டிம்மி | சிறுகதை

டிம்மி முனைவர் க.லெனின்

      இடுப்பில் சொருகியிருந்த சட்டையை எடுத்துவிட்டான். முழுக்கைச் சட்டையைக் கொஞ்சமாய் சுருட்டி விட்டுக்கொண்டான். அப்பாடா என்றிருந்தது ராசுவுக்கு. எப்படியோ வேலை கிடைச்சிடுச்சி. இனிமேல் குடும்பத்த ஓட்டிடலாம். பெங்களூருக்கு வேலை தேடி வந்தன். ஐடி கம்பெனியில வேல கிடைச்சிடுச்சு. ஒரு வருஷமாவது ஒரே கம்பெனியில வேல பாக்கனும். ஏதாவது காரணத்தனால வேலைய விட வேண்டிய சூழ்நிலை வந்துடுது. இதுல என் மனைவிக்குதான் அதிக கோபம். நிரந்தரமா ஒரு வேலையில இருக்க மாட்டிங்களான்னு அடிக்கடி கேட்பா.. என்ன பன்றது. எல்லாம் என் தலைவிதி. மனசு நிறைவாத்தான் இருந்தது. இன்டர்வியூக்கு வந்துததுல காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. வயிறு வேற கிள்ளியது. வயிற்றுக்கு ஏதாவது டீயையோ அல்லது காப்பியையோ இறக்கினால் நல்லா இருக்குமுன்னு தோணுச்சி. எனக்கு நேரே இருக்கும் காப்பி ஷாப்பிற்குள் நுழைந்தேன்.  அந்த நேரத்தில் அனைத்து நாற்காலிகளிலும் ஆட்கள் உட்காந்திருந்தனர். யாரேனும் எழுந்திருந்தால் உடனே போய் உட்காந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராசு. அப்போது ஒரு நாற்காலியிலிருந்து ஒருவர் எழுந்து போகவே, ராசு உடனடியாக அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

       அது இரண்டு நாற்காலிகள் கொண்ட டேபிள். ராசுக்கு எதிரே இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அந்நேரத்தில் வெயிட்டர் ராசுவிடம்,

“சார் என்ன சாப்பிடுறீங்க…” என்றான்

“காபி மட்டும். ம்ம்.. அப்புறம் ஒரு கிளாஸ் சுடுதண்ணி” என்றான் ராசு.

தொலைபேசியில் வந்த அழைப்புக்கு பதில் கொடுக்க தயாரானான் ராசு. வெயிட்டரும் ராசுவுக்கு நேரெதிரே உட்காந்திருக்கும் இளைஞனிடம்,

“சார் உங்களுக்கு வேற எதாவது வேண்டுமா?” என்றான். அவனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டே,

“ஒரு கப் காபி” என்றான்.

        கொஞ்ச நேரத்தில் வெயிட்டர், இருவருக்கும் காபியை மேஜையின் மீது அவரவருக்கு எதிரே வைத்தான். இரண்டு காபி கப்பிலிருந்தும் ஆவி பறந்தது. காபியின் மனம் மூக்கை சுண்டியிழுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் காபி டம்ளரை பிடித்தனர். மூக்கிற்கு கொண்டு வந்து முகர்ந்து பார்த்தனர். கொஞ்சம் கீழே இறக்கி வாயில் வைத்து சிறியதாய் உறிஞ்சினார்கள். மீண்டும் டம்ளர் மேஜையின் மீது ஒரே நேரத்தில் வைத்தனர். மீண்டும் இருவரின் நினைவுகளும் வேறுவேறு பக்கம். மீண்டும் காபியை ஒரே நேரத்தில் உறிஞ்சுகிறார்கள். இருவரின் செய்கைகளும் ஒரே மாதிரியாகவே இருந்தது. அவசர காலத்தில் இவைகளையெல்லாம் யார் பார்த்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கடையில் வருவதும் போவதுமாய்  வியாபாரம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது.

