பெரியபுராணமும் திருக்குறளும் |அ.செல்வராசு

பெரியபுராணமும் திருக்குறளும் - அ.செல்வராசு
பெரியபுராணம் நாயன்மார்களின் புற வாழ்க்கையை விரிவாகப் பேசியுள்ள நூலாகும். திருக்குறள் மனிதர்களின் அற வாழ்க்கையை விரிவாகப் பேசியுள்ள நூலாகும். இரு நூல்களும் அதனதன் தன்மையில் தனித்துவம் மிக்கனவாகத் திகழ்கின்றன. பெரியபுராணத்திற்கு அடுத்து நாயன்மார் வாழ்க்கையைப் பேசும் பெரிய நூல்கள் எதுவும் தோன்றவில்லை. திருக்குறளுக்கு அடுத்து குறள்வெண்பாவில் நூல்கள் எழுதப்பெற்றிருப்பினும் திருக்குறள் அளவிற்கு அந்நூல்கள் சிறப்புப் பெறவில்லை. திருக்குறளுக்குச் சான்று கூறும் நூல்களாக இரங்கேச வெண்பா, சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, சினேந்திர வெண்பா, திருமலை வெண்பா, முதுமொழி மேல்வைப்பு, திருப்புல்லாணி மாலை, திருத்தொண்டர் மாலை, வள்ளுவர் நேரிசை, முருகேச முதுநெறி வெண்பா, திருக்குறட் குமரேச வெண்பா முதலான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ‘பெரியபுராணச் சரித்திர வெண்பாமாலை’ எனும் நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

63 நாயன்மார்களின் வாழ்க்கையைத் திருக்குறளோடு பொருத்திக் காட்டும் நூலாக, பெரியபுராணச் சரித்திர வெண்பாமாலை அமைந்துள்ளது. வெண்பாவின் முன்னடிகள் இரண்டும் நாயன்மார் வரலாற்றைக் கூறுகின்றன. பின்னடிகள் இரண்டும் திருக்குறளடிகளாக உள்ளன. திருவலஞ்சுழி மிராசு T.V.கலியாண சுந்தரம்பிள்ளை என்பவரால் பார்வையிடப்பட்டு மேலத் திருப்பூந்துருத்தி கிராம முன்சீப் ஆறுமுக முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, உறையூர் சொ.சோமசுந்தர முதலியாரால் கும்பகோணம் லெட்சுமி விலாஸ் பிரஸில் 1916ஆம் ஆண்டு இந்நூல் அச்சாக்கப் பெற்றுள்ளது. யாரால் பார்வையிடப்பட்டு, யார் வேண்டுகோளின்படி, எங்கு, எந்த ஆண்டு வெளியிடப்பெற்றது என்பன உள்ளிட்ட தகவல்கள் முதற்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. யாரால் இந்நூல் எழுதப்பெற்றது என்ற தகவல் இரண்டாம் பக்கத்து ‘காப்பு வெண்பா’வில்தான் இடம்பெற்றுள்ளது.
“பன்னு கலைக்குமர பாரதியா மாமுனிவன்
சொன்ன தமிழ்மாலை துதிப்பதற்கு – மின்னுதலை
யாயிரநா வாயிரத் தோனன்றி யெவர்கொலோ
மாயிரு ஞாலத்தின் மகிழ்ந்து”
என்பது ஆசிரியர் பெயர் சுட்டும் வெண்பாவாகும்.
காப்பு வெண்பாவிற்கு முன்பாக திருக்குறள் விபரம் தரப்பெற்றுள்ளது. “திருக்குறள் அதிகாரம் (133-ல்) காமத்துப்பால் அதிகாரம் (25) நீக்கி மற்றய அதிகாரம் (108-லும்) ஒவ்வொரு குறளும் அதன் கருத்துரையும் நாயன்மார்களின் சரித்திரத்தில் அடங்கியது போக மற்றய குறளும் அதன் கருத்துரையும் வல்லம் சு.பொன்னுசாமி பிள்ளையவர்கள் விரும்பியவாறு இப்புத்தகத்திற் கண்டுகொள்க. நாயன்மார்கள் சரித்திர வெண்பாவில் காமத்துப்பாலிலுள்ள சில குறள்களும் கலந்திருக்கின்றன” என்ற தகவல் தரப்பெற்றுள்ளது.

