புறநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்

பண்டைய தமிழ் நாகரீகம், மொழிச் சிறப்பு பண்பாட்டு கலாச்சாரம் முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதரமாக, செய்தி ஊற்றாக விளங்குவது சங்க இலக்கியம். சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வரும் வீர மறவர்களின் வாழ்க்கை முறைகளாகப் போர்ச் செய்திகள், வாழ்க்கை விழுமியங்கள், அரசமரபு போன்றவற்றை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

முன்னுரை

மனித சமுதாய வரலாறு ஒவ்வொரு சமுதாயத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட தூலத்தில் அரசு என்பது இருந்ததில்லை எனக்காட்டுகிறது. ஆங்காங்குப் பழங்குடிக் குழுக்களும், குலஅமைப்புகளும் இருந்து மக்கள் கூட்டங்களை நெறிப்படுத்தி வழிகாட்டின. அவை சமுதாயத்திற்கு வழிகாட்டி நெறிபடுத்தத் தேவையான விதிகளையும். உறவுகளையும், ஒழுகலாறுகளையும் பண்புகளையும் படைத்துக்கொண்டன. அரசு தோன்றிய பிறகு அவை அறநெறிகளாகவும், பழக்கவழக்கங்களாகவும் காலத்திற்கேற்ப மாறி புதுபொலிவுடன் இன்றளவும் நின்று நிலவி பெருமை சேர்த்து வருகின்றன. உழைப்பு, நேர்மை, அறம், வாயமை, உண்மை, இன்னா செய்யாமை, ஒப்புரவு போன்ற பண்புகள் எல்லாம் இவ்வாறு உருபெற்று தொடர்வனவே, புறநானூறு பொங்கிவரும் வீரத்தின் புலனாறு செந்தமிழ் மறவரின் வரலாறு செங்கழல் அணிந்த வேந்தர்களின் சீற்றம் குருதியாக, வெகுளியால் வஞ்சினமிக்க வீரர்கள் புகுந்து விளையாடிய போர்க்களப்பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன. ஆழ்ந்தகன்ற அறிவுடன் கூடிய செறிவு மிக்க அறப்பாடல்களும் வாழ்க்கைக்கு விதியாகியுள்ளன. மொத்தத்தில் பண்டைத் தமிழர் வரலாற்று ஆவணம் இந்நூல் இத்தகைய புறநானூறு கிடைத்திராவிடில் பண்டைத்தமிழகம் வீரப்பண்பாட்டை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புக் கிட்டியிருக்காது. போர் நாகரீகத்தைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியிருக்காது.

மூவேந்தர் பற்றிய செய்திகள்

மூவேந்தரைப் பற்றிய பாடல்களில் சேரர், பாண்டியர், சோழர் என்று வரிசை மாற்றிய முறையில் முதல் பதினெட்டுப்பாடல்கள் உள்ளன. புவியியல் முறைப்படி இம்முறைவைப்பே சரியானதாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் அரசர்க்கும், பிறர்க்கும் அறநிலையை எடுத்துக்கூறும் பாடல்களும், பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றப்படைப் போன்ற ஆற்றுப்படைச் செய்யுள்களும் இடையிடையே அமைந்து காணப்படுகிறன. பெரும்பாலான இடங்களில் திணை, துறை முதலிய அமைப்பில் பாடல்களுக்கிடையேத் தொடர்பு காணப்படுகிறது. மக்கட்சமுதாயம் போர்ப்பற்றியச் சிந்தனையில் மூழ்கியிருந்தக் காலம் தொன்மையான காலம் அடிப்படை வாழ்விற்குப் போரே ஆணிவேர் என்று மனிதன் எண்ணியிருந்தக்காலமாகக் கருதப்படுகிறது. பண்டைக்கால வாழ்விற்குப் போர் அடித்தனமாக அமைந்திருப்பதை வரலாறும், இலக்கியமும் எடுத்துக்காட்டுகின்றன. தொல்காப்பிய புறத்திணையியலில்,

“ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று உலகத் தியற்கை”(தொல்.நூற்:76)

 என்ற அடிகள் தொன்று தொட்டு மனிதர் முரண்பட வாழ்ந்த நிலை தொடர்ச்சியானது என்பதை உணர்த்துகின்றது. போருக்காக மக்களிடையே நிலவி வந்த நோக்கம் தலைமைப் பற்றியதாகவே இருந்தது. செல்வம், செல்வாக்கு, புகழ், அறம், அதிகாரம், செருக்கு, சீனம் முதலிய அனைத்து நிலைகளிலுமே போர்ப்பற்றிய எண்ணம் மக்களிடையே ஊடுருவியிருந்தது. போரில் ஏற்படும் விளைவுகள் அவ்வக்காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததையும் சங்கப் பாடல்களிலிருந்து அறியமுடிகிறது.