     ராசு அப்பொழுதுதான் கவனித்தான். தன்னெதிரே அமர்ந்திருப்பவனும் தன்னை போலவே காபியை உறிஞ்சுவதும் வைப்பதுமாகவே இருக்கிறானே..

       அவனும் இதையேத்தான் நினைத்திருந்தான். இருவரும் ஒரே சமயத்தில் நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டனர். இரண்டு பேர் முகத்திலும் எந்தவொரு சலனமும் இல்லாமல் பொம்மை மாதிரி பார்த்துக்கொண்டனர். அந்த இரண்டு பார்வைகளுக்கும் அர்த்தங்கள் நிறையவே இருப்பதாகத் தோன்றியது.

    ராசுவின் மனதில் பெரும் போராட்டமே நடந்தது. சின்னதா புன்னகைப்பதா… அல்லது சிரிப்பதா… இல்லன்னா ஹாய்.. ன்னு சொல்லலாமா? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான். இப்போது எதிரில் உட்காந்து இருப்பவனே முதலில் புன்னகைத்தான். ராசுவும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

“ஹாய்… ராசு! எப்படி இருக்க?” எதிரில் அமர்ந்திருப்பவன் கேட்டவுடன் ராசுவுக்கு மூச்சே நின்றுவிடும் போலாகி விட்டது. பதில் சொல்ல நா எழவில்லை. திக்கி தினறிப்போனான். முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.  எப்படியோ,

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றான் ராசு.

“ம்.. நானும் நல்லா இருக்கேன். நீ எங்க இங்க? என்றான் அவன்.

“இன்டர்வியூக்கு வந்தேன்”

“என்னாச்சு”

“வேலை கிடைச்சிடுச்சி. வர்ற மண்டேயிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க..”

“எங்க தங்கியிருக்க”

“இனிமேலுதான் வீடு பாக்கனும்”

“சரிடா வீட்டுக்கு வா.. ரெண்ட்டுக்கு வீடும் பாத்துத் தரன்”

“இல்ல.. ஊருக்கு போகலாமுன்னு இருக்கன். நாளை மறுநாள்தான் பெங்களூர்க்கு வருவேன்”

“சரி.. அப்ப வரும்போது எங்க வீட்டுக்கு வா” என்று தன்னுடைய மேல் பாக்கெட்டில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து ராசுவின் கையின் கொடுத்தான்.

“சரி ராசு, அப்ப நான் கிளம்புறேன். பாக்கலாம்!” என்று சொல்லிவிட்டு அந்த காபி ஷாப்பை விட்டு வெளியேறினான் அவன்.

அவன் என்னவோ நார்மலாத்தான் பேசினான். ஆனால் ராசுதான் ஒவ்வொரு வார்த்தையும் அளந்து அளந்து பேசினான். இன்று நடந்தது அவனுக்குக் கனவு போல் இருந்தது. உண்மையாலுமே ராசு பூரித்துப்போனான்.

     பேருந்து பயணத்தின் போது ஜன்னல் ஓரம் சீட்டைப் பிடித்துக்கொண்டான். காற்று சுகமாய் மனதை வருடியது. காபி ஷாப்பில் என் எதிரே அமர்ந்திருந்தவன் என்னுடைய சின்ன வயசு நண்பன்தான். பேரு பாலமுருகன். நாங்களெல்லாம் அவனை பாலுன்னுதான் கூப்பிடுவோம். ரொம்ப நல்லவன். பழையதை அசைப்போட்டுக்கொண்டான்.  இப்போது பழச நினைச்சு பார்க்கிறதுல ஒரு சுகம் இருந்தது ராசுவுக்கு. நினைச்சு பாக்கனுமுன்னும் தோனிச்சு அவனுடைய மனசு.

