தூவானம் | சிறுகதை | கோ.ஆனந்த்

தூவானம் - கோ.ஆனந்த்

          தூறல் நின்றபாடில்லை.அலுவலக வாசல் ஒட்டிய சாலையோர மின்விளக்கின் இளமஞ்சள் ஒளியினால் தங்கத் துகள்களாய் சிதறிய தூறலின் அடர்த்தி குறையக் காத்துக்கொண்டிருந்தேன்.சிரமம் பார்க்காமல் குடையை பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.ஆனால் இப்போதெல்லாம் தண்ணீர் பாட்டில் கூட கூடுதல் சுமையாகத் தெரிகிறது.வயதாகி விட்டால் உடல் கூட சுமை தான்.அலுவலகத்திலிருந்து பஸ் நிறுத்தம் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். நனைந்தபடியே ஓடி விடலாம்.ஆனால் நாளை வரும் தும்மலையும் ஜலதோஷத்தையும் யார் தாங்குவது?. சாலையில் வடியாமல் குளம் போல நிற்கும் தண்ணீர் வேறு பயமுறுத்தியது.இங்கேயே இப்படி இருந்தால் வீட்டருகே எப்படியிருக்கும்?அதுவும் ஏற்கனவே கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்? நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருந்தது.தூறல் சற்றே குறைந்த நேரத்தில் கைப்பையையே குடையாக்கி விரைந்து சென்று பஸ்ஸைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

          நினைத்தவாறே வீட்டின் வாசலில் கழிவு நீர் மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கியிருந்தது.சாலையிலிருந்து வீட்டுக்குச் செல்ல செங்கற்கள் போட்டு மேடாக்கி வைக்கப் பட்டிருந்தது. அநேகமாக எங்கள் ஹவுஸ் ஓனர் நாராயணன் தான் அப்படி செய்திருக்க வேண்டும்.கொட்டும் மழையில் கம்பி மேல் நடக்கும் தெருக்கூத்தாடி போல் செங்கல் வழுக்கிவிடாமல் இருக்க பேலன்ஸ் செய்தவாறே நடந்து வாசலைக் கடந்து சென்றேன்.மழை இப்போதைக்கு விடுவதாய் தெரியவில்லை.கீழ் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.நாராயணன் குடும்பத்தார் உறங்கியிருக்க வேண்டும்.குடும்பத்தார் என்ன குடும்பத்தார்?தம்பதியர் இருவர் மட்டுமே அவர்கள் குடும்பத்தில்.

          நாராயணன் சாருக்கு ஒற்றை நாடி. அதென்னவோ சொல்லி வைத்தாற்போல் அவருடைய மனைவி சூடாமணிக்கு இரட்டை நாடி. இவர்களின் ஒரே மகன் திருமணமாகி ‘யுஎஸ்ஏ’ வில் செட்டிலாகி விட்டிருக்க,இருவரும் தங்கள் ஒரே சொத்தான இந்த வீட்டின் மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு,பிழைப்பையும்,காலத்தையும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

         இந்த கழிவுநீர் பிரச்சனையால் நேற்று சாயந்திரத்திலிருந்தே நாராயணன் சாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே?வாசல் பக்கம் போகவே முடியவில்லை. மூக்கைத் துளைத்து உள்ளிறங்கியது கழிவுநீர் நாற்றம்.நாங்கள் மாடியில் குடியிருப்பதால் தப்பித்தோம்.

       குடித்தனக்காரர்களான எங்களுக்கு போக வர வீட்டின் இடதுபுற சுற்றுச் சுவரையொட்டி படிக்கட்டும், காம்பவுண்ட் கேட்டும்.சொந்தக்காரர் நாராயணனுக்கு கீழே விஸ்தாரமான ஹால் மத்தியில் வாசல் கதவும்,நேர் எதிரே காம்பவுண்ட் கேட்டும்.வீட்டின் வலதுபுறம் இருவீட்டாரின் கழிவுநீர்க் குழாய்கள் சுற்றுச்சுவரை ஒட்டிச்சென்று மாநகராட்சியின் பாதாளச் சாக்கடையில் இணைகின்றன.அங்கு தான் சிக்கல். இரண்டு நாட்களாக எங்கோ அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீட்டிலிருநது வெளியேறும் இடத்தில் போடப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பின் மூடி வழியாக வழிந்து கொண்டிருந்தது.