போரின் தொடக்க நிலை

ஆநிரைகளை கொள்ளலும், மீட்டலுமே போர் நாகரீகத்தின் தொடக்க நிலைகளாகும். தேவையான செல்வத்தை ஈட்டி அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான இடத்திற்கு மேலும் தன் பரப்பை விரிவு படுத்திக்கொள்ளவும், இனக்குழுத்தலைவன் தன் கூட்டத்திற்கானப் போதிய இடமும் வளமும் தேவை என்பதன் காரணம் கருதியும் போர்ப்புரியத் தொடங்கினான்.

“வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம்

வேண்டிப் பொது சொற் பொறாஅ

திடஞ்சிறி தென்னும் ஊக்கம் துறப்ப” (புறம்.8)

என்னும் புறநானூற்றுப் பாடலடிகள், சேரமான் கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன் தன் குடிமக்களின் வசதிக்காக, ஊக்கம் துரப்ப பிறநாட்டின் இடங்களைக் கவர் முற்பட்டமையைக் கூறுவதாக அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. தன ஆணைக்கு மாற்றார் அடிபணிய வேண்டும், தன் செங்கோலும் வெண்குடையும் போற்றப்பட வேண்டும், இவற்றிற்குரிய மதிப்பினை பிறர் தருதல் வேண்டும் முதலிய எண்ணங்கள் மன்னன் மனதில் ஓங்கியிருந்துள்ளது. அனைத்தும் தன் ஆட்சிக்கு. உட்படவேண்டும் என்ற உணர்வும் இதிலடங்கும் நிரை கவர்தலிலிருந்து, நிலம் கவரும் நோக்கிற்கு மாறிய காலகட்டம் என்பதை அறியமுடிகிறது, “போர் இயல்பானது. பொதுவாக மனித குலத்திற்கு ஒத்தது. அது தன்னைத்தானே விளைவித்துக் கொள்ளும் என்றெல்லாம் சமூக இயலாரும். மானுட இயலாறும் கருதுவர் என்று டாக்டர் ந.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.

போர் வீரர்கள்  

வீரர்கள் என்றும், மறவர்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள் சான்றோன் என்ற சொல்லாலும் சங்க இலக்கியத்துள் குறிக்கப்பட்டுள்ளனர்.

  “தேர்தர வந்த சான்றோர் எல்லாம் ” (புறம்.63)

எனவரும் பாடலடிகளில் பாங்கினை அறிய முடிகிறது. இதனையே பதிற்றுப்பத்து

“நோய்புரித் தடக்கைச் சான்றோர்”(பதிற்று 14)

எனப் பதிற்றுப்பத்து ஆசிரியர் இங்கே குறிப்பிட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது. புறப்பாடல்களின் மூலம் இளைஞருக்குச் சிறுவயது முதலே சினவுணர்ச்சியும் மறப்பண்பும் இருந்தமையை அறியமுடிகின்றது. போரிலே வெற்றிபெறும் வீரர்க்குப் பரிசும், நிலமும் தருவதுப் பற்றியச் சிந்தனையைப் புறப்பாடல்கள் சில குறிப்பிடுகின்றன. மாற்றான் நாட்டைக் கொள்ளையிடுதல் போன்ற நிகழ்வுகளோடு மன்னனுடன் வீராகள் பங்கேற்றனர். பகைவரது வயலில் புகுந்துக் கொள்ளையிட்டும், பகைவர் நாட்டை அனிபூட்டியும் அழித்தனர். இதனால் வீரர்களுக்கு நிலம் கிடைத்தது. மன்னன நிலம் தந்தபோது வளமிக்க மருதநிலத்தைக் கேட்டுப்பெற்றனர் வீரரின் உரிமை இங்கு நிலைநாட்டப் பெறுவதை இதன் மூலம் அறியலாம்.