     அப்ப நாங்க ஐஞ்சாவது படிச்சிட்டு இருந்தோம்.  எங்க கிளாஸ்ல பசங்க இருபது பேரு. பொண்ணுங்க பதினைஞ்சு பேரு. மொத்தம் முப்பத்தி ஐஞ்சு. நான் எல்லாத்துக்கிட்டேயும் பேசுவன். ஆனா எனக்கு உயிர் நண்பன்னா.. அது பாலமுருகன்தான். அவனை எனக்கு அவ்வளவு புடிக்கும். அவனுக்கும் அப்படித்தான். எப்பவுமே நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் சுத்துவோம். வாத்தியாரு கூட எஙகள இரட்டையர்கள்ன்னு சொல்லுவாரு. நான் மத்த பசங்க கூட பேசறது பாலுவுக்குச் சுத்தமா புடிக்காது. ஏன்னு கேட்டா, நீ என்னோட உயிர் நண்பன்டா… என்பான். அவனும் மத்த பசங்க கூட அவ்வளவா வச்சிக்க மாட்டான். எங்களோட நட்பு யாரு கண்ண உறுத்துச்சின்னு தெரியல.

      அன்னிக்கும் வழக்கம் போல நானும் பாலுவும் வகுப்புல உட்காந்து வாத்தியாரு நடத்தின கணக்க போர்டுல பாத்து எழுதிட்டு இருந்தோம். வாத்தியாரும் வெளியில நின்னு யாரு கூடயோ பேசிட்டு இருந்தாரு. நான் எழுதிய கணக்கு தப்பாயிடுச்சு. அதை அழிக்கனுமுன்னு என்னுடைய பையில கைய விட்டு இரப்பரை தேடினேன். இரப்பர் என்கிட்ட இல்ல. பாலுகிட்ட கேட்டேன். அவனும் அவனுடைய பையிலிருந்து தேடி ஒரு இரப்பரை என்னிடம் கொடுத்தான்.  பாலுவிடமிருந்து வாங்கிய இரப்பரை உற்றுப்பார்த்தேன். அது என்னோட இரப்பர். போன வாரம் நான் தொலைத்தது. இரப்பருக்குப் பின்னால் R என்ற என்னோட பெயரின் முதல் எழுத்துப்  போடப்பட்டிருந்தது. போன வாரம் தொலைந்து போன இரப்பரை வகுப்பு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பாலுதான் எடுத்து வைத்திருக்கிறான்.

“டே பாலு, இது என்னோட இரப்பர்டா.. நீ தான் திருடி வைச்சிருந்தியாடா”

“அப்படியா! இது உன்னோட இரப்பரா… நான் திருடலடா. இந்த இரப்பர் என்னோட பைக்குள்ள எப்படி வந்ததுன்னே தெரியல”

“அது எப்படி உன்னோட பைக்குள்ள உனக்கு தெரியாம இரப்பர் வந்திருக்கும். ஒருவேளை இரப்பருக்குக் கால் முளைச்சி உன் பைக்குள்ள போயிருக்குமா?”

“தெரியலடா ராசு.. எப்படி வந்ததுன்னு… கண்டிப்பா நான் எடுக்கல. நான் உன்னோட பிரண்டுடா. நான் எப்படி எடுப்பேன்”

“திருடி வைச்சிட்டு… மாட்டிகிட்டவுடனே பொய் பேசுறியாடா.. நீதான்டா திருடன்.. திருடன்…” என்று ராசு கத்தினான். அந்தச் சத்தம் அறை முழுவதும் கேட்டது. மத்த பசங்களோட சத்தத்துல ஆசிரியருக்கு இவுங்க பேசிக்கிறது கேட்க வாய்ப்பில்லைதான். பசங்க மத்தியில ராசு பாலுவை திருடன்னு சொன்னது, பாலுவுக்கு பெரிய அவமானமாய் போய்விட்டது.

“ஏன்டா என்னையா திருடன்னு சொல்லுற, நீதான்டா திருடன். உங்கப்பா ஜோப்புல இருந்து நீதான்டா காச திருடிகிட்டு வருவ. எனக்கு தெரியாதா” என்றான். தனக்கும் பாலுவுக்குமே தெரிந்த இரகசியம். இன்றைக்கு அனைவருக்கும் முன்னால் இப்படி போட்டு உடைத்துவிட்டானே என்ற ஆத்திரம் ராசுவுக்கு.