கோயிலில் நந்தா விளக்கு ஏற்றுவதற்கு நிலம் உள்ளிட்டவற்றைத் தானமாக வழங்குவது மன்னர்காலத்து வழக்கு. 20ஆம் நூற்றாண்டிலும் அதுபோன்ற வழக்கிருந்ததை இந்நூலில் கொடுக்கப்பெற்றுள்ள குறிப்பொன்று எடுத்துரைக்கின்றது. “இந்தப் புத்தகத்தின் ஊதியம் தஞ்சை வடக்குவீதி இரத்தினகிரீசுவரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சந்நதியின் தீபத்திற்கு உபயோகிக்கப்படும்” என்பது அந்தக் குறிப்பாகும்.

இந்நூலில் பாயிரம் நீங்கலாக 100 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. வெண்பாவிற்கு முன்பாக அந்த வெண்பாவில் எந்த நாயன்மார் வரலாறு கூறப்பெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரது பெயர் குறிப்பிடப் பெற்றுள்ளது. தில்லைவாழந்தணர், திருநீலகண்ட நாயனார், இயற்பகை நாயனார் எனத் தொடர்ந்து பெயா்கள் கொடுக்கப் பெற்றுள்ளன. வெண்பாவை அடுத்து அடைப்புக்குறிக்குள் எடுத்தாளப்பெற்றுள்ள திருக்குறள் அதிகார எண் மற்றும் அதிகாரத்தின் பெயர் ஆகியன இடப்பெற்றுள்ளன. அதற்கடுத்து ‘கருத்துரை’ என்ற தலைப்பில் வெண்பாவின் இறுதி இரண்டடிகளிலுள்ள திருக்குறளின் கருத்தானது கூறப்பெற்றுள்ளது.
 
“உய்வித்தவ னடியார்க் கோரிருளிற் போய்மாறன்
செய்வித்தும் வாாியனஞ் செய்தானே – மெய்வருந்தி
வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்”
என்ற வெண்பா இளையான்குடி மாற நாயனார் பற்றியதாகும். இதில் ஆளப்பெற்றுள்ள குறளின் கருத்தாக “விருந்தினரைக் காப்பவன் விளைநிலம் தானே விளையும்” என்பது குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வாறே ஒவ்வொரு வெண்பாவிற்குக் கீழும் கருத்துரை இடம்பெற்றுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள வெண்பா எண்களான 36, 37, 38, 39, 40 ஆகியவற்றில் ஞானசம்பந்தர் வரலாறும் 24, 25, 26, 27, 28 ஆகியவற்றில் திருநாவுக்கரசர் வரலாறும் 8, 16, 23, 35, 46, 54, 63, 69, 75, 83, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகியவற்றில் சுந்தரா் வரலாறும் 50, 51 ஆகிய எண் கொண்ட வெண்பாக்களில் சேரமான் பெருமாள் நாயனாா் வரலாறும் கூறப்பெற்று, உரிய திருக்குறள்களும் பொருத்திக்காட்டப் பெற்றுள்ளன. பிற நாயன்மார்களுக்கு ஒவ்வொரு வெண்பாவே கொடுக்கப் பெற்றுள்ளது.

நூலின் இறுதிவெண்பாவாக ‘ஆதி உலாவின் சிறப்பு’ எனத் தலைப்பிடப்பெற்று,
“சொல்வைத்த சேரனுலாச் சொல்லக் கயிலையரன்
செல்வத்திருச் செவியிற் சேர்ந்ததே – மல்வைத்த
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை”
என்பது கொடுக்கப்பெற்றுள்ளது.

நூலின் இறுதியில் ‘அரும்பத விளக்கம்’ கொடுக்கப் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வெண்பாவிலுள்ள முதலிரண்டு அடிகளில் காணப்பெறும் ஓரிரு சொற்களுக்கான விளக்கம் தரப்பெற்றுள்ளன. மேலும், “இப்புத்தகம் வேண்டியவர்கள் தஞ்சாவூர் சவுளிச் செட்டி தெரு சுப்பு செட்டியார் வீட்டில் விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தரப்பெற்று, “இப்படிக்கு அ.நாராயண சரணர்” எனப் பெயர் கொடுக்கப்பெற்றுள்ளது.

இந்நூலை இருவகையான நோக்குநிலைக்குப் பயன்படுத்தலாம். ஒன்று – அடியார் வரலாற்றை விளக்க, திருக்குறளைச் சான்றாகக் காட்டலாம். மற்றொன்று – திருக்குறளை விளக்க நாயன்மார் வரலாற்றைச் சான்றாகக் காட்டலாம். பெரியபுராணத்தையும் திருக்குறளையும் பரவச் செய்யும் முயற்சியாகவும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளதாகக் கொள்வதற்கும் இடம் உண்டு.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-620023,
மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here