ஊர் கதை பேசி சிரிச்சுகிட்டு இருந்த நேரம்..
ஒரு கார் வந்து நிற்கிறது. வி.ஏ.ஓ பழனிச்சாமியின் மச்சினன்மார் காரில் ஒரு சேர வந்திறங்க…
“மாமா வந்துட்டாங்கனு.. “சிறுசுகள் கூட்டம் ஓடுது…
கோவிலுக்குள் போய் சீலைக்காரி அம்மனைக் கும்பிட்டுட்டு வர்றவங்களை வி.ஏ.ஓ.. பழனிச்சாமியும் அவரது மனைவி வசந்தாவும் வணக்கம் சொல்லி வரவேற்று…
“பெரிய தம்பிய எங்க.. வரலையா? னு கேட்க..
கடைசி தம்பி ரத்னவேல் பாண்டியன்
“ஆமாக்கா…. அண்ணனுக்கு முக்கியமான மீட்டிங் இருக்காம்… ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வருவாகளாம்… சொல்ல சொன்னாக….”
என்றார்.
“ஓ.. சரி.. சரி.. தம்பி.. மெதுவா வரட்டும்… நீங்க எல்லாரும் ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிடுங்க… பூசை முடிஞ்சதும் பேரு வச்சிரலாம்.”.னு சொல்ல..
“சரி மதினி னு…. பிள்ளையைக் கொடுங்க னு..” குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார், நடு தம்பி பால்பாண்டியன் மனைவி மேரி….
“நீ பிறந்த நேரம் தான்… மாமாவுக்கு அரசாங்க வேலை க்கு ஆர்டர் வந்திருக்கு னு” சொல்ல… “ஆமா என் மருமக வந்த ராசி தான்..” எனத் தாய்மாமா பால்பாண்டியன் ஆமோதிக்க எல்லாரும் சந்தோசமா சாப்பிட போறாங்க…
கொஞ்ச நேரத்தில் பூசாரி
“அம்மனுக்கு அலங்காரம் முடிஞ்சுது
பூசை வைக்கணும் வாங்க எல்லாரும்.. அழைக்கிறார்.
கூட்டமாய் கதை பேசிக்கொணடிருந்த மக்கள் எல்லாரும் கலைந்து கோவிலுக்குள்ள போய் அம்மனைப் பார்த்துக் கும்பிட்டு நிற்க…
வி. ஏ. ஒ… வீட்டு பூசை தட்டை பூசாரி வாங்கி..சாமிக்கு அர்ச்சனை பண்ணி.. வெளிய வந்து, குழந்தைக் கழுத்தில் ஒரு சின்ன மல்லிகை பூ மாலையைப் போட்டு விட்டு
“சரி.. அம்மன் முன்னாடி துண்டை விரிச்சு குழந்தையைப் போட்டு… சத்தமா மூணு தடவை பேரு சொல்லுங்க…” என்றார்.
“தம்பி நீ சொல்லு ” னு வி.ஏ.ஓ மனைவி வசந்தா தம்பி பால் பாண்டியன் கிட்ட சொல்ல.
“சரி க் கா…
என்ன பேரு முடிவு பண்ணிருக்கிய..” னு சிரிச்சு கிட்டு கேட்கிறார்…
பக்கத்தில் நின்ன…
வி.ஏ.ஒ… மூத்த பிள்ளைங்க..
தங்கமும்… சுரேசும்…. சுதா.. சுதா னு சேர்ந்து கத்த…..
“சுதா வா… இது யார் பேரு…” னு மாமா கேட்கிறார்..
