மலையதிகாரம் (பகுதி – 2) | கவிதை

மலையதிகாரம் பகுதி 2

மலையதிகாரம் (பகுதி 2)

 

கோடை வந்ததுன்னா
கொண்டாட்டம் ஓடி வரும்…!
 
உள்ள பசங்க எல்லாம்
ஊருக்கு போகையில..
உள்ளம் ஏங்காம
உற்சாகம் கொண்டிருக்கும்…!
 
நானென்ன செஞ்சிடுவேன்?
என் மலையை கொஞ்சிடுவேன்..!
 
முப்பது ஆடிருக்கும்
முந்தியோட நாயிருக்கும்..
சொரக்கா குடுவையில
சொகமான சோறிருக்கும்…!
 
எடுத்து போகையில
எட்டி எட்டி பாத்துக்கிட்டு..
எளவட்டம் நாலு வந்து 
 என்னோட சேந்திருக்கும்…!
 
கூட்டம் சேந்ததுன்னா
கும்மாளம் கூடி வரும்..
ஆட்டமும் பாட்டமுந்தான்
 ஆடோட்டி போகையில…!
 
பாதி மலையேறி
பாறையில நிக்கையில..
அசைக்கும் கையிரண்டும்..
ஆகாச பறவபோல..
அசைச்சி முடிக்கிறப்போ
அடிவாரம் கீழிருக்கும்..
ஆகாசம் மேலிருக்கும்…!
 
கல்லெடுத்து உருட்டிவிட்டா
கடகடன்னு உருண்டோடும் 
பாறையடி பள்ளத்துல
பயங்கரமா  போயி விழும்…!
 
ஆட்டுக்குட்டியெல்லாம்
ஆனந்தமா ஓடி வரும்..
பாறை ஓரத்துல
பாஞ்சி வந்து நின்னுருக்கும்..
பயத்துல ஓட்டி விட்டா
பள்ளத்துல உழுந்திடாம..
சட்டுன்னு ஓடி வந்து
சறுக்கலுல சறுக்கி வரும்…!
 
பெரண்ட ஒடிச்சி வந்து
பெசகாம ஓட்டையிட்டு..
குச்சியொன்னு கொண்டு வந்து
ஓட்டையில குத்திவிட்டு..
பொண்வண்டு புடிச்சு வந்து
பெரண்டயோரம் ஒட்ட வச்சு..
காரமுள்ளு ஒடிச்சி வந்து
காலோரம் குத்திவிட்டா..
பொன்வண்டு பறக்குறப்போ
காத்தாடி  காட்சியாவும்…!
கண்ணெல்லாம் குளிர்ச்சியாவும்…!
 
புளியமரத்த கண்டுபுட்டா..
புள்ளிமானா காலோடும்..
கல்லு கொண்டு எறிஞ்சமுன்னா..
கை மேல பழமிருக்கும்..
ஒரு பக்க ஓடொடச்சி
ஓட்ட ஒன்னு போட்டு வச்சி..
குட்டி போட்ட ஆடொன்ன 
கொண்டு வந்து பால்கறந்து..
புளிக்குள்ள பாலூத்தி
உள்ள வர ஊறவச்சி
பழத்த திங்கையில
பல்லெல்லாம் எச்சூறும்..
பாதி வயிறு பத்தலங்கும்..
மீதி வயிறு பசியாறும்…!
 
கூரான நாலு கல்ல
கூட்டமா சேத்து வச்சி..
ஓடத்தண்ணி கொண்டு வந்து
ஒவ்வொன்னா கழுவி விட்டு..
செம்மண்ணு கொண்டு வந்து
செவ செவன்னு பொட்டு வச்சி..
ஈஞ்சி மர எலயெடுத்து
எடமெல்லாம் சுத்தம் பண்ணி..
சொரக்குடுவ தண்ணிக்குள்ள 
சொகமா சோறெடுத்து..
புங்க எலமேல
புசுபுசுன்னு போட்டு வச்சி..
சாமி கும்பிட்டுட்டு
சாரியா குந்திகிட்டு
சாப்பிட்டு முடிக்கையில..
நூறு வருச மரத்துக்கு
நோகாம பேரு வெப்போம்..
சாமி வெச்சாச்சி
இதுக்கு பேரு சாமிபுளியாமரம்…!
 
பாறையோட பாழியில
பக்குவமா கைவிட்டு..
கொடம்போல குடுவைக்குள்ள
தளம்பாம  தண்ணி மொண்டு..
பூச்சாங்கொட்ட நாலு
பொறுப்பா பொறுக்கி வந்து..
குடுவைக்குள்ள போட்டு வச்சி..
குலுக்கி விட்டு பாக்கையில..
கொரகொரன்னு நொரயிருக்கும்..
குடுவை  நெறஞ்சிருக்கும்..
நெறஞ்ச குடுவைக்குள்ள
ஒடஞ்ச குச்சி வச்சி..
ஒசக்க புடிச்ச பின்னே
ஓதி விட்டாக்கா..
ஒன்னில்ல ரெண்டில்ல
ஒரு நூறு முட்ட வரும்..
ஒவ்வொரு முட்டயிலும் வானவில்லு
வண்ணம் வரும்…!
 
சின்ன சின்ன நெனவெல்லாம்
சிந்தனைக்கு வந்துடுது..
வண்ண வண்ண எண்ணமெல்லாம்
வரிசகட்டி வந்துடுது..
ஆட்சி அதிகாரமெல்லாம்
நாடு நகரத்தோட..
மலைக்குள்ள வந்த பின்னே..
மனுசனுக்கு ஒன்னுமில்ல..
மகத்தான பரிகாரம்..
மலையோட அதிகாரம்…!
 

ஆசிரியர்

கவிஞர் பேரா. ச.குமரேசன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மேலும் பார்க்க…

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

5.மலையதிகாரம்

6.உழவே தலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here