நீதிக்கு அடிபணி|வாழ்வியல் கட்டுரை|முனைவர் ஈ.யுவராணி

நீதிக்கு அடிபணி_யுவராணி

நீதிக்கு அடிபணி

மூதாட்டியின் உணவு விடுதி
      வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்தி வந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டு வாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.
      ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, ‘அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை’ எனக் கூற விரும்பினாள்.  கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து, ‘அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில்,
                        “இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
                        காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் “அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு” எனக் கேட்டார்.  அம்மூதாட்டி “அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் “பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன்” என்று கூறினார்.  “அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்?” என்றாள் அம்மூதாட்டி.  “ஆமாம்… அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? ‘இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன்” என்றார்.  “ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன்” என்று கூறினாள். அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் “அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை” என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.  பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது.  அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு, “அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு” என்றான். மூதாட்டி “நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன்” என்று கூறினாள்.  ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள். அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், “இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்?” என்றான். “நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ!” என்று சொன்னாள். “அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன்” என்றான் வழிப்போக்கன்.  உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள். வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டியை ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார்.
                        விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, “ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன்” என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள்.  அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, “அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு  சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு” என்று தீர்ப்பு வழங்கினார்.   சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி “அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!
பொய்யான சாட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும்
                        ஒருவரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.  குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
                        பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.  அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை” என்று கூறினார்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம் – 638 476.

மேலும் பார்க்க..

1.கற்பதை கசடற கற்க

2.தாத்தாவின் பழைய வீடு

 

Leave a Reply