      நாராயணன் அவரால் முடிந்தவரை குளியலறை மற்றும் கழிவறைகளில்  நிறைய நீர் வேகமாக ஊற்றிப் பார்த்தார்.எங்களையும் அவ்வாறே செய்யச் சொன்னார்.எல்லாம் சேர்ந்து இன்னும் அதிகமாக கழிவு நீர் வழிந்ததே தவிர அடைப்பு நீங்கியபாடில்லை.நல்ல வேளையாக எங்களுக்கு இடது புற வாசல் என்பதால் சிரமம் குறைவாக இருந்தது.எனினும் நாற்றத்திற்கு பயந்து எங்களுடைய படுக்கையறை சன்னல்களைத் திறக்க முடியாமல் உள்ளே வெந்து கொண்டிருந்தோம்.

          காலையில் பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் “கார்ப்பரேஷனில் சொல்லி வைத்தால் வந்து சரி செய்வார்களே” என்றதற்கு.”வருவான்,ஆனா பிடுங்கிடுவானே” என்று முகம் கோணினார்.”வேற வழியில்லையே அடைப்பை சரி செஞ்சாகனுமே” என்றேன்.”அது எனக்குத் தெரியாதா” என்பது போல் லேசாக முறைத்துப்பார்த்தபடி ஒரு கையால் நெற்றியை அழுத்தியவாறே “கோவிந்தன் இருக்கானான்னு பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட அடைப்பையும் எடுத்துடுவான்’என்று சொல்லிவிட்டு செல்போனைத் தேடி உள்ளே போனார்.நானும் கிளம்பி வந்து விட்டேன்.கோவிந்தன் கிடைத்தாரோ இல்லையோ தெரியவில்லை.அலுவலக வேலையில் இதைச் சுத்தமாய் மறந்திருந்தேன்.

       நான் காம்பவுண்ட் கிரில் கேட் திறந்த சத்தம் கேட்டு வெளியே வந்த நாராயணன், “மழையில மாட்டிக்கிட்டீங்களா.குடை கொண்டு போயிருக்கலாமே” என்றவர்,என் பதிலுக்கு காத்திராமல்.நல்லவேளை சார் கோவிந்தனைப் பிடிச்சிட்டேன். நாளைக்கு ஊருக்குப் போறதா இருந்தானாம். நம்ம வீடுன்றதால காலம்பற வர்றேன்னு ஒத்துகிட்டான்”  என்றார் வாயெல்லாம் பல்லாக.அவருடைய சந்தோஷத்தில் பங்கேற்கும் விதமாக நானும் ஒரு அசட்டுப் புன்னகை புரிந்துவிட்டு வந்தேன்.

       எப்படியோ பிரச்சனை சரியானால் நாளையாவது ஜன்னலைத் திறந்து வைத்து தூங்கலாம் என்றெண்ணி மாடிப்படி ஏறி மேலே போனேன். “என்னவாங்க?” என்ற மனைவியிடம், ஒரு ஆள ஏற்பாடு பண்ணிட்டாராம்.நாளைக்கு அடைப்பு சரியாகிடும்னு நினைக்கிறேன்.ஆனா அந்த ஆள நினைச்சாத் தான் பாவமா இருக்கு.இவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப் போறார்.வேலையும் நல்லா வாங்குவார். காசும் தர மாட்டார்” என்று பெருமூச்செறிந்தவாறே சாப்பிட அமர்ந்தேன்.

     “சூடாமணி, கோவிந்தன் வந்தாச்சு”.நாராயணனின் குரல் ஞாயிற்றுக்கிழமை காலை காபியை ருசித்துக் கொண்டிருந்தவன்  காதில் விழுந்தது. வாசல் வந்து பார்த்தபோது வானம் தெளிவாய் தெரிந்தது. மழை சுத்தமாக விட்டிருந்தது.பரவாயில்லை வேலை கொஞ்சம் சிரமமில்லாமல் இருக்கும்.

        டிஃபன் முடித்து கீழிறங்கிச் சென்றேன். “அந்த பைப்ப கொண்டா சார்” என்றவாறே கழிவு நீர் பாதையில் திறந்து பார்க்கப் பொருத்தப்பட்ட மூடிகளைத் திறந்து அடைப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். நான் மூக்கைப் பொத்தியவாறே அருகில் சென்றேன். “வா சார்,புதுசா குடி வந்துகீறீங்களா?” என்று வெற்றிலை வாயோடு சிரித்தவாறே கேட்டார். “ஆமாம்” என்று தலையசைத்தவாறே,நாற்றம் தாங்காமல் நழுவ முயன்றவனை,”பாலா சார் ஒரு நிமிஷம்”என்ற நாராயணன் குரல் தடுத்தது.”இந்தா கோவிந்தா பைப்” என்று அடைப்பு நீக்க உதவ ஒரு நீள பைப்பை கொடுத்து விட்டு என்னிடம் வந்தார்.

