பிபுகேர் ஏஜென்ஸி |சிறுகதை| ப.பிரபாகரன்

பிபு கேர் ஏஜென்ஸி

“ஐயயோ! இன்னிக்கும் லேட் ஆச்சு. எட்டு மணியாவ இன்னும் அஞ்சு நிமிடம் தான் இருக்கு. “எத்தன மணிக்கு எழுந்து வேலைய ஆரம்பிச்சாலும் இப்படித்தான் காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் கிளம்ப வேண்டியதாதான் இருக்குது”.

“இந்த காலை நேரம் மட்டும் எப்படித்தான் இவ்வளவு வேகமாக போகுதோ புரியல” இன்னிக்கு பஸ்ஸை பிடிப்பேனோ இல்ல விட்டுடுவேனோ? தெரியலயே” என்று நினைத்துக்கொண்டு சார்ஜ் போட்டிருந்த போனை எடுத்து பார்த்தாள் டனுஜா.

அந்தோ கொடுமை! போனை சார்ஜரில் செருகுவதற்கு முன்பு இருந்த அதே பத்து சதவீதம் தான் இப்போதும் இருக்கிறது. போனில் சார்ஜ் ஏறவேயில்லை. தலை நிமிர்ந்து பார்க்க, போனை செருகிய ச்விட்ச் ஆன் செய்யாது இருப்பதைக் கண்டு கடுப்பானாள்.

“ கால் வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, மேல்வயிற்றை காலியாகவே வச்சுகிட்டு, ‘இதெல்லாம் ஒரு பொலப்பு’ என்று புலம்பிக்கொண்டு வீட்டை விட்டு அலுவலகத்திற்கு அவசர அவசரமாக டனுஜா கிளம்பினாள். மேசையின் மீது இருந்த ஹேண்டுபேக்கை எடுத்து தோள்பட்டையில் தொங்கவிட்டு, கையில வாட்ச் கட்ட நேரம் இல்லாது வாட்சை எடுத்து ஹேண்ட்பாக்ல போட்டுக்கிட்டு “பஸ்ல போய் கையில் கட்டிகலாம்” என்றே நினைத்து வீட்டுக்கு வெளியில் வந்தாள்.

ஜன்னலில் எட்டிப்பார்த்த அவளுடைய இரு பிள்ளைகளுக்கும் பை பை என்று சொல்லி, பறக்கும் முத்தங்கள் இரண்டை கொடுத்து “சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்” என்றே நினைத்து செப்பல் ஸ்டாண்டில் செப்பலை குனிந்து எடுத்தாள்.

ஐயோ! நேத்துதான் ஆபிஸ்ல இருந்து வரும் வழியில் இந்த செப்பல் பிய்ந்து போனதே! வாங்கி மூணு மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ளே இப்படி கிளிஞ்சு பிய்ந்து போச்சே! என்ன செய்வது? நல்ல வேளை அந்த பழைய செப்பல் இருக்கு, அதை போட்டுகிட்டு போய் இன்னிக்கு ஒரு நாள் ஒப்பேத்திடலாம் என்று எண்ணி, பழைய செருப்பை எடுத்து போட்டுக்கிட்டு பேருந்து நிற்கும் இடம் கண்ணில் தென்படும் தூரத்திற்கு விரைந்து வந்தாள்.
தினமும் அவளுடன் அலுவலகத்திற்கு வரும் இரண்டு நபர்கள், அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதைக் கண்டு, “அப்பாடா! நல்ல வேளை, பஸ் இன்னும் போகல” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே பேருந்து நிறுத்தம் வந்து, நின்றிருந்த இருவருக்கும் ‘குட் மார்னிங்’ சொல்லிவிட்டு வாங்கிய பெருமூச்சை, சிறுமூச்சாக மாற்ற முயற்சித்தாள்.