வி. ஏ.. ஒ.. வும் வசந்தாவும்… சிரிச்சி கிட்டே…
“அது ஒரு கதை.. பேர் வை அப்புறம் சொல்லுறேன்” னு சொல்ல…
“சரி “னு…
“சுதா… சுதா… சுதா… “னு மூணு தடவை… சொல்ல
பேர் வச்சி முடியுது…
தாய்மாமன்கள் சுப்பிரமணியன், பால்பாண்டியன், ரத்னவேல் பாண்டியன்… மூணு பேரும் சேர்ந்து.. பண்ணின தங்க சங்கிலி ய குழந்தை கழுத்தில் போட்டு… திருநீர் பூசிட்டு கோவிலுக்கு முன் இருந்த பந்தலுக்கு போறாங்க…
ஊர்கராங்க எல்லாம் ஆளாளுக்கு திருநீர் பூசிட்டு மொய் கவர் மோதிரம்.. ஜவுளி பை னு கொடுத்துட்டு…சாப்பாடு நடக்கும் இடத்துக்குப் போறாங்க….
“சாப்பாடு ரெடியா க.. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்…
கொஞ்ச நேரம் உக்காருங்க… னு ” கூட்டத்தில் ஒருத்தர் சொல்ல மறுபடியும் கூட்டம் கூட்டமா உக்கார்ந்து ஊர்க்கதை தொடங்குகிறது…
வி.. ஏ.. ஓ. மச்சினன்மார்க்கிட்ட…
“மாப்பிளை சாப்பாடு ரெடியா க… லேட்டாவும்..
வேற எதுவும் சாப்பிடுவோமா.. னு சூசகமா கேட்க…
வேண்டாம்த்தான்.. வேலை கிடைச் சா…
திருவண்ணாமலை போகணும்னு நினச்சேன்…
ரெண்டு நாள் கழிச்சி போறேன்…” என்றார்.
“அப்போ கறி யும் சாப்பிட மாட்டீரா னு.. வி.. ஏ.. ஓ. கேட்க..
“ஆமாத்தான்…
நான் சாம்பார் ரசம்… ஊத்தி சாப்பிட்டுக்கிடுவேன்… ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்றார் நடு மச்சினர்.
சரி உக்காருங்க… னு 4, 5 பேரு சேர்ந்து உக்கார்ந்து…
அடுத்த கதை தொடங்குது…
கடைசி மச்சினன் ரத்னவேல் பாண்டியன் … “அதுசரி சுதா னு … எதுக்குத்தான் பேர் வச்சிய…”.னு ஆரம்பிக்க….
வி. ஏ.. ஒ.. சிரிச்சிகிட்டே சொல்ல ஆரம்பிக்கிறார்
கதை 21 நாட்கள் பின்னோக்கி போகுது…
ஜூன் -15…1986
காலை 10 மணிக்கு மேல இலந்தை குளம் காரைவீட்டு தெரு திண்ணையில்… வி. ஏ. ஒ பழனிசாமி மனைவி வசந்தா நிறை மாத வயிற்றுப் பிள்ளையைச் சுமந்து கிட்டு பேறு கால வலியுடன் அமர்ந்திருக்க உறவுகார்கள் பதட்டதுடன் கார் எடுக்க ஓடுறாங்க.. மேலவீட்டுப் பண்ணை மருமக மஞ்சுளாவும், பெரிய பண்ணை மருமக கிருட்ணம்மாவும் வசந்தா வுக்கு தைரியம் சொல்லி கிட்டு மருத்துவமனைக்குப் போக துணி, போர்வை,.. தூக்கு.. தட்டு, டம்ளர் னு எடுத்து வச்சிக்கிட்டு இருக்கும் போதே
வி. ஏ. ஓ தம்பி நடராசபாண்டியனின் ஜீப் வந்து நிற்க பெண்கள் எல்லோரும் சேர்ந்து வி. ஏ. ஓ மனைவி யைக் கைய பிடித்து ஏற்றி மூத்த பிள்ளைகள் தங்கம், சுரேஷ் ரெண்டு பேரும் பயத்தோட அம்மா கூட ஏறி உக்கார்ந்து கிட்டாங்க… வி. ஏ. ஓ. முன்னாடி ஏறி உக்காரந்ததும் வண்டி வேகமா திருநெல்வேலி உடையார் பட்டி லட்சுமி மருத்துவ மனைக்குப் போனது…