“டே உங்க அம்மா டிம்மிடா”  பாலுவின் முகத்துக்கு நேராகக் கையை நீட்டி மீண்டும் மீண்டும் உங்க அம்மா டிம்மிடா.. டிம்மிடா.. என்றான்.

பாலுவுக்கு கோபம் தலைக்கேறியது. ராசுவை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். வகுப்பு அமைதியானது. அவர்களும்தான். பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

அடுத்தநாள் ராசு கொஞ்சம் தாமதமாகவே பள்ளிக்கு வந்தான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் அனைவரும் அவனையே பார்த்தனர். நேராகத் தன்னுடைய இடத்தில் போய் உட்காந்து கொண்டான். அப்போதுதான் தன்னுடைய நண்பன் பாலுவின் ஞாபகம் வந்தது. கண்களைச் சுழற்றி வகுப்பறை முழுவதும் பாலுவைத் தேடினான். பாலு இன்னிக்குப் பள்ளிக்கூடத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை.

“ஏன் பாலு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரல” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் ராசு. இன்னமும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் ராசுவையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். ராசுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஏங்கடா… எல்லோரும் என்னையே பார்த்திட்டு இருங்கீங்க”

கொஞ்சநேரம் அமைதிக்கு பின், அந்த வகுப்பின் பெண் பிள்ளை ஒருத்திதான் போட்டு உடைத்தாள்.

“டே ராசு… நீ எந்த வாயில பாலுவோட அம்மா டிம்ம்மின்னு சொன்னியோ… தெரியல, உண்மையாலுமே அவுங்க அம்மா நேத்துச் சாயந்திரமே செத்துப்போச்சுடா” என்றாள்.

       ராசுவுக்கு உடம்பு நடுங்கிப்போனது. நெஞ்சிலிருந்து இதயம் வெளியே தள்ளுகின்ற மாதிரி ஒரு வலியை அனுபவித்தான்.

       “உன் வாயி நாரவாயிடா…”

       “இந்த வாயி ஊத்தவாயி…”

       “இது கருநாக்கு வாயிடா…”

       “ஆளையும் மூஞ்சையும் பாரு.. ஒத்த சொல்லால ஒர் உசிரையே வாங்கிட்டு நிக்கிறத…”

       “இனிமே எங்ககூட நீ பேசக்கூடாது. எங்களுக்கும் அதுமாதிரி ஏதாவது சொல்லிட்டன்னா, நாங்களும் அம்மா இல்லாம இருக்கிறதா… அப்பா… எங்களால அம்மா இல்லாம இருக்க முடியாதுடா”

       மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் வாயிக்கு வந்தபடிக்குப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அனைத்து வசவுகளையும் ராசு ஏற்றுக்கொண்டான்.

       டிம்மி என்றால் என்ன? டிம்மின்னா என்ன அர்த்தம்? இதற்கு அர்த்தம் எனக்கு தெரியுமா? கூட படிக்கிற பசங்க கோபம் வரும்போது மத்த பசங்கள,

              “உங்க ஆயா டிம்மி”

              “உங்க அப்பா டிம்மி”

              “உங்க அம்மா டிம்மி” ன்னு சொல்லுவாங்க. கண்டிப்பா அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்கு தெரியாதே! நானும் கோவத்துல சாதாரணமாத்தானே பாலுவ சொன்னேன். உண்மையாலுமே பாலுவோட அம்மா செத்துப்போச்சா… அவுங்க அம்மா செத்ததுக்கு நான்தான் காரணமா? தலையைப் பிய்த்துக்கொண்டான் ராசு.  பையைத் தூக்கிப்போட்டு விட்டு பாலுவின் வீட்டிற்கு ஓடினான்.