போர் நடப்பதற்கான சிலச் சூழ்நிலைகளையும் ஆசிரியர்கள் வரையறுத்துள்ளனர்,

“1.சாதிமுறைச் சமுதாய உணர்ச்சி

2.அமைதி மனத்திற்கு வறட்சி உண்டாக்குதல்

3.வீரமும் துணிச்சலும்

4.மனிதற்கு இயற்கையான போரிடும் தன்மை

5.தற்காப்பு நியமம்

6. வெகுளியும், பொறாமையும்

7. மீதூரும் உள்ளக்கிளர்ச்சி” 1

போன்ற காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில்தான் போர் ஆரம்பமாகிறது. இப்படி தனிமனிதனின் மேலோங்கிய எண்ணங்களினால் போர்க்களங்கள் உண்டாகின்றன.

ஆட்சியின் ஆளுமை

ஆட்சியில் மன்னரிடையே வீரம், மானம் பெரிதாகக் கரதப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணாணால் சிறைபிடிக்கப்பட்டப்பின் காவலரிடம் நீகேட்டுக் காலந்தாழ்த்தி வரும்படி ஆனதற்கும், இரந்து பெறவேண்டியது எண்ணியும் உயிர் துறந்தான். இதனை தொண்டைமான் இளந்திரையனின் பாடலில்,

“கால்பார் கோத்து ஞாலத்தியக்கும்

காவற் சாகா டுகைப்போன்

மாணின் ஊறின் றாகி யாறினுது படுமே”(புறம்.185)

எனவரும் பாடலில் ஆட்சியென்னும் சக்கரத்தை செலுத்துவோன் மாட்சிமை பெற்றிருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் பகை என்னும் சேற்றில் அழுந்தி அழிய நேரிடும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. எனவே சான்றோர் வகுத்த நெறிப்படி ஆட்சி அமைய வேண்டும் என்பதை இக்கருத்து உணர்த்துகிறது. போர்களத்துப் பொருவதும், வெற்றி கொள்வதும் மன்னாக்குப் பொழுது போக்கு அதே சமயம் தாம் செய்த போரின் விளைவுகளை, அழிவுகளை, அவலங்களை எண்ணி அமைதியுற்றனரா என்னும் செய்திப் புறப்பாட்டில் காண்பது அரிதாக உள்ளது போருக்கு ஊக்கியப் புலவர்கள் சிலர், மன்னனின் போர் வெற்றியைத் தணிவித்து வாழ்க்கையில் இனிது காணுமாறு தூண்டியுள்ளதை, மழைப் பொயத்தாலும், நாடு வறுமையுற்றாலும் மக்களின் இயற்கையான செயல்வினைகள் பாழ்பட்டு முறைபிறழ்ந்தாலும் இவ்வுலகம் மன்னரைப் பழிக்கும் என்பதை சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் சிறப்பினைப் பற்றி இளங்கோவடிகள் கூறுவது இங்கே நினைவுக்கூறத்தக்கது.

“மழைவளங் கரப்பின் வான்பேரச்சம்

பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி” (சிலம்பு 25)

எனவரும் பாடலடிகள் மன்னனுடைய ஆட்சியின் அருமைபற்றி விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாசறையில் அரசன்

ஓர் அரசன் போருக்குச் செல்லும்போது எதிரி நாட்டுக்கு அருகில் பாசறை அமைத்து அப்பாசறையில் இரவில் தங்கி பகலில் போரிடுவான் என்பது இங்கு குறிப்படத்தக்கது பகலில் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத் தமிழர் மரபாகக் கொண்டிருந்தனர். புலவர் பெருங்குன்றூர்கிழார் படைகளின் இரவு காலச் செயலினைக் குறிக்கும் பாடல்வழி, பகற்காலப் போரின் கடுமையை உய்த்துணர வைக்கின்றார். நெடுநல்வாடை இரவு நேரத்தில் பாசறைகளில் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லும் அரசரின் கடமை உணர்வையும், செயல்களையும் எடுத்தியம்புகின்றது. நெடுஞ்செழியன் வாடைக்காற்றுடன் மழைத்துளியும் வீசுகின்ற இரவு நேரத்திலும், படைத்தலைவன உதவியுடன் சென்றுக் காயமுற்ற வீரர்களைக் கண்டு ஆறுதல் கூறினான் என்ப,