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சாயங்காலம் 3 மணிக்கு மேல வசந்தா வுக்கு அழகான பெண் குழந்தை பிறக்குது…
மருத்துவ மனையில் தனி அறைக்கு மாற்றப்பட்டு ஊர்காரங்க, உறவுகராங்க னு பார்க்க கூட்டம் வந்து போன படி இருக்கு…
வர எல்லோரும் அங்க பக்கத்து வார்டுல இருக்கும் ஆட்களின் குழந்தைகளோடு விளையாடிக்கிட்டு இருக்கிற தங்கம், சுரேஷ் ரெண்டு பேரையும் கூப்பிட்டு இனிப்பு வாங்கிக்கோங்க னு 5 ரூபாய் ரெண்டு ரூபாய் னு காசு கொடுக்குறாங்க…
காசு நிறைய கிடைத்த உடன் மருத்துவ மனைக்கு வெளிய உள்ள பெட்டி கடையில்..கடலை மிட்டாய்.. சூடம் மிட்டாய்.. இலந்தை பழம் மிட்டாய் னு கை நிறைய வாங்கி கூட உள்ள பிள்ளைகளுக்கும் குடுத்து இருவரும் சாப்பிட்டு குதூகளமா இருக்காங்க.. ரெண்டு மூணு நாள் இப்படி போக
இதற்கிடையில் சுத்தமல்லி ஊரில் இருந்து பிரசவத்துக்கு வந்த ஒரு பெண்ணின் மகள் சுதா மட்டும் சுரேஷ், தங்கம் கூட நல்ல பழகி நெருங்கிய நண்பர்கள் ஆயிட்டாங்க..
ஒரு நாளைக்கு ரெண்டு பேரும் சுதா, சுதா னு 100 தடவை யாவது கூப்பிடுவாங்க…
ஒரு வழியாக… மருத்துவ மனையில் இருந்து கிளம்புற நாளும் வந்துட்டு…
நண்பர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரியாவிடை கொடுத்து பிரியிறாங்க…
நாலு நாள் நட்பு நங்கூரம் போல் நெஞ்சில் நின்னு டுச்சி மூணு பேருக்கும்..
கடைசி நேரம் கிளம்பி வாசலில் வண்டிக்கு நிக்கிறப்ப…
சுரேஷ்… சுதா கிட்ட… ஏ….சுதா உன் பேர் எங்களுக்கு ரெம்ப பிடிச்சிருக்கு…. எங்க தங்கச்சி பாப்பாக்கும் சுதா னு வைக்க போறோம்.. னு சொல்ல…
சுத்தமல்லி சுதாவுக்கு ரெம்ப சந்தோசம் வெக்க சிரிப்போடா… சரி. போய்ட்டு வாங்க.. டாட்டா னு கை அசைச்சிட்டு ஓடி போயிடுச்சி….
ஒரு வழியாக இலந்தைக்குளம் வந்தாக
ஆரத்தி எடுத்து தாயும் பிள்ளையையும்.. உறவுகராங்க வரவேற்க….வீடு வந்து சேர்ந்தாக
அப்படியே 10 நாள் கழிய… “பேர் வைக்க தேதி குறிங்க… தம்பிமார்கிட்ட சொல்லனும்.. “னு வசந்தா சொல்ல
“சரி.. 21ம் நாள் வைப்போம் ஞாயிற்று கிழமை..
எல்லாருக்கும் வசதியா இருக்கும் லா… ” வி. ஏ. ஓ. சொல்ல…
“சரி என்ன பேர் வைக்க… “னு வசந்தா கேட்டவுடன், இந்த நாளை எதிர்ப்பார்த்துகிட்டு இருந்த சுரேஷ்ம், தங்கமும் ஓடி வந்து..
“அப்பா சுதா னு வைப்போம்.. சுதா னு வைங்க “னு சொல்லி அடம் பிடித்தனர்.
“அது யார் பேர்..சுதா..
அதை வைக்க சொல்லி அழுவுறீங்க…
லூசு கழுதைகளா…”னு திட்ட….
தங்கமும் சுரேஷ்ம்… “ஆஸ்பத்திரி ல எங்க கூட இருந்தால்லா… எங்க ப்ரெண்டு.. சுதா… அவா பேர் தான்..