       பாலுவின் வீட்டின் சந்தில் நுழையும்போதே மோளம் சத்தம் கேட்டது. கிட்ட போகப்போக பெண்களின் ஒப்பாரி சத்தம் ராசுவுக்கு என்னவோ செய்தது.

      வீட்டு வாசலில் மொட்டை அடித்துக்கொண்டு கழுத்தில் பூமாலையுடன் கண்கள் சிவந்து நின்றிருந்தான் பாலு. ராசு தூரத்தில் இருந்து பாலுவையே பார்த்துக்கொண்டு கிட்டே வந்து நின்றான். பாலு இப்படி நிற்பதற்கு முழுக்காரணம் தான்தான் என்று நினைத்தான் ராசு.

       ராசுவைக் கண்டவுடன் பாலு கோபத்தின் உச்சிற்கே சென்றான்.  தனக்கு முன்னே நின்று கொண்டிருந்த ராசுவை, ஓடிச்சென்று நெஞ்சிலே ஒரு உதை விட்டான். பாலுவின் உதையில் மல்லாந்து கீழே விழுந்தான் ராசு. கீழே விழுந்த ராசுவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு ஐந்து விரல்களையும் மடக்கி பிடித்தபடி மூஞ்சிலேயே குத்துக்குத்தென்று குத்தினான்.

“நீதான்டா எங்க அம்மாவை கொன்ன… நீ டிம்மின்னு சொன்னதனாலதான் எங்க அம்மா செத்துப்போனாங்க. உன்னாலதான் நான் இப்ப மொட்ட அடிச்சிட்டு அம்மா இல்லாத அநாதயா நிக்கிறன். நீ எனக்கு பிரண்டே இல்ல. என்னோட முத எதிரி நீதான்டா… உன்ன கொல்லாம விட மாட்டேன்” என்று ராசுவை தன் பலவந்த மட்டும் அடித்துக்கொண்டிருந்தான்.

அப்போது பக்கத்தில் இருந்த பெரியோர்கள் உடனே ஓடி வந்து பாலுவை இழுத்தார்கள்.

“என்ன விடுங்க.. அவன நான் கொல்லாம விடமாட்டேன். அவந்தான் எங்கம்மாவ கொன்னான். அவந்தான் எங்கம்மா டிம்மின்னு சொன்னான். என்ன விடுங்க.. என்ன விடுங்க…” என்று கத்தினான் பாலு.

முகம் வீங்கி வாயிலிருந்து இரத்தம் ஒழுக கிழிந்த சட்டையுடன் தேம்பி தேமபி அழுத கண்களுடன் நின்றான் ராசு. அங்கிருந்தவர்கள் அனைவரும் ராசுவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

     பேருந்து முன்பை விட இன்னும் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. காலமும் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது. காலத்திற்கு எதனையும் மாற்றும் சக்தி உள்ளதோ? இந்த இருபத்தைந்து வருடங்களில் என் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிகழ்வு. அது இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணுகிறேன். என்மீது இன்னமும் கோபத்தில் இருப்பான் என்றே நினைத்திருந்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அழகாய் சிரித்தான். வீட்டிற்கு வா என்றான். எனக்காக வீடு பார்த்துத் தருகிறேன் என்றான். அவனுடைய விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறான். தன்னுடைய கையில் இருந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை முன்னாலையும் பின்னாலையும் திருப்பி பார்த்தான்.

      ராசு, கார்டின் பின்பக்கத்தைப் பார்த்து பிரமித்துப்போனான். எந்தக் கம்பெனிக்கு இன்டர்வியூ போனானோ, அதே கம்பெனியின் தலைமை அதிகாரிதான் பாலு என்கிற பாலமுருகன். வாய்விட்டே சிரித்தான் ராசு. அவன் என்னுடைய உயிர் நண்பன். அவன் சந்தோசமா நல்லா இருக்கனும் என்று மனதார இறைவனை வேண்டினான்.  பேருந்துக்கு வெளியில் மழைத் தூரல் கொஞ்சகொஞ்சமாய் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

iniyavaikatral@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here