ஹெண்ட்பேக்கை திறந்து வாட்சை எடுத்து கையில் கட்டினாள். மணி எத்தனை என்று கட்டிய வாட்சில் பார்த்தாள். இப்போதும் நேரம், எட்டு ஆக அஞ்சு நிமிடம் இருந்தது. நன்கு உற்று நோக்கினாள். வாட்சியின் நொடியை காட்டும் முள் முன்னும் பின்னும் ஆடி ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. ஒரு முறை வாட்சை தட்டியும் பார்த்தாள். எந்த பயனுமில்லை. ச்ச… இந்த ‘வாட்சியிலையும் பேட்டரி போச்சு’ போல என்று வாட்சியிடம் கோபித்தாள்.
அருகில் இருந்தவரிடம், சார் டைம் என்ன? என்று கேட்க, அவரோ “மேம், இன்னிக்கு பஸ்ஸு ஃப்வைவ் மினிட்ஸ் லேட். இப்போ சரியா நேரம் எட்டு மணி ஐந்து நிமிடம்” என்றார்.

சில விநாடிகளில் அலுவலக பேருந்து அந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. கடைசியாக வந்தாலும் ‘லேடிஸ் ஃபர்ஸ்ட்’ என்பதால் ‘நான் தான் முதலில் ஏறுவேன்’ என்று அடம்பிடித்து முதலில் ஏறி ஜன்னலின் ஓரம் இடமும் பிடித்தாள். இப்போதுதான் அவளுடைய மூச்சுக்காற்று சீரான வேகத்தில் உள்ளும் புறமும் சென்று வந்தும் போயும் இருந்தது.
ஜன்னலின் வெளியே நல்ல மூச்சுக்காற்று வாங்க, கண்ணாடி கதவை மெல்ல மேலே தூக்கினாள். இதமாக வீசிய இளந்தென்றல் காற்று அவளுக்குள் ஏற்பட்டு இருந்த பதற்றத்தை பறக்கடித்தது. அவ்விடத்தை விட்டு பேருந்தும் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது.

ஜன்னலின் வழியே எதிர்புறம் இருந்த டீ கடையில் டீ மாஸ்டர் டீ போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். சற்றே திடுக்கிட்டாள். மறுகணமே, அச்சச்சோ! மறந்தே போயிட்டேனே!

ம்ஹும்… இன்னிக்கும் அடுப்பில வச்ச பால மறந்துட்டேனே! எப்படி மறந்து போனேனே தெரியலயே. ஆம். டனுஜா, வேலைக்கு வந்த அவசரத்தில், அடுப்பை சிம்மில் வைத்து பாலை கொதிக்க வைத்தவள் மறந்து போய் அடுப்பை நிறுத்தாமல் வந்து விட்டாள்.

“பால் போறது கூட பரவாயில்லை. கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சு கேஸ் சிலிண்டர் முழுதும் தீர்ந்து போயிடுமே! இப்படி மாதத்தில் மூனு முறை ஒரு நாளுக்கு ஒரு சிலிண்டர் என்று செலவிட்டால் என்னிக்கு நாம் பொருளாதாரத்தில் முன்னேறுவது? இந்த நேரத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், ஐயோ! கடவுளே நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே!”

இப்படியெல்லாம் டனுஜா கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சுகிட்டு இருப்பதை புலம்பி தவித்து இருப்பாள் என்று பார்த்தால், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.

இப்பதான் எல்லாம் அறிவியல் மயமாகி போனதே! இப்படி வீட்டில் மறந்து எரியவிட்ட சிலிண்டரை வெளியில் வேறு எங்காவது இருந்துகொண்டே ஆப் செய்வதற்கு இருக்கவே இருக்கு “பிபு கேர் ஏஜென்ஸி”. டனுஜா, கஸ்டமர் கேர் நம்பருக்கு ‘XXXX’ போன் செய்து அவளுடைய இணைப்பு நம்பரை கூறினாள். ட்ரிங் ட்ரிங் என்று ஒலித்து ஒரு மெஸேஜ் வந்தது. அதில் உங்கள் கேஸ் இணைப்பு எண் “YYYYY” பேராபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது. எங்கள் சேவையானது என்றும் எங்கும் எப்போதும் உங்களுக்கு தேவையானது” என்று பதிவிட்டு இருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன், திருச்சி



1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here