அது நல்லாருக்கு பா அதை வைங்க “னு.. ஒரே அழுகை…
“ஏ.. போடா பாப்பாக்குச் சாமி பேர் வைக்கணும் இல்லை ஆச்சி பேரு வைக்கணும்.. போங்க அங்குட்டு… “வி. ஏ.. ஒ.. கோபத்தோட சொல்ல
சுரேஷ் ஒரே அழுகை..தரையில் கிடந்து உருண்டு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறான்.
மதிய சாப்பாட்டுக்குக் கூப்பிட
“எனக்கு சோறும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்…
நீங்க பாப்பாக்கு சுதா. னு பேர் வைக்கம்னு சொல்லுங்க சாப்பிட வாரேன்…” என்று கோரிக்கை வைக்கிறான்.
“சரி வைப்போம்.. இப்போ சாப்பிட வா… உயிரை வாங்காத… வா “னு அம்மா வசந்தா கூப்பிட…
“சீலைக்காரி அம்மன் மேல சத்தியமா சுதா னு..பேர் வைக்க ம்னு சொல்லுங்க… அப்படினா தான் சாப்பிடுவேன்….”
“சரி வைப்போம்..வந்து சாப்பிடு “னு
அம்மா வும்.. அப்பா வும் ஒரு வழியா…சாப்பிட வைக்கிறாங்க…
பேர் வைக்கிற நாளும் வந்தாச்சு..
காலையில் 6 மணிக்கு
வி ஏ..ஓ மனைவி கிட்ட.. “என்னமா செய்ய… அந்தப் . பேர வச்சிரவா…”எனக் கேட்க..
“ஆமா வைங்க.. அவன் சாமி மேல
சத்தியம் வேற வாங்கிட்டான்.. “னு சிரிச்சி கிட்டே சொல்ல…
வி.. ஏ.. ஒ வும் சிரிச்சு கிட்டே.. “சரி… சரி.. “னுட்டுப் போறார்.
அதே சிரிப்புடன் ” இதான் மாப்பிளை நடந்திச்சு…
சுதா னு பேரு வைக்க இதான்காரணம்… எனச் சொல்லி சிரிக்க… எல்லாம் சிரிச்சு கிட்டே சாப்பிட போறாங்க..
அந்த நேரம் உசிலங்குளம் லட்சுமி…” வி. ஏ. ஓ.. பெரியப்பா..மேலத்தெரு பெரியம்மா வுக்குச் சொல்லலையோ, உங்களைத் திட்டி கிட்டே போவுது. இப்போ ஆள் அனுப்பி சாப்பிடவா வது கூட்டிட்டு வர சொல்லுங்க…” எனப் பேச்சுவாக்ல சொல்லிட்டுப் போக…
“அட ஆமா சொல்ல மறந்துட்டேன்.. கண்ணா.. நீ போய் மேல தெரு ஆத்தாவை (பெரியம்மாவை ) வி. ஏ. ஒ பெரியப்பா சொன்னாங்க னு கூட்டிட்டு வா…
தம்பி நடராசபாண்டியன் மகன் கண்ணனை அனுப்புகிறார்..
“சரிப்பா.. “கண்ணன் ஓட
கூடவே வி. ஏ. ஓ வின் அண்ணன் எஜமான்துரை மகன் செந்திலும் “அப்பா நானும் போறேன்” னு ஓட..
“சரி ரெண்டு பேரும் கைய புடிச்சி ஆச்சியை பத்திரமா கூட்டியங்கடா… “னு அனுப்ப..
கொஞ்ச நேரத்தில் மேல தெரு பெரியம்மா மெதுவா நடந்து கூட்டத்துக்கு வருது
எல்லாரும் “வாங்க பெரியம்மா.. அத்தை, ஆச்சி” னு அவங்கவங்க சொந்தத்தை சொல்லி வரவேற்க..
அதுவும் எல்லார்கிட்டயும் நலம் விசாரிச்சது..