      “சார் கொஞ்சம் இப்படி வாங்கோ” என்று சற்று தள்ளி அழைத்துச் சென்று, “விடியற்காலைல ஒரு துக்க செய்தி. கண்டிப்பா போயாகனும்.நல்ல வேளயா மழை விட்டிருக்கு. போயிட்டு தலைய காட்டிட்டு வந்துட வேண்டியது தான்.இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. உங்களுக்கு லீவு தானே? கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கங்க.எவ்வளவு நேரமானாலும் முடிக்கிற வரை விடாதீங்க.முடிச்சவுடன் ஐநூறு கொடுங்க.நான் 250, நீங்க 250.(ஐயோ இது என் லிஸ்ட்லேயே இல்லியே) மேல கேப்பான்.அவ்ளோ தான்னு கறாரா சொல்லிடுங்க” என்று சொல்லிக் கையில் தயாராக வைத்திருந்த 250 ரூபாயைக் கொடுத்தார்.பின் கோவிந்தனிடம் சென்று விஷயம் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

     வேறுவழியின்றி மேலே சென்று மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, அவள் முறைத்ததைக் கண்டும் காணாதது போல கடந்து வந்தேன்.

       இதனிடையே தன்  ஆராய்ச்சியெல்லாம் முடித்திருந்த கோவிந்தன் “சார் மேல,கீழ எல்லாம் சரியா இருக்குது.இந்த பக்கத்திலிருந்து தொட்டிக்குப் போற பைப்பிலயும் அடைப்பில்லை. தொட்டியிலிருந்து கார்ப்பொரேஷன் பைப்புக்கு போற வழியில தான் அடைச்சிகிட்டிருக்கு” என்று தன் முதல் கட்டத் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

     பிறகு அந்த தொட்டியிலிருந்து வெளியே செல்லும் குழாய் முனையை அடைப்பு நீக்கும் பைப்பை வைத்துத் துழாவிக் கண்டுபிடிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த தொட்டி முழுவதுமாக கழிவு நீர் தேங்கியிருக்க குழாய் முனையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. “ஒரு பக்கெட் குடு சார்” என்று கேட்டு வாங்கி, தேங்கியிருந்த நீரை எடுத்து தோட்டம் பக்கம் ஊற்றினார்.”வேற வழியில்ல சார்.வெளிய ஊத்தினா அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க சண்டை போடுவாங்க.நீங்க தான் கொஞ்சம் பொறுத்துக்கனும்.நான் போறப்போ பினாயில் ஊத்திட்டுப் போறேன்” என்றார்.

        வேலையினூடே “சாருக்கு எத்தனை பசங்க?என்று கேட்டார்.நான் “ரெண்டு.பையன் ஒண்ணு.பொண்ணு ஒண்ணு” என்றேன்.”நமக்கு ஒரே ஒரு புள்ளைங்க.பன்னென்டாவது படிக்கிறான்”என்றார்.

       அவர் வெறுங்கையுடன் பக்கெட்டால் கழிவு நீரை இறைத்து ஊற்ற ஊற்ற ,மேலும் நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது.ஒரு கட்டத்தில் கையால் எட்ட முடியாத அளவு நீர் இறங்கி விட, சட்டென்று அந்த சிறு தொட்டியில் இறங்கி பக்கெட்டை நிரப்பி மேலே வைத்துவிட்டு ஏறி அந்த நீரைத் தோட்டத்தில் ஊற்றினர்.இதே போல நாலைந்து முறை செய்தபின் நீர் சற்று வடிந்து தரை தெரிந்தது.அதற்குள் அவர் உடலெங்கும் கழிவுநீர் அபிஷேகம்.

‘குடிக்க கொஞ்சம் தண்ணி குடு சார்”

       உபயோகமற்ற பழைய தண்ணீர் பாட்டில் ஒன்றைத் தேடி எடுத்து அதில் நீர் பிடித்து வந்து, அவர் கையை நீட்டி வாங்க முற்படுமுன் தரையில் வைத்து எடுத்து கொள்ளச் சொன்னேன்.

        தண்ணீர் குடித்து முடித்ததும், அடைப்பு நீக்கும் பைப்பைக் குழாயினுள் நுழைக்க முயன்றார்.வளைவாக இருந்த பைப் செங்குத்தான தொட்டியில் இறங்கி வெளியே செல்லும் குழாயினுள் நுழைய அடம் பிடித்தது.வளைவை நீக்கினால், குழாயிலிருந்து வெளியே வந்தது. குழாயினுள் நுழைத்தால் வளைவாக சுருண்டு கொண்டு மேலே நுழைய மறுத்தது.பாவம் இப்படி ஒருத்தராக கஷ்டப்படுவதற்கு,அவர் பையனையும் கூட்டி வந்திருந்தா கொஞ்சம் உதவியா இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

      ஒருவழியாக வளைத்து, நெளித்து குழாயினுள் நுழைத்து குத்த ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து, களைப்பாய் “எங்கயோ இடிக்குது சார்.மேல போக மாட்டேங்குது.மணி என்னா சார்? என்று கேட்டார்.

