தேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன்

தேவதை சிரிப்பு - ச. குமரேசன் - கவிதை

தேவதை சிரிப்பு

 
பிரெஞ்சு டியூ
பிளேவை
நினைவூட்டும்
வெண்ணிற
சுருண்ட கூந்தல்..!

 
தோடுடைய செவியனை

கண் முன் நிறுத்தும் 

அவள் காதின் நீண்ட துளைகள்..!

 
கைகளால் என்னை இழுத்து

இன்பமாய் கொஞ்சிடும்போது

தொங்கட்டான் கன்னம் வரை சென்று

ஊசல் வரி பாடிவரும்..!

 
பாட்டி வந்தவுடன்

திருவிழா ராட்டினம்

கண்ட மகிழ்ச்சி பொங்கி வரும்..!

 
வயல் வரப்புகளை

இரண்டு வட்டம் சுற்றி வருவோம்…

ஓட்டத்தினூடே பாட்டி கையிலுள்ள

மஞ்சள் பையின்
 
நினைவுகளும் சேர்ந்தே

ஓடிக்கொண்டிருக்கும்..!

 
பாட்டியின் வழக்கமான
 
மிக்சர் பொட்டலம்
 
பார்லேஜ் பிஸ்கட்
 
அன்பில் துவைத்து எடுத்த

அச்சு முறுக்கு . . !

 
பேரன்களை கண்டவுடன்

பாட்டியின் மஞ்சள் முகம்
 
மத்தாப்பாய் ஒளிவிடும்…

பாட்டி வாய்க்கு 
பல்லே
தேவையில்லை
 
தேவதை சிரிப்பு..!

 
எங்கள் அன்னையை

அகிலத்திற்கு

அறிமுகப்படுத்தியவள்
 
அன்பே உருவானவள்..!

 
எப்போது எண்ணினாலும்

என் துன்பத்தை எல்லாம்
 
நினைவுகளால் துடைத்திடுவாள்

‘துளசி’ பாட்டி ..!
 
கவிதையின் ஆசிரியர்

-கவிஞர் ச.குமரேசன்
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),
இராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம்.

கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here