ஆளோட ஆளா.. பந்தியில் உக்கார்ந்து சாப்பிடுது…
சாப்பிட்டு வெளிய வந்த பெரியம்மா கிட்ட.. “பெரியம்மா பிள்ளை க்கு திருநீர் பூசிட்டு போங்க…”னு வி. ஏ. ஓ சொல்ல
“சரியா… பிள்ளை ய எங்க ” னு கேக்க
கூட்ட சலசலப்பில்… குழந்தை ஒரே அழுகை…
“ஏ.. வசந்தா.. பிள்ளையைக் கொண்டா….”என அதிகாரத்துடன் கூற
“வாங்க அத்தை சாப்பிட்டியளா..”என்று வசந்தா கேட்க
“ஆமா.. சாப்பிட்டேன்.. தாயி. நீ பிள்ளையைப் பசி அமர்த்தி ஆல மரத்து கெளையில தொட்டில் கட்டி போடு… நான் தாலாட்டுப் பாடுதேன்…நீ போய் ஆளோட சாப்பிடு…என்றார் கரிசனையாய்.
“சரி. அத்தை…” என்றவாறு
குழந்தைக்குப் பசி அமர்த்தி கோவில் ஆலமரத்துக் கிளையில் தொட்டில் கட்டி போட்டுட்டு வசந்தா சாப்பிட போக,
“ஏம்மா பிள்ளைக்கு என்ன பேரு வச்சிய….”என்றாள் தொட்டிலை ஆட்டியவாறே,
“சுதா.. னு வச்சிருக்கோம்… அத்தை..” என்றாள் வசந்தா.
“சுதா வா… சரி.. சரி… நல்லாருக்கு…
என்றவாறே பெரியம்மா தாலாட்டடைத் தொடங்க
“கண்ணே என் கண்மணியே….
கண்ணுறங்கு..
கண்ணுறங்கு…
பொன்னே…..
என் பூங்குயிலே…
கண்ணுறங்கு
கண்ணுறங்கு…
உனக்கு பேரு வைக்க
ஊரே வந்திருக்கு..
வந்தவங்க சாப்பிடட்டும்
நிம்மதியா நீ தூங்கு…
வச்ச பேர் நிலைக்க தான்
வாழ்வாங்கு வாழ்ந்திருப்ப…
நல்லா படிச்சி நீயும்
நாடு போற்ற வாழ்ந்திடணும்…
பட்டணம் போய் படிச்சு புடு…..
பட்டமெல்லாம் வாங்கி புடு……
படிச்ச படிப்பை நீயும்…
ஊருக்கெல்லாம் சொல்லி குடு…
கல்வி கற்று தந்த
மகராசி இவதான்னு
சொல்லும்படி சொல்லும் படி..
பள்ளி கூட டீச்சராதான்
ஆகி புடு..ஆகி புடு…
தென் பாண்டி சீமையில….சீமையில….
ஊரெல்லாம் பேர் சொல்லும்
மன்னவனும் மன்னவனும்
உனக்கு மாலையிட வந்து நிற்பான்…
நிம்மதியா நீ தூங்கு…
நிம்மதியா நீ தூங்கு…
நான் சொன்ன தெல்லாம் நடந்து வர..
சீலக் காரி அருள் புரிவா…
சீலக்காரி அருள் புரிவா…
ஆல மர காற்றும் அந்தத் தாலாட்டு பாட்டும் கேட்டு சுதா… சுகமாய் தூங்கிப்போனாள்” என்று நினைவுகளில் இருந்து திரும்பியவள்.
“மேல தெரு பெரியம்மா படிச்ச வாழ்த்துப் பாட்டு சீலைக்காரி அம்மனுக்கு
கேட்டுத்தான்
சுதா வும் டீச்சர் ஆயிட்டா…. அவளுக்கு ஏத்த இந்த மன்னவனே வரனா வந்திருக்கார்போல என்றாள் லட்சுமி….
வி.. ஏ.. ஓ வீட்டு விஷேசம் இனிதாய் நிறைவுற்றது….
சிறுகதை ஆசிரியர்
ச. செல்வம்
78/1 சத்யமூர்த்தி தெரு
சேரன்மகாதேவி-627414
திருநெல்வேலி மாவட்டம்