” இரண்டு” என்றேன்.

      ‘சரி சார்.சாப்பிட்டு வந்து பாக்கிறேன்.ஒரு நூறு ரூபா தாங்க” என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்பக்கம் சென்றார்.

    “ஐயோ இந்த நூறு எந்த கணக்கில சேரும்?நாராயணன் இதப் பத்தி சொல்லவே இல்லையே’என்று மனதிற்குள் புலம்பியவாறே நூறு ரூபாய் கொண்டு போய் கொடுத்தேன்.

       நான் மறுபடி கீழிறிங்கி வந்த பார்த்தபோது,பார்சல் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு, வாசல் படிக்கட்டில் அமர்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தும்.பீடியை அவசரமாக எறிந்து விட்டு வேலையை ஆரம்பித்தார்.

         சாப்பிட்ட தெம்பில் நான்கைந்து முறை வேகமாக குத்தியதில் பைப் அடைப்பை நீக்கி சரசரவென வேகமாக உள்ளே நுழைந்தது.”சார் தொறந்துகிச்சி.நீங்க போய் நிறைய தண்ணி ஊத்திப் பாருங்க” என்றார்.நானும் அவ்வாறே ஊற்றி விட்டுப் பார்க்க தண்ணீர் எங்கும் நிற்காமல் வேகமாக வெளியேறி நிம்மதியளித்தது.

    கோவிந்தன் தான் உபயோகப்படுத்திய பொருட்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டு, திறந்த தொட்டிகளையெல்லாம் மூடினார்.பின் தரையைக் கழுவி, பினாயில் தெளித்து விட்டு குளித்து முடித்துக் கிளம்பினார்.

       அவரிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன்.”என்னா சார் எவ்ளோ வேல வாங்கிச்சி பாத்த இல்ல?” போட்டு குடு சார் என்றார்.’இன்னுமா ? சாப்பாட்டுக்கான  காசையே நாராயணனிடம் எப்படி பேசி வாங்கறதுன்னு தெரியல’ என்று எண்ணியவாறே “அவ்வளவு தாம்பா அவர் குடுக்க சொன்னாரு.வேணுன்னா அவர் வந்தப்பறமா வந்து கேட்டுப் பாரு”என்றேன்.உடனே பேச்சை மாற்ற வேண்டி “ஊருக்கு போறதா இருந்தீங்களாம்?” என்றேன்.

“ஆமா சார்.புள்ளயப் பாக்க போலாம்னு இருந்தேன்.சார் கூப்பிடவே வந்தேன்.புள்ளய நான் நாளைக்கு கூட போய் பாத்துக்கலாம்.பாவம் இந்த நாத்தத்தில நீங்க எவ்வளவு நாள் இருப்பீங்க?” என்றார் கரிசனத்துடன்.

“புள்ள உங்க கூட இல்லையா?படிக்கிறான்னு சொன்னீங்க’

         “ஆமா சார்.ஊர்ல படிக்கிறான்.இங்க இருந்தா,என்ன வேலைக்கு கூப்பிடறவங்க புள்ளையையும் கூட்னு வாயேன் ஒத்தாசைக்குங்கிறாங்க. ஒவ்வொரு நாள் எனக்கு உடம்பு முடியல வேற ஆள் வச்சி பாத்துக்குங்கன்னு சொன்னா ஏன் உம் புள்ள செய்ய மாட்டான்? அவன அனுப்பேன்றாங்க சார். எதுக்கு சார் அந்த புள்ளைக்கு இந்த நாத்த பொழப்பு?இது நம்மோடேயே போவட்டும்னு தான் என் மாமியார் ஊட்டுக்கு அனுப்பி நிம்மதியா படிக்கட்டும்னு விட்டுட்டேன்.காலேஜ் போய் படிக்கனும்றான்.படிடானு சொல்லியிருக்கேன்.நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். வரட்டா சார்”.

      யாரோ என்னைப் பளாரென அறைந்தார் போலிருக்க அவருக்கு “சரி’ என்பதாக தலையைக் கூட அசைக்க முடியாமல்   கூனிக்குறுகி உறைந்து போயிருந்தேன் நான்.

“சொட்,சொட்’ என்று மறுபடியும் தூறல் போட ஆரம்பித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

கோ.ஆனந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here