 “நூல்கால் யாத்த மாலை வெண்குடை

துவ்வென்று அசைஇ, தாதுளி மறைப்ப

நுளளென யாமத்தும் பள்ளி கொள்ளான்,

சிலரொடு திரிதரும் வேந்தன்,

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” (நெடுநல்.184-188)

அக்கால மன்னர்களிடத்தில் பகை அரசனிடம் போர்ச்செய்து நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வு இருப்பினும், அவர்களுக்குள்ளே சில விதிமுறைகளுக்கு உட்பட்டே போர் நடந்தேறியது. இதனால் பகலில் போரிடுவதும், இரவில் போரை நிறுத்துவதும் வழக்கமாயிருந்துள்ளன என்பது புலனாகிறது மேலும், “அக்காலத்தில் தகுந்த காரணமின்றிப் பண்டைத் தமிழ் மன்னர்கள் போரிலே தலையிடமாட்டார்கள். போரால் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை. படைகளும் பண்டங்களும்தான் போர்க்களத்திலே பாழாகும். பொதுமக்களுக்கு அறிவித்தப் பின்னரே போரினைத் தொடங்குவார்கள்”2 என்று சாமி.சிதம்பரனார் கூறுவதிலிருந்து அறியலாம்.

புலவர் பெருமை

மன்னை பாசறையில் தங்கியிருந்த காலத்தில்கூட புலமைக்குப் பெருமதிப்பு கொடுத்தான். எனவே சங்ககால புலவர்களின் நிலை செம்மையுடையதாக இருந்தது. புலவர்களின் சீர்மிகு பண்பாலும், உரிமைக் காரணமாகவும் மன்னனை அவன் என்றும் புலவனை அவர் என்றும் வழங்கியிருப்பதை சங்கப்பபாடலகளின்வழி அறியலாம் அதேபோல் மன்னனும் தமிழ்ப் புலவர்களால் பாடப்பெறுவதையேத் தனக்குரியத் தகுதியாகக் கருதினான் புலவர் நாவிற்கு மதிப்பிருந்தக் காரணத்தாலேயேப் புலவர்கள் தங்களைப் பெருமையாக எண்ணிக் கொண்டதுண்டு. இத்தகையப் புலவர்கள் அரண்மனையில் சென்றுப் பாடுவது மட்டுமின்றி. பகைநாட்டிடத்தேப் பாசறை அமைத்துத் தங்கியிருந்த மன்னனிடமும் சென்று பாடி பரிசில்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

மனிதர் வாழ்ந்த விதத்தை உணர்த்தும் இலக்கியம், வாழவேண்டிய நெறியையும் காட்டலைலது புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டவை வெறும் போர்க்களச் செய்திகள் மட்டும் அல்ல. புறச்சிந்தனையில், அறச்சிந்தனையின் ஆணிவேர் செறிந்திருக்கக்காணலாம் பேரிலக்கியமாக கருதப்படும் புறத்தில் வாழ்வியல் சிந்தனைகள் அறநெறிக்கு அடிப்பயைானவையாக அமைகின்றன. அதாவது. சமுதாயம் என்பது தனி மனிதர்கள் சேர்ந்த கூட்டமைப்பாகும். தனிமனிதர்கள் செய்யும் அறங்கள் சமுதாய மேம்பாட்டை உருவாக்குகின்றன. சமுதாயத்தில் மக்களால் தனிமனித அறத்தை தடைப்பிடிக்கப்படும் அறங்கள் சமுதாய அறங்களாகும். அகப்பொருளிலும், சமுதாய அறத்தை புறப்பொருளிலும் காணமுடிகிறது. பண்டைத்தமிழர்கள் மறுவுணர்வுடன், அறவுணர்வும் உடையவர்களாகத் திகழ்ந்துள்ளனர். மொத்தத்தில் புறநானூறு சங்கத்தமிழர்களின் வீரவாழ்க்கையினை எடுத்தியம்பும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கின்றது என்பதை உணரமுடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.சங்ககால வாழ்வியல், டாக்டர் ந.சுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் பவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு 2010, ப.159.

2. மேலது.ப.161 3.எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம் சென்னை. இரண்டாம் பதிப்பு: 2008, ப.217.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி,

ஓசூர் 635 109.

எட்டுத்தொகையில் அறம்

பெண்ணியக் கோட்பாடுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here